நகைச்சுவை

நான் கேசரி சாப்பிட்ட கதை

சிக்கல். பெரும் சிக்கல்.

ஒரு புருஷனாகப்பட்டவன் சமைக்கத் தெரிந்தவனாயிருக்க வேண்டுமென்று விரும்புவது ஒரு பெண்ணாதிக்க மனோபாவம் என்பது பெரும்பான்மை மற்றும் மிச்சமிருக்கும் சிறுபான்மைப் பெண்களுக்குத் தெரிவதேயில்லை. இந்த அறியாமைக்கு உரம் போட்டு வளர்ப்பதில் சில பெண்ணியச் சார்பு ஆண்கள் அதிதீவிர ஆர்வம் காட்டுவது இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய அவலம்.

நான் வசிக்கும் அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட்டின் கீழ்தளக்காரரின் மனைவிக்கு நேற்று பிறந்த நாள். மனிதர் மனைவிக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, நல்லதாக ஒரு பட்டுப் புடைவை எடுத்துக் கொடுத்துவிட்டுப் போகவேண்டியதுதானே? ஒரு சினிமா அல்லது பீச் அல்லது வேறெங்காவது அழைத்துச் சென்றாலும் தப்பில்லை.

அதையெல்லாம் விட்டுவிட்டு அந்த உத்தமோத்தமர் ஒரு காரியம் செய்தார். அதிகாலை அவரது மனைவி எழுமுன்னர் அவர் எழுந்து பரபரவென்று குளித்து முழுகி, அடுப்பை மூட்டி சமைக்கத் தொடங்கியிருக்கிறார்.

முன்பசிக்கு இட்லி, சட்னி, முழுப் பசிக்கு சாதம், பூசனிக்காய் சாம்பார், ரசம், கத்திரிக்காய் ரசவாங்கி, பத்தாத குறைக்கு மனைவி பிறந்த நாள் மிக ஸ்பெஷலாக ஒரு கேசரி.

விஷயம் கேள்விப்பட்டு மிரண்டு போய்விட்டேன். எனக்குத் தெரிந்து இந்த சாம்பார், ரசம், ரசவாங்கி, கேசரி வகையறாக்கள் எல்லாம் சாப்பிடும் ஐட்டங்கள் மட்டுமே. அவற்றை சமைக்கும் ஐட்டங்களாக அவர் எனக்கு மறு அறிமுகம் செய்யப் பார்த்ததில் சற்றே கலவரமாகிவிட்டேன்.

இது ஏதடா வம்பாப் போச்சே என்று நகரப் பார்த்தால் விதி யாரை விட்டது? கீழ்தளக்காரர் ஒரு கம்யூனிஸ்ட் என்றாலும் மிகவும் நல்லவர். எனக்கு நெருங்கிய நண்பராகவும் ஆகிவிட்டவர். எனக்கு கேசரி பிடிக்கும் என்பதை எப்படியோ தெரிந்துகொண்டு ஒரு கப்பில் என் மனைவியிடம் கொடுத்தனுப்பியிருந்தார்.

சிக்கலே அப்போது ஆரம்பித்ததுதான். நான் அதைச் சாப்பிட்டு முடிக்கும்வரை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த எனது அதர்ம பத்தினியானவர், ‘இது அவரே பண்ணின கேசரி.’ என்றார்.

ஒன்றுமே தெரியாதவன் போல, ‘ஓ, அப்படியா? பரவாயில்லை. நன்றாகத்தான் செய்திருக்கிறார்’ என்றேன். ‘ஒய்ஃப் பர்த்டேன்னா எப்படியெல்லாம் செலிபரேட் பண்றாங்க பாரு’ என்று அடுத்த கல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு வந்து விழுந்தது.

இதை இப்படியே விட்டால் ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதலாக உருமாற்றம் கண்டுவிடும் அபாயம் உள்ளதைத் தெரிந்துகொண்டேன். எனவே திடீர் சத்தியாவேசம் கொண்டு, ‘என்றாவது ஒரு நாள் நானும் சமைக்கக் கற்றுக்கொண்டு உனக்கு ரசவாங்கி சமைத்துத் தருகிறேன்’ என்று சொல்லிப் பார்த்தேன்.

‘கிழிச்ச. முதல்ல ரசம் வெக்கக் கத்துக்கறியா பாரு. அப்பறம் ரசவாங்கிய பத்தி யோசிக்கலாம்’ என்றுவிட்டாள்.

அதுவரை ஐந்தரை அடி உயரமாயிருந்தவன் அவமானத்தில் இரண்டடியாகச் சுருங்கி அமர்ந்துவிட்டேன்.

எனக்கும் கொஞ்சம் சமைக்கத் தெரியும். வென்னீர் வைப்பேன். ஒரு ஆழாக்கு அரிசிக்கு மூணு தம்ளர் தண்ணீர் சேர்த்து சாதம் வைப்பேன். சுமாராகக் காப்பி போடுவேன். இந்த சாம்பார், ரசம், பொறியல் வகையறாக்கள்தான் பேஜார். பாதகமில்லை. காலக்கிரமத்தில் நானும் கீழ்தளக்கார கம்யூனிஸ்டு நண்பரைப் போல் கத்திரிக்காய் ரசவாங்கி மற்றும் கேசரி அளவில் மேற்படிப்பு படித்தால் போயிற்று. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா.

ஆனாலும் அந்த கேசரி என்னை என்னவோ செய்தது. மனைவி எதிரிலாவது சாப்பிடாமல் இருந்திருக்கலாம் என்று சாப்பிட்ட பிறகு தோன்றியது. கடும் கோபம் ஏற்பட்டது.
விறுவிறுவென்று கீழே போனேன்.

கீழ்தளக்கார கம்யூனிஸ்டு நண்பர் வாசலிலேயே ரெடியாக நின்றிருந்தார். அநேகமாக எங்களுக்கிடையே நிகழ்ந்த அன்புச் சொல் பரிமாற்றங்கள் அவர் காதில் விழுந்திருக்க வேண்டும். ஒரு கேசரியில் என்னை காலி பண்ணிவிட்ட உத்தமோத்தமர். நல்லது.

‘நல்லா இருந்ததா சார்?’ என்று அன்புடன் கேட்டார்.

‘ஓ, சூப்பர் சார். நீங்கள் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தாலு காவி கலரில் இனிப்பு செய்துதான் உங்கள் மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாடவேண்டியிருக்கிறது பாருங்கள்!’ என்று சொல்லிவிட்டு ஓடியே போய்விட்டேன்.

பாவப்பட்ட பாரா இப்படியாகப் பழிதீர்த்துக்கொண்டான்.

Share

2 Comments

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி