இன்று வெளியீடு: ஆயில் ரேகை, ஒபாமா

இன்று மாலை 6.00 மணிக்கு மொட்டை மாடி விழாவில் வெளியிடப்படவிருக்கும் புத்தகங்கள்: 1. ஆயில் ரேகை. 2. ஆர். முத்துக்குமாரின் ஒபாமா பராக்.

ஆயில் ரேகை, ரிப்போர்ட்டரில் நான் தொடராக எழுதியது. உலக அளவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டிருந்த சமயம், எதனால் இது இப்படி என்று குழம்பித்தவிப்பவர்களுக்கு எளிமையாகப் புரியவைக்கும்படியாக எழுது என்று என் ஆசிரியர் இளங்கோவன் சொன்னார். தொடரை நான் எழுதத் தொடங்கியபோதே பல காமெடிகள் நடந்தன. விலையின் ஏற்ற இறக்கங்கள் கிட்டத்தட்ட தினசரி செய்தியானது. பல சமயம், ‘நேற்று ஏன் நூற்று இருபது டாலர்? இன்று ஏன் பத்து டாலர் குறைவு?’ என்றெல்லாம் வாசகர்கள் தொலைபேசி வழியே கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ரிப்போர்ட்டர் வாசகர்கள் பலதரப்பட்டவர்கள் என்றபோதிலும், ஆட்டோ டிரைவர்கள் மிக அதிகம். பல ஆட்டோக்களின் சீட்டுகளுக்குப் பின்னால் நான் எப்போதும் ரிப்போர்ட்டர் இதழ்களைக் காண்பேன். புத்தகக் கண்காட்சியில் என்னைச் சந்தித்துப் பேச வருகிற வாசகர்களிலும் பலர் ஆட்டோ டிரைவர்களே.

இந்தத் தொடர் வெளியான சமயம் அவர்கள் இதில் காட்டிய ஆர்வம் வியப்பூட்டக்கூடியது. உண்மையில் இந்தத் தொடரில் நான் சுட்டிக்காட்டிய விஷயங்களுக்கும் இங்கு நடந்த ஐந்து ரூபாய் விலை ஏற்றத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இந்திய பெட்ரோலியத் துறை பற்றி நான் இதில் பேசவேயில்லை. நிலக்கரியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பெட்ரோலியம் தன் முக்கியத்துவத்தை நிலைநாட்டத் தொடங்கிய நாள் தொடங்கி, உலக அளவில் அதனை முன்வைத்து நிகழ்த்தப்பட்டு வரும் அரசியலையும் அதன் பின்னணியையும் மட்டுமே நான் விளக்க முயற்சி செய்தேன்.

சற்றேனும் அறிவியல் கலவாமல் இதனை எழுதுவது சாத்தியமில்லை என்பது முதலிலேயே தெரிந்திருந்தது.
துரதிருஷ்டவசமாக எனக்கும் அறிவியலுக்குமான இடைவெளி மிகப்பெரிதாக இருந்தாலும் என் பிரத்தியேக கூகுளை நம்பி இப்பணியை மேற்கொண்டேன்.

உலக மக்கள் இனி அடித்துக்கொள்வதற்கு மிச்சமிருக்கும் காரணங்களுள் தலையாயது இரண்டு என்பது என் அபிப்பிராயம். ஒன்று தண்ணீர். இன்னொன்று எண்ணெய். சூழ்ந்துள்ள அபாயத்தினைத் தொட்டுக்காட்டி எளிதில் புரிந்துகொள்ள இத்தொடர் உதவவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. உண்மையில் இன்னொரு முழுப்பகுதி எழுதுவதற்கு வேண்டிய அளவு இதில் விஷயம் உள்ளது. என்றாவது எழுதலாம்.

இப்போது இது புத்தகமாக வெளியிடப்படவிருக்கையில், இதனை அறிமுகம் செய்வதற்கு யாரை அழைக்கலாம் என்று யோசித்தோம். நாராயணனைக் காட்டிலும் சரியான நபர் யாருமில்லை என்று தோன்றியது. கன்னித்தீவு எண்ணெய் அரசியலை ஒரு காமிக்ஸ் சுவாரசியத்துடன் பின் தொடர்ந்து வருபவர் அவர். இது விஷயத்தில் அமெரிக்க அதிபர்களைக் காட்டிலும் அதிக ஆர்வம் செலுத்துபவர்.

எனவே, நாராயணன் நூலை வெளியிட்டு அறிமுகம் செய்ய உள்ளார். ஆர். முத்துக்குமாரின் ஒபாமா புத்தகத்தை கல்கியின் சீனியர் நிருபர் எஸ். சந்திரமௌலி வெளியிட்டுப் பேசுகிறார்.

நண்பர்களை இன்றைய விழாவுக்கு அன்புடன் அழைக்கிறேன். நேற்றைய நிகழ்ச்சி குறித்த ரிப்போர்ட் இங்கே. ஒலிப்பதிவு, பத்ரியின் தளத்தில் விரைவில்.

நேற்றைய நிகழ்ச்சி குறித்த கேபிள் சங்கரின் பதிவு இங்கே.

லக்கி லுக்கின் பூப்புனித நீராட்டு – அதிஷாவின் பதிவு.

Share

1 comment

  • //நாராயணனைக் காட்டிலும் சரியான நபர் யாருமில்லை என்று தோன்றியது. கன்னித்தீவு எண்ணெய் அரசியலை ஒரு காமிக்ஸ் சுவாரசியத்துடன் பின் தொடர்ந்து வருபவர் அவர். இது விஷயத்தில் அமெரிக்க அதிபர்களைக் காட்டிலும் அதிக ஆர்வம் செலுத்துபவர்.//

    ஏன் இந்த கொலைவெறி? இதுக்கு அதிஷாவே பரவாயில்லை போல இருக்கே. ”வருங்கால அமெரிக்க ஜனாதிபதி நா…..”

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி