வேள்வி நடக்கிறபோது அசுரர்கள் அக்கிரமம் செய்து அதைக் கலைப்பார்கள் என்று கதை கேட்டிருக்கிறீர்களா? அப்படியொரு அசுரத்தனமான தாக்குதலுக்கு சமீபத்தில் இலக்காகிப் போனேன்.
அதற்குமுன்னால் அப்படியென்ன பெரிய வேள்வி இங்கே நடந்து வாழ்ந்தது என்பீரானால், இத்தொடரின் முதல் சில அத்தியாயங்களை மீண்டுமொருமுறை படித்துவிடவும். எனது எடைக்குறைப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் போதிய அளவுக்குச் சொல்லியிருக்கிறேன். மாவுச் சத்து குறைவான, கொழுப்பு அதிகமான உணவு வகைகளை உண்ணுவதன்மூலம் பிதுரார்ஜித சொத்தாக தேகத்தில் சேர்த்துவைத்த கெட்ட சரக்கையெல்லாம் அழித்தொழிக்கிற திருப்பணி.
இந்தக் குறை மாவு நிறைக் கொழுப்பு உணவு முறையில் இறங்கிய நாளாக நான் வழக்கமாக உண்ணும் சாப்பாட்டுப் பக்கம் ஒருநாளும் திரும்பியதில்லை. அதாவது, சாதம் கிடையாது. சாம்பார், ரசம் வகையறாக்கள் கிடையாது. அப்பள இன்பம் இல்லை. அதிரச, தேன்குழல், அக்கார அடிசில் இல்லை. தானியமும் இனிப்பும் எந்த ரூபத்திலும் உள்ளே போகாத உணவு முறை இது. பால், தயிர், பன்னீர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டியென பிருந்தாவனத்துக் கிருஷ்ண பரமாத்மாவின் சமகால எடிஷனாக ஒரு வாழ்க்கை. அவ்வப்போது பாதாம். எப்போதாவது பிஸ்தா. அளவின்றிக் காய்கறிகள். அதிகமாகக் கீரை இனம்.
இப்படிச் சாப்பிட ஆரம்பித்து ஒரு ஆறு மாத காலத்தில் இருபத்தி மூன்று கிலோ எடையைக் குறைத்திருந்தேன். எந்த குண்டோதரன் கண்ணைப் போட்டுத் தொலைத்தானோ தெரியவில்லை, திடீரென ஒரு கெட்ட நாளில் எடைக்குறைப்பானது நின்று போனது.
நானும் என்னென்னவோ செய்து பார்த்தேன். விரதங்கள், காலை நடை என்று வழக்கத்தில் இல்லாதவற்றையெல்லாம்கூட. ம்ஹும். பத்து காசுக்குப் பயனில்லை. நின்ற எடை நின்றதுதான். என்ன செய்யலாம் என்று யோசித்து, கொஞ்சம் உடல் அறிவியலைப் படித்துப் பார்த்தேன். பிறந்தது முதல் மாவுச் சத்து உணவை மட்டுமே உண்டு வருகிறவர்கள் நாம். சட்டென்று உடலுக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்து, மாவுப் பொருள்களைக் கணிசமாகக் குறைத்து, கொழுப்பில் உடலியந்திரத்தை இயக்க ஆரம்பித்தபோது எடை குறைந்தது. இதற்கு ஆன அவகாசத்தில் உடம்பானது கொழுப்புணவுக்குப் பழகிப் போய்விட்டிருக்கிறது.
எதுவுமே பழகிவிட்டால் ஒரு அசமஞ்சத்தனம் வரத்தானே செய்யும்? சம்சார சாகரம் சத்தம் போட்டால் கண்டுகொள்கிறோமா? மேலதிகாரி முகத்தில் விட்டெறிந்தால் பொருட்படுத்துகிறோமா? ஆனால் மதுக்கடைகள் மூடப்படுகிற சேதி வந்தால் அதிர்ச்சியடைந்துவிடுகிறோம். ஏனென்றால், அதெல்லாம் நடக்காது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். நடக்க வாய்ப்பில்லாதவை நடக்கிறபோதுதான் அதிர்ச்சி என்ற ஒன்று தொக்கி நிற்கும்.
