போண்டா திருடன் [சிறுகதை]

இந்தக் கூத்தைக் கேளுங்கள். கேளம்பாக்கம் மன்னார் கடையில் ஒரு நாள் தவறாமல் போண்டா திருடிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வந்து எல்லாரிடமும் காட்டிவிட்டுத் தானே தின்று தீர்க்கும் வெங்கடபதி ராஜு இன்றைக்கு ஒரு போலிஸ் ஆபீசராம். இரண்டு வருஷங்களுக்கு முன்பு அவனுக்கு முதலமைச்சர் ஏதோ சாதனைக்காக விருதெல்லாம் அளித்திருக்கிறார்களாம். இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? அவன் சர்வ நிச்சயமாக ஒரு தெருப்பொறுக்கியாகிப் போவான் என்று அன்றைக்கு நாங்கள் அத்தனை பேரும் தீர்மானமே செய்திருந்தோம். நாங்கள் என்றால் நானும் என்னோடு கூட கேளம்பாக்கம் அரசினர் உயர் நிலைப்பள்ளியில் படித்த ராஜாத்தி, வளர்மதி, டெய்சி ராணி, செந்தமிழ்ச் செல்வி ஆகியோரும். எங்கள் செட்டை ஊருக்கே தெரியும். எங்கே போனாலும் ஊர்வலம் போகிற மாதிரி நாங்கள் ஐந்து பேரும் ஒன்றாகத்தான் போவோம். பள்ளிக்கூடத்துக்குக் கூட ஒன்றாகவே வருவோம். கஷ்டப்பட்டு வகுப்புகளைக் மூச்சு முட்ட முடித்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்பும்போதும் ஒன்றாகவே கிளம்புவோம். முதலில் டெய்சி வீடு வரை சென்று அவளை அங்கே விட்டுவிட்டு அங்கிருந்து மொத்தமாக ராஜாத்தி வீட்டுக்குப் புறப்படுவோம். அவளை வீட்டில் விட்டுவிட்டு வளரும் செல்வியும் என்னோடுகூட என் வீடு வரைக்கும் வருவார்கள். நான் விடை பெற்றதும் அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாகப் போவார்கள். எப்படியோ கடைசியில் யாராவது ஒருவர் தனியாக வீட்டுக்குப் போகவேண்டிய அவலம்தான் எங்களுக்கு அந்த வயதில் பிடிக்காத ஒரே விஷயம். வகுப்பறையில், விளையாட்டு மைதானத்தில், கோயில்களில், மார்க்கெட்டில், நோக்கமே இல்லாமல் சும்மா சுற்றுகையில் எப்போதும் ஒன்றாகவே இருக்கும் நாங்கள் அன்றைக்கு அதிகம் பேசியது எங்களுடன் படித்த பையன்களைப் பற்றித்தான். அதிலும் குறிப்பாக வெங்கடபதி ராஜுவைப் பற்றி.

ராஜு ஏன் அன்றைக்கு எங்கள் ஐந்து பேருக்குமே பிடித்தவனாக இருந்தான் என்பதற்கு எனக்குச் சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் எங்கள் ஐந்து பேரைத் தவிர அவனைப் பிடித்தவர்கள் என்று எங்கள் வகுப்பில் அன்று யாருமே கிடையாது. அது மட்டும் நிச்சயம்! ஏழாம் வகுப்பிலேயே அவன் சொக்கலால் ராம்சேட் பீடி குடித்து, தலைமை ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு ஆறு பிரம்புகள் உடையும் அளவுக்கு அடி வாங்கியது காரணமாயிருக்கலாம். தன்னைவிட ஒரு வகுப்பும் வயதும் மூத்தவளான மேரி வெண்மதிக்குக் காதல் கடிதம் கொடுத்து, அவள் அதை வீட்டில் போய்ச் சொல்லி அழுததன் விளைவாக மேரியின் தந்தை பள்ளிக்கு வந்து அவனை மிதி மிதி என்று மிதித்தது காரணமாயிருக்கலாம். எப்போதும் எண்ணெய் வடியும் முகமும் மண்ணில் புரண்டு எழுந்தாற்போலவே தோன்றச் செய்யும் அழுக்குச் சட்டையும் புட்டத்தில் கிழிந்த நிக்கரும் வாய் நிறைந்த கெட்ட வார்த்தைகளும்கூடக் காரணமாயிருக்கலாம். பள்ளி வளாகத்தில் அவன் ஒரு பொறுக்கிப் பையனாகவே அறியப்பட்டிருந்தான். வருஷத்துக்கு ஒரு முறை அவனது அப்பா அம்மாவை வரச் சொல்லி வகுப்பாசிரியர்கள் எச்சரித்து அனுப்புவார்கள். அவர்களும் வந்த கடமைக்கு, ஆசிரியர்களின் முன்னாலேயே ராஜுவை நாலு சாத்து சாத்தி, நாலு வார்த்தை திட்டித் தீர்த்துவிட்டுப் போய்ச் சேருவார்கள்.

ராஜு அதையெல்லாம் பொருட்படுத்தவே மாட்டான். அவனது உலகின் நியாயங்கள் என்று அவன் வகுத்துக்கொண்டிருப்பதைப் பற்றி வெளியே பேசவும் மாட்டான். அவன் எப்போதும் எப்படி இருப்பானோ அப்படித்தான் என்றும் இருந்தான். நீ பெரியவனாகி என்னடா பண்ணப் போற என்று வளர்மதி ஒரு சமயம் அவனிடம் கேட்டிருக்கிறாள். ராஜு கூசாமல் பதில் சொன்னான். சார்லஸ் சோப்ராஜ் மாதிரி பெரிய கொள்ளக்காரன் ஆயிருவேன் வளரு.

ஆனால் அவன் போலிஸ்! என்ன ஒரு விசித்திரம்!

இந்தச் செய்தியை எப்படி என் தோழிகளுக்குச் சொல்லுவது என்று எனக்குப் புரியவேயில்லை. ஏனென்றால் எங்களுக்குள் தொடர்பு விட்டுப் போய் பதினைந்து வருடங்களுக்குமேல் ஆகிவிட்டன. நான் கேளம்பாக்கத்தை விட்டு இடம் பெயர்ந்தே பத்து வருடங்களாகிவிட்டன. எனக்கு முன்னாலேயே வளர்மதியும் டெய்சியும் வேறு ஊர் போய்விட்டார்கள். செல்வி என்ன ஆனாள், எங்கே இருக்கிறாள் என்பதுகூடத் தெரியாது. கேளம்பாக்கத்தின் முகமே மாறிப் போய் இன்றைக்கு அது இன்னொரு சென்னையைப் போலாகிவிட்டது என்று நிறையப் பேர் சொன்னார்கள். போய்ப் பார்க்கக்கூட சந்தர்ப்பமில்லாமலாகிவிட்டது.

ஆறு வருடங்களுக்கு முன்னர் எங்கள் செட்டில் ராஜாத்திக்குத்தான் முதலில் திருமணம் நடந்தது. அதுகூட நடந்து முடிந்து பலகாலம் கழித்த பின்னரே தெரியவந்தது. தற்செயலாக அவளது அண்ணனை அடையாறில் பார்த்தபோது அவன் சொன்னான். ராஜாத்தி மேலப்பாளையத்தில் இருக்கிறாளாம். அடிப்பாவி என்று நினைத்துக்கொண்டேன். எப்படி ஒண்ணுமண்ணாகப் பழகினோம்! திருமணத்துக்குக் கூடச் சொல்ல முடியாமல் என்ன ஒரு கேவலமான வாழ்வுச் சுழல். ராஜாத்தியின் அண்ணன்தான் வளர்மதி செங்கல்பட்டில் இருப்பதையும் டெய்சி சிங்கப்பூருக்குப் போய்விட்டதையும் சொன்னான். மற்றவர்களைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அனைவருக்குமே திருமணமாகிவிட்டது என்று சொன்னான்.

நான் எதிர்பார்த்த மாதிரியே நீ எப்படி இருக்க, என்ன பண்ற, உன் ஹஸ்பண்ட் என்ன பண்றாரு என்ற கேள்வியை அவன் தவறாமல் கேட்டான். சிரித்தேன். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்று சொல்லிவிட்டு, சட்டென்று பேச்சை மாற்றி வேறு ஏதேதோ பேசிவிட்டு அவசரமாகக் கிளம்பிவிட்டேன்.

நான் என்ன செய்ய முடியும்? முப்பது வயதில் திருமணம் ஆகாதிருப்பது இன்றைக்குப் பெரிய விஷயமில்லைதான். ஆனால் என் வீட்டில் எனக்குப் பதினெட்டு வயதில் இருந்தே வரன் பார்க்க ஆரம்பித்துவிட்டதுதான் பெரும்பிழை. அதை இனிமேல் சொல்லிக்காட்டிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அப்பாவும் அம்மாவும் சலிக்காமல் அப்படியொரு வேட்டையாடினார்கள். ஒரு ஜாதகத்துக்கு எத்தனை பிரதிகள் எடுப்பார்களோ, எங்கெங்கே கொண்டு போய்க் கொடுப்பார்களோ கணக்கு வழக்கே கிடையாது. ஆனாலும் மாப்பிள்ளைப் பயல் வருவேனா என்று இன்னமும் ஆட்டம் காட்டிக்கொண்டேதான் இருந்தான்.

அம்மா யார் யாரோ ஜோசியர்களைப் போய்ப் பார்த்து பிரதி வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு புதிய பரிகாரத் திட்டத்துடன் வருவாள். இதைச் செய்தால் கண்டிப்பாக நடந்துவிடும் என்று சொல்லுவாள். நான் என்ன புரட்சிப் பெண்ணா? கல்யாணமே வேண்டாம் என்று சொல்லுவதற்கோ, கல்யாணமெல்லாம் வெறும் ஹம்பக் என்று அலட்சியப்படுத்துவதற்கோ நான் தயாரில்லை. எனக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். நான் நகர்ந்தால்தான் அவர்களுக்கு வழி தேட முடியும். எல்லா வீடுகளுக்குமான எளிய பிரச்னை. ஆனால் எல்லாருக்கும் எளிதில் தீர்ந்துவிடுவதில்லை.

இரண்டு சிக்கல்கள். ஒன்று, நான் ஒரு வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை என்பது. இரண்டாவது எனக்கு யாரையும் காதலிக்கத் துப்பில்லாமல் போய்விட்டது. இனி எண்ணி என்ன? எனக்கான வரன் வேட்டை வீட்டில் நடந்துகொண்டிருக்கிறது. என்றைக்காவது வேட்டையில் ஒரு மிருகம் சிக்காமல் போகாது.

இவ்வாறு எண்ணியபடி நாள்களைக் கொன்றுகொண்டிருந்தபோதுதான் அப்பாவின் நண்பரான பழனிவேல் கவுண்டர் மூலம் அந்த வரன் எங்கள் வீட்டுக்கு வந்தது. பையன் பெரிய போலிஸ் ஆபீசர். அசிஸ்டெண்ட் கமிஷனர். பெயர் வெங்கடபதி ராஜு.

எப்படி இருக்கிறது கதை? நான் ரொம்ப ஆர்வமாக அவன் போட்டோவை வாங்கிப் பார்த்தேன். எட்டாம் வகுப்புடன் பள்ளிக்கூடத்தை விட்டுப் போய்விட்ட நானறிந்த ராஜுவின் முகத்தை அதில் அடையாளம் காண முடியவில்லை. நல்ல, பெரிய மீசை வைத்திருந்தான். மழுங்கச் சிரைத்த கன்னங்கள். ஆஜானுபாகுவாக இருப்பான் என்று தோன்றியது. பெரிய அழகனாகத் தெரியவில்லை என்றாலும் ஒரு போலிஸ் ஆபீசருக்கான மிடுக்குக்குக் குறைவில்லை.

