அன்பு பா.ரா.
சற்றுமுன் யதி நாவலை வாசித்துமுடித்தேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை. சமீபகாலத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த நூல் இது. அலைதலும் அறிதலும் அமர்தலும் என்று சுற்றிபின்னப்பட்ட நடையில் மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தியது இந்த நாவலின் நடை.
இந்த நாவல் அமைக்கப்பட்ட முறையும் மிக வித்தியாசமான முறையில் இருந்தது. நமது மரபின் ஞானத்தை எளிய முறையில் அதில் பரிட்சியம் இல்லாதவர்களுக்கும் புரியும் வகையில் இருந்தது. இதில் மிக முக்கியமாக கூறவேண்டியது துறவிகளின் அம்மா. நான் வாசித்த நாவல்களில் மிகச்சிறந்த அம்மா இவள்தான். கார்க்கியின் தாயைவிட தி.ஜா.வின் அம்மா வந்தாளை விட இந்த நாவலின் அம்மா உயர்ந்தவள். இந்த அம்மா தான் இந்த நாவலின் உயிர். அவளின் புன்னகை ஒன்று போதும் அவள் உயர்ந்துநிற்க. பூர்ணத்துவம் அடைந்தவள்.
வாசித்து முடித்ததும் நான் அடைந்த மகிழ்ச்சியை பரவசத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. யதியிலிருந்து எனக்குப்பிடித்த வரிகளை தனியே குறித்து எடுத்து வைத்துள்ளேன். என் வாழ்வின் இன்னல்களிலும் சிடுக்குகளிலும் இருந்து என்னை கடைத்தேற்றி ஒளியேற்றும் ஒரு மகத்தான படைப்பாக இருக்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. யதியை வாசித்து முடித்தும் எனக்கு இந்த வரிகள் மீண்டும் மீண்டும் என ஒலிக்கிறது.
பூரணத்துவத்துக்காக அலைவது வீண். இந்த உலகில் எதுவும் பூரணமடைந்ததல்ல. எச்சங்களில் இருந்து கற்றுக்கொள்வதே நமக்கு விதித்தது.
எவ்வளவு உண்மை அனுபவ வரிகள் இது. இந்த ஒரு வரி போதும் தியானிக்க. இப்படி இந்த நூலில் நிறைய உள்ளன. இவ்வளவு மகத்தான படைப்பை கொடுத்தமைக்கு மிக்க நன்றி பா.ரா.