பல வருடங்களுக்கு முன்பு குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் உணவின் வரலாறை ஒரு தொடராக எழுதினேன். மனிதன் முதல் முதலில் தேனை ருசித்துப் பார்த்த காலம் முதல் நவீன மனிதன் பீட்ஸா, பர்க்கரிடம் சரணடைந்த காலம் வரையிலான கதை. உணவைப் பற்றிப் பேச இவ்வளவு இருக்கிறதா என்று கேட்டார்கள். அந்தத் தொடர் கண்ட வெற்றி, பிறகு அது ஒரு தொலைக்காட்சி ஆவணப் படத் தொடராக மறு பிறப்பெடுக்க வழி செய்தது.
சென்ற வருடம் தி இந்துவின் ஆசிரியர் அசோகன் உணவைப் பற்றி எழுதியதுபோல ருசியைப் பற்றி எழுதலாம் என்று சொன்னார். இது எனக்கு மிகுந்த ஆர்வமளித்தது. ருசி என்பது நபருக்கு நபர் மாறுபடும் விஷயம். தவிரவும் அது உணவோடு சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை. அதைவிட முக்கியம், ருசியை நீங்கள் எவ்வாறு இனம் காண்பீர்கள்? உணர்வு என்று சொல்வீர்களா? விருப்பம் என்பீர்களா? அது குணத்தைச் சேர்ந்ததா? அதற்கு வடிவம் உண்டா? முகமோ மணமோ உண்டா?
ஆர்வமும் இச்சையும் சங்கமமாகும் ஒரு புள்ளியில் ருசி உருவாகிறது. அந்தப் புள்ளிக்குள் கோலம் போட்டுப் பார்க்கிற முயற்சியே இது.
நான் உணவைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். என் ருசியை முதன்மைப் படுத்தித்தான் பேசியிருக்கிறேன். ஆனால் இது அனைவருக்குமான ருசியின் மூலத்தைத் தொட்டுவிட்டதை இத்தொடருக்கு வந்த எதிர்வினைகள் எனக்கு உணர்த்தின. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இது வெளியானதும் குறைந்தது நூறு மின்னஞ்சல்கள் எனக்கு வந்தன. எத்தனை அபிப்பிராயங்கள், எவ்வளவு வியப்புகள், ஆர்வம் மேலிட்ட வினாக்கள், சொந்த அனுபவப் பகிர்வுகள்!
உண்பது மட்டுமல்ல. உணவைப் பற்றிப் பேசுவதும் ஒரு ருசிதான்.
நான் சுத்த சைவ உணவு மட்டுமே உண்பவன். அதிலும் எடைக் குறைப்பு என்ற காணத்தின்பேரில் என் உணவு முறையை திடீரென்று ஒருநாள் அடியோடு மாற்றிக்கொண்டவன். இந்தத் தொடரில் நான் பேசிய பல விஷயங்கள் வாசகர்களுக்கு முற்றிலும் புதியனவாக இருந்ததைக் கண்டேன். அவர்களது ஆர்வம் பல சந்தர்ப்பங்களில் அச்சம் கலந்த அதிர்ச்சியின் எல்லையைத் தொட்டதை அடிக்கடிக் கண்டேன்.
வெண்ணெய்யும் நெய்யும் பாதாமும் பனீருமாக நான் தின்று தீர்த்த கதைகளை வாசித்த ஒரு வாசகர், எனக்கு மாரடைப்பு வந்துவிடக் கூடாதென்று மருந்தீஸ்வரர் கோயிலில் வேண்டிக்கொண்டதாக எழுதிய அஞ்சலை என்னால் மறக்கவே முடியாது.
மிளகாய் ருசி குறித்து எழுதிய பத்துப் பதினைந்து நாள்களில் தற்செயலாக அலுவல் நிமித்தம் அஸ்ஸாமுக்குச் சென்ற ஒரு வாசகர், நான் குறிப்பிட்டிருந்த உலகின் அதி பயங்கரக் காரச்சுவை கொண்ட மிளகாயைப் பார்த்துவிட்டதாகவும், ஆர்வம் மேலிட்டு அதைத் தின்று பார்த்து இரண்டு மணி நேரம் கதறி அழுததாகவும் எழுதியிருந்தார்.
என்ன எழுதினாலும் கொழுப்பைத் தின்று எடையைக் குறைப்பது என்பதை மட்டும் பலரால் ஏற்கவும் ஜீரணிக்கவும் முடியாதிருந்ததையும் கண்டேன்.
நான் என்ன செய்ய இயலும்? எனக்கு நேர்ந்தவற்றை மட்டுமே நான் இத்தொடரில் எழுதினேன். நான் அனுபவித்தவற்றை மட்டுமே பகிர்ந்துகொண்டேன். முற்று முழுதாக இது என் தனிப்பட்ட ருசிகளைக் குறித்த பதிவு மட்டுமே. ஒரு நாளில் நான்கைந்து முறை உண்டுகொண்டிருந்த ஒரு மனிதன், காண்பதையெல்லாம் தின்று தீர்த்த ஒருவன், ஒரு வேளை உணவு மட்டும் இனி போதும் என்று அமைதி கொண்ட ஒரு வரலாற்றின் சில பக்கங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.
உண்பது ஒரு ருசியென்றால் உண்ணாதிருப்பதும் ருசிதான்.
தி இந்துவில் இத்தொடர் பெற்ற வெற்றியின் பின்னணியில் என்னைத் தவிர மூன்று பேர் உண்டு. நண்பர் அசோகன் அளித்த உற்சாகமும் உத்வேகமும் என்னால் மறக்கவே முடியாதது. வாரம்தோறும் இதன் முதல் வாசகராகவும் முதல் ரசிகராகவும் இருந்து நான் எண்ணிய விதத்தில் இது வெளிவரக் காரணமாயிருந்தவர் மானா பாஸ்கரன். ஒவ்வொரு வாரமும் என் கண்ணே பட்டுவிடும் அளவுக்கு என்னையே கதாபாத்திரமாக வைத்துக் கேலிச் சித்திரம் தீட்டிய வெங்கி.
இவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
– பாரா