பார்த்தசாரதிகளின் கதை [பாகம்2]

குமுதம் பதிப்பாளர் அமரர் பார்த்தசாரதியுடன் எனக்கு நேரடி அனுபவங்கள் மிகவும் குறைவு. மூன்றாண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் அவருடனான என்னுடைய நினைவுகள் சொற்பமானவை. ஆனால் மிகவும் முக்கியமானவை.

நான் குமுதத்துக்குச் சென்ற காலத்தில் அவர் அநேகமாகத் தன்னுடைய பொறுப்புகளிலிருந்து மெல்ல மெல்ல விலகத் தொடங்கியிருந்தார். மாலைமதி  [மாத நாவல்]  மட்டும் அப்போதும் அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

சுமார் ஆறு மாத காலத்துக்கு மாலைமதி இதழை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கூடுதலாக எனக்கு அங்கே வழங்கப்பட்டிருந்தது. அப்போது அவரை நான் அறிய முடிந்தது.

‘நீங்கதான் புதுசா வந்திருக்கறவரா? சரி. நாளைக்குக் கார்த்தாலே பத்தே காலுக்கு என் ரூமுக்கு வாங்கோ. நான் என்ன எதிர்பார்ப்பேன்னு சொல்லிடறேன்’ என்று இண்டர்காமில் சொல்லிவிட்டு கட் பண்ணிவிட்டார்.

சென்றபோது, சட்டென்று அரைக்கணம் நேரத்தைப் பார்த்துவிட்டுத்தான், ‘வாங்கோ, உக்காருங்கோ’ என்று சொன்னார்.

‘மாலைமதி இப்போ சரியா இல்லேன்னு சொல்றா. எனக்கு வயசாயிடுத்து. முழுக்க பாக்க முடியல்லே. நீங்க படிச்சி செலக்ட் பண்ணி அனுப்பினா நான் ஒருபார்வை பார்த்துட்டுத் தருவேன். எவ்ரி சாட்டர்டே ஒரு நாவல் படிச்சி அனுப்பிடுவேன். அதுக்குமேல உங்கபாடு’ என்றார்.

சற்று இடைவெளிவிட்டு அவரே, ‘நீங்க கதை எழுதுவேளா?’

‘ஆமா சார்’

‘குட். படிப்பேளா? யார்து ரொம்பப் பிடிக்கும்?’

‘ஜானகிராமன், ராமாமிருதம் பிடிக்கும் சார். அப்பறம் அசோகமித்திரன். ஆனா தமிழ்ல எழுதற எல்லாருடையதையும் ஒண்ணாவது படிச்சிருப்பேன்.’

‘வெரி குட். ஆனா மாலைமதி ரீடரோட ஸ்டேண்டர்ட் வேற. அது தெரியுமில்லையா?’

‘தெரியும் சார்.’

‘தெரிஞ்சுட்டா போதும். விறுவிறுப்பா இருக்கணும். நிறைய திருப்பம் இருக்கணும். கண்டிப்பா லவ் இருக்கணும். செண்டிமெண்ட் வேணும். பேராகிராஃப் பெரிசு பெரிசா இருக்கக்கூடாது. கொலை கதைன்னா சஸ்பென்ஸ் கடைசிவரைக்கும் நிக்கணும். அவ்ளோதான். உங்களுக்கு நன்னா தலைப்பு வெக்க வருமோ?’

‘வரும் சார்.’

‘குட் குட். முதல்ல ஒரு நாலு நாவல் அனுப்புங்கோ, பாக்கறேன்.’

பத்து நிமிடம் பேசவேண்டும் என்று சொல்லியிருந்தார். சரியாகப் பத்து நிமிடம் ஆனதும் பேச்சை முடித்துவிட்டார்.

மறுவாரம் தொடங்கி, நான் படித்து, சரி செய்து, தேர்ந்தெடுத்த நாவல்களை அவருக்கு அனுப்பத் தொடங்கினேன். சொன்னதுபோல் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் மாலை ஐந்து மணிவாக்கில் தாம் படித்து முடித்த நாவலை அனுப்புவார். முதல் பக்கத்தில் சில வரிக் குறிப்புகள் எழுதுவார். நாவல் பற்றிய தனது அபிப்பிராயத்துடன் நூற்றுக்கு இத்தனை என்று மார்க்கும் போடுவார். சிலவற்றில் மோசம், சுமார், பரவாயில்லை, ஓகே, பிரமாதம், ஜோர் என்று சிறப்புக் குறிப்புகளும் காணக்கிடைக்கும். நாற்பது மார்க் அல்லது அதற்குமேல் என்றால் பிரசுரிக்கலாம் என்று அர்த்தம். அதற்குக் கீழே என்றால் கூடாது. இது அங்கே சட்டம்.

இதில் எனக்கு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அவருக்கு அனுப்பும்போதே நானும் மார்க் போட்டு வைத்துக்கொண்டுதான் அனுப்புவேன். இறுதிவரை ஒருமுறை கூட என்னுடைய மதிப்பெண்களும் அவருடைய மதிப்பெண்களும் ஒத்துப் போகவேயில்லை. கொஞ்சம் நாலடி தள்ளிக்கூடப் பொருந்தவில்லை. நான் நாற்பது மார்க் போட்ட நாவல்களுக்கு அவர் எழுபது போட்டார். நான் ஐம்பது கொடுத்தால் அவர் திராபை என்று எழுதி, திருப்பிவிடுவார். அவர் பிரமாதம் என்று குறித்து அனுப்பிய எதுவும் எனக்கு உவப்பானதாக இருக்கவில்லை.

ஒரு கட்டத்தில் விபரீதமாக ஒரு முடிவெடுத்து, ஒரே ஒரு நாவல் – மாலை மதிக்காக நானே எழுதினேன். என்னுடையது என்று சொல்லாமல் எல்லா நாவல்களைப் போலவும் அதையும் அவரது பரிசீலனைக்கு அனுப்பிவைத்தேன்.

மற்ற அனைத்து நாவல்களையும் எப்போதும்போல் இரண்டு நாள்களில் படித்து அனுப்பியவர், என்னுடைய நாவலை மட்டும் அனுப்பவேயில்லை. சில வாரங்கள் காத்திருந்து, பொறுமை இழந்து, நானே அதைப் பிரசுரித்தும் விட்டேன். என்னதான் சொல்கிறார் பார்ப்போமே என்கிற ஆவலுடன் அவரது கருத்துக்காகக் காத்திருந்தேன்.

இண்டர்காமில் கூப்பிட்டார். ‘நீங்க எழுதினதா இது?’

‘ஆமா சார்.’

‘நாட் பேட். நல்ல நாட் இருக்கு. ஸ்டைல் பிரமாதமா இருக்கு. ஆனா ஏன் எல்லாரும் மனசுக்குள்ள எதையாவது நினைச்சிண்டே இருக்கா எப்பவும்? வாயைத் திறந்து பேசினாத்தான் அது மாலைமதிக்கு சரிப்படும். மனசுக்குள்ள நினைச்சிண்டா போதாது. அது மட்டுமில்லாம, கதையிலே ட்விஸ்டே இல்லை. படிக்கறவன் புருவம் ஒசரவேணாமா?’ என்று சொன்னார்.

‘அப்பவே அனுப்பியிருப்பேன். தலைப்பு எனக்கு அவ்வளவா புரியலே. வேற என்ன தலைப்பு சஜஸ்ட் பண்ணலாம்னு யோசிச்சிண்டிருந்தேன். அதான் லேட்டாயிடுத்து.’

அந்த நெடுங்கதைக்கு நான் வைத்திருந்த தலைப்பு ‘குக்கூ’.

குமுதம் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் வேலை பார்க்கிறார்கள். ஆனாலும் தனது இறுதிக்காலம் வரை மாலைமதிக்கு அவர்தான் நாவல்கள் படித்துத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தார். லட்சக்கணக்கில் மாலைமதி விற்ற காலத்தில் அதற்கு அவரது தேர்வையே முக்கியக் காரணமாகச் சொல்லுவார்கள். புதிய எழுத்தாளர், பிரபல எழுத்தாளர் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்கவே மாட்டார். நாவல் தனக்குப் பிடித்தால் மட்டுமே எழுதியவர் யாரென்று பார்ப்பார்.

ஒரு சனிக்கிழமை மதிய உணவுக்குப் பிறகு திடீரென்று முடிவு செய்து, விலகிவிடலாம் என்று கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு நான் புறப்பட்டபோது, பப்ளிஷரைப் பார்த்து ஒருவார்த்தை சொல்லிவிட்டுக் கிளம்பலாம் என்று ஒரு கணம் நினைத்தேன்.

விசாரித்தபோது அன்றைக்கு அவர் அலுவலகம் வரவில்லை என்று சொன்னார்கள். ஆம். மறந்துபோனேன். சனிக்கிழமை. சரியாக ஐந்து மணிக்கு அவரிடமிருந்து அடுத்தவாரத்துக்கான நாவல் வரும்.

[தொடரும்]

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!