எண்ணாதே, தின்னாதே!

நான் ஒரு காரியத்தில் இறங்குகிறேன் என்றால் ஒன்று அதை வெறித்தனமாக வேகத்தோடு செய்வேன். அல்லது இறங்கிய சூட்டில் கரை ஏறிவிடுவேன். வைத்துக்கொண்டு வழவழா கொழகொழாவாக மாரடிக்கிற கதையே கிடையாது. இன்று நேற்றல்ல. சிறு வயது முதலே இப்படித்தான்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் பேலியோ டயட்டுக்கு மாற முடிவு செய்தபோது அது குறித்து எக்கச்சக்கமாக முதலில் படித்தேன். தமிழில் சொற்பம்தான். பேலியோ குழுமத்தில் எழுதப்படுகிற குறிப்புகளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. நியாண்டர் செல்வனின் புத்தகம் ஒன்று இருந்தது. ஒரு மணி நேரத்தில் அதை முடித்துவிட்டேன். பிறகு அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த அறிவியல் குறிப்புகளைப் பல்வேறு வல்லுநர் சிகாமணிகளின் கட்டுரைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க ஒரு வாரம் ஆனது. பேலியோவுக்கு முந்தைய எடைக்குறைப்பு உணவு முறைகளைப் பற்றியும் அவற்றின் லாப நஷ்டங்களைப் பற்றியும் அறியவேண்டி மேலும் சிறிது படித்தேன்.

என்னால் ஓரளவுக்கு மேல் அறிவியலுக்கு உள்ளே போக முடியாது. என் மன அமைப்பு அப்படி. மேலோட்டமான கவனிப்பில் சற்றேனும் சரக்கு உள்ளே இறங்கினால் மட்டுமே மேற்கொண்டு நாலு வரி படிப்பேன். இல்லாவிட்டால் எப்பேர்ப்பட்ட அமர காவியமானாலும் தூக்கி வைத்துவிடுவதே வழக்கம்.

பேலியோ டயட்டில் அடிப்படையாக என்னைக் கவர்ந்த அம்சம் ஒன்றுதான். அது புரிந்துகொள்ள எளிதாக இருந்தது. ஒரு பெட் ரோல் வண்டிக்கும் டீசல் வண்டிக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கி, எந்த எரிபொருளில் வண்டி ஓடலாம் என்று கேட்ட விதம் எனக்குப் பிடித்திருந்தது. எனக்கு எடை குறைத்தாக வேண்டும். எனவே இது நமக்குச் சரியாக வரும் என்று முடிவு செய்து இறங்கினேன்.

அரிசிச் சோறு இல்லாமல் நம்மால் முடியாது, இனிப்பில்லாமல் உன்னால் சத்தியமாக வாழமுடியாது என்று எத்தனையோ பேர் என்னென்னவோ சொல்லிவிட்டார்கள். அனைவருமே எனது அன்பர்களும் நண்பர்களும்தான். என்னை அறிந்தவர்களும்கூட. ஆனால் அவர்கள் அறியாத ஒன்றுண்டு. அது எனது தீர்மான சுபாவம். ஒன்று வேண்டாம் என்று முடிவு செய்தால் என்றைக்குமே எனக்கு அது வேண்டாம்தான். பன்னீர் செல்வம் கட்சிக்கும் சசிகலா கட்சிக்கும் இடையே ஊசலாடுகிற விவகாரமெல்லாம் கிடையாது.

இதனால்தான் பேலியோ தொடங்கிய நாள்முதல் ஒருநாள்கூட என் உணவு முறையை மாற்றவேயில்லை. ஆசைக்காகக் கூட ஒருநாள் அரிசிச் சோறு உண்ணவில்லை. எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகையை எண்ணிப் பார்க்கக்கூட இல்லை. இடையே சில பண்டிகைகளும் பல குடும்ப விசேஷங்களும் வந்தபோதும் உணவில் சமரசம் செய்யவில்லை. பொங்கலன்று சாஸ்திரத்துக்கு அரை ஸ்பூன் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டதுடன் சரி.

கடந்த டிசம்பர் 12ம் தேதி ஒருநாள் மட்டும் திட்டமிட்டு சீட்டிங் செய்யலாம் என்று முடிவு செய்தேன். அன்று மூன்று மசால்தோசை சாப்பிட்டேன். ‘கார்ப் ஷாக்’ என்று இதனைக் குறிப்பிடுவார்கள். உடல் கொழுப்பில் இயங்கிக்கொண்டிருக்கும்போது சட்டென்று ஒருவேளை அதனை மாற்றி கார்போஹைடிரேட் நிறைந்த உணவை அளிப்பதன்மூலம் தேக நிர்வாகத்தில் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணுவது. அதன்மூலம் காணாதது கண்டாற்போல ஒரு பசி வரும். அந்தப் பசியைச் சகித்துக்கொண்டு வாரியர் விரதம் இருந்து, சட்டென மீண்டும் கொழுப்புணவுக்கு மாறினால் மேலும் எடை குறையும் என்று ஒரு தியரி.

இதனை முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஒரு வாரம் திட்டமிட்டு டிசம்பர் 12ம் தேதியென நாள் குறித்திருந்தேன். துரதிருஷ்டவசமாக அன்று சென்னையைப் புயல் தாக்கியது. மின்சாரம் இல்லாமல், பிற அடிப்படை வசதிகள் அனைத்தும் குலைந்து போனது. இருந்தாலும் விடாமல் மூன்று மசால் தோசைகளைச் சாப்பிட்டு, நினைத்ததை முடித்தேன்.

ஆனால் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. ஏனெனில் கார்ப் ஷாக்குக்கு முன்னும் பின்னும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளை என்னால் அச்சமயம் கடைப்பிடிக்க முடியவில்லை. ISIS புத்தகப் பணி என் நேரத்தைத் தின்றுகொண்டிருந்த சமயம். கிட்டத்தட்ட பதினெட்டு மணி நேரம் எழுதிக்கொண்டிருந்த தினங்கள் அவை. எனவே உண்ணாவிரதம் இருப்பது சிக்கலாக இருந்தது. இக்காரணங்களால் எனது கார்ப் ஷாக் நடவடிக்கை தோல்வி கண்டது.

சரி போ என்று விட்டுவிட்டேன். மீண்டும் அதை முயற்சி செய்து பார்க்கவில்லை. ஆனால் ஆசை இருந்தது. பல நண்பர்களிடம் கார்ப் ஷாக் குறித்து அவ்வப்போது விசாரித்துக்கொண்டிருந்தேன். செய்யலாம், தப்பில்லை என்றே பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். ஆனால் நியாண்டர் செல்வன் வேண்டாம் என்றார். தாம் ஒருநாளும் அதை முயற்சி செய்து பார்த்ததில்லை என்று அவர் சொன்னது என்னைச் சற்று நிதானப்பட வைத்தது.

நூற்றுப் பதினொரு கிலோ எடையில் இருந்தவன் நான். பிரமாதமான பிரயத்தனங்கள் ஏதுமின்றி, வெறும் உணவு முறை மாற்றத்தாலேயே இருபத்தி மூன்று கிலோ குறைந்துவிட்டது. ஆரம்ப எடைக்குறைப்பு வேகம் மட்டுப்பட்டுவிட்டதுதான். ஆனாலும் குறையாமல் இல்லை. இனியும் அதிவேகமாக அதிரூப அழகுசுந்தரனாகி என்ன சாதிக்கப் போகிறேன்? இருபது வருஷங்களுக்கு முன்னர் கல்யாணம் கூட ஆகிவிட்டது.

எனவே இந்த கார்ப் ஷாக் வைத்தியம் வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

கடந்த வாரம் வீட்டில் தை வெள்ளி நிமித்தம் திருக்கண்ணமுது (இதன் மிக எளிய வடிவமே பாயசம் எனப்படும்) தளிகையானது. ஏகப்பட்ட முந்திரி பாதாம் வகையறாக்களை நெய்யில் வறுத்துப் போட்டு என் மனைவி உக்கிரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். (இத்தனைக்கும் அவரும் பேலியோவில் இருப்பவர். இதெல்லாம் மகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் மட்டுமே.) சமைத்துக்கொண்டிருந்தபோதே எனக்கு அது பிராணாவஸ்தை அளித்துக்கொண்டிருந்தது. எங்கே என் விரதம் கலைந்துவிடுமோ என்று அஞ்சினேன். கடந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக அப்படியொரு அச்சம் வந்தது.

சும்மா ஒரு வாய் டேஸ்ட் செய்தால் தப்பில்லை என்று என்முன் ஒரு கரண்டி நீட்டப்பட்டது. ஒரு கரண்டிதானே என்று நானும் ருசித்து வைத்தேன்.

பிடித்தது சனி. அன்றுமுதல் தினசரி மதிய உறக்கத்தில் பாயசக் கனவாகவே வந்து தொலைக்கிறது. என் வீட்டுக்குப் பக்கத்தில் ஓர் இனிப்புக் கடையின் சமையல் கூடம் உள்ளது. தினமும் அங்கிருந்து விதவிதமான வாசனை காற்றில் ஏறி வரும். கடந்த பல மாதங்களாக என் நாசியைச் சீண்டாதிருந்த அந்த வாசனையெல்லாம் இப்போது சேர்த்துவைத்துத் தாக்கிக்கொண்டிருக்கின்றன.

இன்றுகாலை ஜெயமோகனின் பழம்பொரியை வாசித்துத் தொலைத்தது இன்னும் பெரிய இம்சை. படத்தைவேறு போட்டுத் தொலைத்திருக்கிறார். பார்க்கும்போதே மணக்கிறது அது.

எல்லாம் அந்த ஒரு கரண்டி பாயசம் ஆரம்பித்துவைத்த உபத்திரவம். 130க்கு மேல் இருந்த சர்க்கரை எண் 88ல் வந்து திடகாத்திரமாக நிற்பதை அடிக்கடி எண்ணி எண்ணி ஆற்றுப்படுத்திக்கொள்கிறேன்.

மனிதனால் அரிசியை வெல்ல முடியும். சர்க்கரையை வெல்வது அத்தனை சுலபமல்ல போலிருக்கிறது. இந்தக் கணம் என் அப்பாவை எண்ணிக்கொள்கிறேன். அவர் பன்னெடுங்கால சர்க்கரை மனிதர். ஆனால் நாற்பது வருடங்களுக்கும் மேலாக இனிப்பையே தொடாதிருப்பவர். அந்த மனத்திடம் அபாரமானது. எளிதில் யாருக்கும் வசப்படாதது.

என் அப்பாவின் சர்க்கரைச் சொத்து எனக்கு இல்லை. ஆனால் இந்த திட சித்தம் வந்து சேரவேண்டும். பழம்பொரியைக் கண்டபோது அதைத்தான் நினைத்துக்கொண்டேன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி