பார்த்தசாரதிகளின் கதை [பாகம்1]

எனக்கு மூன்று பார்த்தசாரதிகளைத் தெரியும்.

ஒருவர் என் தந்தை. ஒருவர் என் நண்பர். இன்னொருவரின் நிறுவனத்தில் சில காலம் வேலை பார்த்திருக்கிறேன்.

இம்மூன்று பார்த்தசாரதிகளிடமும்  என்னை வியப்பிலாழ்த்திய ஓர் ஒற்றுமை, மூவரும் மிகப்பெரிய பர்ஃபெக்‌ஷனிஸ்டுகள். ஒழுங்கீனத்தை வாழ்வின் ஆதாரகதியாகக் கொண்டு வாழ்கிறவன் என்றபடியால் இவர்கள் மூவர் மீதான என்னுடைய மதிப்பும் மரியாதையும் அளவிடற்கரியது.

என் தந்தை பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்வைத் தொடங்கி, தலைமை ஆசிரியராக முப்பது வருடங்களுக்குமேல் பணியாற்றி, கல்வித்துறை இயக்குநரகத்தில் துணை இயக்குநராகி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற மாதத்தில் அவர் பெற்ற சம்பளம் ரூபாய் ஏழாயிரத்தி ஐந்நூறு என்று நினைவு. ஐயாயிரத்துக்குள் குடும்பச் செலவுகளை முடித்து, மிச்சத்தை சேமித்து, ஓய்வுக்குச் சரியாகச் சில மாதங்கள் முன்பு அரை கிரவுண்டு நிலத்தில் ஒரு சிறு வீடு கட்டி எங்களைக் கொண்டுவந்து போட்டு, இனி உங்கள் பாடு என்று உட்கார்ந்தவர்.

காலை தூங்கி எழுகிற நேரம் முதல், நடைப்பயிற்சி, உணவு உட்கொள்ளும் நேரம், அளவு தொடங்கி, போஸ்ட் கார்டில் திணிக்கக்கூடிய சொற்களின் அளவு வரை அனைத்திலும் திகட்டக்கூடிய அளவுக்கு ஒழுங்கு கடைபிடிப்பவர். பல் துலக்கும்போது இடதுபுறம் எத்தனை முறை பிரஷ் செய்வது, வலது புறம் எத்தனை முறை பிரஷ் செய்வது, மேல் பக்கம் எத்தனை முறை, கீழ்ப்பக்கம் எத்த்னை என்பதற்குக் கூடக் கணக்கு வைத்திருப்பார். வயது அவரை மாத்திரைகளில் ஜீவித்திருக்க வைத்துள்ளது. அதனாலென்ன? பல்லாங்குழிப் பலகை போல் தனது மாத்திரைகளுக்காகவே பிரத்தியேகமாகத் தனித்தனி அறைகள் கொண்ட ஒரு டப்பா வைத்திருக்கிறார். காலை உண்ணவேண்டியவை. மதிய உணவுக்குப் பிறகானவை. இரவு உணவுக்கு முன்னர் – பின்னர். திங்கள் தனி. செவ்வாய் தனி. புதன் தனி. வியாழன் தனி. வெள்ளி தனி. சனி தனி. பிரதி ஞாயிறு விடுமுறைகள் மாத்திரைகளுக்கில்லை.

அவரும் எழுதுவார். இன்னதுதான் என்றில்லை. சிறுகதை, நாவல், மரபுக்கவிதை, ஆன்மிகக் கட்டுரை, சிறுவர் பாடல், அறிவியல் கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்புகள் என்று விட்டுவைக்காத துறை ஏதுமில்லை. ஏதாவது செய்துகொண்டிருக்கவேண்டும் என்பது தவிர அவரது செயல்பாட்டுக்கு வேறு நோக்கம் என்னால் கண்டறிய முடிந்ததில்லை. சிறுவர் பாடல்களில் மட்டும் கொஞ்சம் ஆத்மார்த்த ஈடுபாடு உண்டு. ஆங்காங்கே கொஞ்சம் சந்தம் இடிக்கும். அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார். கோடு போட்ட தாளில் போதிய இடைவெளி விட்டு பளிச்சென்று பிழையில்லாமல் எழுதி, நாற்பத்தைந்து டிகிரிக்குச் சரியாக ஸ்டேப்ளரை வைத்து ஓரத்தில் பின் அடித்து, ஸ்கேல் வைத்து மூன்றாக மடித்து, கவரில் போட்டு, பிசிறின்றிப் பசை தடவி, அட்ரஸ் எழுதி, தானே கொண்டு போய்த் தபால் பெட்டியில் போட்டுவிட்டு வருவார்.

படைப்பு பிரசுரமாகிவிட்டால் ஒன்றுக்கு இரண்டு பிரதிகளாக வாங்கி, குறித்த பக்கத்தைச் சீராகப் பிரித்தெடுத்து தனியொரு நோட்டுப்புத்தகத்தில் ஒட்டி வைப்பது, புத்தகம் ஏதும் பிரசுரமானால் அதற்குக் கண்ணாடித் தாள் அட்டை போட்டு கண்ணில் படும்படி வரிசையாக வைப்பது, தப்பித்தவறி வாசகர் யாராவது வாழ்த்துக் கடிதம் எழுதிவிட்டால் அதை ஹஜ்ரத்பால் மசூதியில் பாதுகாக்கப்படும் முஹம்மத் நபியின் ரோமத்தைப் போல் பத்திரப்படுத்துவது என்று அவரது ஒழுங்கு சார்ந்த ஈடுபாடுகள் எல்லையற்றவை.

வீட்டிலும் குடும்பத்திலும் ஊரிலும் உலகிலும் எப்போது என்ன சம்பவம் முக்கியமாக நடைபெற்றாலும் தவறாமல் தனது டயரியில் குறித்து வைப்பார். தீபாவளி டிவி நிகழ்ச்சிகள் முதல் திபெத் கலவரங்கள் வரை. பேனா நிப் உடைந்தது முதல் பேனசிர் புட்டோ மறைந்தது வரை. 1956லிருந்து அவர் எழுதிய டயரிகள் இன்னும் உள்ளன வீட்டுப் பரணில். ‘DIL1 உடன் [என்றால் Daughter in Law 1 என்று பொருள்] மனஸ்தாபம். மனைவி கோபித்துக்கொண்டு கத்தியதில் BP ஏறிவிட்டது. டாக்டர் வீடு சென்று வந்தாள். தன்னைச் சாப்பிட்டாயா என்று கேட்காத வருத்தம். விட்டுக்கொடுத்தால் வம்பில்லை’ என்று செய்தியை நேரடியாகவும் தனது கருத்தை உள்ளுரைப் பொருளாகவும் சில வரிகளில் எழுதி வைப்பார். யார் விட்டுக்கொடுத்துப் போகவேண்டுமென்பது இன்னொரு விவாதப் பொருளாகுமென்பதையும் அவர் அறிவார்.

அப்பாவின் டயரி என்பது எங்கள் வீட்டைப் பொறுத்தவரை கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா போன்றது. யாரும் எப்போதும் எடுத்துப் படிக்கலாம். வீட்டில் ஒவ்வொருவரின் நடவடிக்கை பற்றியும் அவரது பதிவுகள் எங்களுக்கு எப்போதும் முக்கியமானவை. சமயத்தில் அவரது டயரிக்குறிப்புகளின் அருகிலேயே எங்கள் எதிர்க்கருத்துகளையும் [பின்னூட்டம் என்பது இணைய மரபுச் சொல்] எழுதிவைப்போம். இதனாலெல்லாம், அவர் தனக்கு மட்டும் புரியவேண்டிய ரகசிய அல்லது முக்கிய விஷயங்களை ஆங்கில லிபியில் ஹிந்தி மொழியிலோ, ஹிந்தி லிபியில் தமிழிலோ, அனைத்தையும் கலந்தோ எழுதுவது வழக்கம். அந்தக் குறிப்பிட்ட வரிகள் மட்டும் படிக்க முடியாமல் கோழிக்கிறுக்கலாக இருக்கும். அவகாசமும் ஆர்வமும் இருந்தால் அதை எடுத்து வைத்துக்கொண்டு ஸ்டிரக்சுரலிச அடிப்படையில் கட்டுடைப்பு செய்வதும் எங்களுக்குப் பிடித்தமான காரியமே.

சுவாரசியமான அந்தரங்க விஷயங்கள் ஏதுமில்லாமல் வெறும் செய்திகளுக்காகவே ஒரு மனிதர் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாக ஒருநாள் விடாமல் டயரி எழுதி வர முடியுமா என்றால் முடியும். ஆரம்பித்துவிட்ட ஒரு பழக்கம். இடையில் நிறுத்துவது ஒழுக்கமாகாது என்பது அவரது சித்தாந்தம்.

என்னைக் கல்லூரியில் சேர்த்த தினத்தில் ரூ. 153க்கு ஃபீஸ் கட்டியது முதல் நேற்றைக்கு பொதுப் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்று வர ஆன டாக்ஸி செலவு வரை அனைத்துக்கும் அவரிடம் கணக்குண்டு. ஆதாரங்கள் உண்டு. யார் கேட்கப்போகிறார்கள் என்பது முக்கியமில்லை. செலவு என்ற ஒன்றுக்குக் கணக்கு என்ற பின்னிணைப்பு அவரளவில் அத்தியாவசியமானது.

எல்லாவற்றிலும் ஒழுங்காக இருப்பது என்பது ஒரு கடினமான மனப்பயிற்சி. ஒரு காலத்தில் அதற்காக மிகவும் ஆசைப்பட்டிருக்கிறேன். என்னால் அது சாத்தியமில்லை என்பது தெரிந்துவிட்ட பிறகு, எனது ஒழுங்கீனங்களிலிருந்து ஒருபோதும் வழுவாமல் ஒழுங்காக இருந்தால் போதும் என்று முடிவு செய்துவிட்டேன்.

[தொடரும்]

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி