எழுத்தாளரும் பதிப்பாளரும்

இந்நாள்களில் எழுத்தாளர்-பதிப்பாளர் உறவு ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. எழுத்தாளராகவோ பதிப்பாளராகவோ இல்லாதோரும் பேசுகிறார்கள். அக்கப்போர் என்றாகிவிட்டால் ஆளுக்கொரு தர்ம அடி போட்டுவிட்டுப் போய்விடுவது தேசிய குணமல்லவா?

இருக்கட்டும். சிறிது வேறு மாதிரியான எழுத்தாளர்-பதிப்பாளர் உறவு குறித்து ஒரு தகவல் படிக்கக் கிடைத்தது. நல்லதையும்தான் பேசிப் பார்ப்போமே.

அவர் ஒரு புலவர். ஆன்மிகம் சார்ந்து மட்டுமே எழுதுவார். பெரிய விருத்தப் புலி. அவ்வளவு எளிதில் புரிந்துவிடாத சங்கதிகளையெல்லாம் ஆக எளிய தமிழில் பாக்களாக்கிவிடக் கூடியவர். என்ன ஒன்று, தாம் எழுதியவற்றை அவர் முறைப்படி தொகுத்து வைத்ததில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக எல்லாம் சிதறிக் கிடந்தன. சில பதிப்பாளர்கள் அவரவருக்குக் கிடைத்த பாக்களை மட்டும் தொகுத்து ஆளுக்கொரு புத்தகம் போட்டு சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். கவனியுங்கள். அந்தப் பதிப்புகள் எவையும் புலவரின் அனுமதி பெற்று வெளியானவை அல்ல. புலவரின் மூலப் பிரதிக்கும் அவற்றுக்குமே பெரும்பாலும் சம்பந்தமில்லாமல் இருந்திருக்கிறது. ஏகப்பட்ட பாடபேதங்கள். இந்த ஆள் எழுதுவதை மக்கள் விரும்புகிறார்கள். அவர் பெயரில் என்ன கொடுத்தாலும் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறார்கள். பிழை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும் என்கிற எண்ணம். மேலும் ராயல்டி கேட்டுப் படுத்தாத புலவர் வேறு. கேஸெல்லாம் போட மாட்டார் என்கிற நம்பிக்கை. விட்டு வைப்பார்களா?

இதனாலெல்லாம் அவருடைய உண்மையான நலன் விரும்பியும் தீவிர பக்தரும் ஆராதகருமான இரத்தின முதலியார் என்கிற பதிப்பாளர் மிகவும் வருந்தினார். ஐயா, உங்கள் பாக்களை முறைப்படி தொகுத்து, பிழையில்லாத ஒரே புத்தகமாக – அது எவ்வளவு பெரிதாக வந்தாலும் சரி – கொண்டு வர வேண்டும்; எனக்குச் சற்று ஒத்துழைப்புக் கொடுங்கள் என்று கேட்டார். ஒருமுறை இருமுறை அல்ல. சுமார் ஏழாண்டுக் காலம் இடைவிடாமல் இதற்காக அவர் புலவரிடம் போராடிப் பார்த்துவிட்டார். புலவர் பதிலே சொல்லவில்லை. ஏனெனில் அவருக்குத் தொகுப்பு, பெயர், புத்தகம் என்பதிலெல்லாம் ஆர்வம் கிடையாது. தனக்குத் தோன்றும்போது எழுதுவார். அந்தச் சமயம் அருகே இருப்பவர்களுக்கு அது கிடைக்கும். அவ்வளவுதான்.

மேற்படி இரத்தின முதலியாருக்கு இது தெரியும் என்றாலும் புலவரை இப்படியே விட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். விடாமல் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார். பதில் மட்டும் வராது.

வெறுத்துப் போய் ஒருநாள் இப்படி எழுதினார்: ‘இக்கடிதத்துக்கு உரிய நடவடிக்கை இல்லையென்றால் நான் இனி ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு இரண்டு வேளை பட்டினி இருக்கப் போகிறேன்.’

புலவர் துடித்துப் போனார். ‘ஐயோ அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள். உடம்பு கெட்டுவிடும். இரண்டு திங்களில் என் வசமுள்ள பாக்களைத் தொகுத்து அனுப்பிவிடுகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள். ஒழுங்காகச் சாப்பிடுங்கள். பாக்கள் வந்து சேரும்வரை ஒருவேளைதான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்காதீர்கள். அப்படிச் செய்தால் நானும் ஒருவேளை மட்டுமே உண்பேன். இது என்மீது சத்தியம்.’

உன் தொகுப்பு வராவிட்டால் நான் பட்டினி கிடப்பேன் என்று சொல்லக்கூடிய பதிப்பாளரும் இன்றில்லை. நீ சாப்பிடாவிட்டால் நானும் சாப்பிடமாட்டேன் என்று சொல்லும் எழுத்தாளரும் இன்றில்லை.

மேற்படி புலவர், வள்ளலார் இராமலிங்க அடிகள். இறுக்கம் இரத்தின முதலியார், அருட்பாவின் முறையான முதல் பதிப்பினை வெளியிட்டவர்.

(காலச்சுவடு வெளியிட்டிருக்கும் ப. சரவணனின் ‘வள்ளலாரும் நாவலரும்’: அருட்பா-மருட்பா போராட்ட வரலாறு என்ற புத்தகத்தில் இருந்து இந்தத் தகவலைப் பெற்றேன். புத்தகத்தில் வள்ளலாரும் இரத்தின முதலியாரும் எழுதிக்கொண்ட கடிதங்களின் மூல வடிவங்களே உள்ளன. பார்த்து டைப் செய்து போட நேரமில்லாததால் மனத்தில் வாங்கியதை என் சொற்களில் தந்திருக்கிறேன்.)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி