குளத்துக்குள் குரங்கு பெடல் – பார்ட் டூ

செல்டெக்ஸ் உடனான எனது துவந்த யுத்தம் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது இப்போது. காசு கொடுத்துத் திரைக்கதை எழுதும் மென்பொருள் வாங்க வழியில்லாத / விரும்பாத எழுத்தாளர்கள் இனி சிக்கலேதுமின்றி செல்டெக்ஸைப் பயன்படுத்த இயலும்.

செல்டெக்ஸ் குறித்த என்னுடைய முந்தைய கட்டுரையை வாசித்துவிட்டு இதைப் படித்தால் புரிவதில் பிரச்னை இருக்காது என்று நினைக்கிறேன்.

நாகராஜன் செல்டெக்ஸ் பத்திரங்களில் மேற்கொண்ட திருத்தங்களுக்குப் பிறகும் எனக்கு நிறைய திருத்தங்கள் வேண்டியிருந்தன. குறிப்பாக, எழுத்துருவின் அளவும் வரிகளுக்கு இடையிலான இடைவெளியும் மிகவும் சங்கடம் விளைவித்துக்கொண்டிருந்தன. தவிரவும் Page Break அநியாயத்துக்கு சொதப்பிக்கொண்டிருந்தது. அரையே அரைக்கால் பக்கத்துக்கெல்லாம் பிரேக் விட்டு மிச்ச இடத்தில் நீ படுத்துக்கொள் என்று சொன்னது பழைய செல்டெக்ஸ்.

தவிரவும் Parenthetical, Transition ப்ளேஸ்மெண்ட்களும், அவற்றின் எழுத்துரு அளவும் எனக்குத் திருப்திகரமாக இல்லை.

சோர்ஸ் ஃபைலில் ஏராளமான முறை கைவைத்து என்னென்னவோ மாற்றிப் பார்த்து வந்திருக்கிறேன். என் சிறு மூளைக்கு எட்டிய தொழில்நுட்பம் சிலவற்றைச் சாத்தியமாக்கியது. அனைத்தையும் சரிவர முடிக்கத் தெரியவில்லை. தவிரவும் அவர்கள் அடிக்கடி வர்ஷன் மாற்றியதும் எனக்குப் பேரிடைஞ்சலாக இருந்தது.

இறுதியில் எதில் கை வைத்தால் வேலை முடியும் என்று சுட்டிக்காட்டி, செய்தும் காட்டி இந்த நீண்டநெடும் போராட்டத்தை முடித்துவைத்தவர் என் நண்பர் டைனோபாய். [தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள V2.9.1இல் இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.] அவருக்கு எப்படி நான் நன்றி சொல்வேன்? இன்னுமொரு நூற்றாண்டிரும்.

பக்கத்தில் இருந்து ப்ரிண்ட் எடுத்துக் காட்டி சரி செய்ய வாய்ப்பில்லாத தொலைவில் இருப்பவர். எனவே, அவர் மாற்றிக்கொடுத்த ஃபைலை என் தேவைக்கேற்பத் திரும்பவும் தட்டிக்கொட்டி [பிரமாதம் ஒன்றுமில்லை; வைத்துக்கொடுத்த புள்ளிக்குமேல் சொல்லிக்கொடுத்த கோலம் போடுவது மாதிரி], இப்போது ஒரு சரியான உருவத்தைக் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.

எந்தச் சிக்கலும் இல்லாமல், அமெச்சூர் தோற்றங்கள் காட்டாமல், மண்டை மண்டையாக அச்செடுத்துக் கொடுத்து இயக்குநர்களை அலறவைக்காமல், செல்டெக்ஸில் இனி தமிழில் திரைக்கதை எழுதலாம். [நம் விருப்பத்துக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துருகளையும் பயன்படுத்தலாம்.]

பார்க்க அழகாக இருக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம். படிக்க நன்றாயிருக்க வேண்டியது எழுதுபவர் பொறுப்பு.

திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட செல்டெக்ஸ் சோர்ஸ் ஃபைல் வேண்டுவோர் எனக்கு மின்னஞ்சல் செய்தால் அனுப்பிவைக்கிறேன். அதை எப்படி சொருக வேண்டுமென்ற குறிப்புகளும் இலவசமாகக் கிடைக்கும்.

ஓப்பன் சோர்ஸ் இயக்கத்தின் பிதாமகரான எம்பெருமானார் ராமானுஜருக்கு இந்த எளிய மறு உருவாக்க மென்பொருள் சமர்ப்பணம் 😉

13 comments on “குளத்துக்குள் குரங்கு பெடல் – பார்ட் டூ

 1. இராமன் அழகிய மணவாளன்

  “ஓப்பன் சோர்ஸ் இயக்கத்தின் பிதாமகரான எம்பெருமானார் ராமானுஜருக்கு இந்த எளிய மறு உருவாக்க மென்பொருள் சமர்ப்பணம்” அடடா! என்ன ஒரு உவமை? :)பிரமாதம்.

 2. Selvaganapathy

  Hi

  I have been reading your regularly.Nice Articles.I am also user of Celtex. Can you please send me the source file and the instructions. Thank You

  – Selvaganapathy

 3. writerpara Post author

  செல்வகணபதி: அஞ்சலில் அனுப்பியிருக்கிறேன். பாருங்கள்.

 4. pradeep

  நன்றி பாரா..தயவு செய்து அனுப்பி வைக்கவும்.காத்திருக்கேன்.

 5. Geetha Sivakumar

  உங்களின் ஆர்வங்கள் வியக்கவைக்கின்றன. குளத்துக்குள் குரங்குபெடல் முதல் கட்டுரையினை இந்தப் பதிவின் சுட்டியின்மூலம்தான் தேடிச்சென்று படித்தேன். இதனைக்கூட இவ்வளவு நகைச்சுவையாக எழுதுகிறீர்களே. பெரிய விசயந்தான்.

 6. writerpara Post author

  மென்பொருள் வேண்டுவோர் எனக்கு மின்னஞ்சல் மட்டும் அனுப்பவும். இங்கே கமெண்ட்ஸில் ‘எனக்கொரு காப்பி பார்சல்’ என்று கட்டளையிட்டால் கஷ்டம். ஒவ்வொரு கமெண்டிலிருந்தும் மின்னஞ்சலை காபி செய்து எடுத்துச் சென்று பேஸ்ட் செய்து தனித்தனியே ஃபைலை அட்டாச் செய்து அனுப்புமளவு நான் அத்தனை சுறுசுறுப்பானவனல்லன்.

 7. Selvaganapathy

  நன்றி..நன்றி..நன்றி…வேறேன்ன சொல்ல…

  – செல்வகணபதி

 8. SRK

  // கமெண்டிலிருந்தும் மின்னஞ்சலை காபி செய்து எடுத்துச் சென்று பேஸ்ட் செய்து தனித்தனியே ஃபைலை அட்டாச் செய்து //

  நியூஜெர்சி பகவானிடம் வேண்டினால் இங்கேயே ஒரு டவுன்லோடு லின்க் தந்தருள்வாரே. பக்தர்கள் அவர்களாகவே செல்டெக்ஸ் பிரசாதத்தை எடுத்துக் கொள்ள ஏதுவாயிருக்கும்.

 9. writerpara Post author

  சத்யராஜ், யோசனை சரிதான். முயற்சி செய்கிறேன். ஆனால் வழிமுறைகள்? அதைத் தனியாக எழுதி அதையும் சேர்க்கவேண்டுமா?

 10. SRK

  குறிப்புகளை readme.txt ஃபைலாக எழுதி அதையும் செல்டெக்ஸ் சோர்ஸ் ஃபைலையும் ஜிப் செய்து சர்வரில் ஏற்றி, இந்த பதிவிலேயே அந்த ஜிப் ஃபைலுக்கு லின்க் தர வேண்டியதுதான்.

 11. writerpara Post author

  சத்யராஜ்! கஷ்டம். நான் தருகிற சோர்ஸ் ஃபைல் என்பது டாட் ஜார் வகையறா. அதற்குள் இதைச் சேர்ப்பது அடாது. தனியாகத்தான் தரவேண்டும். பார்க்கிறேன்.

 12. SRK

  //நான் தருகிற சோர்ஸ் ஃபைல் என்பது டாட் ஜார் வகையறா//

  ஆஹா, பிஹெச்பி-யிலிருந்து ஜாவா வரை வந்தாச்சா? இனி மேகம் தொட்டு விடும் தூரம்தான். க்ளவுட் கம்ப்யூட்டிங்கை சொன்னேன். 🙂

 13. SARAVANAN.M

  அன்புள்ள பாரா,
  வணக்கம்,நலம் அறிய ஆவல்.
  திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட செல்டெக்ஸ் சோர்ஸ் ஃபைலை எனக்கு அனுப்பி தர வேண்டுகிறேன்.

  நன்றி,
  பேரன்பு,

  சரவணன்

Leave a Reply

Your email address will not be published.