அல் காயிதா தொடங்கி மத்தியக் கிழக்கின் அனைத்துப் போராளி இயக்கங்கள், தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் எழுதி முடித்து, இனி அங்கே வேறு யாரும் இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட தருணத்தில் ஐஎஸ் (என்று இன்று அழைக்கப்படுகிற ஐ.எஸ்.ஐ.எஸ்) பிறந்தது.
இராக்கில் ஐஎஸ் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய 2003ம் ஆண்டு முதல் அந்த இயக்கத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவ்வப்போது சிறு குறிப்புகளாக எழுதி வைப்பேன். ஒரு புத்தகமாக இது வடிவம் பெற இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.
இப்போதுகூட இரண்டு பேரின் தொடர் வற்புறுத்தல்கள் இல்லாவிட்டால் இதனை எழுதியிருப்பேனா என்று தெரியவில்லை. ஒருவர், என் மனைவி. இரண்டாமவர் நண்பர் ஹரன் பிரசன்னா.
முதலில் ஒரு பத்திரிகைத் தொடராகவே இதனை எழுத எண்ணினேன். ஆனால் அந்த வடிவம் இதற்குப் பிடிபடவில்லை. ஐஎஸ் ஒரு முகமற்ற அமைப்பு. அல்லது எண்ணிலடங்கா முகங்கள் கொண்ட அமைப்பு. இன்றுவரை இந்த அமைப்பின் உள் கட்டுமானம் பற்றிய சரியான, முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை. ஒரு தலைமை இருப்பது தெரியுமே தவிர, அவருக்குச் சில கமாண்டர்கள் உதவி புரிவது தெரியுமே தவிர, அதன் நிர்வாக அடுக்குப் புதிர்கள் விடுவிக்கப்படவில்லை. முதன்மைக் கதாபாத்திரங்களாக ஒரு சிலரையேனும் உலவ அனுமதிக்காத ஒன்றைத் தொடராக எழுதுவதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம். தவிரவும் சித்தாந்தப் பின்புலம் ஏதுமற்ற ஒரு வெற்று தடாலடிக் கூட்டத்துக்குக் கதாநாயக அந்தஸ்து தர எனக்கு விருப்பமில்லை. எனவே இப்போது இது நேரடி நூலாக வெளிவருகிறது. அந்த அமைப்பின் மூர்க்க சுபாவமே இந்நூலின் முகமும் மையமும் ஆகும்.
இந்தத் துறையில் என்னை ஒரு நிரந்தர ஆய்வு மாணவனாக்கி, தொடர்ந்து செயல்பட வைத்துக்கொண்டிருக்கும் என் ஆசிரியர் திரு இளங்கோவனை எப்போதும்போல் இப்போதும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.
சூறைக் காற்று சுழன்றடித்து, பெரும்புயலாக உருக்கொண்ட வர்தா, சென்னை நகரில் ஒரு பேயாட்டம் ஆடிச் சென்ற டிசம்பர் 12ம் தேதி காலை ஒன்பது மணிக்கு இதன் இறுதி வடிவை எழுத ஆரம்பித்தேன். சரியாகப் பத்து தினங்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தது பதினைந்து மணி நேரம் எழுதி இதனை நிறைவு செய்தேன். இந்நாள்களில் என்னை இன்குபேட்டரில் வைத்த குழந்தையைப் போல் கருதி கவனித்துக்கொண்ட என் மனைவிக்கும் மகளுக்கும் என் நிரந்தர அன்பு.
பா. ராகவன்
22 டிசம்பர் 2016