இன்னார் முதல்வர் ஆகலாம் அல்லது இன்னார் ஆகக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. படாத பாடுபட்டு அடைந்த சுதந்தரமும் ஜனநாயகமும் கேவலம் ஒருத்தருக்கு இந்த விருப்ப சௌகரியத்தைக்கூடக் கொடுக்கவில்லையென்றால் அப்புறம் என்ன தண்ட கருமாந்திரத்துக்கு ஜனநாயகமும் சுதந்தரமும்? எனவே அன்புமணியும் முதல்வராக ஆசைப்படலாம். தப்பே இல்லை.
அவர் டாக்டர் கலைஞர் போலவோ, டாக்டர் ஜெயலலிதா போலவோ டாக்டரானவரில்லை. மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டரானவர். ஒரு வசூல்ராஜா எம்பிபிஎஸ் ஆவதற்கு சகல சாத்தியங்கள் இருந்தும் அவற்றை விடுத்துப் பொது வாழ்க்கைக்கு வந்தவர்.
ஆனால் அன்புமணியாகிய நான் என்று தொடங்கிய அவரது விளம்பரம் முதல் முதலில் வெளிவந்தபோது, மெய் உலகிலும் மெய் நிகருலகிலும் மகா ஜனங்கள் அவரைக் கழுவி ஊற்றிக் கவிழ்த்துவிட்டார்கள். இந்த வகையில் விஜயகாந்தை மண்கவ்வச் செய்த பெருமை அவரைச் சாரும். எத்தனை எத்தனை நையாண்டி மேளங்கள்!
இத்தனைக்கும் அவர் கொடுத்திருந்த வாக்குறுதிகள் எல்லாம் பரம உத்தமமானவை. மதுவை ஒழிப்பேன். ஊழலை ஒழிப்பேன். கல்வியையும் சுகாதார சௌகரியங்களையும் இலவசமாக்குவேன். பசுமைப் புரட்சி செய்வேன். வீட்டுக்கு ஒருத்தராவது உத்தியோக சித்தியடையச் செய்வேன்.
இதெல்லாம் நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகள் என்று மக்கள் எண்ணிவிட்டார்களா? பாமக மாநாட்டுக்குப் போன இளவட்டங்கள் கிளாசும் கையுமாகக் கூடி நின்று குளிர்ந்தேலோரெம்பாவாய் பாடிய போட்டோக்களை ஃபேஸ்புக்கெங்கும் நிரப்பித் தள்ளினார்கள். அன்புமணி அசரவில்லை. எங்கள் கட்சிக்காரர்களையும் தடுத்தாட்கொள்ளத்தான் அந்த வாக்குறுதி என்று சொல்லிப் பார்த்தார். ம்ஹும். யார் கேட்கிறார்கள்?
இதுகூடப் பரவாயில்லை. அந்த ஊழல் ஒழிப்பு வாக்குறுதிதான் ஏகப்பட்ட ரத்த காயங்களைச் சந்திக்க நேர்ந்தது. கொசுவையோ ஊழலையோ ஒழிக்க இயலாது என்பது மக்களுக்குத் தெரிந்திருப்பதுபோலத் தலைவர்களுக்கு ஏனோ தெரிந்திருக்கவில்லை. வாக்குறுதிதானே? காசா பணமா என்று எடுத்துப் பொது வெளியில் போட்டால் இப்படித்தான் பேஜாராகிவிடுகிறது.
தவிரவும் அவர் பசுமைத்தாயகம் கண்டவர். வேளாண்மைத் துறையில் புரட்சி செய்ய நினைப்பது நல்ல விஷயம்தான். ஆனாலும் ஒரு மரம் வெட்டிக் கட்சியின் முகமாகத்தான் பாமகவுக்கு வெளியே உள்ளவர்கள் இப்போதும் பார்க்கிறார்கள் என்பதை உடனிருப்பவர்கள் அவருக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
ஆ! அங்கேயும் ஒரு சங்கதி உள்ளது. அன்புமணியின் சில பொதுக்கூட்ட வீடியோக்களை இணையத்தில் பார்த்தேன். மேடையில் அவருக்கு இடது வலது பக்கங்களில் அமர்ந்திருப்போரெல்லாம் சாதி சங்கத் தலைவர்களைப் போலத்தான் காட்சி தருகிறார்கள், பேசுகிறார்கள். டாக்டர் மட்டும் பேண்ட் சட்டை போட்டு, டீக்காக இன் செய்து, நாசூக்கு மொழியில் பேசுகிறாரே தவிர மருந்துக்கும் மற்றொருவர் அப்படி இல்லை.
பிரச்னை இதுதான். சிக்கலும் இதுதான். ஒரு ஹைடெக் தலைவராக அன்புமணியை முன்னிறுத்தும் பாமக, சரக்கு எப்படி இருந்தாலும் பிரச்னை இல்லை; பேக்கேஜிங் பக்காவாக இருந்தால் போதுமென்று நினைப்பது போலத் தெரிகிறது.
ஏரியாவாரியான சாதி ஓட்டுகள் என்பவை திமுக, அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ளதுதான். எந்த சாதியினர் அதிகமாக உள்ளனரோ, அந்த சாதிக்காரரை வேட்பாளராக நிறுத்தினால் அந்த ஓட்டுகளுக்கு கேரண்டி. மேலுக்கு இருக்கவே இருக்கிறது கட்சி ஓட்டுகள், கொள்கை ஓட்டுகள்.
பாமகவின் மிகத் தீவிரமான பிரச்னையாக நான் இதனைத்தான் பார்க்கிறேன். அவர்களுக்கு சாதி ஓட்டுகளில் பிரச்னையே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு போட்டுவிடுவார்கள். ஆனால் அவர்கள் சாதிக்கு வெளியே உள்ளோர் அப்படிச் செய்வார்களா? ஒரு எம்.ஜி.ஆரோ, கலைஞரோ சாதி ஓட்டுகளை மட்டுமே நம்பிக் கட்சி நடத்தியதில்லை என்பதை நினைவுகூரலாம். இன்றைய தேதியில் பாமகவின் ஆகப்பெரிய பலவீனம் இதுவே.
அன்புமணியாகிய நான் என்று அடுத்தப் பத்திருபது வருஷங்களிலாவது அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன். ஆனால் தனது சாதி அடையாளத்தைப் பாமக முற்றிலுமாகக் களைந்தாலொழிய மைய நீரோட்டத்தில் இணைய முடியாது. பாமகவுக்கு பேண்ட் ஷர்ட் போட்டு இன் செய்து நாசூக்காகப் பேசுகிற ஒரு தலைவர் தேவைப்படுவதுபோல பெருவெளித் தமிழ் மகா ஜனங்களும் தாம் மதித்து ஓட்டளிக்க சில அடிப்படைத் தகுதிகளைக் கட்சிகளிடையே எதிர்பார்ப்பதில் பிழையில்லை அல்லவா? அடிப்படையில் அத்தனை பேருக்கும் சாதிக் கண்ணோட்டம் இருந்தாலுமேகூட.
நானோ என் குடும்பத்தாரோ பதவிக்கு ஆசைப்பட்டு அதிகாரத்தைத் தேடி அலைந்தால் கட்டி வைத்து அடியுங்கள் என்று சொன்னவரின் மகனாகவேறு போய்விட்டார். கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் தமிழ் மக்களைச் சரிக்கட்ட வேண்டும்.
அதற்குக் கலாம் சொன்னதைக் கடைப்பிடிக்காமல், களத்தில் இறங்கி உழைத்தாக வேண்டும்.
0
(நன்றி: தினமலர் – 15/03/16)