இரண்டில் ஒன்று

நினைத்து ரசிப்பதற்கு ஏற்ற தருணங்களை வாழ்வின் இளமைப்போதுகள் எப்போதும் காப்பாற்றி வைக்கின்றன. மழைக்காலத்துக்கான உணவைக் கோடையில் சேமிக்கும் சிற்றெறும்பு போல. அப்படியொரு தருணம், துறவியாகலாம் என்று முடிவு செய்து நான் தாடி வளர்க்கத் தொடங்கியது.

நகர்ந்த தினங்களில் ராமா என்னும் இமாலய சுவாமி ஒருவரின் [இவர் துறவியல்ல. மனைவி மக்கள் உண்டு.] Living with the Himalayan Masters  எனும் புத்தகத்தை வாசிக்கையில் வரிக்கு வரி பழைய ஞாபகங்கள் எழுந்துவந்து முட்டிமோதத் தொடங்கிவிட்டன. [Himalayan Institute Press, Honesdale, Pennsylvania, USA / ISBN 0893891568]

நான் வாழ விரும்பிய வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார். கவலைகளற்றுக் கால் போன போக்கில் திரிதல். காட்டிலும் மேட்டிலும் இலக்கற்று அலைதல். பாதுகாப்புக்கு ஒரு குருநாதர். பசியெடுத்தால் படியளக்க ஜகன்மாதா. ஆபுத்திரன் கை அமுதசுரபி மாதிரி ஒரு பாத்திரத்தைக் கொடுத்துவிட்டுப் போகிற ஜகன்மாதா. எடுக்க எடுக்கக் குறையாமல் குழம்பு சாதமும் தயிர்சாதமும் உருளைக்கிழங்கு பொறியலும் எலுமிச்சை ஊறுகாயும் இன்னபிறவும்கூட வரும்போலிருக்கிறது அதில்.

பிரமிப்பு நீங்காமல் படித்துக்கொண்டிருந்தேன். எத்தனை விதமான சாதுக்களை, சன்னியாசிகளை, சுவாமிகளை அறிமுகப்படுத்துகிறார் இந்த மனிதர்! நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்குமிடையில் ஊசலாடவேண்டிய அவசியமே இல்லை. வெறும் தேவதைக் கதைகள் போலக்கூடப் படிக்கலாம். எப்போதும் உறங்காத யோகினி. நினைப்பதையெல்லாம் கண்டுபிடித்துச் சொல்லிவிடுகிற முனிவர்கள். பரீட்சை வைத்து பரீட்சைவைத்து நீ ஃபெயில் என்று முகத்திலடிக்கிற மகான்கள். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத சுவாமி ராமா.

சாதுக்களின் உலகில் பரம சொகுசாகவும் சுகக்குறைபாடுகள் இல்லாமலும் தனது இளமைக்காலத்தைக் கழித்ததைப் போகிறபோக்கில் சொல்லிக்கொண்டு போகிறார். உடைகள் மீதும் நகைகள் மீதும் பணத்தின் மீதும் உணவின்மீதும் அவர் கொண்டிருந்த விருப்பங்கள் குறித்து எழுதும்போது சற்றும் சலனமின்றி விவரிக்க முடிகிறது அவரால். எனக்குமேகூட துறவியாகிற எண்ணம் ஒரு தீப்பந்தாக உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்தபோது என்னால் பான்பராகை மட்டும் துறக்கமுடியாது என்று எப்போதும் ஒரு ஓரத்தில் தோன்றியபடியேதான் இருந்தது.

சுவாமி ராமாவுக்கு நிர்ப்பந்தங்கள் ஏதுமிருக்கவில்லை. நீ என்ன வேண்டுமானாலும் செய், எங்கு வேண்டுமானாலும் போ. எப்படி வேண்டுமானாலும் இரு என்று அவரது குருநாதர் (வங்காளி பாபா) லைசன்ஸ் கொடுத்துவிடுகிறார். எங்கு சென்றாலும் எந்தச் சிக்கலில் அகப்பட்டுக்கொண்டாலும் எப்படியோ வந்து காப்பாற்றியும் விடுகிறார்.

எனக்கோ, அவ்வாறான உத்தமோத்தம குருநாதர் யாரும் வாய்க்கிற பேறு இல்லை. குரு ப்ரம்மாவாகவும் குரு விஷ்ணுவாகவும் இருந்த எனது ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் மற்றும் இஞ்சினியரிங் மெக்கானிக்ஸ் பேராசிரியர்கள் நான் உருப்படமாட்டேன் என்று முத்திரைத் தாளில் எழுதித் தந்து கைகழுவிவிடத் தயாராக இருந்தார்கள்.

தேர்வில் அவசியம் தோல்வியுறப் போகிறேன் என்கிற கவலை ஒன்றுதான் என்னிடம் மேலோங்கி இருந்தது. என் முன்னால் இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தன. ஒன்று நான் துறவியாகவேண்டும். அல்லது ஒரு பேட்டை ரவுடி ஆகவேண்டும். இந்த இரண்டில் ஒன்றாக உருமாறினால்தான் என் தேர்வுத் தோல்வி வீட்டிலும் பிற இடங்களிலும் விவாதிக்கப்படும் பொருளாக இல்லாமல் விரைவில் காணாமல் போகக்கூடிய சாத்தியம் உண்டு.

என் அப்போதைய உயிர் நண்பனாக இருந்த மனோகரன் புண்டரீகாட்சன், என்னால் கண்டிப்பாக ஒரு ரவுடி ஆகமுடியாது என்று அடித்துச் சொன்னான். டேய், நீ ஒரு தயிர்சாதம். நீ ரவுடி ஆனா குண்டு கல்யாணம் வில்லன் வேஷம் போட்டமாதிரி இருக்கும்.

எனக்குமே அந்தச் சந்தேகம் இருந்தது. ஒரு ரவுடிக்குரிய மனநிலையை என்னால் வரவழைத்துக்கொண்டுவிட முடியும். ஆனால் வெளித்தோற்றத்தில் எப்படிக் காட்டுவது? குறைந்தபட்சம் பல்லிடுக்கில் ஒரு பீடியைக் கடித்தபடி, கழுத்தில் கர்ச்சிப் சுற்றி என்னால் என் வீட்டுப் படியேற முடியாது. ஒரு அவசர ஆத்திரத்துக்கு இரண்டு சோடா பாட்டில்களை வீசக் கைகூடாது. கேவலம் இரண்டு அடிகள் தாங்குமா இந்தத் தூலசரீரம்? வீதி நாய்க்கு பயந்து பயேப்ய ஸ்த்ராகிணே தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே என்று உருப்போடும் வழக்கத்தை ஒழிக்க முடிந்ததில்லை அதுகாறும். பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சர்க்கஸ் யானைபோல் நடனமாடிக்கொண்டிருந்திருக்கிறேன் என்பது முதல்முதலாக அப்போது புரிந்தது.

எனவே முடிவு செய்தேன். துறவியாகிவிடலாம். யாருக்கும் நஷ்டமில்லை. எனக்கும் சங்கடமேதுமில்லை. தேர்வுத் தோல்விக்கு மெய்ஞான நாட்டத்தைக் காரணமாக அவர்கள் புரிந்துகொள்ளட்டும். நான் துறவி. வாய் திறக்கப் போவதில்லை. என் மௌனத்துக்குள் பொதிந்திருக்கும் பல்வேறு பேருண்மைகளை என் பெற்றோரும் மற்றோரும் உணரக் கடவர்.

அந்தத் தேர்வு விடுமுறைக் காலம் முழுதும் இந்த எண்ணம் மட்டுமே அலைக்கழித்துக்கொண்டிருந்தது. சானடோரியம் மலையின் மீதேறி, அங்கிருக்கும் நீர் வழங்குத் தொட்டியின் நிழலில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருப்பது வழக்கம். அப்படி யோசித்த காலத்தில் வாசித்திருந்தால்கூட அடுத்த அக்டோபரில் அனைத்தையும் முடித்திருக்க முடியும். மாறாக ஒரு பரீட்சார்த்த முயற்சியாக யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் திருப்பதிக்கு பஸ் ஏறிப் போனேன். இரண்டு தினங்கள். இலவச தரிசனம். இலவச உணவு.

அடடே இது அருமையாக இருக்கிறதே. எதிர்காலம் ஒளிமயமாகவே உள்ளது. பேசாமல் திருப்பதிக்கே வந்து சன்னியாசி ஆகிவிட்டால் என்ன?

இரவு படுத்து உறங்கிய மண்டபத்தில் நல்ல குளிர்ப் பொழுதில் யாரோ எழுப்பிவிட்டார்கள். அன்னக்காவடிகளின் வசிப்பிடத்தில் கூட என்னை அனுமதிப்பதற்கில்லை. யார் நீ? யாரைக்கேட்டு இங்கு வந்து படுத்தாய்? இது என் இடம்.

எழுந்துபோய் கோபுரத்துக்கு நேரெதிரே படிக்கட்டில் அமர்ந்துகொண்டேன். இன்னும் சில நிமிடங்களோ, சில மணிகளோ. எப்படியும் எம்பெருமான் வானம் பிளந்து வெளிப்பட்டு எனக்கு தரிசனம் கொடுத்துவிடவே போகிறான். ஆழ்வார்களுக்கும் ஆசார்யர்களுக்கும் அடியார் வேறு பலருக்கும் அடியெடுத்துக் கொடுத்தவன் எப்படி என்னை மட்டும் விட்டுவிட முடியும்? நானும் ஓர் அடியார். நாலரை அடியார்.

காத்திருந்து கொட்டாவி வந்தது. எம்பெருமான் வரக்காணோம். விடிகிற பொழுதில் குளித்து முழுகி, பளிச்சென்று திருமண் இட்டுக்கொண்டு சின்ன ஜீயர் தமது சிஷ்யகோடிகளுடன் கோயிலுக்கு வந்தார். அவரது கோஷ்டியுடன் உள்ளே செல்ல முயன்று காவலாளியால் தடுக்கப்பட்டேன்.

ஏப்பா, நீயெல்லாம் இவங்களோட உள்ள போகக்கூடாது. போய் ஸ்ரீவாரி க்யூவில் நில்லு.

எம்பெருமான் என்னை ஏமாற்றிவிட்ட கோபத்தில் பஸ்ஸேறி திரும்பவும் வீடு வந்து சேர்ந்தேன். சிலநாள் தீவிர நாத்திக மனோபாவம் ஆட்கொண்டிருந்தது. கடவுள் பொய். ஞானம் பொய். வரம் பொய். தவம் பொய். அதிகாரம் மட்டுமே மெய். அது வசப்படுகிறவரே இந்த உலகில் சௌக்கியமாக வாழ இயலும்.

ஒரு வாய்ச்சவடால் அதிகாரத்துக்கும் லாயக்கில்லாத என்னால் கண்டிப்பாக ரவுடி ஆகிவிட முடியாது. துறவியாவதில் இனி விருப்பம் இல்லை. இரண்டு நாள் வீட்டைவிட்டு வெளியே இருந்ததிலேயே உள்ளுக்குள் ஏக்கமும் சுயபச்சாதாபமும் படர்ந்துவிட்டது. இதென்ன ஜென்மம்? எதற்கும் லாயக்கில்லாத ஜென்மம். தரும உணவின் காரம்கூடப் பொறுக்க முடியவில்லை. எப்படி இந்தக் குழம்பைக் குடித்து திருப்பதியில் ஜீவித்திருக்கமுடியும்? தவிரவும் குளிர் கொல்லுகிறது. ஒதுங்கிய பாழ்மண்டபத்திலும் இட ஒதுக்கீடு அமலில் உள்ளது.

ம்ஹும். இதுவல்ல. எதுவும் சரிப்படாது. பல்லைக் கடித்துக்கொண்டு ரிசல்டுக்குக் காத்திருந்தேன்.

அத்தனை மோசமில்லை. ஒன்றிரண்டு பாடங்களில் தேறியும் இருந்தேன். தொடர்ந்து கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கலாம் என்று உள்ளுக்குள் உட்கார்ந்துகொண்டு பரமாத்மா குரல் கொடுத்தான். துறவி ஆவதா, ரவுடி ஆவதா என்கிற விஷயத்தில் மட்டும் மௌனம் மட்டுமே அவனுடைய பதிலாக இருந்தது.

வெறுப்புடன் வருடங்களைக் கழித்துவிட்டு, பின்னால் ஒரு வேகத்தில் இதையே ஒரு கதையாக எழுதி கல்கிக்கு அனுப்பிவைத்தேன்.

துறவியோ, ரவுடியோ. எப்படியும் உருப்படுவதில்லை என்று முடிவு செய்துவிட்டாய். ஒழி, போ. பத்திரிகையில் சேர் என்று அப்போது அவன் குரல் கேட்டது.

வளர்த்த தாடியை வழித்துவிட்டுப் போய்ச் சேர்ந்தேன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter