ஒரு மாணவனின் புத்தகம்

* அகிராவுக்கு நான் அதிகமொன்றும் சொல்லித்தந்ததில்லை. அவன் என்னிடம் கற்றதெல்லாம் எப்படியெல்லாம் விதவிதமாகக் குடிக்கலாம் என்பதைத்தான். – யாமாசான்

* உதவி இயக்குநர்கள் பயில்வதற்காகத் தன் படத்தையே நாசமாக்கலாம் என்று அவர் நினைத்தார். அவரையொத்த சிறந்த ஆசிரியர்கள் கிடைப்பது அரிது. – அகிரா குரோசாவா.

கடந்த வார இறுதி தினங்களில் ஜப்பானிய [என்பது தவறு; உலக] திரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவாவின் ‘Something like an Autobiography’ என்கிற புத்தகத்தைப் படித்து முடித்தேன். நீண்டநாளாகப் படிக்க நினைத்து, தள்ளிக்கொண்டே போன புத்தகம். தமிழில், இளையபாரதி – மு. நடராசன் மொழிபெயர்ப்பில் இதனை முன்னதாக ஆங்காங்கே படித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பு படிக்கத் தூண்டும் விதத்தில் இல்லாததால் முழுமையாகப் படிக்க முடிந்ததில்லை. இப்போது முடித்தேன்.

இந்தப் புத்தகத்தைப் பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. நமது திரைப்பட இயக்குநர்கள் யாரும் இவ்வாறு தமது அனுபவங்களை முழுமையாகப் பகிர்ந்துகொண்டதில்லை. முழுமை என்கிற அம்சத்தைவிட நேர்மை – வெளிப்படை என்கிற வேறு இரு அம்சங்களும் இதில் முதன்மையாக இருக்கின்றன. திரைப்படத்தை ஒரு கலையாக அணுகக்கூடிய யாரும் குரோசாவாவை அறிந்திருப்பார்கள். அது முக்கியமல்ல. சாதித்து முடித்துவிட்டு, சாய்வு நாற்காலியில் அமரும் காலத்தில் தனது பயிற்சிக்காலத் தடுமாற்றங்களை, கற்றதை, கற்கத் தவறியவற்றை, செய்ததை, செய்ய மறந்ததை, தனது சூழலை, வேலை பார்த்த தினங்களை, கற்றுக்கொடுத்தவரை, நண்பர்களை, ஜப்பானிய திரைத்துறையின் அன்றைய அவலங்களை, ரஷோமான் என்கிற – இன்றளவும் உலகம் கொண்டாடும் திரைப்படத்தை எடுப்பதற்குப் பட்ட பாடுகளை, பிற முயற்சிகளை, அதன் வெற்றி தோல்விகளைக் காரண காரியங்களோடு விவரித்திருக்கும் விதம் இங்கே எனக்கு முக்கியமாகப் படுகிறது.

ஒரு திரைப்பட இயக்குநரின் வாழ்க்கை என்பதைக் காட்டிலும் ஜப்பானிய திரைத்துறை வரலாற்றின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் என்று இந்நூலைச் சொல்லிவிடலாம். இன்னொரு பார்வையில், இரண்டாம் உலக யுத்தத்துக்குச் சற்று முன்னும் பின்னுமான காலத்தை ஜப்பான் எதிர்கொண்ட விதத்தை விளக்கும் சமூக வரலாற்றின் சில முக்கிய அத்தியாயங்கள் என்றும் சொல்லலாம்.

நூலின் மிக முக்கிய பகுதியாக குரோசாவா தனது ஆசிரியர் யாமாசான் குறித்து எழுதிய பக்கங்கள் எனக்குப் படுகின்றன. திரும்பத் திரும்பப் படிக்கவேண்டுமென்கிற மன எழுச்சியை அளித்த பக்கங்கள் அவை. துரதிருஷ்டவசமாக, நூலை வாசிக்கக்கொடுத்த நண்பர், படித்து முடித்ததும் எடுத்துச் சென்றுவிட்டார். வேறு பிரதி வாங்கவேண்டும். இப்படியொரு ஆசிரியர் கிடைப்பாரா என்று வாசிக்கும் ஒவ்வொருவரும் ஏங்குமளவுக்கு யாமாசான் என்கிற மனிதரின் பிம்பம், பிரதியை மீறி எழுந்து மேலோங்கி வந்து வியாபித்து நிற்பதை ஒரு பரவச அனுபவமாக உணர்ந்தேன். படித்து முடித்து முழுதாக இரண்டு நாள்கள் கழிந்த பின்னும் அந்த உணர்வில் குறையில்லை.