நிற்க. விஷயத்துக்கு வருகிறேன். நின்றுபோன எடைக்குறைப்பை மீண்டும் தொடங்குவதற்கு, உடம்புக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்தால் தப்பில்லை என்றார்கள் சில அற்புத விற்பன்னர்கள். அதாவது, எந்த மாவுச் சத்து மிக்க உணவை விலக்கி, கொழுப்பின்மூலம் எடையைக் குறைத்தேனோ, அதே மாவுச் சத்து உணவை மீண்டும் ஒருநாள் தடாலடியாக உண்பது. கொழுப்புக்குப் பழகிய உடலானது, இந்த திடீர் அதிர்ச்சியைத் தாங்காமல் கொஞ்சம் நிலை தடுமாறும். இன்சுலின் சுரப்பு மட்டுப்படும். ரத்த சர்க்கரை அளவு ஏறும். பழைய கெட்டத்தனங்கள் அனைத்தும் மீண்டும் தலையெடுக்கும்.
வா ராஜா வா என்று காத்திருந்து அனைத்தையும் உலவவிட்டு, தடாலென்று மீண்டும் அடுத்த நாள் கொழுப்புக்கு மாறும்போது உடலுக்கு அதிர்ச்சியின் உச்சம் சித்திக்கும். எனவே மீண்டும் எடைக்குறைப்பு நிகழ ஆரம்பிக்கும் என்பது இந்த இயலின் அடிப்படை சித்தாந்தம்.
செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. தோதாக வீட்டில் ஒரு விசேஷம் வந்தது.
எப்பேர்ப்பட்ட அபார விருந்திலும் சிந்தை குலையாதிருந்த தவ சிரேஷ்டன் அன்று தொந்திக் குறைப்பு அல்லது கரைப்பு நடவடிக்கைகளின் ஓரங்கமாகப் பண்டிகைச் சமையலை ஒரு கை பார்க்க முடிவு செய்தான்.
அன்றைய என் மெனுவில் மோர்க்குழம்பு இருந்தது. பருப்புப் போட்ட தக்காளி ரசம் இருந்தது. உளுந்து வடையும் அரிசிப் பாயசமும் இருந்தன. வாழைக்காய், பீன்ஸ் போன்ற நான் தொடக்கூடாத காய்கறிகள் இருந்தன. அனைத்துக்கும் மேலாக அப்பம் இருந்தது. வாழைப்பழ அப்பம். மெத்து மெத்தென்று அசப்பில் ஹன்சிகா மோத்வானியின் கன்னம் போலவே இருக்கும். அழுத்தி ஒரு கடி கடிடித்து ஆர அமர மெல்லத் தொடங்கினால் அடி நாக்கில் இருந்து நுனி வயிறு வரை ருசித்துக்கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் வெண்ணெய் தோய்த்து உண்ணும் அப்பத்துக்காகவே நான் கோகுலாஷ்டமியை மிகவும் விரும்புவேன். கிண்ணம் நிறைய வெண்ணெய் வைத்துக்கொண்டு, பத்துப் பன்னிரண்டு அப்பங்களைப் பொறுக்க தின்று தீர்ப்பது ஒரு சுகம். ஏப்பம் வரை இனித்துக்கொண்டிருக்கிற அற்புதம் வேறெந்தப் பலகாரத்துக்கும் கிடையாது.
ஆனால் எனது மேற்படி விஷப் பரீட்சை தினத்தில் நான் அப்பத்துக்கு வெண்ணெய் தொட்டுக்கொள்ளவில்லை. நெய் சேர்க்கவில்லை. கொழுப்புணவின் குலக் கொழுந்துகளான அவற்றை முற்றிலும் விலக்கி, எதெல்லாம் எனது உணவு முறைக்கு நேர் எதிரியோ அவற்றை மட்டுமே உண்ணுவதென்று முடிவு செய்திருந்தேன்.
முன்னதாக இந்தப் பரீட்சார்த்தக் கலவர காண்டத்துக்குத் தயாராகும் விதமாக இருபத்தி நான்கு மணிநேர உண்ணாவிரதம் இருந்தேன். தண்ணீரைத் தவிர வயிற்றுக்கு வேறெதையும் காட்டாமல் காயப் போடுதல் இங்கே அவசியமாகிறது. அது ஒரு பிரச்னை இல்லை என்று வையுங்கள். கொழுப்புணவு உண்பவனுக்குப் பசி இருக்காது. விரதமெல்லாம் மிகச் சுலபமாகக் கைகூடிவிடும். சற்றும் சோர்வின்றி நாற்பத்தியெட்டு மணி நேரம், எழுபத்தி இரண்டு மணி நேரம் விரதமிருப்பவர்கள் எல்லாம் உண்டு. நான் இருந்தது வெறும் இருபத்தி நான்கு மணி நேர விரதம்தான்.
அந்த விரதத்தை முடித்துவிட்டு மேற்படி கார்போஹைடிரேட் விருந்துக்குத் தயாரானேன். முற்றிலும் மாவு. முற்றிலும் எண்ணெய். முற்றிலும் இனிப்பு வகைகள். எப்படியும் ஓர் அணுகுண்டு வெடித்த மாதிரி உடம்புக்குள் ஒரு பெரும் புரட்சி நடந்தே தீரும் என்று தோன்றியது. என்னவாவது நடந்து மீண்டும் எடை குறைய ஆரம்பித்தால் போதும் எம்பெருமானே என்று வேண்டிக்கொண்டு ஒரு கட்டு கட்ட ஆரம்பித்தேன். வடைகளையும் அப்பங்களையும் தாராளமாக உண்டேன். வாழைக்காயானது எனது பிராண சிநேகிதன். பல மாதங்களாக அதை நினைத்துக்கூடப் பாராதிருந்தேன். அன்றைக்கு காணாதது கண்டாற்போல் அள்ளி அள்ளி உண்டேன்.
எப்படியும் ஒரு மூவாயிரம் கலோரிக்கு உண்டிருப்பேன் என்று நினைக்கிறேன். மூச்சு முட்டி, போதும் என்று தோன்றியபோதுதான் நிறுத்தினேன். தண்ணீர் குடிக்கக்கூட இடமின்றி, தள்ளாடிச் சென்று அப்படியே படுத்துத் தூங்கியும் போனேன்.
ஆக, பரீட்சை எழுதியாகிவிட்டது. இனி இது பலன் தர வேண்டும்.
இந்தப் பரிசோதனையின் இறுதிக் கட்டம்தான் முக்கியமானது. இருபத்தி நான்கு மணி நேர முழு உண்ணாவிரதத்துக்குப் பிறகு மாவுச் சத்து மிக்க ஒரு விருந்தை உண்பதோடு இது முடிவதில்லை. அந்த விருந்துக்குப் பிறகு, தொடர்ச்சியாக இன்னொரு இருபத்தி நாலு மணி நேர உண்ணாவிரதம் தேவை. கொழுப்புணவில் இருக்கும்போது உண்ணாவிரதம் சுலபம். ஆனால் அரிசிச் சோறுக்கு அது ஆகாது. பசி வயிற்றை எரித்துவிடும்.
அப்படி எரிப்பதில்தான் காரிய சித்தி என்றார்கள் உத்தமோத்தமர்கள். என்ன கெட்டுப் போய்விடும்? சரி என்று அதையும் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தேன்.
அதன்பிறகு நடந்த கலவரத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்.