ருசியியல் – 38

சொன்னால் நம்ப வேண்டும். சமையல் துறையில் எனக்கு இருந்த ஒரே தேர்ச்சி, சாப்பிடுவது மட்டும்தான். தமிழக, கேரள, கர்நாடக, ஆந்திர பாணி சமையலானாலும் சரி, பெரிய வித்தியாசங்கள் இல்லாத வடக்கத்திய சமையலானாலும் சரி, அப்படிப் பொத்தாம்பொது ஆகாது; எங்களுக்கென்று தனித்துவம் உண்டு என்று காட்டிக்கொள்வதற்காகவே சகலமான காரப் பலகாரங்களிலும் கண்ணராவியாக நாலு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்து வைக்கிற குஜராத்தி, ராஜஸ்தானி ரகங்களானாலும் சரி. வஞ்சனையே இல்லாமல் உட்கார்ந்து தின்ன நான் எப்போதும் தயார். ஒரு மாறுதலுக்குப் பரதேசிச் சமையல் என்றாலும் பாதகமில்லை. சைவ உணவாக இருக்கிற பட்சத்தில் எதையும் ருசி பார்க்க எப்போதும் ஒரு ராணுவ வீரனைப் போன்ற தயார் நிலையில்தான் இருப்பேன்.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. எப்போதோ ஒரு தேர்தல் சமயம், அப்போதைய ஒரிசாவில் செய்தி சேகரிக்கச் சுற்றிக்கொண்டிருந்தேன். அது கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள சாத்ரபூர் நகரம். ஜார்ஜ் பெர்னாண்டஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, களைத்துப் பசித்த பொழுதில் கண்ணில் பட்ட உணவகத்துக்குச் சென்று ‘வெஜிடேரியன் உணவு என்ன இருக்கிறது?’ என்று கேட்டேன். நல்லவன், ஒன்றுமில்லை என்று சொன்னான். தேடினால் ஒரு சைவ உணவகம் கிடைக்காமல் போகாதுதான். ஆனால் எனக்கு நேரமில்லை. என்னத்தையாவது போட்டு அடைத்துக்கொண்டு போனால் போதும் என்று நினைத்துத்தான் அங்கே நுழைந்திருந்தேன். ஆனால் இல்லை என்கிறானே, என்ன செய்வது?

இருப்பதைக் கொண்டு என்னத்தையாவது தயார் செய்து தரமுடியுமா? நான் வெகுதூரம் போகவேண்டும். இங்கே ஓட்டல் தேடிக்கொண்டிருக்க முடியாது என்று பக்குவமாக எடுத்துச் சொன்னேன்.

சப்ளையருக்கு என்ன தோன்றியதோ, கொஞ்சம் காத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே போனான். பத்து நிமிடங்களில் ஒரு ப்ளேட்டில் என்னத்தையோ கொண்டு வந்து வைத்தான். அதில் சோளம் தென்பட்டது. கேரட் இருந்தது. பீன்ஸா, கொத்தவரங்காயா என்று நினைவில்லை. அப்படி ஒன்று இருந்தது. பெரிய சைஸ் கொண்டைக் கடலை இருந்தது. அனைத்தையும் புளி சேர்த்துக் கொதிக்கவைத்து, குழம்புக்கும் கூட்டுக்கும் இடைப்பட்ட தரத்தில் அது சமைக்கப்பட்டிருந்தது.

முட்டை, மீன், கறி வகையறாக்கள் எதுவும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு ஸ்பூனால் கொஞ்சம் எடுத்து வாயில் வைத்தேன். படு பயங்கரக் காரமும் சகிக்கமுடியாத புளிப்புமாக இருந்தது. உண்டு தீர்த்தால் பசி போய்விடும்தான். ஆனால் வேறு ஏதேனும் சிக்கல் உண்டாகலாம் என்று தோன்றியது. என்ன செய்யலாம் என்று யோசித்து, கொஞ்சம் வெல்லம் கேட்டு வாங்கி அதன்மீது உதிர்த்துக் கலந்தேன். இப்போது உண்டு பார்த்தபோது இன்னும் கேவலமான சுவைக்கு அது இடம் பெயர்ந்துவிட்டதுபோலத் தோன்றியது.

எனக்கோ, பசி கொன்றுகொண்டிருந்தது. எதையாவது தின்றே தீரவேண்டும். இத்தனை தூரம் மெனக்கெட்டுவிட்டு, சைவ ஓட்டல் எங்கே இருக்கிறது என்று அந்த சப்ளையரிடமே கேட்கச் சங்கடமாக இருந்தது. அவனைக் குறை சொல்லுவது அடுக்காது. ஒன்றுமில்லை எழுந்து போ என்று சொல்லாமல் ஏதோ ஒன்றைக் கொண்டு வைத்த உத்தமன் அல்லவா?

‘தயிர் இருக்கிறதா?’ என்று கேட்டேன். கொஞ்சம் ஒரு மாதிரி பார்த்திருப்பானோ? இல்லை என்று சொன்னான். சுத்தம். பாலாவது இருக்கிறதா என்று கேட்டேன். பால் பவுடர் வேண்டுமானால் கிடைக்கும் என்றான்.

பொதுவாக நான் வெஜ் உணவகங்களில் டீ நன்றாக இருக்கும். சில இடங்களில் காப்பியும் பிரமாதமாக அமைந்துவிடும். ஆனால் இவன் பாலே இல்லை என்று சொல்கிறானே?

சரி ஒழிகிறது என்று அதைக் கொண்டுவரச் சொன்னேன். ஒரு தம்ளர் வெந்நீர் கேட்டு வாங்கி, அந்தப் பால் பவுடர் பாக்கெட்டை உரித்து அதில் கொட்டிக் கரைத்தேன். பிறகு அதை மேற்படி காய்கறிகளும் காரமும் வெல்லமும் கலந்த குழம்பில் ஊற்றிக் கலந்தேன். என்னை அவன் முழுப் பைத்தியம் என்றே எண்ணியிருக்க வேண்டும். கிறுக்குத்தனமில்லாத கலையுள்ளம் உண்டா உலகில்! ஒருவாய் சாப்பிட்டுப் பார்த்தேன்.

கொஞ்சம் சுமாராக இருக்கிறதோ? எதற்கும் இருக்கட்டும் என்று கொஞ்சம் சர்க்கரை கிடைக்குமா என்று கேட்டேன். அதையும் கொட்டு இதன் தலைமேல்.

அன்று நிகழ்ந்தது உண்மையிலேயே பேரதிசயம். புளிப்பும் காரமுமாக இருந்த அந்தப் பதார்த்தம் மெல்ல மெல்ல தன் சுபாவத்தை மாற்றிக்கொண்டு ஒரு காய்கறிப் பாயச பதத்தை எய்தியிருந்தது! அதிலிருந்த புளிப்பை மட்டும் தனியே உருவி எடுத்துவிட முடிந்தால் அது ஒரு நல்ல கண்டுபிடிப்பே என்று தோன்றியது. நான் அந்த நூதன கசுமால உணவை நக்கி நக்கித் தின்றதை அந்த சப்ளையர் ஏழேழு ஜென்மத்துக்கும் மறக்கமாட்டான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

எதற்குச் சொல்லுகிறேன் என்றால், சாப்பிடுவதில் எனக்கு பட்சபேதமே கிடையாது. கேவலமான உணவு என்றாலும் அதை நான் ருசி பார்த்துச் சொல்லவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் சமையல் அப்படி அல்ல. பழக்கமில்லை, முயற்சி செய்ததில்லை, அதற்கான தேவையும் இருந்ததில்லை.
அப்படியாப்பட்ட பிரகஸ்பதி முதல் முதலில் சமையல் அறைக்குள் நுழைந்து ஒரு பெரும் கலைப்படைப்பை உருவாக்கியபோது எத்தனை பெரிய பரவசம் கூடியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு, நான் சமைத்திருந்த பனீர் வஸ்துவை ஒரு தட்டில் அழகாக எடுத்து வைத்து வட்ட வடிவில் செதுக்கினேன். மேலுக்கு அலங்காரமாக நாலு கொத்துமல்லி இலைகளைக் கிள்ளித் தூவினேன். ஆங்காங்கே ஒன்றிரண்டு கேரட் குச்சிகளை சொருகினேன். பார்க்க என் கண்ணே பட்டுவிடும்போல் இருந்தது. இது மட்டும் ருசியாகவும் இருந்துவிட்டால் வெங்கடேஷ் பட் புறமுதுகிடுவது நிச்சயம் என்று எண்ணியபடியே எடுத்துச் சென்று அவள் முன்னால் வைத்தேன்.

காக்க காக்க கடாய் பனீர் காக்க. நோக்க நோக்க நெய் மிதப்பதை நோக்க.

ஒரு வாய் உண்டாள். ஒரு கணம் கண்மூடல். மறுவாய் உண்டாள்.

‘எப்படி இருக்கும்மா?’ என்று ஆர்வம் தாங்கமாட்டாமல் என் மகள் கேட்டாள். பதில் வரவில்லை. நான் காத்திருந்தேன். அந்த முதலிரு வாய்களிலும் முகச் சுளிப்பு இல்லை என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. எம்பெருமான் உப்பிலும் உறைப்பிலும் சொதப்பி வைக்காதிருந்திருக்கிறான். அந்தவரை அவன் நல்லவன்.

அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை அமைதியாக இருந்துவிட்டு, அதற்குமேல் முடியாமல் கேட்டுவிட்டேன். ‘ஓகேவா? நல்லாருந்ததா?’

அப்போதும் பதில் இல்லை. சாப்பிட்ட தட்டை எடுத்துச் சென்று கழுவிக் கவிழ்த்துவிட்டு என்னை அழைத்தாள்.

‘இதென்ன வேலை?’

அவள் சுட்டிக்காட்டிய கிச்சன் மேடை ஒரு போர்க்களக் கோலத்தில் இருந்ததை இப்போதுதான் கவனித்தேன். எங்கெங்கு காணினும் பனீர்ச் சிதறல். உருவியெடுத்த கருவேப்பிலைகள் பனீரில் அடைக்கலமாகியிருந்தாலும் காம்புகள் தரையில் விழுந்திருந்தன. அடுப்பெல்லாம் உப்பு. அதன்மீது மிளகாய்ப்பொடிப் புள்ளிகள். தாளிப்பில் சிதறிய கடுகுகள் சுவருக்குப் பொட்டு வைத்திருந்தன. எதை எடுத்தாலும் பிசுக்கு. எல்லா பாத்திரங்களின்மீதும் பிசுக்கு.

‘சமையல்ன்றது க்ளீனிங்கும் சேர்ந்ததுதான்’ என்றாள்.

‘அதைவிடு. சாப்ட்டது எப்படி இருந்தது?’

‘நீ அதைவிடு. இதையெல்லாம் இப்ப யார் க்ளீன் பண்றது?’

அன்று எனக்கு ஒன்று புரிந்துவிட்டது. எனக்கு சமையல் நன்றாக வரும். ஆனால் ஒருநாளும் அதை என் மனைவி ஒப்புக்கொள்ள மாட்டாள்!

[ருசிக்கலாம்]
Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி