முதல் அத்தியாயத்தில் இருந்த புதிர் இரண்டாம் அத்தியாயத்தில் அவிழும் என்று நினைத்தால் புதிர்கள் நீண்டு கொண்டே செல்கிறது.
நம் ஊரில் முதல்மரியாதை செய்ய மாலை அணிவிப்பது வழக்கம். சில பல அரசியல்வாதிகள் தற்போது கமெர்ஷியலாக வேல் ஏந்துவதைப் போல, சூனியர்கள் உலகில் எலும்புக்கூடுகளுக்கு மதிப்பு அதிகம். ஏனெனில் இறைவன் படப்பில் இறுதியில் எஞ்சுவது அது மட்டும் தானே. எலும்புக்கூடுகளை கடவுளின் தோல்விச் சின்னமாக இவர்கள் கருதுகிறார்கள், கடவுளின் படைப்பு இன்றளவும் செழித்து பூமியை தம்வசம் வைத்திருப்பதற்கான அடிப்படை ஆதாரமாக அதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? ஏனெனில் மனிதர்கள் தானாக முளைத்து அப்படியே அழிந்துவிடவில்லையே. தங்கள் சந்ததிகளை விதைத்துவிட்டு தானே போகிறார்கள். சரி சரி, புனைவில் லாஜிக் பார்க்கக் கூடாது…
கதையைப் படிக்கும் போது நம் உலகில் உள்ள அனைவரது எலும்புகளும் சூனியர் உலகுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறதென்று நினைக்கிறேன். யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல, பூமியின் பிரபலங்கள் இறந்த பின்னரும் அவர்கள் எலும்புகளுக்கு சூனியர் உலகில் டிமான்ட் அதிகம் தான் போலும்.
சூனியர்கள் குளிரை வெறுக்கின்றனர். வெயிலைத் தாங்கும்படியாக தகவமைப்பு பெற்ற அவர்களுக்கு குளிர் தான் எதிரி. ஏதோ பக்கத்து வீட்டு மாடியில் வடகம் காயப் போடுவதை போல புதனுக்கே சென்று தங்கள் கவசங்களை காய வைக்கிறார்கள்.
அடுத்தபடியாக பிசாசுகள்… சூனியர்கள் திருஷ்டிக்காய் பிசாசுகளைப் பயன்படுத்துகிறார்கள். அவைகளின் உடலெங்கும் இருக்கும் நகத்தினால் திருஷ்டியை உறிஞ்சி எடுத்துவிடுமாம் – ஹாரி பாட்டரில் வரும் டிமெண்டர்ஸ் போல.
ஆனால் தோற்றம் மட்டும் அவைகளை விட கோரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்வெளிப் பயணங்களின் போது எதிர்பாராத விண்கல் எரிகல் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றும் ஷீல்டுகளும் பிசாசுகள் தானாம்.
இதோ கதாநாயகனைக் காப்பற்றவே உருவெடுத்து வருகிறது ஒரு நீல நகரம். அது கப்பலோடு மோதினால் குற்றவாளிகளோடு காவலர்களும் கைலாசம் போவது உறுதி.
சரி,கதாநாயகன் தப்பிப் பிழைப்பானா?