யதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு

யதிக்கு ஆர்வமுடன் முன்னுரை எழுதியோர் மொத்தம் 38 பேர். அவர்களுக்கு முதலில் என் நன்றியைச் சொல்லிவிடுகிறேன். ஆயிரம் பக்க அளவுள்ள ஒரு நாவலை வாசித்து, ஆழத் தோய்ந்து, தாம் உணர்ந்ததை வெளிப்படுத்திய அந்த அன்பும் அக்கறையும் எனக்குப் பெரிய விருது. அநேகமாக வேறெந்த எழுத்தாளருக்கும் புத்தகம் வெளிவருவதற்கு முன்பே இத்தனை மதிப்புரைகள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. கேட்டு வாங்கியதுதான் என்றாலும் யார் இன்று வேலை மெனக்கெட்டு இதற்கெல்லாம் நேரம் ஒதுக்குவார்கள்?

இம்முன்னுரைகளில் பிரசுரிக்கும் தரத்தில் இருந்தவற்றை இங்கு தொடர்ந்து வெளியிட்டு வந்தேன். வடிவம் கூடாதவற்றையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் எழுதப்பட்டவற்றையும் விலக்கி, பிரசுரமானவற்றுள் சிறந்த ஒன்றை தினமணி டாட்காம் ஆசிரியருடன் இணைந்து இன்று தேர்வு செய்தேன்.

தேர்வான முன்னுரையை எழுதியவர் சி.ஜே. ஆனந்தகுமார். அவருக்கு என் வாழ்த்தும் நன்றியும். ஆனந்தகுமாரின் முன்னுரையை நீங்கள் இங்கு வாசிக்கலாம்.  இம்முன்னுரையே புத்தகத்தில் இடம் பெறுகிறது.

என் வேண்டுகோளை ஏற்று ஆர்வமுடன் நாவலை வாசித்து முன்னுரை எழுதிய அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி. எனது தளத்தில் பிரசுரமாகியுள்ள அந்த முன்னுரைகள் அனைத்தும் ‘யதி’ கிண்டில் மின் நூலாக வரும்போது தனியொரு மின்னூலாக / இலவச இணைப்பாக உடன் வெளிவரும்.

Share