இன்றைக்கு யாமாசானின் திரைப்படங்களின் ரசிகர் என்று சொல்லிக்கொள்ள உலகில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று தெரியவில்லை. நான் அவருடைய ‘குதிரைகள்’ என்ற ஒரு படத்தை மட்டும் பார்த்திருக்கிறேன். அதுவும் குரோசாவாவின் ஒரு கட்டுரையை முன்னெப்போதோ படித்ததன் விளைவாக. ஆனால் குரோசாவாவின் அத்தனை முக்கியமான திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். அவரது மிகச்சிறந்த நான்கு படங்களின் டிவிடிகூட என்னிடம் இருக்கிறது. மூன்று மாதங்களுக்கொரு முறையேனும் ரஷோமான் பார்ப்பேன். வருடமொருமுறையாவது செவன் சமுராய், ரெட் பியர்ட். எத்தனையோ சிறந்த படங்களைக் குரசோவாவின் மூலம் உலகுக்கு அளிப்பதற்காகத் தன்னைக் கரைத்துக்கொண்ட அல்லது மறைத்துக்கொண்ட ஒரு மனிதராக எனக்கு யாமாசான் தெரிகிறார்.

குரோசாவாவைப் போல இன்னும் எத்தனையோ பேருக்கு அவர் சினிமா கற்றுத்தந்திருக்கலாம். பொழியும் மழையளவு ஏந்தும் புவியும் இன்றியமையாததாகிறது. நமக்கின்று குரோசாவாவை மட்டுமே தெரியும்.

திரைக்கதை எழுதுவது, நடிப்புப் பயிற்சியளிப்பது, அரங்க வடிவமைப்பு, எடிட்டிங், ஒலிப்பதிவு, ஆடை அலங்கார நுட்பங்கள் என்று தொடங்கி ஒரு திரைப்படத்தின் அத்தனை தொழில்நுட்பப் பிரிவுகளிலும் தனக்கு அவர் எவ்வாறு பயிற்சியளித்தார் என்று விவரிக்கிறார் குரோசாவா. அத்தனை நுட்பப் பயிற்சிகளின் அஸ்திவார பலத்தின்மீது குரோசாவா எழுப்பிய கலைக்கோபுரங்களைத்தான் இன்று நாம் வியக்கிறோம், பிரமிக்கிறோம்.

ஒரு மனிதனின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்களிப்பு எத்தனை இன்றியமையாதது என்பது விவரிப்புக்கு அப்பாற்பட்டது. சரியான ஆசிரியர் அமைவது ஒரு பெரிய கொடுப்பினை. சரியான ஆசிரியரை சரியான மாணவன் அவசியம் கண்டடைந்துவிடுவான். இதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் அது எப்போது அமையும் என்று சொல்லமுடியாது. பத்து வயதில் கிடைத்துவிட்டால் அதிர்ஷ்டம். இருபதில் மாட்டினால் சந்தோஷம். முப்பது, நாற்பது வயதுகளுக்கு மேல் ஓர் ஆசிரியரைப் பெறுவது, பயிலத்தொடங்குவது, தேர்ச்சியுறுவது என்பதெல்லாம் சற்றே சிரமம் என்று எண்ணுகிறேன்.

பள்ளி நாள்களில் எனக்குப் பாடமெடுத்த எந்த ஒரு ஆசிரியரையும் ‘என் ஆசிரியர்’ என்று பெருமிதமுடன் கூறிக்கொள்ள என்னால் இயலாது. என் தந்தையே ஓர் ஆசிரியர்தான். ஆங்கிலமும் வரலாறும் சொல்லித்தருபவர். நானும் அவரிடம் படித்திருக்கிறேன். வாங்கிய அடிகள்தான் நினைவிருக்கிறதே தவிர, அவரிடம் பயின்றது என்று நினைவுகூர ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. அவரது ஆளுமை பாதித்திருக்கிறது. அவரது ஒழுக்கம், கட்டுக்கோப்பு, பணிநேர்த்தி போன்றவற்றை இன்று நினைவுகூர்ந்து ஓரளவு கடைப்பிடிக்க முயற்சி செய்கிறேன். ஆனால் அப்பாவாகத்தான் பாதித்திருக்கிறாரே தவிர ஆசிரியராக அல்ல.

எனது கல்லூரிக்காலத்தில் சந்தித்த ஆசிரியர்கள் அத்தனைபேரும் எனக்கு கடோத்கஜன்களாகவும் ஹிரணியகசிபுகளாகவுமே காட்சியளித்தார்கள். அந்தப் படிப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. ஒவ்வொரு நாளையும் நரகமாகவே எண்ணிக் கழித்தேன். இது என் பிழையாகவும் இருக்கலாம், சொல்லிக்கொடுத்தவர்களின் பிழையாகவும் இருக்கலாம். ஐ.ஐ.டியிலும் அமெரிக்காவிலும் படித்த நாள்கள் பற்றியெல்லாம் எப்போதாவ்து பத்ரி விவரிக்கும்போது சற்றே பொறாமையாகவும் ஏமாற்றமாகவும் ஏக்கமாகவும்கூட இருக்கும். ஆனால் வேறு வழியில்லை. என் வழியில் குறுக்கிட்ட ஆசிரியர்கள் பெரும்பாலும் என் விருப்பத்துக்குகந்தவர்களாக இல்லாமல்தான் இருந்திருக்கிறார்கள்.

யோசித்துப் பார்த்தால் சற்று வியப்பாகவே இருக்கிறது. உண்மையில் எனக்கான ஆசிரியரை நான் படிப்பெல்லாம் முடித்துவிட்டு உத்தியோகத்துக்குப் போகத்தொடங்கிய பிறகுதான் கண்டேன். அதுகாறும் படித்த படிப்பெல்லாம் குப்பை என்று ஒதுக்கித்தள்ளிவிட்டு, வெற்றுப்பலகையாக அவரிடம் அடைக்கலமானேன். இன்றைய என் எழுத்து, வாசிப்பு, வளர்ச்சி, ஏற்றங்கள் யாவற்றுக்கும் யாராவது ஒருவரைக் கைச்சுட்ட வேண்டுமென்றால் அவரைத்தான் சொல்லவேண்டும்.

யார் யாரைப்பற்றியோ, எவ்வளவோ எழுதியிருக்கிறேன். எனது ஆசிரியரைப் பற்றி இதுவரை ஒருவரி கூட நான் எழுதியதில்லை. என் நண்பர்கள் சிலர் அவ்வப்போது கேட்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் அவரைப்பற்றி எழுதக்கூடாது? உங்களுக்காக இல்லாவிட்டாலும் எங்களுக்காக.

நேர்ப்பேச்சில் அவரைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன். உதாரணங்களில் அவ்வப்போது அவர் வந்து விழுவார். எனது எடிட்டிங் பாணி அவருடையது. எனவே இன்று என்னிடம் பயில்பவர்களின் சிந்தனைப்போக்கையும் என் வழியே அவ்ரேதான் பாதிக்கிறார். நான் எதையெல்லாம் வாசிக்கலாம் என்று அவர் ஒரு காலத்தில் தீர்மானித்தார். நான் எப்படி வாழவேண்டும் என்று அவர் வாழ்ந்துகாட்டினார். நான் எப்படி எழுதவேண்டும், எதை எழுதவேண்டும், எழுத்தில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர அவர் காரணமாக இருந்தார்.

அகிரா குரோசாவாவின் படங்களைவிட இந்தப் புத்தகம் என்னை மிகவுமே அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது. வரிக்கு வ்ரி என் ஆசிரியரை எனக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. எழுதச்சொல்லி உள்ளுக்குள் ஒரு குரல் ஒலித்தாலும், தயக்கம் தடுக்கிறது. எனக்கு நிச்சயமாகத் தெரியும். அவரைப்பற்றி நான் எழுதினால் குறைந்தது பத்து பேரையாவது அது நிச்சயம் பாதிக்கும். செய்கிற பணி எதுவானாலும் அதிலொரு மேன்மை பொருந்திய நேர்த்தியை நோக்கி நகரவைக்கும். உபயோகமான செயல்தான்.

ஆனால் அவர் அதனை விரும்பமாட்டார். நிச்சயமாக விரும்பமாட்டார். தான் எழுதும் கட்டுரைகளில்கூட தனது பெயரை வெளியிட்டுக்கொள்ள விரும்பாதவர் அவர். அடையாளமின்மை ஒன்றையே தனது அடையாளமாகக் கருதுபவர். அதனால்தான் தயக்கமாக இருக்கிறது.

எப்படியானாலும் குரோசாவாவுக்கு நன்றி. கடந்த இரண்டு தினங்களாக என் புத்தியில் என் ஆசிரியரைத் தவிர வேறு சிந்தனையே இல்லை. அவரிடம் கற்ற காலம் உருட்டிவிடப்பட்ட பந்தாக உள்ளுக்குள் ஓடுகிறது. சந்தோஷமாக இருக்கிறது. பல விஷயங்கள் தமாஷாகவும் இருக்கிறது.

எழுதவேண்டும். பிரசுரிக்கிறோமோ இல்லையோ எழுதிவைத்துவிடவேண்டும் என்று தோன்றியிருக்கிறது. பார்க்கலாம்.

Share

6 comments

  • யார் அந்த ஆசிரியர் பாரா? கல்கி ராஜேந்திரனா, அல்லது இளங்கோவன் சாரைச் சொல்கிறீர்களா? இந்த அளவுக்கு உங்களால் மிக உயர்வாகக் கொண்டாடப்படும் அவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். ஏறிய ஏணிகளை எட்டி உதைக்கும் இந்தக் காலத்தில் உங்களால் இவ்வளவு உயர்வாகப் பாராட்டப்படும் அவர் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர் தான். (நீங்களும் கூடத் தான்)

  • //அடையாளமின்மை ஒன்றையே தனது அடையாளமாகக் கருதுபவர். அதனால்தான் தயக்கமாக இருக்கிறது.//

    புரிகிறது. ஆனாலும் நீங்கள் அவரைப்பற்றி எழுதத்தான் வேண்டும். எங்களுக்கும் பயன்படும் அல்லவா?

  • நிறைய யோசிக்க வைத்த கட்டுரை. ஆசிரியர் / மாணவன் உறவு இரு பக்கங்களிலும் வெவ்வேறு பாதிப்புகளை உண்டு பண்ணக் கூடியது. சில ஆசிரியர்களின் சில பண்புகள் மிகவும் சிலாகிக்க வகையில் இருந்தாலும், மொத்தமாக யாரும் பாதிக்கவில்லை.

    //படித்த படிப்பெல்லாம் குப்பை என்று ஒதுக்கித்தள்ளிவிட்டு,//

    இப்படித்தான் குருவை சரணடைய வேண்டும் என்று ஓஷோ சொல்கிறார். ஆதிசங்கரர் தனது குருவான கோவிந்த பகவத்பாதரை சந்தித்த போதும் இதையேதான் சொல்கிறார். ‘நான் எதுவுமில்லை’ என்று 🙂

  • //ஆனால் அவர் அதனை விரும்பமாட்டார். நிச்சயமாக விரும்பமாட்டார். தான் எழுதும் கட்டுரைகளில்கூட தனது பெயரை வெளியிட்டுக்கொள்ள விரும்பாதவர் அவர். அடையாளமின்மை ஒன்றையே தனது அடையாளமாகக் கருதுபவர். அதனால்தான் தயக்கமாக இருக்கிறது.//

    எஸ்.ஏ.பி அல்லது கல்கி ராஜேந்திரன்?

    எனக்கு மட்டும் காதில் சொல்லுங்க ப்ளீஸ்…

  • அப்படியெல்லாம் “துர்வாசராக” மாறி கோபம் கொள்ள மாட்டார் :). நீங்கள் அவசியம் அவரைப்பற்றி எழுத வேண்டும்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி