ஸ்ரீபார்வதி அன்லிமிடெட்

உணவு

பாரதியாருக்குப் பிடித்த மாதிரி சுற்றிலும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள். எனவே நிழல். கால் வைக்கும் இடமெல்லாம் புல்வெளி. புல்லுக்கு நடுவே பாத்தி கட்டி மூங்கில் கழிகள் நட்டு, கூம்பு வடிவ ஓலைக்கூரை. கொட்டிக்கொண்டு ஓடும் காற்று. நடுவே நீள டேபிள் போட்டு எதிரும் புதிருமாக நாற்காலிகள். இங்கொரு தொட்டில், அங்கொரு வட்டில்.

‘சார் வாங்க! உக்காருங்க!’ என்று முகம் மலரக் கூப்பிடுகிறார் பணியாளர். இயற்கைச் சூழலின் இதத்தை அருந்தியபடி நாற்காலியில் உட்கார்ந்ததும் சூடாக ஒரு கிளாஸ்  ரசம் வருகிறது. சூப் என்பது மேலை கலாசாரம். ரசமே நமது கலாசாரம். தக்காளி மணக்கும் அமர்க்களமான மிளகு ரசம்.

சே, என்ன ருசி! இன்னொரு தம்ளர் கேட்கலாமா? நினைப்பதற்கு முன்னால் பின்னாலிருந்து குரல் கேட்கிறது. ‘இன்னொரு தம்ளர் ரசம் வேணுமா?’

அருந்தி முடிப்பதற்குள் பெரிய எவர்சில்வர் தட்டில் வைத்த ஜலதரக் கிண்ணங்களில் கமகமவென்று உணவு வந்துவிடுகிறது. சப்பாத்தியில் ஆரம்பிப்பது நல்லது. தொட்டுக்கொள்ள சென்னா. கணக்கெல்லாம் இல்லை. எத்தனை வேண்டுமானாலும் கேட்டுச் சாப்பிடுங்கள். ஆயிற்றா? அடுத்து வெஜிடபிள் புலாவ். தொட்டுக்கொள்ள வெங்காயப் பச்சடி. தக்காளி சாதத்துக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ். தயிர் சாதமல்ல; கோயில் ததியோன்னம். மணமே ஊரைக் கூட்டுகிறது.

ஆனால் அவசரப்படாதீர். அதற்குள் தயிருக்குப் போய்விடுவதா? மிளகுக் குழம்பு இருக்கிறது. பருப்பு ரசம் இருக்கிறது. அந்த சாதமெல்லாம் சாப்பிட வேண்டாமா? தொட்டுக்கொள்ள தனியே பீன்ஸ் பொறியல் வேறு தயாராக இருக்கிறது. தயிர் சாதத்துக்கு ஊறுகாய் என்பது சம்பிரதாயம். நேயர் விருப்பமாக வத்தக்குழம்பு கேட்டுப் பரிமாறுகிறார்கள்.

‘சார், ஆச்சா? திருப்தியா?’ கேட்டபடி வைக்கிற கிண்ணத்தில் ஆரஞ்சு நிறத்தில் ஜாங்கிரி சிரிக்கிறது.

எதற்கும் அளவு கிடையாது. விரும்புகிற அளவுக்குத் திரும்பத் திரும்பப் பரிமாறுகிறார்கள். சாப்பிட்டு முடித்ததும் தாம்பூலம். ‘இவனே.. நாளைக்கு இந்தப் பாக்கு வேண்டாம். ரசிக்லால் நாலு பாக்கெட் வாங்கிண்டு வந்துடு’ எங்கிருந்தோ யாரோ உத்தரவிடுகிறார்கள்.

வெகுநாள் கழித்து மிகத் திருப்தியான ஒரு மதிய உணவு இன்று எனக்கு வாய்த்தது. எங்கள் அலுவலகத்துக்கு நேர் எதிரே உள்ள ஸ்ரீபார்வதி கேலரிக்குள் இருக்கும் வெற்றிடத்தைப் பூங்காவாக்கி அங்கேதான் இந்தத் திறந்தவெளி உணவகத்தைத் திறந்திருக்கிறார்கள்.

இயற்கையான சூழலில் இதமான, அதிகக் காரமில்லாத, மசாலா வாசனையில்லாத, ஆரோக்கியமான உணவு. எல்லாமே அன்லிமிடெட் என்பதும் ஒரு சாப்பாட்டின் விலை ஐம்பத்தைந்து ரூபாய்தான் என்பதும் இதன் சிறப்பு.

தினசரி மதியம் ஒரு மணி முதல் உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள். பிப்ரவரி முதல் தேதிமுதல் காலை டிபனும் ஆரம்பிக்கிறார்களாம். கூட்டம் வரத் தொடங்கிய பிறகும் இந்தத் தரம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

சில படங்கள் எடுத்திருக்கிறேன். முடிந்தால் இரவு சேர்க்கிறேன். 

14 comments

 • மதிப்பிற்குரிய பா. ராகவன் அவர்களுக்கு,
  வணக்கம். உங்களுடைய பார்வதி அன்லிமிடெட் என்ற குறிப்பைக் கண்டேன். நீங்கள் ஒரு முறை நுங்கம்பாக்கம், சஞ்சீவனம் ஹோட்டல் பற்றி எழுதியிருந்தபோதே, கடிதம் எழுத நினைத்தேன். பிறகு நீங்கள் வள்ளிதாசனின் ஒரு சாப்பாடு ட்விட்டரைப் பற்றி கூறியிருந்தபோதே எழுத நினைத்து, கடைசியில் பார்வதிக்குதான் எழுத முடிந்தது.(நாட்டுப் பிரச்னை பற்றி எழுதியபோதெல்லாம் உனக்கு எழுதவேண்டும் என்று தோன்றவில்லையா என்று நீங்கள் முனகுவது காதில் விழுகிறது)
  ஜஸ்ட் மிஸ்ட். என் மனைவிக்கு உடல் சரியில்லை என்று இன்று லீவ் போட்டிருந்த நான், ஒரு நல்ல சாப்பாடுக்காக ஏகப்பட்ட ஹோட்டலை மனதில் ஓடவிட்டுப் பார்த்து, கடைசியில் வழக்கம் போல் சங்கீதாவில் முடித்துக்கொண்டேன். மதியம் ஒரு மணிக்கு உங்கள் குறிப்பை பார்த்திருந்தால் கூட வண்டியை நேராக எல்டாம்ஸ் ரோடுக்கு விற்றிருப்பேன். அன்லிமிடெட் என்று போட்டிருந்தீர்கள். இதை நீங்கள் சொல்லியிருக்கவேண்டாம் என்று படுகிறது. ஏனென்றால், இது தெரிந்து சில பேர் அங்கு சென்று, அந்த சிஸ்டத்தையே எடுத்துவிடும் அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிடுவார்கள். ஏனென்றால், பாரீஸ் கார்னர் ஹாட் சிப்ஸில் இந்த மாதிரி வைத்திருந்தார்கள். ஒரு முறை என் தம்பி சென்னை வந்தபோது அந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அடுத்த முறை சென்றபோது அந்த சிஸ்டத்தை எடுத்திருந்தார்கள். ஏற்கனவே அவன் திருச்சியில் ஒரு ஹோட்டலில் இருந்த இந்த மாதிரியான சிஸ்டத்தை எடுப்பதற்கு காரணமாக இருந்தான். (உண்மையில் அவன்தான் காரணமா என்று தெரியாது. ஆனால் அவன் வந்துவிட்டுச் சென்ற பிறகு இரண்டு ஹோட்டலில் அந்த சிஸ்டத்தை எடுத்திருந்ததைப் பார்த்தால் அவன் மீதுதான் சந்தேகம் வருகிறது.) பார்வதிக்கு வந்து ஒரு கை பார்த்துவிட்டு உங்களுக்கு எழுதுகிறேன்.
  கட்டுரையை விட கமென்ட் நீண்டு விடக்கூடாது என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
  அன்புடன்
  ஜி. ஆர். சுரேந்தர்நாத்.


   

 • படிக்கும் போதே உணவை ரசித்து சாப்பிட்ட உணர்வு ஏற்படுகின்றது.
   
  நன்றி பாரா.

 • I loved your description. Just reading your article, made my mouth water. I feel like trying all those dishes right how. 🙂 What an amazing natural setting for such delicious flavours. Hurrah to Tamil food and virundhombal.

 • // ‘சார், ஆச்சா? திருப்தியா?’ கேட்டபடி வைக்கிற கிண்ணத்தில் ஆரஞ்சு நிறத்தில் ஜாங்கிரி சிரிக்கிறது. //
  விவிசிரிப்பதை பார்த்து பக்கத்திலுள்ள கேபினிலிருந்த்து எட்டிப்பார்த்து “Are you allright" என்பது போல பார்த்தார்கள். சும்மா சரளமாக விளையாடியிருக்கிறிர்கள், சாப்பாட்டிலில்லை சார், வார்த்தைகளில்.

 • எங்க ஆபிஸிற்கும் பக்கம் தான். இந்த வாரமே முயற்சி செய்து பார்த்து விடுகிறேன்.
   

 • பாரா, இப்படி நல்ல ஹோட்டலை எங்க ஆபிஸுக்கு எதிரில் என்று எழுதினால் எங்களை மாதிரி வெளியூர்(நாட்டு)வாசிகளுக்கு  தெரியாமல் போய்விடுமே?? வழி காட்டினால் சுரேந்திரநாத் தம்பி மாதிரி //அங்கு சென்று, அன்லிமிட்டட்  சிஸ்டத்தையே எடுத்துவிடும் அளவுக்கு// ஆப்பு வைக்க மாட்டோம் என்று உத்திரவாதம் தருகிறோம்.

 • ஸ்ரீபார்வதி அன்லிமிடெட்
  இன்னொரு பிரபல ப்ளாகரை அழைத்திருந்தது…
  <a href="http://kgjawarlal.wordpress.com/2010/03/13/சென்னையில்-ஹை-டெக்-பேருந/ ">இங்கே படியுங்கள். </a>
   
  அடுத்த முறை சென்ன வரும் போது, அங்கே ட்ரை  பண்ண வேண்டும்.
   

 • பா ரா சார்,
   
  நான் ரொம்ப லேட்… இப்பத்தான் அந்த ஹோட்டலைப் பார்த்துட்டு ஒரு இடுகை போட்டேன். இதை முதல்லையே படிச்சிருந்தா நான் லஞ்சுக்கே அந்த ஹோட்டல் போயிருப்பேன். உங்க இடுகை ரொம்ப டேஸ்டா இருக்கு, சாப்பாடு எப்படின்னு அடுத்த முறை சாப்பிட்டுப் பார்த்துட்டு சொல்றேன்.
   
  http://kgjawarlal.wordpress.com

 • மார்க்கெட்டிங் மனிதனான எனக்கு சென்னையில் பல நல்ல ஹோட்டல்கள் அறிமுகம். அதில் நீங்கள் சொன்னதும் ஒன்று.

Leave a Reply