அன்லிமிடெட் அநியாயம்

சாருவின் சாமியார் ராசி மாதிரி எனக்கு ஒரு சாப்பாட்டு ராசி இருக்கிறது போல் உள்ளது. எங்காவது புதிய உணவகங்களைக் கண்டுபிடித்துப் போய் சாப்பிட்டுப் பார்ப்பேன். நன்றாக உள்ளது என்பதற்குமேல் கொஞ்சம் கூடுதல் தரம் தெரியுமானால் நண்பர்களுக்கு சிபாரிசு செய்வேன். ரொம்பக் கவர்ந்துவிட்டால் இங்கே எழுதிவிடுவேன்.

நான் எழுதியதைப் படித்துவிட்டு நண்பர்கள் இடத்தைத் தேடி எங்கெங்கிருந்தோ வந்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டு மதிப்புரை வழங்குவார்கள். சம்பந்தப்பட்ட உணவகங்கள் என் மூலம் வருகிற வாடிக்கையாளர்களுக்காக எனக்குத் தனியே ராயல்டி ஏதும் தருவதில்லை என்றாலும் இதை ஒரு சமூக சேவையாகப் பல வருடங்களாகச் செய்து வந்தபடிதான் இருக்கிறேன்.

ஆனால் இந்த நல்லெண்ணம் ஏன் அந்த உணவகங்களுக்குத் தெரிவதில்லை என்று எனக்குப் புரிவதில்லை. நான் எழுதி, நண்பர்கள் வரத்தொடங்கி கொஞ்ச நாளிலேயே அவர்கள் புத்தியைக் காட்டிவிடுகிறார்கள். இனி செத்தாலும் அந்தப் பக்கம் போகமாட்டேன் என்று மனத்துக்குள் வீர சபதம் செய்யவேண்டியதாகிவிடுகிறது.

தி. நகரில் ஒரு ராயர் மெஸ், டிடிகே சாலையில் ஒரு மாமி மெஸ் [ ரொம்ப அநியாயம். தரமும் போய், விலையும் ஏறி, இரண்டாவது முறை என்ன கேட்டாலும் கூடுதல் வசூல் செய்துவிடுகிறார்கள்.] என்று முன்னர் நான் புகழ்ந்து எழுதிய மெஸ்கள் எல்லாம் பல்லை இளித்து விட்ட நிலையில் வெகுநாள் வரை உணவகங்கள் பற்றி ஏதும் எழுதக்கூடாது என்றே இருந்தேன்.

அபூர்வமாக, எல்டாம்ஸ் சாலையில் எங்கள் அலுவலகத்துக்கு நேரெதிரே உள்ள ஸ்ரீபார்வதி ஹால் வளாகத்தில் ஓர் உணவகம் ஆரம்பித்து, அது மிரட்டக்கூடிய சுவையுள்ள, விதவிதமான உணவைக் குறைந்த விலைக்கு தாராளமாக வழங்கத் தொடங்கியதால் அதைப் பற்றி இங்கே ஒரு பக்கம் எழுதினேன். வலையுலக நண்பர்கள் பலர் தொடர்ந்து ஸ்ரீபார்வதிக்கு வரத் தொடங்கினார்கள். பலநாள் மதிய உணவு வேளையில், அதிகாரபூர்வமற்ற வலைப்பதிவாளர் சந்திப்புகளே அங்கே நடந்தன. என் நெடுநாள் நண்பரும் முன்னாள் விகடன் நிருபருமான கணபதி சுப்பிரமணியன், என் கட்டுரையைப் படித்துவிட்டு எங்கிருந்தோ தேடிக்கொண்டு ஸ்ரீபார்வதிக்கு வந்தார். இதற்காகவே அவர் லண்டனிலிருந்து திரும்பி வந்தார் என்று பொய் சொல்ல மாட்டேன். ஆனாலும் பல்லாண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியவருக்கு ஸ்ரீபார்வதியை ஒரு புதிய க்ஷேத்திரமாக்கி அறிமுகப்படுத்திய திருப்பணியை நானல்லவா செய்திருக்கிறேன்?

ஜியெஸ் மாதிரி இன்னும் எத்தனையோ பேர். லக்கி லுக்கும் அதிஷாவும் இங்கே சாப்பிடுவதற்கென்றே அரை மணிநேர அலுவலக உணவு இடைவேளையில் அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடி வருவார்கள். என் கட்டுரையைப் படித்துவிட்டு, குங்குமம் பொறுப்பாசிரியர் வள்ளிதாசன் மைலாப்பூரிலிருந்து வேகாத வெயிலில் வந்து, சாப்பாடு காலி என்ற அறிவிப்பைக் கேட்டுவிட்டுத் திரும்பிச் சென்ற சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. எங்கள் அலுவலகத்தில், சத்யாகூட இரண்டொரு முறை சற்றே தாமதமாகச் சாப்பிட வந்து, உணவு இல்லாமல் திரும்பிச் சென்றிருக்கிறார்.

ஸ்ரீபார்வதிக்கு இந்த ரசிகர்களின் அருமை தெரியவில்லை. சமீப நாள்களில் எனக்கு அங்கே போவதற்கே பிடிக்காமல் போய்விட்டது. புராதனமான டிடிகே ரோடு சூர்யாஸின் கண்றாவி சுவையை நோக்கி வெகு வேகமாக அது நகர்ந்துகொண்டிருப்பது மட்டும் காரணமல்ல. ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே வாடிக்கையாளர்களை கோயிந்தசாமிகளாக நினைக்க ஆரம்பித்துவிட்டதுதான் பிரதானம். அன்லிமிடெட் 55 ரூபாய் என்ற அறிவிப்புடன் தொடங்கியவர்கள், இப்போது எதைக் கூடுதலாகக் கேட்டாலும் தனி விலை நிர்ணயித்துவிடுகிறார்கள். ஒரு சப்பாத்தி கூடுதலாக வேண்டுமா? மூன்று ரூபாய் கூடுதல். ஓர் அப்பளம் வேண்டுமா? அதற்குத் தனி. பாயசம் ஒரு கப்? தனி. அறிவிப்பே எழுதி ஒட்டிவிட்டார்கள். தண்ணீருக்கு மட்டும் தனி சார்ஜ் இன்னும் வைக்கவில்லை.

தவிரவும் அவர்கள் தொடங்கியிருக்கும் புதிய காம்போ உணவு வகைகள் அசகாயக் கொள்ளையாக இருக்கிறது. சாப்பாட்டுக்கு முன்னால் கொடுக்கும் அதே, பொறிக்காத அப்பள சைஸ் சப்பாத்தி இரண்டின் விலை முப்பது ரூபாயாம். [55 ரூபாய் உணவின்போது கூடுதல் சப்பாத்தி கேட்டால் 3 ரூபாய். அதே சப்பாத்தி இந்த காம்போவில் 30 ஆகிவிடுகிறது! சரி, ஒழியட்டும் என்று சாப்பிடுகிறீர்களா? ஆனால் இந்த ‘ப்ளானில்’ சாப்பிடுவோர் எக்ஸ்டிரா கேட்க முடியாது. அட,  விலைக்கே ஒரு கூடுதல் சப்பாத்தி கேட்டாலும் கிடையாது. இன்னொரு காம்போதான் தனியே ஆர்டர் செய்யவேண்டுமாம். ஒரே சப்பாத்தி மூன்று ரூபாய் விலைக்கும் முப்பது ரூபாய் விலைக்குமாக ஷட்டில் ஆடுகிற அதிசயம் உலகில் வேறெங்குமே நடக்காது என்று நினைக்கிறேன்.] ஐம்பத்தி ஐந்து ரூபாய் உணவில் வைக்கப்படும் ஒரு கப் சாம்பார் சாதம், வெரைட்டி ரைஸ், தயிர் சாதம் அனைத்தும் அதே அளவு – தனித்தனியே முப்பது ரூபாய். இதில் காம்போ என்பது எங்கே வருகிறது என்று கேட்பீர்களானால், சாம்பார் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளக் கொடுக்கப்படும் ஓர் அப்பளம் அதன் காம்போ! தயிர் சாதத்துக்கு ஊறுகாய் காம்போ.

என்னத்தைச் சொல்ல? காலை டிபனும் இப்போது ஆரம்பித்துவிட்டார்கள். இட்லி, பொங்கல், வடை, காப்பி கிடைக்கிறது. மாலை டிபனும் உண்டாம்.

ஸ்ரீபார்வதி தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி போராடி, முன்னேறி, உணவகத் தொழிலில் ஒரு பெரிய ஸ்தூபியாகலாம். உலகெங்கும் கிளை பரப்பலாம். சரவண பவன் அண்ணாச்சிக்கே சவால் விடுக்கலாம்.

ஆனால் ஒரு சிறந்த ரசிகனை நிரந்தரமாக இழந்தது, இழந்ததுதான்.

பி.கு: ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு மெஸ் பிடித்திருக்கிறேன். ஆறு மாதம் அவதானித்துவிட்டுப் பிறகு எழுதுகிறேன் 😉
 

Share

29 comments

  • ஒரு மாதத்துக்குப் பிறகு:
     
    எனக்கு முன்னாலேயே தெரியும், அந்த ஹோட்டலில் பல தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்று. பலமுறை கோடி காட்டி இருக்கிறேன்.
    எனக்கு அந்த ஹோட்டலில் இருந்து பைசா கிடைத்ததாகச் சொல்லும் உருது எழுத்தாளர்களை நினைத்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது. ஒவ்வொருமுறையும் பில்லையும் கட்டி மேலும் டிப்ஸையும் கொட்டிக்கொடுத்தது நான்.
    ஏன் இதையெல்லாம் முன்னமே சொல்லவில்லை? காரணம் இருக்கிறது. வீட்டில் சமைக்கவில்லை என்று சில நண்பர்கள் அந்த ஹோட்டலுக்குச் சென்றிருந்த நேரம். ரொம்ப டென்ஷனாக இருந்த நேரம். அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள் என்பது தெரிந்ததும்தான் இதையெல்லாம் எழுத முடிந்தது.
    வரும் வாரம் புலனாய்வுப் பத்திரிக்கையில் ஒரு தொடர் – சோறு-சாம்பார், கூடவே ஒரு அப்பளம் – படிக்கத் தவறாதீர்கள்!

  • தற்செயலாகப் பார்த்தேன். என்னைப்போன்ற உணவு ரசிகர் ஒருவர் [ சரவணகுமரன் – http://www.saravanakumaran.com/2008/08/blog-post_22.html ] எங்கெங்கே என்னென்ன உணவு நன்றாயிருக்கும் என்று வேலை மெனக்கெட்டு ஒரு பட்டியல் போட்டிருக்கிறார். http://spreadsheets.google.com/ccc?key=p1iFsS9dr8WZ1CQ8xws1tKQ&hl=en இந்த முகவரியில் நீங்கள் அதைப் பார்க்கலாம். முடிந்தால் பங்களிக்கவும் செய்யலாம்.
     

  • நல்ல வேளை. ஞாயிறு அன்று உரையாடலின் திரையிடலுக்காக அங்கே வந்தபோது பாலாவை நச்சரித்து ஸ்ரீபார்வதி பக்கம் நகர்த்திப் போனேன். பாராவே சொல்லிட்டார், சாப்பிடாம விடறதா என்று போய் பார்த்தால் ஞாயிறு விடுமுறை என்று சுவற்றில் font size 10-ல் ஒரு சின்ன பேப்பர் ஒட்டியிருந்தது. அப்ப ரொம்ப ஏமாற்றத்தோட எங்க ஆஸ்தான உணவகமான மைலை சரவணபவனுக்கு கிளம்பிப் போனோம். இப்பத்தான் புரியுது அது ஜஸ்ட் எஸ்கேப்னு. 🙂

  • இன்றுவரை நம்பிக்கை இழக்கவிடாமல், ரசிகர்களுக்குத் தொடர்ந்து சேவை செய்துவருகிறது, மயிலாப்பூர் கபாலி கோயில் அருகே உள்ள மாமி மெஸ். பல வருடங்களாக டிபனும் வெரைட்டி ரைஸும்  அங்கே 12 ரூபாய்க்கு கிடைக்கிறது. பண்டிகை  நாள்களில் பலகாரங்களும் சல்லிசு விலையில் கிடைக்கும். இருபது ரூபாய் கொடுத்துவிட்டு கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டு வரலாம். ரசிகர்கள் அதிகமாகிப் போனாலும் நிதானம் இழக்காமல் இருக்கிறார்கள். சுவையிலும் திருப்தியிலும் குறை வைப்பதில்லை. இதுபோன்ற யோக்கியமான உணவகங்கள் இருக்கும்வரை போலிகள் சீக்கிரம் வெறுத்து ஒதுக்கப்படுவார்கள்.

  • டென் டவுனிங்கில் சரக்கடித்து , அங்கே தரும் மீனில் உப்பில்லை என்கிற எங்கேயோ படித்ததற்கு இணையான ஒன்றாக இந்த கட்டுரை இருக்கிறது. நப..நப.. 😉

  • பினாத்தல் சுரெஷின் கமென்ட் அபாரம். 🙂
    வெஸ்ட் மாம்பலம் காமெஷ்வரி மெஸ்ஸும் அபாரம் தான். அதுவும் சப்பாத்திக்கு கூடுகிற கூட்டம் பக்கத்தில் இருக்கும் டாஸ்மாக் தோற்றுவிடும்.

  • ஐயா,
    நீர் சரியான சாப்பாட்டு ராமன்… இல்லை… இல்லை.. சாப்பாட்டு ராகவன் என்பது இக்கட்டுரை மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. என்னடா மனுஷன் திடீர்னு குண்டாயிட்டாரேன்னு பார்த்தேன். இதான் விஷயமா? நேக்கெல்லாம் வத்தக் குழம்பும் சுட்ட அப்பள்மும் தான் சமியோவ்!  ( பொறாமை என்று தயவு செய்து நினைக்க வெண்டாம். ஹி. ஹி. ஹி)

  • இந்த அநியாயத்தை தட்டி கேட்க ”குவிக் கன் முருகன்” புறப்பட்டு விட்டார் 🙂

  • இங்கும் இதே நிலைமைதான்.  1994ல் ஊரில் வாங்கிய பத்தாயிரம் கொடுக்க வழியில்லாமல் வந்தவர் 25 ஆண்டுகளில் ஊரில் வாங்கிப்போட்ட சொத்தின் மதிப்பு 64 கோடிகள்.  நம்ப சிரமமாக இருக்கும்.  மெஸ் என்ற பெயரில் உருவாக்கிய நான்கு திசைகளில் திறந்த கடைகள் கொடுத்த வருமானம் ஏற்றுமதி தொழிலில் கூட நிணைத்துப் பார்க்க முடியாதது. 
    அசைவ பிரியர்கள் தேடிப் போய் வாங்கி ஊற்றிக்கொள்ளும் இலவச விசயங்களில் எப்போதும் போல வாடை மட்டுமே இருக்கிறது.  மற்றதெல்லாம் கையில் ஏந்திக்கொண்ட முகத்துக்கு அருகே நீட்டிக்கொண்டுருக்கும் தட்டில் சிரித்துக்கொண்டுருக்கிறது. 
    வாங்காவிட்டால் இடத்தை விட்டு நகரமாட்டார்கள். 
    அவமானம் தவிர்க்க ஏதோ ஒன்றை மென்று தின்று விட்டு சப்தம் போடாமல் வந்து கொண்டே இருக்கிறார்கள். 

  • //ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு மெஸ் பிடித்திருக்கிறேன். ஆறு மாதம் அவதானித்துவிட்டுப் பிறகு எழுதுகிறேன்//

    பசிக்கிறது. அட்ரஸ் சொல்லவும்.

    நம்பி நம்பி வெம்பி வெம்பி 🙁

  • {பி.கு: ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு மெஸ் பிடித்திருக்கிறேன். ஆறு மாதம் அவதானித்துவிட்டுப் பிறகு எழுதுகிறேன் }
    ரொம்ப ஜாக்கிரதையா இருக்கீங்க போலருக்கு!
     
    {இன்றுவரை நம்பிக்கை இழக்கவிடாமல், ரசிகர்களுக்குத் தொடர்ந்து சேவை செய்துவருகிறது, மயிலாப்பூர் கபாலி கோயில் அருகே உள்ள மாமி மெஸ். பல வருடங்களாக டிபனும் வெரைட்டி ரைஸும்  அங்கே 12 ரூபாய்க்கு கிடைக்கிறது.}
    கண்ணன்,
    கும்பகோணம் மாமி மெஸ்'ஜச் சொல்கிறீர்களா அல்லது அந்த ஜன்னல் மெஸ்ஸா? விவரம் சொல்லுங்களேன்..
     
     

  • அப்படியே தாம்பரம்  அல்லது கிழக்கு தாம்பரத்தில் ஒரு நல்ல உணவகத்தை பரிந்துரை செய்யுங்களேன்.

  • உங்க பேட்டையில் (குரோம்பேட்டை) சாய்ஸ் எதுவும் இல்லையா? அங்கேதானே நான் இனிமேல் குப்பை கொட்ட வேண்டும்!
     
    http://kgjawarlal.wordpress.com

  • அன்லிமிடெட் அநியாயம் (விட்டு போனது…)

    அந்த உணவகத்தில் சாப்பிட்டு  பத்தே நிமிஷத்தில், தலை வலி குணம் ஆனவர்களை  நான் பார்த்து இருக்கிறேன்….  எனக்கு இருந்த, கால் வலி கூட , இங்கு சாப்பிட ஆரம்பித்ததும் குணம் ஆகி விட்டது…    சித்தர்கள் சொன்ன படி சமைப்பதால்தான் , அவர்கள் உணவுக்கு  இந்த சக்தி கிடைக்கிறது…

    ஒரு முறை அவர்களிடம் சாப்பாடு பார்சல் வாங்கி அலுவலகத்தில் வைத்தேன்.. சாப்பிட மறந்து விட்டு , தாம்பரம் சென்று விட்டேன்…  சாப்பாடு கொண்டு வர மறந்து விட்டோமே , என நினைத்தவாறு , திரும்பி பார்த்தால், பின் சீட்டில், அதே பார்சல் , அதே தின தந்தி பேப்பரில் இருந்தது…  நம்ப முடியாமல்,  அலுவலகத்துக்கு போன் செய்தால், பார்சல் அங்கேயே இருப்பதாக கூறினார்கள்….  பக்கத்தில் இருந்த நண்பனும் , இது அதே பார்சல்தான் என உறுதி படுத்தினான்…  அப்போதுதான் உணவகத்தின் மகத்துவத்தை உணர்ந்தேன்

    இதை எல்லாம் நான் இன்னும் மறுக்கவில்லை…  இதை எல்லாம் பார்த்துதான் ஏமாந்து விட்டேன்..இனிமேல் எந்த உணவகத்துக்கும் செல்ல மாட்டேன்…

    பின் குறிப்பு 1    நான் புருடா விடுவதாக நினைப்பவர்கள் , என் நண்பனிடம் விசாரித்து உறுதி செய்யலாம் என தெரிவித்து கொள்கிறேன்
    பின் குறிப்பு 2  யாரவது விசாரித்தால், என்ன சொல்ல வேண்டும் என என்னிடம் கேட்ட பின் செயலப்படும்மாறு, என் நண்பனை கேட்டு கொள்கிறேன்

  • இதற்கெல்லாமே முக்கியக் காரணம் மற்றவர்களது எதிர்பார்ர்ப்பை அளவுக்கு அதிகமாக வளர்த்து விடுவதுதான்.
    கும்பல் வர வர உற்பத்தியும் அதிகரிக்கவேண்டியிருக்கிறது. அது தேவையான அளவுக்கு செய்யமுடியாமல் போகும்போது சாம்பாரில் தண்ணீர் விடுவது, சீப்பான காய்கறிகளை தேடிப் பிடிப்பது என்றெல்லாம் ஆகி விடுகிறது. எந்த நிறுவனமுமே ஓரளவுக்கு மேல் வளர்ச்சி கண்டால் அதன் கட்டுப்பாடு குலைந்து போக்கிறது.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  • நான் சாப்பிட்டது போலி மாமீஸ் மெஸ்ஸா என்று தெரியவில்லை. கபாலீஸ்வரர் கோயிலிலிருந்து கொஞ்சம் நேராக கற்பகாம்பாள் ஹோட்டல் பக்கமாக நடந்தால், லெஃப்ட்டில் இருக்கிற அந்த "மாமீஸ்" ஒரிஜினலா, டூப்லிகேட்டா?
    மாமீஸ் மெஸ்ஸைப் பற்றி வலைப்பதிவில் எழுதிய ஒவ்வொருவரையும், படித்த ஒரே ஒருவரையும் (ஹி ஹி… நாந்தேன்) திட்டிக்கொன்டே தின்று தீர்த்தேன்.
    அநியாயம். அக்கிரமம். ஒரே ஒரு கிண்ணத்தில் கூட்டு. கொஞ்சமே கொஞ்சம் அரிசியில் சமைத்த ஏதோ ஒன்று. ஒரு சின்ன கிண்ணத்தில் பூண்டில் குளிப்பாட்டிய ரசம், அப்புறம் குழம்பு போல ஏதோ ஒன்று. ரொம்ப கெஞ்சிக்கேட்டதும் மோர்மிளகாய் மட்டும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரு பையன் போட்டுட்டுப் போனான். காலையிலிருந்து கொலைப்பட்டினி கிடந்து மதியம் போனதுக்கு கைமேல் இல்லாவிட்டாலும் வயிறுமேல் கூட ஒரு பலனும் கிடைக்கவில்லை.
    ஆமாம், சூரியா'ஸ் என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கு? அட்லீஸ்ட் வஞ்சனை இல்லாமல் சைட்டிஷ்ஷாவது கொண்டுவந்து போடுவார்களே…

  • நீங்கள் சொல்லி மாமி மெஸ்ஸுக்கும் நானும் பிரகாஷும் போனோம். உங்களை நான் மனதார ‘வாழ்த்தினேன்.’ பின்பு ஸ்ரீ பார்வதி தண்டத்துக்கு நானும் அரவிந்தன் நீலகண்டனும் போனோம். அப்போதும் உங்களை மனமார ‘வாழ்த்தினேன்.’ எப்படியும் ஒரு நல்ல சாப்பாட்டுக் கடையையாவது நீங்கள் காட்டிவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது சார். நம்பிக்கை இழக்கவேண்டாம்.

  • அறிவன்,
    நான் சொல்கிற மாமி மெஸ் கபாலி கோயில் அருகே உள்ள  பிச்சிபிள்ளை தெருவில் இருக்கிற உணவகம்.

  • கிருபா, சூர்யாஸ் அவ்வளவு மோசமில்லை. தைரியமாகச் சாப்பிடலாம். நீங்கள் வந்து என்னைக் கூட்டிக்கொண்டு போனால், எதெல்லாம் நன்றாக இருக்கிறது என்று கூட இருந்து சொல்கிறேன்!

  • கண்ணன்,சரி..நான் சொன்னதுதான் அது..
    அது கும்பகோணம் மாமி மெஸ்..2005|2006 ல் மாமி மறைந்திருக்கலாம்..
    25 பைசா அளவுக்கு மேல் குங்குமம் துலங்க அவரே தோசை அதாவது கல்தோசை வார்த்துக் கொடுப்பார்,அன்புடன் பேசுவார்…
    முகம் பார்த்துப் பரிமாறுவார்-அதாவது பசி தெரிந்து!
    இன்னும் ஒரு தோசை சாப்பிட்டுட்டுப் போ,பசி கண்ணில் இருக்கு! என்பார்..சாப்பிட்டு விட்டு காசை மாமா அல்லது அவரின் புதல்வரிடம் கொடுத்து விட்டு வரவேண்டும்..அப்போது தெருவில் நின்றுதான் சாப்பிட வேண்டும்..இப்போது புதிதாகக் கட்டடம் கட்டி உள்ளேயே நின்று சாப்பிடும் படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்..
    இன்னொரு விஷயம்..மாமி இருந்த போது கல்தோசை 4 ரூபாய் என்று நினைவு..

  • There is a mess run by saiva chettiar in kadayam.Their vatha kuzhambu with gingelly oil is superb.
    One more mess called sriram mess in a narrow lane offset to old bus station in thenkasi.Thes meals(veg) is superb.

  • //ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு மெஸ் பிடித்திருக்கிறேன். ஆறு மாதம் அவதானித்துவிட்டுப் பிறகு எழுதுகிறேன்//
    மறுபடியுமா ??  தாங்காது ஸார் !!!

  • தி.நகர் நடேசன் தெருவில் உள்ள குமாரபவன் உணவகத்தில் இட்லி நன்றாக இருக்கும். ஒரு முறையாவது சாப்பிட்டு ருசி பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்.

  • பார்வதி மெஸின் பேஸ்லைன் விலை ரூ.30 அதனால் தான் சப்பாதியின் விலை அப்படி ஷட்டில் அடிக்கிறது.

  • வாரம் ஒரு கடையை அறிமுகப்படுத்தி வருகிறேன். எனது கொத்து பரோட்டாவில்

  • Does Pa.Ra intend to buy the mess in R.A.Puram after six months :).
    சாருவின் சாமியார் ராசி மாதிரி எனக்கு ஒரு சாப்பாட்டு ராசி இருக்கிறது போல் உள்ளது.
    The best solution for Charu is to become a samiyar and for you is to start a mess 🙂

  • மந்தைவெளியிலிருந்து மைலாப்பூர் குளம் வரும் வழியில், ராமகிருஷ்ண மடம் எதிரில், சிண்டிகேட் வங்கி அருகே ஒரு சிறிய தட்டியால் தடுக்கப்பட்ட கடை உள்ளது. காலை 7 முதல் டிபன் ஐட்டங்கள் சூடு பறக்கிறது. மாலை 4 முதலும்.

    முயற்சிசெய்து பார்க்கலாம் 🙂

  • லண்டனிலிருந்து வந்தவர் இருக்கட்டும், லாஸ் ஏஞ்சல்சிலிருந்து நான் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு வந்து உங்கள் ஆபீசில் வந்து கேட்ட முதல் கேள்வியே அந்த மெஸ் பற்றித்தானே!
     
    கிடக்கட்டும் விட்டுத் தள்ளுங்கள்!
     
    நல்ல வேளையாக, சக சாப்பாட்டு ராமன் ச.ந. கண்ணனுடன் சேர்ந்து வேகாத வெயிலிலும் மாமி மெஸ் விஜயம் செய்து சாம்பார் சாதம் + வடை சாப்பிட்டு தன்யனானேன்.
     
    பெங்களூரு எம்டிஆர் (மையாஸ்) மாதிரி 10 ரூபாய்க்கு நல்ல ஸ்ட்ராங் காஃபி சென்னையில் கிடைக்காதது அநியாயம்!

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி