யதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]

பா. ராகவனின் யதி அவரது முந்தைய படைப்புகளில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றது. சகோதரர்களான நான்கு சன்னியாசிகளின் கதையை ஒற்றை நபரின் மீள் நினைவாகச் சொல்லும் பாவனையில் இந்திய சன்னியாச மரபினை, அதன் பிரிவுகளை, காவி உடுத்தினாலும் உள்ளத்தின் அலைக்கழிப்பில் பறக்கும் சிந்தனையின் திசைகளை, எச்சங்களின் வலைப்பின்னல்களில் சிக்கித் தவிக்கும் துறவு மனங்களை எட்டிப் பிடிக்கின்றது. இந்த விதத்தில் சன்னியாசிகளின் உலகினைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தும் முதல் பிரதி இதுதான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இந்திய தேசத்தில் துறவிகளுக்கு எல்லாக் காலங்களிலும் இருக்கும் மதிப்பும் மரியாதையும் அலாதியானது. தமது சொந்தச் சீரழிவுகளால் பெயரிழந்து போகும் ஒரு சிலரைச் செய்தியாக நாம் அவ்வப்போது கேள்விப்படுகிறோம். ஆனால் மக்கள் கவனத்துக்கேகூட வராமல் வாழும் காலம் முழுதையும் தவத்தில் கழித்துக் காணாமல் போவோரும் உண்டு. ஒவ்வொரு சன்னியாசத்துக்குமான நோக்கம் மனித குலத்தின் மீட்சியே என்று இந்நாவலில் வருகிற அத்தனை சன்னியாசிகளும் கருதுகிறார்கள். ஆனால் யதார்த்தத்தில் தங்கள் மீட்சிக்கான வாசல்களே அவர்களுக்கு அடைபட்டுப் போய்விடுகின்றன. இது ஒரு துயரம்தான். ஆனால் வாழ்வு இவ்விதமாகவே பெரும்பாலும் அமைகிறது.

யதியின் மிகப்பெரிய சிறப்பாக நான் கருதுவது, மிக மிகக் குறைவான பாத்திரங்களைக் கொண்டு எப்படி இவர் இத்தனை பிரம்மாண்டமான ஒரு நாவலைக் கட்டியெழுப்பினார் என்கிற வியப்பை இது உருவாக்குகின்றது. ஆங்காங்கே ஒரு சில சொற்களில் வந்து போகும் உதிரிப் பாத்திரங்களைக் கழித்துவிட்டால் மொத்தமே பத்து பேர்தான் இந்நாவலை வழி நடத்திச் செல்கின்றனர். அதிலொரு பாத்திரம் தன் இருப்பினை வெளியே காட்டிக்கொள்ளாமல் பிறரது நினைவில் மட்டுமே வளர்ந்தும் வாழ்ந்தும் இறுதியில் தன்னையும் தனது தவத்தையுமே தாயின் கொள்ளிக்கு ஆகுதியாக்கிக் கொள்கிறது.

பற்றறுக்கும் நிலைக்கு மிகவும் நேரெதிரான ஒரு நிலையினைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, தனது பற்றுகளின் மூலமே உறவு நிலைகளையும் உணர்வின் கொந்தளிப்புகளையும் கடக்கப் பார்க்கும் கதை சொல்லியின் பாத்திரப் படைப்பு விசித்திரமாகவும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாகவும் இருக்கின்றது. நாத்திக சன்னியாசம் என்பது சற்று வினோதமானதாகப் பலருக்குத் தென்படக்கூடும். ஆனால் இந்திய மரபிலேயே அது தொன்றுதொட்டு இருந்து வருவதுதான். சாரவாக நாத்திகம் என்றொரு மதப்பிரிவே முக்காலத்தில் இருந்திருக்கிறது. பா. ராகவன், தனது வாசிப்பின் எல்லைகளை இத்தளங்களில் விஸ்தரித்துக்கொண்டு போவதன் விளைவாக, ஒன்றோடொன்று தொடர்பற்ற நான்கு விதமான சன்னியாசங்களை லகுவாக ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வந்து காட்டுகின்றார். ஒரு கட்டத்தில் இது நாவல் வாசிக்கும் உணர்வை மறக்கடித்து, முற்றிலும் புதியதொரு உலகினை தரிசிக்கும் பரவசத்தைத் தரத் தொடங்கிவிடுகின்றது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, இந்நாவலில் கையாளப்பட்டிருக்கின்ற மொழி. இக்கதையின் நாயகர்களுள் ஒருவனை ஆசிரியரே ‘மொழியின் குழந்தை’ என்றுதான் வர்ணிக்கிறார். அது சரிதான். இப்படியொரு புதிய, நூதனமான களத்தைக் கையாள இதனைக் காட்டிலும் பொருத்தமான மொழியைத் தேர்ந்தெடுக்க முடியாது என்று நினைக்கும்படி இருக்கிறது பா. ராகவனின் நடை.

//முகமது குட்டியை எரித்தபோது தனக்கு அழுகை வந்ததாக வினய் சொன்னான். அது முகமது குட்டிக்காக வந்த அழுகையல்ல என்று எனக்குத் தோன்றியது. சுய இரக்கத்தின்பாற்பட்டே வினய் அன்று அழுதிருக்க வேண்டும். அல்லது உள்ளுக்குள் அவனையறியாமல் மூண்டிருக்கக்கூடிய அச்சம் அந்த அழுகையைத் தந்திருக்கலாம். எப்படியானாலும் ஒரு சன்னியாசியின் கண்ணில் நீர் பெருகுவது ஓர் அவலமன்றி வேறல்ல.//

ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது. கொன்றவன் தனது கதையைத் தனது சகோதரனிடம் சொல்லியிருக்கிறான். கதை சொல்லி இதனை நினைத்துப் பார்க்கிற இடம் மேலே காண்பது. ஒரு சிறு பதற்றமும் இல்லாமல் ஒரு கொலையை – நினைவில்கூட – அலசிப் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. மிகையான ஒரு சொல்லினைக் கூட பா. ராகவன் இந்நாவலெங்கும் பயன்படுத்தவேயில்லை என்பது வியப்பான விடயம்.

இன்னொரு இடத்தில் இப்படி வருகிறது:

//மாயை அழகானது. பிரம்மத்தை விடவும் பேரெழில் கொண்டது. எளிதில் பிடித்துப் போகிறது. விரும்பும் வரை சுகமளிப்பது. புரிந்து கொள்ள இயலாத பிரம்மத்தைக் காட்டிலும் புரியக்கூடிய மாயையை நான் மிகவும் விரும்பினேன்.//

கதையில் இவ்வரி இடம் பெறும் கட்டம் மிகவும் முக்கியமானது. இந்நாவலின் ஆதாரப் புள்ளி என்று சொல்லத்தக்க ஒரு ஓலைச் சுவடிக் குறிப்பு இறுதி வரை விடையற்றுப் போய்விடுகின்றது. சுவடியின் சூத்திரதாரியான கதாநாயகர்களின் தாய் இறந்துவிடுகிறாள். கொள்ளி வைக்க வேண்டிய மூத்த மகன் [கதையில் அவன் ஒரு யோகி] ஒரு தணலாக உருவெடுத்து வந்து அம்மாவின் சிதையில் விழுந்து அவளை எரித்துத் தானும் இல்லாமல் போகின்றான். மீபுனைவு அம்சம் சற்றுத் தூக்கலாக உள்ள இந்தப் பகுதியில், நிகழ்ந்த அற்புதத்தின் சாயலே இன்றிக் கதை சொல்லி இதனை நினைக்கின்றான்!

யதியின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இந்தத் தன்மையை மிகவும் ரசித்தேன். எழுத்தில் உணர்ச்சிகளைக் கொட்டாமல், வறண்ட சொற்களின் புது விதமான கலவையில் வாசிப்பவர்களின் உணர்வினைக் கிளறிவிடுகிறது இந்நாவல்.

சென்னையை அடுத்த திருவிடந்தை என்னும் கடலோர கிராமத்தில் ஆரம்பித்து அநேகமாக இந்தியாவின் நான்கு மூலைகளுக்கும் கதைக்களன் பயணப்படுகிறது. பல்வேறு விதமான நிலப்பரப்புகள், பல்வேறு விதமான மனிதர்கள், சாதுக்கள், சன்னியாசிகள், சித்தர்கள், யோகிகள், மந்திரவாதிகளைச் சுட்டிக்காட்டி [சேஷாத்திரி சுவாமி, ஓஷோ ரஜனீஷ், ஜெயேந்திர சரஸ்வதி போன்றவர்கள் சுய அடையாளத்துடனேயே வருகிறார்கள்], ஞானத்தின் அகண்ட வெளிக்கும் காமத்தின் புலிப் பாய்ச்சலுக்கும் காலம் தோறும் நிகழும் முடிவற்ற யுத்த வெளியில் இந்நாவல் சுற்றிச் சுழல்கிறது. யுத்த பலியாகக் கதையில் வரும் அத்தனை பேருமே இல்லாது போவதும் காமத்தினைக் கடந்து வென்றவளும் சாம்பலாகி, சூனியத்தின் பூரணம் இதன் இறுதி அத்தியாயமெங்கும் நிரம்பிவிடுகிறது. ஆனால் சூனியத்துக்கு உள்ளே இருந்தும் பூரணத்தை எடுக்க இயலும் என்று கதையின் நாயகர்களுள் ஒருவனான விமல் நம்புவதுதான் வாசித்து முடிக்கும்போது நினைவில் தங்குகிறது.

நாவலோ வாழ்க்கையோ, நம்பிக்கையைத் தக்க வைப்பதுதானே நமக்குப் பிடித்தமானது? யதி, எனக்கு மறக்க முடியாத ஒரு நாவல். ஆசிரியர் அடுத்த நாவலுடன் வருகின்ற வரை இதைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருப்பேன்.

-சி.ஜே. ஆனந்தகுமார்

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter