இந்த வருஷம் புத்தகக் கண்காட்சி ரொம்பத் திருப்தி. நாலைந்து நாள் போய்வர முடிந்தது என்பதைத் தாண்டி, என் நீண்ட நாள் ஆதங்கம் ஒரு முடிவுக்கு வந்தது.
இந்த ஜானகிராமன் புஸ்தகங்களுக்கு ஏன் ஒரு விமோசனமே கிடைக்கமாட்டேனென்கிறது என்று ரொம்ப காலமாக எண்ணிக்கொண்டிருந்தேன். பெரிய சௌந்தரிய உபாசகர். அவரது கதையெல்லாம் கண்கூசச் செய்யும் பேரெழில் கொண்டவை. யார் என்ன சொன்னால் எனக்கென்ன? எழுத்தின் பிரம்மாண்டப் பேரழகு என்பதை நான் ஜானகிராமனிடமும் ராமாமிருதத்திடமும்தான் இதுவரை கண்டிருக்கிறேன். எடுத்து வைத்துக்கொண்டு படிக்க உட்கார்ந்தால் சோறு தண்ணி வேண்டியிருக்காது.
ஆனால் துரதிருஷ்டம் அவரது புஸ்தகங்கள் எப்போதும் பார்க்கக் கண்றாவியாகவே இருக்கும். எத்தனையோ பதிப்புகள் வந்திருக்கின்றன. எல்லாமும்தான். ஆனால் எப்போதும் தோற்றத்தில் மட்டும் மாற்றமிருக்காது. ஒரே ரக சாணித்தாள். ஒரே மாதிரி சவக்களை சொட்டும் அட்டை. பார்க்கச் சகிக்காத எழுத்துரு. அம்மா வந்தாளில் பாடசாலை மோரைப் பற்றி இந்து சொல்லுவாளே, ‘கழுநித் தொட்டியைக் கலக்கின மாதிரி’ என்று? எல்லாம் அந்த ரகந்தான். ஒரு பதிப்புக்கான அடிப்படை நியாயங்களைக் கூடச் சேர்க்காத தயாரிப்பாகவே அவை இதுவரை இருந்துவந்திருக்கின்றன.
நல்ல வேளையாக இன்று நல்லது நடந்திருக்கிறது. ஜானகிராமன் இன்று புதிதாய்ப் பிறந்துவிட்டார். எனக்குப் பரம சந்தோஷம். காலச்சுவடு அவரது அனைத்துச் சிறுகதைகளையும் தொகுத்துச் செம்பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறது. சுகுமாரனைக் கொண்டாட வேண்டும். எப்பேர்ப்பட்ட உழைப்பு. பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார். கிரமப்படி, பிரசுரமான அவரது அனைத்துக் கதைகளுடன் கூட புத்தகங்கள் எதிலும் சேராத கதைகளையும் தேடிப் பிடித்திருக்கிறார்.
ஓர் எழுத்தாளனை இப்படித்தான் கௌரவிக்கவேண்டும் என்று எடுத்துக் காட்டுவது மாதிரியான தயாரிப்பு. காலச்சுவடுக்கும் கண்ணனுக்கும் சுகுமாரனுக்கும் என் தீராத அன்பு. திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறேன்.
ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், செம்பருத்தி போன்ற நாவல்களும் காலச்சுவடில் இப்போது நல்ல பதிப்பாக வந்துவிட்டன. மொத்தமாக எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்று கை துடிக்கத்தான் செய்தது. கஷ்டப்பட்டு அடக்கிகொள்ள நேர்ந்ததற்கு இந்த வருஷம் கண்காட்சிக்கென போட்ட பட்ஜெட் எகிறி மும்மடங்காகிவிட்டது தவிர வேறு காரணமில்லை.
என்ன கெட்டுவிட்டது? மாதமொன்றாக மெதுவாக இனி வாங்கிவிடலாம்.
புதிய பதிப்புகள் அனைத்தையும் வாங்கிவிடும்போது பழைய பிரதிகளைக் கொடுத்து உதவுங்கள் என்று யாரும் கேட்காதீர்கள். கொடுக்கமாட்டேன். எரித்தால் அபசாரம். நான் அவற்றைப் புதைத்துவிடப் போகிறேன்.
//கழுநித் தொட்டியைக் கலக்கின மாதிரி’ //
தஞ்சைப் பக்கத்துக் கிராமங்களில் இரண்டாம் கழுநீரையே கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய் தாளித்து மோராக ஊற்றுவது உண்டு. எங்க புக்ககத்தில் மாமியார் அப்படிச் செய்து பார்த்திருக்கேன். 🙂
அடடா…. நீங்களும் எரிப்பதா புதைப்பதா கட்சிக்கு வந்துட்டீங்களே!
தலைப்பை பார்த்ததும் தன்னோட பாலத்தை காத்து மராமத்து செய்ய மறுபிறவி எடுத்து விட்டாரோ என நினைத்தேன்.
ஒரு வேளை மறுபிறவி எடுத்தால் மோடி ஜானகியின் ராமனிடம் பரதனைப் போல் ஆட்சியை ஒப்படைப்பாரா என்ற சிந்தனையில்தான். க்ளிக் செய்து படித்தேன்.