* நெய்வேலி புத்தகக் கண்காட்சி [பொதுவாகவே எந்த ஊர் புத்தகக் கண்காட்சியும் வெள்ளிக்கிழமைகளில்தான் தொடங்கும். ஒரு சனி, ஞாயிறை முழுமையாகப் பயன்படுத்த அது ஒரு சௌகரியம்] ஒரு மாறுதலுக்கு இம்முறை சனிக்கிழமை மாலை தொடங்கியது. வண்ணமயமான வரவேற்பு வளைவு, அபாரமான அரங்க ஏற்பாடுகள், பிரமிப்பூட்டிய டாய்லெட் வசதி. என்.எல்.சி. மெனக்கெடுகிறது.
* பல சீனியர் பதிப்பகங்கள் இம்முறை கலந்துகொள்ளவில்லை. ஆனால் ப்ராக்ஸி அனுப்பியிருந்தார்கள். வேறு சில கடைகளில் அவர்களுடைய புத்தகங்கள் மட்டும். குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் முக்கியமான புதிய வரவுகள் என்று ஏதும் கண்ணில் படாவிட்டாலும் புத்தகப் பதிப்புத் தரத்தில் பலபேர் முன்னேற விருப்பம் கொண்டிருப்பதைக் காணவும் உணரவும் முடிந்தது. இது மகிழ்ச்சியளித்தது.
* வழக்கம்போல் சில சாமியார் பதிப்பகங்கள். குமுதம் புகழ் நித்யானந்த சாமியின் புதிய பரிமாணம் ஒன்று கண்ணில்பட்டது. இரண்டடிக்கு அவரைச் சிலையாக வடித்து கடையில் வைத்திருந்தார்கள். சிறு வயதில் சிலை கண்ட சாமி.
* இம்முறை டெல்லி அப்பளத்துக்கு அதிக கூட்டம் இல்லை. வெரைட்டியாக நிறைய ரோலர் கோஸ்டர்கள், டோராடோரா, ஜெயண்ட் வீல்கள் வந்திருந்தன. பெரியவர்களும் கோன் ஐஸ் சாப்பிட்டபடிக்கு மேலே ஏறி சந்தோஷமாகச் சுற்றினார்கள்.
* ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு பள்ளி – கல்லூரி மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. ‘என் எதிர்காலக் கனவு’, ‘இந்தியா வல்லரசாக என்ன செய்யலாம்?’ என்கிற தலைப்புகளில் நெய்வேலி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு New Horizon Mediaவின் Prodigy சார்பில் இந்தப் போட்டிகளை நடத்தினோம். பரிசளிப்பு விழாவுக்கு ஏராளமான மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் வந்திருந்தார்கள்.
* நிகழ்ச்சியில் Prodigy குறித்த ஒரு விரிவான அறிமுகத்தை பத்ரி வழங்கினார். மிக அழகாக, நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட சொற்பொழிவு. மிகவும் ரசித்தேன். ஆனால் கொஞ்சம் நீளமாகிவிட்டது. பேசும்போதே எடிட் செய்வது எப்படி என்று அவரது சொற்பொழிவின் செகண்ட் ஹாஃப் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன். ப்ராடிஜி புக் க்ளப் சார்பாக வெளியிடப்பட்ட ‘மேதை’ இதழை இந்த மேடையில் அறிமுகப்படுத்தினோம்.
* விழாவில் அவ்வப்போது வாழ்த்துரை வழங்கிய சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மிகவும் கவலைகொள்ள வைத்தார்கள். அவர்கள் சமூகம் இன்னும் தொட்டணைத்தூறும் மணற்கேணியை விட்டே எழுந்து வரவில்லை.
* மாலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட சோம. வள்ளியப்பனின் ‘உறுதி மட்டுமே வேண்டும்’ புத்தகத்தை தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் சங்கர் வெளியிட்டார். கொஞ்சநேரம்தான் பேசினார் என்றாலும் அருமையாகப் பேசினார்.
* சத்யநாராயணன் என்றொரு குட்டிப் பையன் இரவு கீ போர்டில் கர்நாடக இசைக்கச்சேரி நிகழ்த்தினான். மிரட்டலாக இருந்தது. இன்னொரு Prodigy!
* நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி என்றால் கண்டிப்பாக ஒரு நாளாவது மழை பெய்யும். இந்த வருஷத்து dueவை நேற்று மாலை வருணபகவான் தீர்த்துக்கொண்டார். காற்றும் இடியுமாக ஒரு மணிநேரம் அருமையான மழை.
* அடுத்த ஞாயிறு வரை கண்காட்சி நடைபெறுகிறது.
அரங்கினுள் கிடைக்கும் அருமையான லெமன் டீக்காகவேனும் அவசியம் சென்று வாருங்கள்.
[தொடர்புள்ள முந்தைய பதிவு இங்கே.]