பையனுக்கு முப்பத்தி இரண்டு வயதாகிறது என்று கவுண்டர் சொன்னார். கணக்குப் போட்டுப் பார்த்தேன். சரியாகத்தான் இருந்தது. ராஜு நிச்சயமாக என்னைவிட இரண்டு வயது மூத்தவன். ஏனென்றால் அவன் ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளில் தலா இரண்டு வருடங்கள் இருந்திருக்கிறான். அப்புறம் எப்படிப் படித்து பாஸ் செய்து மேலே போயிருப்பான் என்று விசாரிக்க வேண்டும். சொல்லுவானா என்று தெரியாது. ஒரு சமயம் டெய்சி அவனிடம் எப்படி தினமும் மன்னார் கடையில் அவன் போண்டா திருடுகிறான் என்று கேட்டிருக்கிறாள். அவன் அந்த ‘ட்ரிக்’கைச் சொல்ல மறுத்துவிட்டான். அவன் வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்துக்கு வருகிற வழியில் உள்ள கடை அது. வாசலிலேயே பெரிய அடுப்பில் வாணலி போடப்பட்டிருக்கும். கொதிக்கும் எண்ணெயில் பந்து பந்தாக போண்டா உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து அடுக்கி வைத்திருக்கும். டீ குடிக்க வருகிறவர்கள் தவறாமல் ஒரு போண்டா வாங்கி தினத்தந்தி பேப்பர் துண்டில் வைத்துப் பிழிந்துவிட்டுச் சாப்பிடுவார்கள். ஒரு போண்டா, ஒரு டீ. அத்துடன் ஒருவேளை உணவு முடிந்ததாக நினைப்பவர்கள் அப்போது கேளம்பாக்கத்தில் மிகுதி.

ராஜுவுக்கு உண்மையில் போண்டாவின் மீது அத்தனை விருப்பமா என்று தெரியாது. அவன் திருடுகிற சந்தோஷத்துக்காகவே போண்டாவைத் தின்கிறான் என்று நாங்கள் நினைத்தோம். சில சமயம் அவனது திறமையைப் பரிசோதிப்பதன் பொருட்டு புதுக்கடையில் தேன் மிட்டாய், முருகைய நாடார் கடையில் நட்ராஜ் பென்சில், கோவிந்தராஜ் டாக்டரின் க்ளினிக்கில் இஞ்செக்ஷன் சிரஞ்ச் என்று பல விதமான பொருள்களைச் சொல்லித் திருடி வரச் சொல்லியிருக்கிறோம். ராஜு அதையெல்லாம் சர்வ சாதாரணமாகச் செய்து முடித்துவிடுவான். இந்தா என்று கேட்டதைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவன் வேலையைப் பார்க்கப் போய்விடுவான். எப்படிடா முடிஞ்சிது என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டான். நீ கேட்ட, நான் செஞ்சேன். அதுக்குமேல பேசாத என்று சொல்லிவிடுவான்.

அப்பாவின் நண்பரான கவுண்டரிடம் நான் மாப்பிள்ளைப் பையனின் பூர்வீகம் எது என்று தனியே கேட்டேன். அவர் கருங்குழி என்று சொன்னார். ஆனால் படித்தது கேளம்பாக்கம் என்று தெரிந்தது. சந்தேகமே இல்லை; அவன் தான் என்று எனக்குத் தீர்மானமாகிவிட்டது. என்ன சொல்ல? அது மகிழ்ச்சியா, ஆர்வப் படபடப்பா என்று புரியவில்லை. இந்த நேரம் பார்த்து என் சிநேகிதிகள் யாரும் தொடர்பில் இல்லாமல் போய்விட்டார்களே என்பது மட்டும் நெஞ்சு கொள்ளாத வருத்தம் தந்தது. நான் என் வீட்டாரிடம் ராஜுவைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. அதாவது எனக்குத் தெரிந்தவன்தான் என்பதைக் காட்டிக்கொள்ளவில்லை. ஒரு சிறு ஆச்சரியம் அவர்களுக்கும் இருந்துவிட்டுப் போகட்டுமே. பெண் பார்க்க வரும்போது அவனே அதை உடைக்கட்டும்.

