எத்தனையோ சங்குகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். பூகம்பச் சங்கு என்றொரு சங்கா? அது எப்படியிருக்கும்?அதன் பயன்பாடு என்ன? என்ற ஆவல் தலைப்பை வாசித்ததும் பற்றிக் கொள்கிறது. தன்னைப் பலிகொடுத்தலில் தான் தப்பித்தலுக்கான வழி இருக்கிறது என நம்பும் சூனியன் நீலநிற நகரத்தை அழிக்க தன்னை பயன்படுத்திக் கொள்ளும் படி சொல்கிறான். மரணக்கப்பலை அழிக்க கடவுள் அந்நகரை அனுப்பி இருக்கக்கூடும் என நினைக்கும் மீகாமன் சூனியனின் யோசனையை ஏற்கிறான். கொடுக்கப்பட்ட உத்தரவை மாற்ற வேண்டுமானால் அதற்கான உயர் அனுமதியை பெற வேண்டும் என்ற நடைமுறை சூனிய உலகத்திலும் இருக்கிறது! அதன்படி மீகாமன் நியாதிபதிகளிடம் அனுமதி பெறுகிறான்.
ஈர உப்பில் புரட்டியெடுத்த பிசாசு தோலினாலான கவச உடை (ஜாக்கெட்), அதைக் கட்ட இரண்டு மின்னல்கள், வெடிகுண்டாக பூகம்பச் சங்கு என தங்கள் உலக மனித வெடிகுண்டாய் சூனியனை தயார் செய்யும் விதமே ஒரு த்ரில்லர் காட்சி. அங்கும் கூட “இறுதி ஆசை” என்ன? என்றெல்லாம் கூட கேட்கிறார்கள்! வெடிகுண்டாய் மாற்றப்பட்ட சூனியனை நீலநிற நகரின் மீது மோதவைத்து அந்நகரோடு அவனையும் சிதறடிப்பது அவர்களின் திட்டம். அந்த எண்ணம் நிறைவேறியதா? என்பது மீதிக் கதை.
நீலநிற நகருக்குள் சூனியன் நுழைவதற்கு முன் எடுக்கும் சபதங்கள், தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காகச் செய்யும் முயற்சிகள், பெரிய அழிவிற்கு போர்க்களத்தில் பயன்படுத்தக் கூடிய பூகம்பச்சங்கை வாயால் கவ்வி செயலிழக்க வைப்பது ஆகிய காட்சிகள் நம்மூர் விஜயகாந்தின் சாகசங்களை நினைவு படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.
நீலநிற நகருக்குள் நுழைந்த சூனியன் என்னவானான்? மரணக் கப்பலின் கதி என்ன? என்ற கேள்வியோடு, காணாத உலகத்தின் காட்சிகளை ஹாலிவுட் பிரமாண்டமாய் மிரட்டிய பா.ரா. மனிதர்கள் வாழும் உலகத்தை எப்படி காட்சிப்படுத்தப் போகிறார் என்ற ஆவலும் சேர்ந்து அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்க வைக்கிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.