பேயோன் முன்னுரை

விரைவில் மிகப்பெரிய வெற்றியடையவிருக்கும்போது வெளிவரவிருக்கும் எனது ‘அன்சைஸ்’ புத்தகத்துக்குப் பேயோன் எழுதியிருக்கும் முன்னுரை பின்வருமாறு:-

வாசக வாசகியரே, இந்நூலைப் படிக்குமுன் உங்கள் புன்னகை மீசைகளை முறுக்கி விட்டுக்கொள்ளுங்கள். பின்னால் வருத்தப்படாதீர்கள். பா. ராகவனின் இந்தப் புத்தகத்தை முதலிலிருந்து கடைசி வரை படித்த நேரமனைத்தும் ஒரு மெல்லிய புன்னகை எனது இதழ்களிரண்டிலும் ஒரு சராசரி எட்டு மாதக் குழந்தை போல் தவழ்ந்தது. காரணம் உள்ளடக்கம். நகைச்சுவை என்ற இவரது எழுத்தின் குறிக்கோள் ஆரம்பத்திலேயே அம்பலப்பட்டு சந்தியைச் சிரிக்கவைக்கும் என நம்புகிறேன். சிரிக்கவைத்து, ஏன் சிரித்தோம் என்று சிந்திக்கவும் வைத்து, ‘அட ஆமாம், இதற்குச் சிரிக்காமல் அழவா செய்வார்கள்?’ என்று மீண்டும் ஒருமுறை சிந்திக்கவைக்கும் கட்டுரைகளின் தொகுப்பிது.

ராகவன் இப்போது தொலைக்காட்சித் தொடர்களுக்குப் போய் பெண்களை அழவைப்பதிலும் அவர்களின் ரத்த அழுத்தத்தைப் புகுந்தவீட்டார் போல் ஏற்றிவிடுவதிலும் முழுநேரமாக ஈடுபட்டுவருகிறார். சமீபகாலம் வரை இந்த நபர் ஆனந்தக் கண்ணீரையும் சொரிய வைத்துக்கொண்டிருந்தார் என்பதற்கு இந்தப் புத்தகம் வலுவான சாட்சி. இந்நூலில் காணக் கிடைப்பவை பா.ரா.வின் சிறு சிறு வாழ்வனுபவத் துளிகள். இவை நமக்கு ஏற்படாமல் தப்பித்தோம் என்று நம்மை (பின்னே பிறரையா?) நினைக்கவைக்குமளவு இத்துளிகளை விரிவாக வர்ணிக்கிறார் பா.ரா.

எழுத்தாளர் பா. ராகவன் தனது மொழிநடையில் சில சுதந்திரங்களை ஏற்றுக்கொள்கிறார். ஆதெள கீர்த்தனாம்பர நடை, தானியங்கி எழுத்து, மலைப் பிரசங்க நடை ஆகிய மூன்றின் சங்கமம் இவர் நடை. வார்த்தை விளையாட்டுச் சிலேடைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சொந்தத் துன்பங்கள், சுயசுபாவப் போக்குகள், விநோத மனிதர்கள், அன்றாடச் சிக்கல்கள், நகர வாழ்க்கை அவலங்கள், வாழ்க்கைமுறை விசித்திரங்கள் அனைத்தையும் தழுவிப் புத்தக இறுதிக்குச் செல்கிறது புத்தகம். ‘டெஸ்க்டாப் மானிட்டரின் முதுகு கர்ப்பம்’, ‘இனி நான் ஆரோக்கியசாமி’, ‘சட்டை ஒரு தேசம்’ போன்ற உயர்நகைச்சுவைப் பிரயோகங்கள் உங்களுக்கு சிரிப்பைத் தரவில்லை என்றால் அவற்றை நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்று அர்த்தம். படியுங்கள்.

நகைச்சுவை எழுத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்று சுய எள்ளல். நம்மைப் பார்த்து நாம் சிரிக்காவிட்டால் வேறு யார் சிரிக்கப்போகிறார்கள்? சரி, யாரெல்லாம் சிரிக்கப்போகிறார்கள்? பல பேர். ஆனால் யாருக்கும் நம்மைப் பற்றி நம் அளவுக்குத் தெரியாதல்லவா? அதனால் நம் மீதான நம் சிரிப்பில் இயற்கையாகவே நமது கைதான் ஓங்கியிருக்கும். அதில்தான் தொடங்குகிறது தனக்கு மிஞ்சித்தான் தான தருமம். இதில் நூலாசிரியர் கொடையேழு வள்ளல்களில் ஒருவர் (கடையேழு என்பதை நகைச்சுவைக்காக மாற்றி கொடையேழு என்று எழுதியிருக்கிறேன். இங்கு சிரிக்கவும்). இவரது சுயபாடுபொருள்கள் இவரது சொந்த உருவம் (‘அன்சைஸ்’ என்ற கட்டுரை), நடைமுறை இன்னல்களுக்கு எழுத்தாளக் கையாலாகாத்தனங்கள் ஆற்றும் எதிர்வினை (விசாரணைக்கு வா), அர்த்தமுள்ள அபிலாஷைகளில் அகத்தார் ஆர்வங்காட்டாமை (ஜெய் ஸ்ரீராம்!), மறைமுக நகைக் கலாச்சாரத்திற்கு ஆன்மீக ஆரோக்கியங்களின்பேரில் பலியாதல் (ஜடாமுடிக்கு வழியில்லை), சிந்தாமல் சாப்பிடத் தெரியாமை (பங்கரை) என எடுத்துக்காட்டுகளை எடுத்துக் காட்டிக்கொண்டே போகலாம்.

ஆசிரியர் மற்றவர்களையும் மற்ற விசயங்களையும் எள்ளுகிறார். அண்டைவீட்டார், சினிமாவுக்கு வரும் மருத்துவர்கள், அரசு இயந்திர மனிதர்கள், பொட்டி தட்டும் இயந்திரவாயர்கள், நண்பர்கள், சினிமா-தொலைக்காட்சிக்காரர்கள், சில பெண்கள் எனப் பலரையும் இடிக்கிறார். அவர்களின் உளவியலை அவர் ஆராய்ந்து பார்ப்பதில்லை. ஒரு மருத்துவர் தான் அளிக்கும் சிகிச்சைக்கு உட்பட வேண்டிய மனிதர்களைப் பழுதடைந்த இயந்திரங்களாகப் பார்ப்பது போல் பா.ரா. தான் கதையாடும் மனிதர்களைப் பார்க்கிறார் எனப் படுகிறது. எல்லோரும் நடமாடும் விவரணைகள். இங்கே சிந்தனைக்கு வேலை இல்லை, சிரிப்புக்குத்தான் வேலை. ஆனால் இவர்களையும் இவர்கள் தொடர்பான சம்பவங்களையும் தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளாமல் இந்த நூலுக்குத் தாரை வார்ப்பதன் மூலம் பணநஷ்டப்படுகிறாரோ என்று தோன்றுகிறது.

பா.ரா.வின் சிரிப்புச் சத்தம் புத்தகம் முழுவதும் கேட்கிறது. இது எத்தகையதான சிரிப்பு எனில், ‘நீயும் சேர்ந்து சிரி. ஏனென்றால் இதில் இதற்கு மேலும் ஒன்றும் இல்லை. நம்மால் ஆகப்போவதும் ஒன்றும் இல்லை’ என்ற செய்தியைச் சொல்லும் சிரிப்பு. அதே சமயத்தில் கல்வி, சினிமா, இலக்கியம், இதழியல், இசை, பொருளாதாரம் போன்ற விசயங்களைப் பற்றி சீரியசாகவும் எழுதியிருக்கிறார் இந்தப் புத்தகத்தில். தீவிரக் கட்டுரைகளும் வாசிப்புக்கு உகந்தவையாக உள்ளன. தீவிரமான ஆசாமிகளுக்கு அவை பிடிக்கலாம். இவற்றில் விவாதிக்கத்தக்க விசயங்களும் உள்ளன.

இவை அனைத்தினுடாகவும் ஒரு ஓரமாக, ஆனால் தூக்கலாக வெளிப்படுவது பா.ரா.வின் சமகால வைணவ அடையாளம். பல கட்டுரைகளில் வியப்பையோ விசனத்தையோ வெளிப்படுத்த எம்பெருமான் உதவிக்கு அழைக்கப்படுகிறார். வாசிப்பு விரிவு சற்றுக் குறைவாக இருக்கக்கூடியவர்கள் இதென்ன ஒரே வேதாந்த தீபிகையாகக் கொட்டுகிறது என்று வியக்கலாம். பா.ரா. அடுத்து வரும் (தமது) புத்தகங்களில் நகைச்சுவைக்கு விவிலியத் தமிழ் நடையை ஒருகை பார்க்க வேண்டும் என்பது என் அவா.

பேயோன் / 23-10-2012

Share

2 comments

  • வாழ்த்துகள் பாரா சார் குருஜியின் முன்னுரையுடன் கண்டிப்பாக புத்தகம் ஊரெல்லாம் சிரிக்கப்போகிறது 🙂

    _________________________________

    //புத்தகங்களில் நகைச்சுவைக்கு விவிலியத் தமிழ் நடையை ஒருகை பார்க்க வேண்டும் என்பது //

    ஆமாம் இந்த விசயத்தை சொல்றதுக்கு முன்னுரையின்ற பேர்ல குருஜி என்னா நடை நடந்திருக்காரு #ரெண்டு3வாட்டிபடிச்சுத்தான் /படிச்சாத்தான் புரியும்

  • அன்சைஸ் படித்து முடித்துவிட்டேன். இப்போது பேயோன் சொன்ன இடங்களை மீண்டும் படித்துச் சிரித்து, என் நகைச்சுவை உணர்வை எனக்கே நிரூபித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறேன். என் மன உளைச்சலுக்குக் காரணமாக அமைந்துவிடக்கூடிய பேயோன் மீது 6666ஏ போடப்போகிறேன்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி