சாகசமின்றி தப்பித்தல் இயலாது. தப்பிக்கும் முயற்சியில் உயிர் பிரிதலும் ஒரு வித தப்பித்தலே.
ஆயுதம் தந்த வலியும் வார்த்தை தந்த வேதனையும் , அவமானம் தந்த ஆக்ரோஷமும் பெற்ற சூனியன் தப்பிக்க தன்னையே ஆயுதமாக்கிக்கொள்வது வேறுவழியற்ற வாய்ப்பு.
பிசாசுகடைத்த பூகம்பச்சங்கு தாங்கி, நீலநகரத்தின் மீது மோத ஒப்புக்கொள்வது தப்ப வாய்ப்புள்ள ஒரே முயற்சி.
சுயநலமென்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, சூனியர்களுக்கும் உண்டென்பதை இரு புறமும் நிரூபிக்கின்றன.
போதை- தளும்பிய நியாயக்கோமான்களும், மீகாமனும், ஏனைய தொண்டரடிப்பொடி சூனிய, பைசாசங்களும் விபத்திலிருந்து தங்களை காக்க சூனியனின் திட்டத்திற்கு ஏற்பு தெரிவித்தது சுயநலமெனில், தப்பிக்கும் வாய்ப்பாக தன்னை பலிகொடுக்க தானாக ஒப்புக்கொண்ட சூனியனும் சுயநலவாதியே.
நீலநகரத்தின் மீது சூனியன் மோதுவதும், நகரத்தை குடைந்து பூகம்ப சங்கு வெடிக்காமல் மறுபுறம் வந்ததும் சூனியன் பணி இனியே ஆரம்பம் என உணர்த்துகிறது. தான் எண்ணியபடி சூனிய குலத்தின் தலைவனாவானா? நியாயக்கோமான்களை தண்டிப்பானா? நீல நகரத்தில் அறிமுகமான மனிதன் யார். தன்னை சூறுக்கி அம்மனிதன் தலையிலேறி என்ன செய்யப்போகிறான்? அந்த நீலநகரம் ஓரு வேளை பூமியா?