சூனியர்கள், அமீஷின் நாகர்கள், டேன் ப்ரவுனின் மேஷன்கள் போலவே பாராவின் புனை மாந்தர் தாம் அவர்கள். ஒரு இனக்குழு தனக்குள்ளேயே அடித்துக் கொண்டு அழிவதற்கு ஆவன செய்பவர்கள் சூனியர்கள். கடவுளை அழிக்க இயலாத காரணத்தால் கடவுளது முதன்மைப் படைப்பான மனித குலத்தை அழிந்து தங்களின் கடவுள் வெறுப்பை ஆற்றுப்படுத்திக்கொள்ள முயல்பவர்கள் தாம் சூனியர்கள்.
அவ்வினத்துள் ஒருவன் தன் இன சூனியர்களாலேயே இனத்துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு மன்றத்தில் குற்றவாளியாய் நிற்கிறான். அவனைகச் சிறை வைத்திருக்கும் பொருள் தான் அபாரம்- நிலக்கடலை ஓடு. அந்த நிலக்கடலை ஓட்டினுள் குற்றவாளிகளை அடைத்து சுமார் 300 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட இருப்பு அடுப்பில் போட்டு விடுவார்கள்- அதுவே அவர்களின் சிறைச்சாலை..
இப்படியும் ஒருவரால் கற்பனை செய்து அதனை பிறர் கற்பனைக்குள் புகுத்துமளவு எழுத முடியுமா? என வியக்குமளவு இருந்தது இக்கதை.
முதலில் தலையும் வாலும் பிடிபடாமல், யார்? எதற்கு? ஏன்? எப்படி? எனும் கேள்விகள் எழுந்தாலும் போகப் போக சுவாரசியம் கூடுகின்றதே கதையின் சிறப்பம்சம்.
நீதிமானாக இல்லை இல்லை, நியாய சூனியராக வரும் யூதாஸ், தண்டனை நிறைவேற்றல், சனிக்கிரத்துக்கு அழைத்து செல்லுதல், பிசாசுப் படை அனைத்துமே நம் கற்பனைத்திறனை மீறிய புது உலகுக்கே நம்மை அழைத்துச் செல்கிறது.
சரி அந்த சூனியன் தண்டனையிலிரிந்து தப்பிப் பிழைக்கிறானா? அவன் தானே கதாநாயகன், எனவே பிழைத்துவிடுவான் என நம்புவோம் அடுத்தடுத்த அத்தியாயங்களில்.