காலமும் காந்தியும் கதைகளும்

[காந்தி சிலைக் கதைகள் தொகுப்புக்கு நான் முன்னர் எழுதிய முன்னுரையை இன்று காந்தி டுடே இணையத் தளத்தில் கண்டெடுத்தேன். பிழை திருத்தம் மட்டும் செய்து இங்கு மறு பிரசுரம் செய்கிறேன். சுநீல் கிருஷ்ணனுக்கு நன்றி.]

காந்தியை எனக்குப் பிடிக்கும். அவரை விமரிசிப்பதும், பிடிக்காது என்று சொல்லுவதும் ஒரு நாகரிகம் ஆகியிருக்கும் காலத்தில் இந்த ஒரு வரி கருத்து இலேசான புன்னகை வரவழைக்கலாம். உண்மையில், அத்தகையவர்களைப் பார்க்கும் போது பரிதாபமே ஏற்படுகிறது. என்னளவில் காந்தி என்றால் வழுக்கைத் தலையும் பொக்கை சிரிப்பும் கொண்டு புகைப்படங்களில் சிரிக்கும் கிழவர் அல்லர். அவர் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கும் சுமார் பதினாறாயிரம் பக்கங்கள்.

சென்னை காந்தி மண்டபத்திலுள்ள சிறு நூலகக் கட்டடத்தினுள்ளே இருக்கிற புத்தகங்களின் மூலம்தான் காந்தி எனக்கு முறைப்படி அறிமுகமானார். முன்பெல்லாம் எழுதுவதற்காக அங்கே போவேன். எழுதாமல் அமர்ந்து படிப்பேன்.

பிரமாதமான மொழிநடை என்று சொல்ல முடியாது. கட்டுரைகளில் கோவை கூட ஆங்காங்கே உதைக்கும். உட்கார்ந்து மெனக்கெட்டு எடிட் செய்தால் மெருகு கூடும் என்று பல இடங்களில் தோன்றும். சில கட்டுரைகள் ரீரைட் செய்ய வேண்டும் என்றே தோன்றச் செய்யும். ஒருவேளை அதெல்லாம் மொழிபெயர்ப்பாளரின் கைங்கர்யமாகக்கூட இருக்கலாம்.

ஆனால் தன்னைத்தானே விதைத்துக்கொண்டு, தானே முளைவிட்டு, முட்டி மோதி மேலெழுந்து வந்து காற்றில் அலையும் ஒரு காட்டுக் கொடி போலத்தான் அவரது சிந்தனைகள் எனக்கு தோற்றமளித்தன . வேரிலிருந்து உச்சாணிக் கொண்டையில் துளிர்த்திருக்கும் கட்டக் கடைசி இலை வரை மருத்துவ குணம் கொண்ட மூலிகைக் கொடி அது.

ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் மானுட குலத்தின் நலனுக்காகவே சிந்தித்து இருக்கிறான் என்பது எப்பேர்பட்ட விஷயம்! ஏன் நம்மால் அதை, அதன் முழுப் பரினாமத்துடன் உணர முடியாமல் போய்விட்டது?

காந்தி ஓர் அரசியல்வாதி இல்லை. நிச்சயம் இல்லை. ஆனால் அவரை விடாப்பிடியாக அப்படியே பார்க்கப் பழகிவிட்ட மக்களுக்கு வேறு எந்த விதத்திலும் சிந்தித்துப் பார்க்க முடியமாலாகிவிட்டது. இது சந்தேகமில்லாமல் துரதிருஷ்டம் தான். அவர் ஒரு பரிபூரணமான சுய சிந்தனையாளர். பூமிக்கு மேலே, ஆகாயத்துக்குக் கீழே இருக்கிற அத்தனை விஷயங்கள் பற்றியும் ஆற அமர உட்கார்ந்து யோசித்திருக்கிறார். தான் யோசித்ததை, கண்டடைந்ததை , துளியும் குறை மிகையின்றி எழுத்திலும் பேச்சிலுமாகப் பதிவு செய்து இருக்கிறார். அவர் எழுதியவை பேசியவை அனைத்தையும் இன்னொரு வேதமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. குறைந்தபட்சம் பொருட்படுத்திப் படித்துக் கூடப் பார்க்காமல் அவரை விமரிசிப்பவர்களை எண்ணித்தான் பரிதாபப்படுகிறேன்.

அவரது கிராம ராஜ்ஜியம் , சுதேசி பொருளாதாரம் போன்ற பிரயோகங்கள் இன்றைக்குத் தேர்தல் உபகரணங்களாகியிருக்கின்றன .தேவைக்கேற்பப் பயன்படுத்தப்பட்டபின் , ஆணுறை மாதிரி வீசி எறியப்படுகின்றன . உண்மையில் ஓரெல்லை வரை நடைமுறை சாத்தியம் உள்ள யோசனைகளையே அவர் தொடர்ந்து முன்வைத்து வந்து இருக்கிறார். முன் தீர்மானங்கள் ஏதுமின்றி காந்தியை அணுகிப் படித்தால் இது புரியும்.

இந்தக் கதைகளைப் பற்றிச் சொல்ல வந்தேன். கதாநாயகராகவும், துணைப் பாத்திரமாகவும் வெறும் சாட்சியாகவும் வழிப்போக்கராகவும் இன்னபிறவாகவும் இவற்றில் காந்தி வருகிறார். இந்த எல்லா கதைகளின் களனும் சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள காந்தி சிலையைச் சுற்றிய பகுதியாக அமைந்து இருப்பது தற்செயல் அல்ல. நிலவைக் காட்டி சோறூட்டுவது போல சிலையைக் காட்டி கதை சொல்ல விரும்பியதன் வெளிப்பாடு.

இந்தியாவைப் பொறுத்தவரை காந்தி ஒரு பொதுச் சொத்து. யார் வேண்டுமானாலும் சேதப்படுத்தலாம் என்றாகிவிட்டது. ஒரு மாறுதலுக்கு காந்தி ஜெயந்தி அல்லாத நாளில் கூட அவர் சிலையின் மீது படிந்து கிடக்கிற எச்சங்களைத் துடைத்து சுத்தப்படுத்தலாம் என்று நினைத்தேன், அதனால் இவற்றை எழுதினேன்.

பிரசாரம் என் நோக்கமில்லை . எனக்கு அது முடியவும் முடியாது. ஆனால் நமது வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத எது ஒன்று பற்றியும் அவர் சிந்தித்ததில்லை, பேசியதில்லை என்பதை இந்தக் கதைகள் எழுதிய பொழுது தன்னால் வந்து விழுந்த பொருத்தங்கள் எனக்கு நிரூபித்தன. அதாவது, கதைகளைத் தீர்மானித்துவிட்டு நான் காந்தியப் பொருத்தம் தேடவில்லை. மாறாக, எழுதப்படும் எந்த ஒரு வாழ்க்கைச் சம்பவத்திலும் காற்றைப் போல அவரது சிந்தனைகள் மறைபொருளாகக் கலந்திருக்கக் கண்டேன்.

காலத்தால் கொள்ளை கொண்டு போகமுடியாத மிகச் சில அபூர்வமான சிந்தனையாளர்களுள் ஒருவர் அவர்.

இரு வருடங்களுக்கு முன்பு காந்தி சிலைக் கதைகள் எனும் பொதுத் தலைப்பில் இக்கதைகள் குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியாயின. வெளியான காலத்தில் கடிதங்கள் மூலம் இதனைப் பாராட்டி வரவேற்ற வாசகர்களை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். பல நண்பர்கள் அப்போதே இவற்றைத் தொகுத்து நூலாகக் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். இப்பொழுதுதான் அது சாத்தியமாகி இருக்கிறது.

எப்போதும் விமரிசகர்களுக்காக அல்லாமல் , எனக்காகவும் வாசகர்களுக்காகவும் மட்டுமே எழுதுபவன் நான். இதுகாறும் நான் எழுதிய சிறுகதைகளுள் எனக்கு மிகவும் திருப்தி தந்த கதைகள் இவை. அந்தத் திருப்தி வாசிப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பது என் அவா.

[இக்கதைத் தொகுப்பின் மறுபதிப்பு டிசம்பர் 2014ல் மதி நிலையம் வெளியீடாக வரவிருக்கிறது.]

காந்தி சிலைக் கதைகள் – சுநீல் கிருஷ்ணன் மதிப்புரையை இங்கே காணலாம்.

Share

Add comment

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!