அவன் வந்தான். அவனது அப்பா, அம்மா, இன்னும் ஒன்றிரண்டு உறவுக்காரர்களுடன் காரில் வந்து இறங்கினான். இடைப்பட்ட காலத்தில் நிறையப் பேர் இம்மாதிரி என்னைப் பெண் பார்த்துப் போயிருந்தபடியால் என் வீட்டில் ரொம்ப சிறப்பாக ஏதும் செய்திருக்கவில்லை. அம்மா, ஜெயராம் ஸ்வீட் ஸ்டாலில் இருந்து கால் கிலோ பக்கோடாவும் ஜாங்கிரியும் வாங்கி வைத்திருந்தாள். அதை சிறிய பேப்பர் தட்டுகளில் வைத்து எடுத்துச் சென்று நான் அனைவரிடமும் வழங்கினேன். அவனிடம் கொடுக்கும்போது சிரித்தேன். போண்டா இல்லை, பக்கோடாதான் என்று சொன்னேன்.

ராஜு சிரித்தான். நியாயமாக ஒரு வியப்பை அவன் காட்டியிருக்க வேண்டும். மாறாக ஹலோ என்று மட்டும் சொன்னான்.

படிப்பு, டிரெய்னிங், வெளியூர் போஸ்டிங் போன்ற காரணங்களால்தான் அவனது திருமணம் இத்தனைக் காலம் தள்ளிப் போய்விட்டதாக அவனது வீட்டார் சொன்னார்கள். இப்போது சென்னையிலேயே போஸ்டிங் கிடைத்துவிட்டதால் உடனே திருமணத்தை நடத்திவிட விரும்புவதாக அவனது அம்மா சொன்னாள். ஏனோ என்னால் சிறு வயதில் பார்த்த அவர்கள் யாருடைய முகத்தையும் தற்போதைய தோற்றத்தோடு பொருத்திப் பார்க்கவே முடியவில்லை. ராஜுவே கூட நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை. ஆனாலென்ன? வாழ்க்கை எப்போதேனும் சில விசித்திரங்களை அடைகாத்து வெளிப்படுத்தும். சமயத்தில் அது ரசிக்கும்படியாகவும் இருக்கும்.

அவர்களுக்கு என்னைப் பிடித்திருந்தது. குடும்பத்துக்கு ஏற்ற பெண் என்று சான்றிதழ் வழங்கினார்கள். திருமணத்தைப் பழனியில் வைத்துக்கொள்ளலாம் என்றும் ஐந்து லட்சம் வரதட்சணையும் எழுபது பவுன் நகையும் தரவேண்டும் என்றும் கேட்டார்கள். பெரிய அதிகாரி அல்லவா? அதெல்லாம் அப்படித்தான் என்று அம்மா ரகசியமாக அப்பாவிடம் சொன்னாள். ஆனால் அத்தனை பெரிய செலவுக்கு நாம் எங்கே போவது என்று அப்பா அப்போதே வருந்த ஆரம்பித்துவிட்டார். நான் ராஜுவைப் பார்த்தேன். பெரியவர்கள் பேசிக்கொண்டிருப்பதற்கும் தனக்கும் தொடர்பே இல்லாதது போல அவன் தன் மொபைல் போனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பேசி முடிவு செய்துவிட்டுத் தகவல் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு அவர்கள் கிளம்பும்போது ராஜு என்னிடம் தலையாட்டி விடைபெற்றான். எனக்கு அதற்குமேல் தாங்கவில்லை. என்ன பெரிய ரகசியம்.

நீ டோட்டலா மாறிட்ட ராஜு. அன்னிக்கு பாத்த ராஜுவே இல்லை நீ என்று சொன்னேன்.

அவன் ஒரு கணம் யோசித்தான். அவனிடம் நான் அளித்த பேப்பர் தட்டில் பக்கோடாவும் ஜாங்கிரியும் அப்படியே இருந்தன. அவன் சாப்பிட்டிருக்கவில்லை.

ஆமால்ல? இப்பல்லாம் ஆயில் ஐட்டம்ஸ் சாப்பிடறதில்ல நான் என்று சொன்னான்.

O

நன்றி: மல்லிகை மகள், மார்ச் 2018

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி