சரஸ்வதி பூஜை

ஐயாசாமி ஐயாசாமி கொய்யா தந்தீங்க என்று திரேதா யுகத்தில் நான் முதல் முதலில் எழுதத் தொடங்கிய போதிலிருந்தே எனக்கு சரஸ்வதியைப் பிடிக்கும். சரஸ்வதி கடாட்சமிருந்தால்தான் எழுத வரும் என்று பெரியவர்கள் சொல்லியிருந்தது ஒரு காரணம். எழுத வந்தது இன்னொரு காரணம்.

மற்றப் பண்டிகைகளைக் கொஞ்சம் முன்னப்பின்ன கவனித்தாலும் சரஸ்வதி பூஜையை விடமாட்டேன். ரொம்ப சிரத்தையாகப் புத்தக அலமாரிகளை ஒழுங்கு செய்து, தூசு தட்டித் துடைத்து, மாவிலை கட்டி, சந்தன பேக்கிரவுண்டில் குங்குமப் பொட்டு வைத்து, துவாபர யுகத்தில் நான் வாசித்துக்கொண்டிருந்த வீணையை எடுத்துத் துடைத்து, அதற்கும் அலங்காரம் செய்து வைத்து, தெரிந்த மந்திரங்களை முணுமுணுத்தபடி பூஜை முடித்து விழுந்து சேவிக்கும் வரை கொஞ்சம் டென்ஷன் இருக்கும்.

லா.ச. ராமாமிருதம் அவர்கள் ஒரு சமயம் நவராத்திரி ஒன்பது நாளும் விரதமிருந்து பூஜை செய்வது எழுத்தாளனுக்கு ரொம்ப நல்லது என்று சொன்னார். ஆசைதான். ஆனால் எனக்கு அத்தனை சிரத்தை கூடி வராது. எழுதும் பணி ஒன்றைத்தவிர எதையும் என்னால் ஒழுங்காகச் செய்ய முடியாது. அதாவது, கவனம் குவியாது. எனவே ஒன்பது நாள் முடியாததை ஒருநாளாவது முயன்று பார்க்கிற ஆசை.

மற்ற பல தெய்வங்களோடு ஒப்பிடுகையில் சரஸ்வதிக்கு வயது அதிகம். ரிக்வேத காலத்திலிருந்தே குறிப்பிடப்படுகிறவள். இன்றைக்குப் பிரச்னைக்கு உள்ளாகியிருக்கும் அப்துல் கலாம் பிராண்ட் ஃப்யூஷன் குண்டு வெடித்த போக்ரன் பக்கம் ஓடிக்கொண்டிருந்தபோது எப்போதோ பூமிக்கு அடியில் அவள் மறைந்துவிட்டதாகச் சொல்வார்கள். போக்ரன் பூமியின் அடிப்பக்கம் அக்காலம் தொட்டே மர்மம் சுமந்து வந்திருக்கிறது.

அது நிற்க. சிறு வயதில் சரஸ்வதி பூஜை, ஆர்வமேற்படுத்தும் பண்டிகையாக எனக்குத் தென்பட்டதன் காரணம், அன்றைக்கு முழுக்கப் படிக்க வேண்டாம் என்பதுதான். படிப்பின் கடவுளுக்கு ஒரு நாள் விடுமுறை விடச் சொல்லி என் தலைமை ஆசிரியர் அப்பா அறிவித்துவிட்டார். நாளெல்லாம் பாடப்புத்தகத்தைத் தொடவேண்டாம் என்கிற தகவல் மிகச் சிறிய வயதில் எத்தனை மகிழ்ச்சியளித்தது என்பதை விவரிக்கவே முடியாது.

இன்றைக்குவரை ஏன் சரஸ்வதி பூஜையன்று படிக்கக் கூடாது என்றார்கள் என்பதற்கு எனக்கு ஏற்கும்படியான பதில் கிடைத்தபாடில்லை. தி. ஜானகிராமன்கூட அம்மா வந்தாளை இதைச் சொல்லித்தான் ஆரம்பிப்பார். ஆனால் அப்புவுக்கு அன்றைக்கு ஒருவரியாவது படித்துவிட வேண்டும் என்று அடங்காத ஆர்வம் வரும் என்பார். எனக்கு அப்படியெல்லாம் வந்ததில்லை. பள்ளி நாள்களில் விடுதலைச் சந்தோஷம். எழுதத் தொடங்கியபிறகு, ஒருநாளாவது எழுதாதிருந்து பார்ப்போம் என்கிற ஆர்வம்.

எப்படியும் நாளைக்கு நான் படிக்க மாட்டேன். எழுத மாட்டேன். என் கம்ப்யூட்டர் பக்கம்கூடப் போகிற உத்தேசமில்லை.

நான் சொல்லிக்கொடுத்து, சொக்கனும் இந்த வழக்கத்தைச் சில வருடங்களாக மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறான். இதென்ன அபத்தம், சரஸ்வதிக்கு நாம் ஓய்வு கொடுப்பதாவது என்று எனக்குத் தோன்றாததுபோல அவனுக்கும் தோன்றவில்லை என்பதில் எளியதொரு சந்தோஷம் இருக்கவே செய்கிறது. வருஷத்தில் முன்னூத்தி அறுபத்தி நாலு நாள்கள் பகுத்தறிவோடு இருந்தால் போதாது?

மற்றத் துறையினருக்கு எப்படி என்று எனக்குத் தெரியாது. பொதுவாகவே எழுதுகிறவர்களுக்கு அடிமனத்தில் ஒரு பயம் எப்போதும் இருக்கும். அது பயமா, பதற்றமா என்று சரியாகத் தெரியவில்லை. விவரிக்க முடியாததொரு மெல்லிய கலவர உணர்ச்சி எனலாமா? ம்ஹும். இதுகூடப் பொருத்தமாக இல்லை. அடுத்த வரி குறித்த நிச்சயமின்மை உருவாக்கும் அமைதியின்மை என்று வேண்டுமானாலும் சொல்லலாம். வெளியில் எத்தனை ஆர்ப்பரித்தாலும் எல்லா எழுத்தாளர்களும் உள்ளுக்குள் கன்றுக்குட்டிகள்தான். இதில் எனக்கு சந்தேகமே இல்லை.

இதனாலும் எழுத்துக் கடவுளின் திருநாள் முக்கியத்துவம் கொண்டதாகிவிடுகிறது. இது ஒரு மட்டரகமான சுயநலம் என்றுகூடத் தோன்றியிருக்கிறது. பாதகமில்லை. கடவுளுடனான எனது உறவு பெரும்பாலும் பேரங்களாலேயே தீர்மானிக்கப்பட்டு வந்திருக்கிறது. எதிர்பார்ப்புகளற்ற பரிபூரண பக்திக்கு இன்றைய தினம் வரை மனம் பக்குவப்படவில்லை. சொல்லிக்கொள்ளச் சற்று அவமானமாக இருப்பினும், இதற்கும் காரணம் நானில்லை. என்னை இப்படிச் சமைத்து வைத்ததும் அவனேதான் என்று பழியைத் தூக்கிப் பரமன்மேல் போடு.

இன்றைக்கு அலுவலகத்தில் கோலாகலமான சரஸ்வதி பூஜை. எடிட்டோரியலில் என்னோடு சேர்த்து இரண்டு மூன்று பேரைத் தவிர பிறர் அனைவரும் சார்வாக மகரிஷியின் வழித்தோன்றல்கள். பூஜையல்ல; பிரசாதமே பண்டிகை என்பதில் தெளிவாக இருப்பவர்கள். ஒவ்வொரு சரஸ்வதி பூஜை தினத்தன்றும் எனக்கு வருகிற பதற்றத்தை ரசித்துக் கிண்டல் செய்பவர்கள். எனக்கே குழந்தைத்தனமாகத்தான் இருக்கும். ஆனாலும் வார்ப்புகள் எடிட் செய்ய இயலாதவை. வேண்டுமானால் ஒன்று செய்யலாம். தூக்கிப் போடலாம்.

யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் மதத்துக்கோ சடங்குகளுக்கோ நான் முக்கியத்துவம் அளிப்பவன் அல்லன். பண்டிகைகளையும் விடுமுறை என்கிற அளவில் மட்டும் கொண்டாடக்கூடியவனாகவே இருந்துவந்திருக்கிறேன். அப்பாவுக்காக ஆவணி அவிட்டம், அம்மாவுக்காகக் கிருஷ்ண ஜெயந்தி அனைவருக்காகவும் தீபாவளி, அக்கார அடிசிலுக்காகப் பொங்கல் திருநாள் என்று கொண்டாடிவிட்டுப் போவதில் எனக்கு எவ்விதமான மனச்சிக்கலும் எப்போதும் இராது. எனது கடவுள் ஒருபோதும் என்னை மதவாதியாக இருக்கச் சொல்லி வற்புறுத்துவதில்லை. நிபந்தனைகளற்ற, நிர்ப்பந்தங்களற்ற, கட்டளைகள், கேள்விகள், அச்சுறுத்தல்களற்ற ஒரு மாதிரியான உறவு அது. நல்லுறவுதான். அதில் சந்தேகமில்லை. என்ன ஒன்று, தண்ணி தெளித்து விடப்பட்ட நல்லுறவு.

பலநாள் கடவுளுக்கு எதிரான வாதங்களை நானே யோசித்து யோசித்து எழுதிப் பார்த்து மூடி வைத்துவிட்டுப் படுத்துவிடுவதுண்டு. அவன் கோபித்துக்கொள்வதில்லை. மவனே உன்னை கவனிச்சிக்கற விதத்துல கவனிச்சிக்கறேன் என்று கறுவிக்கொண்டு பழிவாங்கியதில்லை. எப்போதும் என் தகுதிக்கு அதிகமாகத்தான் அளித்து வந்திருக்கிறான். எதிலும். எல்லாவற்றிலும். அடிப்படையில் இந்த எண்ணம் மிக வலுவாக இருப்பதனாலேயே எனது அத்தனை அடாவடிகளையும் அவன் சகித்துக்கொள்கிறான் போலிருக்கிறது என்று அதற்கும் நானே ஒரு தீர்வு தந்துவிடுவது வழக்கம்.

எதற்குச் சொல்ல வந்தேன்? ஆ, சடங்குகள். சரஸ்வதி பூஜை. மற்றப் பண்டிகைகள் அனைத்தையும் மற்றவர் விருப்பத்துக்காகக் கொண்டாடினாலும் என் பிரத்தியேக ஆர்வத்துடன் நான் ஈடுபடும் ஒரே பண்டிகை இதுதான். உட்கார்ந்து ஒரு மணிநேரம் பாராயணம் செய்வதற்கு அவளுக்கு நிறைய சுலோகங்கள் இல்லை [அல்லது எனக்குத் தெரியாது] என்பது ஒருவேளை காரணமாயிருக்குமோ? காசு கொடுக்கும் சாமிகளுக்கு மூலைக்கு மூலை கோயில்கள். கல்வி கொடுப்பவளுக்கு நாம் எத்தனை பிசுனாறித்தனம் காட்டியிருக்கிறோம் என்கிற ஆதங்கம் காரணமா? 364 நாள்கள் என் கடவுள் எனக்கு ‘அவன்’ தான். இந்த ஒரு நாள் மட்டும்தான் பெண் ரூபத்தில் தொழத் தோன்றுகிறது என்பது காரணமா? அதனால்தான் சடங்கு என்று பிறருக்குத் தோன்றக்கூடியவை எல்லாம் அவசியமான அலங்காரம் என்று எனக்குத் தோன்றுகிறதா? அதிகக் கட்டுக்கதைகள் இல்லாத கடவுள். எளிமையானவள். பாலும் தேனும் பாகும் பருப்பும் காட்டிவிட்டால் போதும். சங்கத் தமிழ் மூன்றும் தந்துவிடுவாள்.

நிஜமான நாத்திகவாதிகள்மீது எப்போதும் எனக்குச் சிறு பொறாமை உண்டு. நான் முன்னர் குறிப்பிட்ட அந்த விவரிக்க இயலாத அச்ச உணர்வு அவர்களுக்கு இருக்கவே இருக்காதா? அல்லது தன்னம்பிக்கை ஒன்றே அதனை வெல்லப் போதுமானதா? விழிப்புணர்வுடன் யோசித்துப் பார்க்கிறேன். எனது தன்னம்பிக்கையும் விவரிக்க இயலாததுதான். மிகவும் பிரம்மாண்டமானதும்கூட. ஆனால் அந்த உணர்வாக எனது கடவுளேதான் வந்து அமர்கிறான் என்று சர்வநிச்சயமாகத் தோன்றிவிடுகிறது.

நாளைக்கு, கல்விக் கடவுளுக்குப் பிறந்தநாள். முழுநாளும் எழுதப் போவதில்லை. படிக்கப்போவதில்லை. முழுநாளும் துதித்துக்கொண்டிருப்பேன் என்று பொய்சொல்லவும் போவதில்லை. அவளுக்கு ஐந்து நிமிடங்கள் போதும். மிச்ச நேரம் டிவி பார்க்கலாம். ஊர் சுற்றலாம். படுத்துத் தூங்கலாம். என்னவும் செய்யலாம்.

மூன்றில் இரண்டு பழுதானாலும் ஒரு தமிழை நிச்சயம் அவள் ஒழுங்காகக் கொடுத்துவிடுவாள். அதிலெனக்கு சந்தேகமில்லை.

Happy Birthday, Saraswathi!

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

26 comments

  • //மூன்றில் இரண்டு பழுதானாலும் ஒரு தமிழை நிச்சயம் அவள் ஒழுங்காகக் கொடுத்துவிடுவாள். அதிலெனக்கு சந்தேகமில்லை.//

    🙂

  • //நிஜமான நாத்திகவாதிகள்மீது எப்போதும் எனக்குச் சிறு பொறாமை உண்டு. நான் முன்னர் குறிப்பிட்ட அந்த விவரிக்க இயலாத அச்ச உணர்வு அவர்களுக்கு இருக்கவே இருக்காதா? அல்லது தன்னம்பிக்கை ஒன்றே அதனை வெல்லப் போதுமானதா? விழிப்புணர்வுடன் யோசித்துப் பார்க்கிறேன். எனது தன்னம்பிக்கையும் விவரிக்க இயலாததுதான். மிகவும் பிரம்மாண்டமானதும்கூட. ஆனால் அந்த உணர்வாக எனது கடவுளேதான் வந்து அமர்கிறான் என்று சர்வநிச்சயமாகத் தோன்றிவிடுகிறது.//

    சூப்பர் 🙂

    கடவுள் (அ) இறை நம்பிக்கையில்லாதவர் யாருமே இல்லை என்பதுதான் எனது அனுபவம். நிறுவனத்தை, அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் தங்களை நாத்திகர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இந்திய சார்வாகமும், கிரேக்க ஸ்கெப்டிகமும் (Sceptism) அத்தகைய வகை நிலைப்பாடுகளே என்பது என் புரிதல். தவறாக இருக்கலாம். பத்து தலை கடவுளைப் பற்றி கேள்வி கேட்பவர் மனதில் பதினோரு தலை உருவகம் ஏதாவது இருக்கலாம். அருவமாகக் கூட. தி ஜா வின் நளபாகம் படித்திருக்கிறீர்களா? இப்படி சுவாரசியமான விவாதம் ஒன்று அதில் வரும் நினைவு இருக்கிறது.

    உங்கள் சரஸ்வதி பக்தி சுவாரசியமாக இருக்கிறது. நன்றி 🙂

  • கடைசியில் என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று புரியாத அளவுக்கு குழப்பமான பல எண்ணங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். இதே குழப்பம் கடவுள் மீதும் உங்களுக்கு இருப்பது புரிகிறது.

    எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. நான் நல்லவனாக இருக்க, பிறருக்குக் கெடுதல் செய்யாமல் இருக்க இன்றுவரை என்னைப் பயமுறுத்தி வைத்திருப்பது கடவுளே. நான் ஒவ்வொரு தவறையும் கடவுளுக்குப் பயந்தே தவிர்க்கிறேன். எனவே கடவுள் இருக்கிறார் என்று நம்புவதும் தொழுவதும் தன்னை இழப்பதும் எனக்கு மிகவும் தேவையான விஷயமாகிவிட்டது.

    நாத்திர்கர்கள் பற்றித் தெரியாது. ஆனால் எந்த ஒரு நாத்திகரும் ஏதோ ஒரு தருணத்தில் ஏதோ ஒரு சக்தி என்று சொல்லி, இயற்கையையோ ஏதோ ஒன்றையோ நிச்சயம் சொல்லியிருப்பார்கள். ஆத்திகத்தில் அதன் பெயரே கடவுள்.

    • பிரசன்னா, விஜயதசமி வாழ்த்துகள் 😉 இன்றைய என் முதல் பதில் உங்களுக்காக அமைகிறது. கடவுள் குறித்து உங்களுக்குக் குழப்பமே இல்லையென்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர். எனக்குக் கடவுள் என்றில்லை; உலகிலுள்ள அனைத்தின்மீதும் குழப்பங்களும் சந்தேகங்களும் நிரந்தரமாக உண்டு. முட்டி முட்டி மோதி ரத்த காயமடைந்து, எத்தனை முறை தோற்றாலும் திரும்பத் திரும்ப முயற்சி செய்வதே மானுடவர்களுக்கான அலகிலா விளையாட்டு. ஆனால் உங்களைப் போல் கடவுளிடம் – ஏன் எதனிடமும் எனக்கு பயம் கிடையாது. கடவுளுக்கு பயந்து தவறுகளைத் தவிர்ப்பது என்கிற பேச்சுக்கே என்னிடம் இடமில்லை. இன்ன தப்பு செய்யப்போகிறேன் என்று கடவுளிடம் சொல்லிவிட்டுச் செய்வதே என் பாணி. என் கடவுளுக்கு தண்டிக்கத் தெரியாது. குறைந்தபட்சம் என்னை தண்டிக்க மாட்டான் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையும் அனுபவங்களும் உண்டு. நாத்திகம் – இதுபற்றித் தனியே எழுதவேண்டும். நான் சில ஒரிஜினல் நாத்திகர்களைச் சந்தித்திருக்கிறேன். பெரியாரோ கார்ல் மார்க்ஸோ அவர்களுடைய நாத்திகத்துக்கு அவசியமானவர்களாக இருந்ததில்லை. அவர்கள் முற்றிலும் தன்வயமான, தானே பரம்பொருள் என்பதை உணர்ந்த பரிபூரண அத்வைதிகளா என்று அரவிந்தன் நீலகண்டனைக் கேட்கவேண்டும். அவர் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வராமல் விளக்கம் கொடுத்தால் மிகுந்த நன்றி பாராட்டுவேன்!

  • //நிஜமான நாத்திகவாதிகள்மீது எப்போதும் எனக்குச் சிறு பொறாமை உண்டு. நான் முன்னர் குறிப்பிட்ட அந்த விவரிக்க இயலாத அச்ச உணர்வு அவர்களுக்கு இருக்கவே இருக்காதா?//
    இருக்கும் ஆனால் அதற்காக ஒரு பரலோக ஆளுமையிடம் தெண்டனிட மாட்டோ ம். அப்படி தெண்டனிட்டு அந்த அச்சத்தை கொச்சைப்படுத்த மாட்டோ ம். ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.

  • //நிஜமான நாத்திகவாதிகள்//

    அப்படி யாராவது உங்களுக்கு தெரிஞ்சவங்க இருக்காங்களா?

    • ராஜா, சில நிஜமான நாத்திகர்களை நான் அறிவேன். முன்னர் நான் எழுதத் தொடங்கிய சுகம் ப்ரம்மாஸ்மி தொடரில் அவர்களைப் பற்றி விரிவாக எழுத நினைத்திருந்தேன். பல வேலை நெருக்கடிகளால் அதைத் தொடர முடியாமல் இருக்கிறது. திரும்பவும் ஆரம்பிக்கப் பார்க்கிறேன். உடனடி உதாரணம் ஒன்று உங்களுக்கு வேண்டுமென்றால் பத்ரி. பத்ரியின் நாத்திகம் எத்தகையது என்பது பற்றி ஏற்கெனவே ஒருமுறை எழுதியிருக்கிறேன். லிங்க் தேடவேண்டும். என் ஆசிரியர் செ. இளங்கோவன் அவர்கள் அத்தகைய ஒரு நாத்திகவாதியே. ஆழ்வார், நாயன்மார், வேதங்கள், கீதை, உபநிஷத் அனைத்திலும் தோய்ந்தவர். பேலூர் ராமகிருஷ்ண மடத்தில் பிரம்மச்சாரியாகச் சில காலம் இருந்தவர். கிரிமினல் லா படித்துவிட்டுப் பத்திரிகைத் துறைக்கு வந்தவர். பெரிய ஞானஸ்தர். பல நுணுக்கமான சிக்கல்களுக்கு அவர் தீர்வை நோக்கி நகரும் விதமே புதிய அனுபவம் தரக்கூடியதாக, கிளர்ச்சியூட்டக்கூடியதாக இருக்கும். ஆனால் பரிபூரண நாத்திகர். இவரைப் பற்றி அந்தத் தொடரில் எழுதத் தொடங்குகையில்தான் நின்றுபோனது. விரைவில் மீண்டும் ஆரம்பிக்கிறேன்.

  • இன்னிக்கு சரஸ்வதிபூஜைதானே, இதோ பாருங்க நான் comment type பண்றேன்.

    இதுக்கு ஒரு உபாயம் இருக்கு. நான் வெச்சுருக்கற ஒரு exception. அதாகப்பட்டது, ஸரஸ்வதி பூஜையை ஆரம்பிக்கற வரைக்கும் எழுதலாம், படிக்கலாம், கேக்கலாம் பாடலாம் லைஃப் கொண்டாடலாம்.

    1, 2 மணிக்கு பூஜை வெச்சுக்கணும். அதே மாதிரி விஜயதசமி காத்தால சீக்கரமா பண்ணிடணும். அப்பறம் நடூல கொஞ்ச நேரம் எப்படியும் தூங்கிடுவோம். ஆக மொத்தம், ஒரு 4-5 மணி நேரம்தான் சும்மா இருக்கணும்.

  • //பலநாள் கடவுளுக்கு எதிரான வாதங்களை நானே யோசித்து யோசித்து எழுதிப் பார்த்து மூடி வைத்துவிட்டுப் படுத்துவிடுவதுண்டு. அவன் கோபித்துக்கொள்வதில்லை. மவனே உன்னை கவனிச்சிக்கற விதத்துல கவனிச்சிக்கறேன் என்று கறுவிக்கொண்டு பழிவாங்கியதில்லை.//
    உண்மைதான் திரு.பாரா, கடவுளின் குழந்தைகள் நாம். நம்மை அவர் பழி வாங்குவாரா? உண்மையான பகுத்தறிவு இதுதான்!

  • ஐயா, தங்களின் எழுத்தால் கவர பெற்றவன் நான்.
    சரஸ்வதியின் பிறந்தநாள் இன்று என அறிந்து மஹா தெளிவு அடைந்தேன்.

    இவ்வளவு வருடங்கள் சரஸ்வதி பூஜை என்பது இன்னொரு பூஜை என் எண்ணியிருந்தேன்.

    தங்களின் தயவால் ஒரு மாபெரும் உண்மையை அறிந்தேன். இனிமேல் ஒவ்வொரு சரஸ்வது பூஜையையும் சரஸ்வதியின் பிறந்த நாளாக கொண்டாடுவேன். பூஜைக்கு பதிலாக, படிக்காமல் 5 நட்சத்திர ஓட்டலில் கேக் வெட்டி தண்ணியடித்து நான் கொண்டாட வாய்பளித்ததிற்கு நன்றி..நன்றி…

  • ஐயா, நான் சொன்னதையே நீங்கள் மாற்றுகிறீர்கள். எதன் மீது கேள்வி வருகிறதோ அதன் மீதே குழப்பமும் சந்தேகமும் வரும். ஒருவன் தன்க்குப் பிறந்த மகன் என்று தீர்மானமாக நம்பும்போது, அதன் உண்மைத்தன்மை மீது அவனுக்குச் சந்தேகமோ குழப்பமோ ஏற்படுவதில்லை. அதேபோல் கடவுள் என்கிற தத்துவம் ஒன்று உண்டு என்று நம்பி, அதனோடு பரிபூரண சரணாகதி அடைந்துவிட்டவர்களுக்கு குழப்பமும் சந்தேகமும் வருவதில்லை. நான் அந்த ஜாதி.

    • //ஒருவன் தன்க்குப் பிறந்த மகன் என்று தீர்மானமாக நம்பும்போது, அதன் உண்மைத்தன்மை மீது அவனுக்குச் சந்தேகமோ குழப்பமோ ஏற்படுவதில்லை.// ரொம்ப சரி. ப்ரத்யட்சம், ப்ரமாணம், ஸ்ருதி என்று அறிதல் முறைகள் பற்றிப் பேசத் தொடங்கி ஆபத்தில் சிக்கிக்கொள்ள இப்போது அவகாசமில்லை. இன்றைக்கு விஜயதசமி. நிறைய புதிய வேலைகள் தொடங்கவேண்டும். கொஞ்சம் பிசி 😉

    • பிரசன்னாவுக்கு இன்னொரு அவசர பதில்: //கடவுள் என்கிற தத்துவம் ஒன்று உண்டு என்று நம்பி// கடவுள் உங்களுக்குத் தத்துவம்தானா? எனக்கு அவர் என்ன என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்! 😉

  • //என் ஆசிரியர் செ. இளங்கோவன் அவர்கள் அத்தகைய ஒரு நாத்திகவாதியே. ஆழ்வார், நாயன்மார், வேதங்கள், கீதை, உபநிஷத் அனைத்திலும் தோய்ந்தவர். பேலூர் ராமகிருஷ்ண மடத்தில் பிரம்மச்சாரியாகச் சில காலம் இருந்தவர். கிரிமினல் லா படித்துவிட்டுப் பத்திரிகைத் துறைக்கு வந்தவர். பெரிய ஞானஸ்தர். பல நுணுக்கமான சிக்கல்களுக்கு அவர் தீர்வை நோக்கி நகரும் விதமே புதிய அனுபவம் தரக்கூடியதாக, கிளர்ச்சியூட்டக்கூடியதாக இருக்கும். ஆனால் பரிபூரண நாத்திகர். இவரைப் பற்றி அந்தத் தொடரில் எழுதத் தொடங்குகையில்தான் நின்றுபோனது. விரைவில் மீண்டும் ஆரம்பிக்கிறேன்.//

    ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்!

  • //தன்வயமான, தானே பரம்பொருள் என்பதை உணர்ந்த பரிபூரண அத்வைதிகளா என்று அரவிந்தன் நீலகண்டனைக் கேட்கவேண்டும். அவர் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வராமல் விளக்கம் கொடுத்தால் மிகுந்த நன்றி பாராட்டுவேன்!//
    அத்வைத சான்றிதழ் வேண்டுபவர்கள் அணுக வேண்டிய இடம் அரவிந்தன் நீலகண்டன் நாஸ்திக-அத்வைத மடம் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம். (இலவசமாக “பாரா என்ன எழுதினாலும் இடக்குமடக்காக கமெண்ட் போட்டு சண்டைக்கிழுப்பது எப்படி?” என ஒரு கையேடு கிடைக்கும்) 🙂

    • நாத்திக அத்வைத மடாதிபதி தனது திருப்பணியை நிறுத்தாமல் தொடரவேண்டும். இப்படி ஒருத்தர் இல்லாதுபோனால் எனக்கு எழுத்தில் – ஏன் எதிலுமேதான் சுவாரசியமேது?

  • சரஸ்வதி ரொம்ப அழகானவளாகத்தான் இருக்க வேண்டும். வரைபடங்களில் இல்லாத அழகு அவளுக்கு இருக்க வேண்டும். உம் எழுத்து அப்படித்தான் காட்டுகிறது. அவளுக்கு ஒரு நாள் ஓய்வு கொடுப்பது நல்லதுதான்.
    ரூமி

  • அண்ணன்களா,
    நாத்திகம் என்றாலே கடவுள்மறுப்பு, அதாவது கடவுள் இல்லைன்னு தான் அர்த்தம், பிறகு இல்லாத விசயத்துக்கு எப்படி பயம் வரும், உங்ககிட்டையும் நாத்திகன் இருக்கான். உங்களுக்கு தான் பயம் சாமி இல்லன்னு சொல்லி, ஒருவேள இருந்துட்டா என்று பயம்,
    கல்விக்கு என்று தனிய கடவுள் இருக்கிறதே இந்தியாவுலதான் அனா கல்வியறிவு மற்ற மேலைநாடுகளைவிட ( கல்விக்கு அங்க தனிய கடவுள் இல்ல) இங்க குறைச்சல்தான், பின்ன எதுக்கு ஒரு சாமி அதுக்கு ஒரு பூஜை, வெட்டிசெலவு………உலகநாடுகளில் உள்ள பெரும்வாரியான கல்வியாளர்கள் நாத்திகர்கள் தான்…………… சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் மற்றும் அறிவியலார் அயின்ஸ்டீன் போன்றவர்களும் நாத்திகர்களே….
    dare to think அப்படின்னு சொல்லுவாங்க சிந்திங்க…………..

  • வாசிக்க சுவாரசியம், நன்றி.

    நிஜமான நாத்திகர்கள் அதுவும் ஆழ்வார், நாயன்மார், வேதங்கள், கீதை, உபநிஷத் ஆகியவற்றை ஆய்ந்தறிந்த அறிவுஜீவி நாத்திகர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் (ஆத்திகர்கள் மேல் வைத்திருப்பதைக் காட்டிலும்) அளவுக்கு அதிகமான மரியாதைக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்ததுண்டா ? நாத்திகராக இருப்பதில் ஒரு கெத் இருக்கிறது என்ற தொனி இங்கிருப்பதாக உணர்வது நான் மட்டும் தானா ? 🙂

    ஆன்மீகம், தத்துவம் என்று எதையும் வாசிக்காமல், மிக எளிய காரணங்களுக்காக ஒருவர் நாத்திகராக இருக்கலாம். அறிவியலும், பிறர்க்கு பயனுற வாழ்தலும் தான் வாழ்க்கை என்று ஆத்திகம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒதுக்கியவரும் நிஜமான நாத்திகர் தான். ஆத்திகம் குறித்து அறிந்து தெளிந்தவர் தான் நிஜமான நாத்திகர் என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாது!

    எ.அ.பாலா

  • வாசிக்க சுவாரசியம், நன்றி.

    நிஜமான நாத்திகர்கள் அதுவும் ஆழ்வார், நாயன்மார், வேதங்கள், கீதை, உபநிஷத் ஆகியவற்றை ஆய்ந்தறிந்த அறிவுஜீவி நாத்திகர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் (ஆத்திகர்கள் மேல் வைத்திருப்பதைக் காட்டிலும்) அளவுக்கு அதிகமான மரியாதைக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்ததுண்டா ? நாத்திகராக இருப்பதில் ஒரு கெத் இருக்கிறது என்ற தொனி இங்கிருப்பதாக உணர்வது நான் மட்டும் தானா ? 🙂

    ஆன்மீகம், தத்துவம் என்று எதையும் வாசிக்காமல், மிக எளிய காரணங்களுக்காக ஒருவர் நாத்திகராக இருக்கலாம். அறிவியலும், பிறர்க்கு பயனுற வாழ்தலும் தான் வாழ்க்கை என்று ஆத்திகம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒதுக்கியவரும் நிஜமான நாத்திகர் தான். ஆத்திகம் குறித்து அறிந்து தெளிந்தவர் தான் நிஜமான நாத்திகர் என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாது!

    எ.அ.பாலா

  • //உண்மைத்தன்மை மீது அவனுக்குச் சந்தேகமோ குழப்பமோ ஏற்படுவதில்லை. அதேபோல் கடவுள் என்கிற தத்துவம் ஒன்று உண்டு என்று நம்பி, அதனோடு பரிபூரண சரணாகதி//

    “நீங்கள் யாரோ எவரோ என்று நான் அறியேன் ” இந்த வரிகள் உங்களுக்கு உங்கள் தொடர் வேலைகளுக்கு ஓய்வில்லா சிந்தனைகளுக்கிடையேயும் நினைவில் இருந்தால் நன்றி. ஆனால் “அறியேன்” என்று சொல்லி உள்ளே அரித்துக்கொண்டுருந்ததை வௌியே கொண்டு வந்தவருக்கு என்னுடைய பாத நமஸ்காரம்.

    இடையில் உள்ளே வர முடியவில்லை என்பதால் இழந்தவைகள் எத்தனை? என்பதை உள்ளே வந்து நான்கு பதிவுகளையும் வாசித்து முடித்த போது பணம் கொடுத்து வாங்காமலே உங்கள் எழுத்துக்கள் கற்றுக் கொடுத்துக்கொண்டுருப்பதை விட அதிகம் பெற்ற மகிழ்ச்சி இந்த காலை வேலையில்.

    மேலே சொன்ன வரிகள் போதும். மூத்த குடி என்று சொல்லிக்கொண்டு முன்னேற இன்று வரையிலும் முயற்சித்துக்கொண்டுருக்கும் அத்தனை பேர்களும். பதில் பின்னூட்டம் என்பது தேவையில்லை என்ற கொள்கைகளை கூட தளர்த்தி விட்ட இது போன்ற அவஸ்யமான பதிலுக்கும் சேர்த்து நன்றி.

    வளர்க நலமுடன்

    ஜோதிஜி

  • மனிதனின் சுயத்தன்மை அவரவரின் சுயரூபத்தை அவ்வப்போது காட்டி விடக்கூடும் என்ற அச்சத்தில் ஏற்படுத்தப்பட்டவையே சில சம்பிரதாய்ங்கள். கடவுளின் மேல் பக்தியை விட, பய்த்தை ஏற்படுத்தினால் வாழ்க்கை செம்மையுறும் என்பது ஒரு சாரார் கருதினாலும், ஒருமித்த சிந்தனையோ ,ஏற்ப்போ அமையப் பெறாது எனபதையும் மற்றொரு சாரார் நம்மைப் போல விவாதித்தும், சில சாரார் ஒரு தீர்க்கமான தீர்மானத்தோடும் இருந்து கொண்டு தான் இருக்கிறோம், இதில் யார் எந்த வகையைச் சேர்ந்தவராகிறோம் என்பது, யார் தமது எண்ண மோதல்களிலிருந்து விடுபட்டு, ஒரு தீர்க்கமான தெளிவை தொட்டு விட்டார்களோ அவர்களின் முடிவாகி விடுகிறது ஆக எல்லைகள் அவரவர் கையிலே, யார் யாருக்கு எது கேள்வியாக விளைந்ததோ, அதன் பதில்களை, அவரவரின் நம்பிக்கையும் அதனை சார்ந்த ஏற்புமே தான் வழ்ங்க முடியும் என்பது என் கருத்து !

  • படிக்க சுவையாக இருக்கிறது..மற்றபடி பத்தி பற்றி-
    ஹரன் மற்றும் பாலாவுடன் ஒத்துப்போகிறேன்..

    நட்பு நோக்கில் இன்னொரு வேண்டுகோள்..இடப்பக்க வீடியோவில் அபாயகரமான அளவில் இருக்கிறீர்கள்..உங்கள் எடையைக் குறைப்பது உங்கள்,குடும்ப-ஆரோக்கியத்திற்கு நல்லது என்று தோன்றுகிறது..மிகவும் பெர்சனாலாக நினைத்தால் இப்பகுதியை நிராகரித்து விடுங்கள்.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading