பொலிக! பொலிக! 01

 

விடியும் நேரம் அவர் சாரங்கபாணி கோயிலை நோக்கி விரைந்துகொண்டிருந்தார். குடந்தைத் திருநகரில் கோயில் கொண்ட பெருமாள். மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் மல்லாக்கப் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிற தலம் அது. எத்தனை தொன்மையானது! எத்தனை ஆழ்வாரால் பாடப்பெற்ற தலம்!

காட்டுமன்னார்கோயிலில் இருந்து குடந்தைக்கு வருகிற வழியிலெல்லாம் அவருக்கு வேறு நினைவே இல்லை. சார்ங்கமெனும் வில்லாண்ட பெருமானை தரிசிக்கப் போகிறோம் என்கிற நினைவே அவருக்குப் சகலத்தையும் மறக்கச் செய்துவிட்டது. அவரால் பசி, தூக்கம் போன்ற உணர்வுகளை மட்டுமல்ல; ஐம்புலன்களை மட்டுமல்ல; அதற்கும் மேலே சிந்தனைக் குதிரையையும் அடக்கி ஓரிடத்தில் நிறுத்தி வைக்க முடியும். தேவைப்பட்டால் அதை இல்லாமலேயே அடித்து வீழ்த்தவும் முடியும். அவர் ஒரு யோகி. மிகப் பெரிய யோகி. எட்டு அங்கங்கள் கொண்ட யோகக்கலையை முற்றிலும் பயின்றவர். அனைத்தினும் மேலாக பக்தி யோகத்தில் தன்னைக் கரைத்தவர்.

பட்டு விரித்துக் காட்டும் சேலை வியாபாரியின் லாகவத்தில் இயற்கை விரித்திருந்த அகண்ட பெரும் காவிரிக் கரையோரம் அவர் நடந்து கொண்டிருந்தபோது குடந்தையின் அழகு அவர் கண்ணில் படவில்லை. சலசலத்து ஓடும் நதியின் கரையெங்கும் விரிந்த வயல்வெளிகளும் அவற்றுக்கு அரண் போலச் சூழ்ந்து நின்ற தென்னையும் வாழையும் யாரையும் ஒரு கணம் நின்று நோக்கச் செய்யும். அவர் நிற்கவில்லை. பெருமானே! பெருமானே! என்று பரிதவித்து விரைந்துகொண்டிருந்தார்.

கோயிலை நெருங்கியபோது அவரது நடை மேலும் வேகம் கொண்டது. பாய்ந்து சென்று பெருமானைத் தூக்கி விழுங்கிவிடும் வேகம். அது கண்ணின் பசி. எண்ணமெங்கும் வியாபித்திருப்பவனை ஏந்தியெடுத்து நெஞ்சுக்குள் சீராடும் பேரழகுப் பசி. அவருக்கு வாயாரக் கொஞ்ச வேண்டும். நெக்குருகிப் பாடவேண்டும். பக்திப் பரவசத்தில் தன்னைக் கற்பூரமாக்கிக் கரைத்துக் காணாமல் செய்துவிட வேண்டும்.

ஆனால் மொழி தோற்கடித்துவிடுகிறது. பெருமானே! பெருமானே! என்று கதறுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடிவதில்லை. ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்களாமே? அது மொத்தம் நாலாயிரமாமே? ஒவ்வொரு வரியிலும் உயிரைச் சேமித்து வைத்திருக்கிறார்களாமே? எல்லாம் சொல்லக் கேள்வி. ஒன்றும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. என்ன பிறப்போ, என்ன வாழ்க்கையோ.

எண்ணியபடி அவர் சன்னிதிக்குள் நுழைந்தபோது பொளேரெனப் பிடறியில் யாரோ அடித்தாற்போல அப்படியே திகைத்து நின்றுவிட்டார். உள்ளே யாரோ பாடிக்கொண்டிருந்தார்கள்.

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே…

ஆரா அமுதம்! ஐயோ, இந்த பெறற்கரிய பெருங்கருணையாளனை வேறெப்படி வருணிப்பது? இதைவிடப் பொருத்தமான ஒரு முதல்சொல் இருந்துவிட முடியுமா!

அப்படியே கண்மூடி நின்றார். அவர்கள் பாடிக்கொண்டே இருந்தார்கள். பத்துப் பாசுரங்கள். பாடி முடித்து, தீர்த்தப் பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே வந்தவர்களை அவர் நெருங்கினார்.

‘ஐயா இது என்ன? குருகூர்ச் சடகோபன் சொன்ன ஓராயிரத்தில் பத்து என்று முடித்தீர்களே, மிச்சம் தொள்ளாயிரத்தித் தொண்ணூறு பாசுரங்களும் உங்களுக்குத் தெரியுமா?’

‘இது நம்மாழ்வாரின் திருவாய்மொழி. மொத்தம் ஆயிரத்துக்கும் சற்று மேலே என்கிறார்கள். எங்களுக்கு இந்தப் பத்துதான் தெரியும்.’

‘என்றால், அனைத்தும் யாருக்குத் தெரியும்?’

‘தெரியவில்லை ஐயா!’

அவர் கண்களிலிருந்து கரகரவென நீர் வழிந்தது. அர்த்த ரூபமான ஆயிரம் பாடல்களில் வெறும் பத்து! அதுகூடத் தனக்கு இத்தனைக் காலம் தெரிந்திருக்கவில்லை. என்ன பிறப்பு இது!

அவர்களுக்கு அந்த யோகியின் மனம் புரிந்துபோனது. பக்தியின் மிகக் கனிந்த பேரானந்த நிலையில் இருப்பவர். பாசுரத்தின் அழகில் எப்படித் தன்னைக் கரைத்துக்கொண்டுவிட்டார்!

‘ஐயா, கவலைப்படாதீர்கள். நாதமுனி என்றொரு மகான் இந்த மண்ணில் பிறப்பார் என்றும், அவர்மூலம் ஆழ்வார்களின் அத்தனை பாசுரப் பாற்கடல்களும் இப்பூவுலகில் மீண்டும் பாயும் என்றும் எங்கள் முன்னோர்கள் எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். அக்காலம் வரும்வரை நாம் பொறுத்திருப்போம்! அது கிடைக்கும்போது அள்ளிப் பருகுவோம்’

அவர் திகைத்துவிட்டார். நாதமுனி! நானா…. நானே தானா?! என்னைத்தான் சொல்கிறார்களா! எனக்கா அந்தக் கொடுப்பினை! இவர்கள் சொல்வது நிஜமா?

அவரால் நம்பமுடியவில்லை. அடுத்தக் கணம் அவர் காவிரிக் கரையை விடுத்து, தாமிரவருணி பாயும் கரையை நோக்கிப் பாய்ந்துவிட்டார். நம்மாழ்வார் அவதரித்த குருகூர்.

‘ஐயனே, ஒரு பாசுரம் என்னை இங்கு இழுத்து வந்தது. காலத்தின் காற்றுப் பைகளில் பொதிந்திருக்கும் உமது பாசுரங்கள் முழுவதையும் புகட்டி அருள மாட்டீரா?’

நம்மாழ்வார் பிறந்தது முதலே பேசாத ஞானி. பிற்பாடு அவரைத் தேடி மதுரகவி ஆழ்வார் குருகூருக்கு வந்தபோது எண்ணி நாலு வார்த்தை பேசியவர். ஆனால், நான்கு வேதங்களின் பொருளையும் தமது நான்கு நூல்களின் சாரமாக்கித் தந்தவர். ஆண்டாண்டு காலமாக மோனத்தவமிருந்து ஆனிப் பொன்னேபோல் வந்து நின்ற நாதமுனியிடம் மானசீகத்தில் அவர் திருவாய் மலர்ந்தார்.

‘எழுதிக்கொள் நாதமுனி! நான் புனைந்தவையோடுகூட பன்னிரு ஆழ்வார்களின் அத்தனைப் பாசுரங்களும் உன்மூலம் உலகை அடையவேண்டும் என்பதே உன் பிறப்பின் சாரம்.’

நெக்குருகிப் போன நாதமுனி, பரபரவென அவர் சொல்லச் சொல்ல எழுதத் தொடங்கினார். திருவாய்மொழியில் தொடங்கியது அது.

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை
கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்.

சொல்லிக்கொண்டே வந்தபோது நாதமுனியின் கையில் ஒரு சிலை வந்து அமர்ந்தது.

‘என்ன பார்க்கிறாய்? இது உன் காலத்துக்கு முன் பிறந்த ஒருவரின் சிலையல்ல. உன் காலத்தைச் சேர்ந்தவரின் சிலையுமல்ல. உனக்கு இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு வரவிருக்கிற ஒருவரின் சிலை. உன்மூலம் உயிர் பெறவிருக்கும் இப்பாசுரங்களை உலகெல்லாம் ஒலிக்கச் செய்யப் போகிறவரின் சிலை.’

ராமானுஜரின் பெயர் அங்கு பேசப்படவில்லை. ஆனால் கலியின் வலிவைத் தகர்க்கப் போகிற பெரும் சக்தியாகப் பின்னாளில் அவர் உதிக்கவிருப்பதற்குக் கட்டியம் கூறியது சம்பவம் அது.

(தொடரும்)

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading