சூனியனிடம் இருந்து தொடங்குகிறது இத்தொடரின் முதல் அத்தியாயம். சூனியனை சாத்தானிடமிருந்தும் கெட்ட சக்தியிடமிருந்தும் வேறுபடுத்தி கூறும் அந்த வரிகள் வாசிப்பதற்கு வியப்பாக இருந்தது. சாத்தான்களின் சிறைக்கூடமென்பது ராட்சச வேர்க்கடலையின் ஓட்டுக்குள் சிறை வைத்து ஒரு பெரிய அடுப்பில் வைத்திருப்பது போல மிகவும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருந்தார் பாரா. சூனியர்களின் மரணத்தை மனிதர்களின் மரணத்திலிருந்து வேறுபடுத்தி காட்டும் அந்த வரிகள் எனக்கு நா.மு அவர்களின் வரிகளை நினைவுப்படுத்தியது.
//இறந்து போனதை
அறிந்தபிறகுதான்
இறக்க வேண்டும் நான்//
அதாவது, “இல்லாமல் போவதை உணர முடிவதுதான் உண்மையான மரணம்” என பாரா அவர்கள் சாத்தான்களின் மரணத்தை குறித்து எழுதியிருப்பார்.
நாம் கெட்ட சக்தி என நினைக்கும் சூனியர்களுக்கும் நியாய தர்மங்கள் உண்டு என்பதை தெரியப்படுத்தும் இந்த முதல் அத்தியாயம் ஒரு சூனியனுக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டு மரண தண்டனை அறிவிக்கபடும் நாளாக அமைகிறது.
மெய்யாலுமே பாரா-வின் மாய உலகினில் அவரின் தேர்ந்த கதை சொல்லலுடன் பயணித்து ஸ்தம்பித்து நிற்க ஆவலாகதான் இருக்கிறது.