சென்னைவாழ் வாசக வைடூரிய வண்டுகள் கவனத்துக்கு.
மனுஷ்யபுத்திரன் வெளியிட்ட அறிவிப்பைப் பார்த்திருப்பீர்கள். நாளை சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழு நடத்தும் உலகப் புத்தக தின விழாவில் கலந்துகொண்டு பேசுகிறேன்.
இடம்: அண்ணாசாலை தேவநேயப் பாவாணர் நூலக வளாகம். நேரம் மதியம் 2 மணி.
ஓய்வு நாள்-கொளுத்தும் வெயில்-மதிய உணவுக்குப் பிறகு உடனே என்கிற முப்பெரும் தடைகளைத் தகர்த்தெறிய திராணியுள்ள அனைவரையும் அன்புடன் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கிறேன்.
இந்தக் குறிப்பிட்ட நூலகம் என் வாழ்வுடன் மிக நேரடியாகச் சம்பந்தப்பட்டது. இது குறித்து ‘ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்’ புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். வேலைக்குப் போவதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு, பேட்டையிலிருந்து சைக்கிளில் கிளம்புவேன். நூலகம் திறக்கும்போது முதல் ஆளாக உள்ளே நுழைந்து, மூடும்போது இறுதி ஆளாகக் கிளம்புவேன். அன்றெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் என்பது கணக்கு. அவ்வகையில் என் பள்ளி, கல்லூரி எல்லாம் தேவநேயப் பாவாணர் நூலகம்தான்.
நான் பயின்ற வளாகத்தில் முதல் முறையாக நாளை மேடையேறிப் பேசவிருக்கிறேன் என்பது ஒரு மாதிரி கிளுகிளுப்பாகவும் சிறிது பதற்றமாகவும் உள்ளது. நீங்கள் வருவீர்களானால் நிகழ்ச்சிக்குப் பிறகு நாம் சிறிது நேரம் பேசலாம். அல்லது மனுஷ்யபுத்திரனின் புதிய அலுவலக அறைக்குச் சென்று அவரை ராகிங் செய்து மகிழலாம்.
வருக.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.