பொலிக! பொலிக! 02

சரி, துறந்துவிடலாம் என்று ராமானுஜர் முடிவு செய்தார்.

ஊரே அதிர்ந்து நிற்கப் போகிறது. உறவு ஜனம் மொத்தமும் பழிக்கப் போகிறது. தஞ்சம்மா பிழிந்து பிழிந்து அழுவாள். அவளது பெற்றோர் வாய்விட்டுக் கதறுவார்கள். வயிறெரிந்து சபிப்பார்கள். அக்னி சாட்சியாக மணந்த ஒரு பெண்ணை மனப்பூர்வமாக விட்டு விலகிச் செல்வது எப்பேர்ப்பட்ட பாவம் என்று சாஸ்திர உதாரணங்களுடன் கூடிக் கூடிப் பேசிக்கொள்வார்கள். எல்லாம் நடக்கும். எதையும் தவிர்க்க முடியாது.

‘ஆனால் நான் இதனைச் செய்தே தீரவேண்டும் தாசரதி! இது நான் எனக்கே இட்டுக்கொண்டிருக்கும் கட்டளை. அர்த்தமற்ற இல்லற வாழ்வில் எனது தினங்களை வீணடித்துக்கொண்டிருப்பது பெரும் பிழை. தஞ்சம்மாவுக்கு வாழ்க்கை புரியவில்லை. மனிதர்களைப் புரியவில்லை. மனிதர் வாழ்வை மலரச் செய்வதற்காகவே பிறந்திருக்கும் மகான்களை இனம்காணத் தெரியவில்லை. அவள் ஜாதி பார்க்கிறாள். குலத்தில் உயர்ந்தவனா, குடியில் உயர்ந்தவனா என்று யோசிக்கிறாள். என்னால் தாங்க முடியவில்லை.’

அவர் குமுறிக்கொண்டிருந்தார். தாசரதிக்குப் புரிந்தது. கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது. ஏனெனில் அவர்கள் வைணவம் புரிந்தவர்கள். ராமானுஜரின் நிழலைப் போல் உடன் செல்பவர்கள். வருணங்களை அவர் பொருட்படுத்துவதில்லை. வாழ்க்கைத் தரம் பார்ப்பதில்லை. நீ ஒரு பாகவதனா? உன்னைச் சேவித்து, உனக்குத் தொண்டாற்றுவதே என் முதற்பணி என்று முடிவு செய்து வாழ்ந்துகொண்டிருப்பவர்.

தஞ்சம்மாவின் பிரச்னை வேறு. பக்தராக இருந்தாலும் அவர் பிராமணரா என்று பார்க்கிறவள் அவள். பிழை அவள்மீதல்ல. வளர்ப்பு அப்படி. சூழல் அப்படி. காலம் அப்படி. குல வழக்கம் அப்படி.

அன்றைக்கு அது நடந்தது.

‘ஐயா, இன்று என் வீட்டுக்கு நீங்கள் சாப்பிட வரவேண்டும்.’

காஞ்சிப் பேரருளாளப் பெருமாள் சன்னிதியில் விசிறி வீசும் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த திருக்கச்சி நம்பியிடம் ராமானுஜர் கேட்டார். அவர் மனத்தில் சில திட்டங்கள் இருந்தன. பிறப்பால் வைசியரான திருக்கச்சி நம்பி, தமது பக்தியால் பரமனுக்கு மிக நெருக்கத்தில் இருந்தவர். காஞ்சி அருளாளனுடன் தனியே மானசீகத்தில் உரையாடக்கூடியவர். அவர் பேசுவது பெரிதல்ல. அவன் பதில் சொல்லுவான். அதுதான் பெரிது. இது ஊருக்கே தெரிந்த விஷயம். எத்தனையோ பேர் அவரிடம் வந்து ‘பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள்’ என்று தமது சொந்தப் பிரச்னைகளைச் சொல்லி, தீர்வு கேட்டுப் போவார்கள்.

திருக்கச்சி நம்பியை குருவாகப் பெற்று, அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொள்ள வேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார். பஞ்ச சம்ஸ்காரம் என்றால் ஐந்து அங்கங்கள் கொண்ட ஒரு சடங்கு. அதனைச் செய்துகொண்டால்தான் வைணவ நெறிக்கு உட்பட்டு வாழத் தொடங்குவதாக அர்த்தம்.

வலது தோளில் சக்கரமும் இடது தோளில் சங்கும் தரிப்பது முதலாவது. நெற்றி, வயிறு, மார்பு, கழுத்து, இரு தோள்கள், பின் கழுத்து, பின் இடுப்புப் பகுதிகளில் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருமண் தரிப்பது அடுத்தது. மூன்றாவது, பிறந்தபோது வைத்த பெயரை விடுத்து, தாஸ்ய நாமம் பெறுவது. அடுத்தது மந்திரோபதேசம். இறுதியாக, திரு ஆராதனம் என்று சொல்லப்படுகிற யாக சம்ஸ்காரம்.

எளிய சடங்குகள்தாம். ஆனால் குருமுகமாக இவற்றை ஏற்றுக் கடைப்பிடிப்பதே மரபு.

‘என்னை ஆட்கொள்வீர்களா? எனக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைப்பீர்களா?’ என்று அவரிடம் கேட்கவேண்டும். அதற்காகத்தான் ராமானுஜர் திருக்கச்சி நம்பியை வீட்டுக்கு அழைத்தார்.

‘அதற்கென்ன, வருகிறேன்’ என்றார் திருக்கச்சி நம்பி.

ராமானுஜர் பரபரப்பானார். ஆசார்யர் வருகிறார். அமுது தயாராகட்டும் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு இலை பறித்து வர தோட்டத்துக்குப் போனார். அவர் போய்த் திரும்பும் நேரத்துக்குள் நம்பி அவரது வீட்டுக்கு வந்துவிட்டதுதான் விதி.

‘வாருங்கள்’ என்றாள் தஞ்சம்மா.

‘ராமானுஜன் என்னை அழைத்திருந்தார்.’

‘தெரியும், உட்காருங்கள்.’

‘அவர் வீட்டில் இல்லையா?’

‘இப்போது வந்துவிடுவார். காத்திருக்கலாமா அல்லது…’

‘எனக்குக் கோயிலில் வேலை இருக்கிறது. அதிகம் தாமதிக்க முடியாது.’

எனவே அவர் சாப்பிட அமர்ந்தார். எனவே தஞ்சம்மா பரிமாறினாள். சில நிமிடங்களில் உண்டு முடித்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.

‘நல்லது. அவர் வந்தால் சொல்லிவிடுங்கள்.’

போய்விட்டார்.

தஞ்சம்மா அவர் அமர்ந்து உண்ட இடத்தில் சாணமிட்டு எச்சில் பிரட்டினாள். அவருக்காகச் சமைத்த பாத்திரங்களைக் கிணற்றடிக்கு எடுத்துச் சென்று கழுவிக் கவிழ்த்து வைத்தாள். தலைக்குக் குளித்து வீட்டுக்குள் வந்து மீண்டும் தமக்காகச் சமைக்கத் தொடங்கினாள்.

அதிர்ந்து போனார் ராமானுஜர். எப்பேர்ப்பட்ட பாவம் இது! அவர் மகானல்லவா! குருவல்லவா! அவர் அமர்ந்த இடத்தைத் துடைத்து, அவருக்காகச் சமைத்ததில் மீதம் வைக்காமல் கழுவிக் கவிழ்த்து, தலைக்குக் குளித்து..

‘வேறென்ன செய்வார்கள்? அவர் வைசியரல்லவா?’ என்றாள் தஞ்சம்மா.

நொறுங்கிப் போனார்.

‘தவறு தஞ்சம்மா! குலத்தில் என்ன இருக்கிறது? பிறப்பால் ஒருவருக்கு எந்த ஏற்றமும் கிடையாது. எப்படி வாழ்கிறார்கள் என்று பார். வாழ்க்கையை எத்தனை அர்த்தமுள்ளதாக்குகிறார்கள் என்று பார். அவர் பேரருளாளனுக்கு நெருங்கியவர். நாம் அவருக்கு நெருக்கமாகவாவது இருக்க வேண்டாமா?’

அவள் மரபுக்கு நெருக்கமாக இருக்க மட்டுமே விரும்பினாள். சொல்லிக்கொடுத்த ஆசார ஒழுக்கங்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க எண்ணினாள்.

மீண்டும் ஒரு சம்பவம். இம்முறை ஓர் ஏழைத் தொழிலாளி.

‘பசிக்கிறது என்கிறான். வீட்டில் என்ன இருக்கிறது?’ என்று உள்ளே வந்து கேட்டார் ராமானுஜர்.

‘உங்களுக்கு இதே வேலையாகப் போய்விட்டது. இங்கே கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. இனி சமைத்தால்தான் உண்டு.’

‘பழைய சாதம் இருக்கிறதா பார். அதுகூடப் போதும். பாவம், பசியில் கண்ணடைத்து நிற்கிறான்.’

‘பழைய சாதமா? அதுவும் இல்லை’ என்று சொல்லிவிட்டு தஞ்சம்மா போய்விட்டாள்.

ராமானுஜருக்கு சந்தேகம். எதற்கும் தேடிப் பார்ப்போம் என்று சமையல் கட்டுக்குச் சென்று இருந்தவற்றைத் திறந்து பார்த்தார். நிறையவே இருந்தது.

ஆக, பொய் சொல்லியிருக்கிறாள்! கடவுளே, பசிக்கு மருந்திடுவது அனைத்திலும் உயர்ந்த தருமம் அல்லவா! அதைக்கூடவா இவள் செய்யமாட்டாள்?

அப்போதே அவர் மனம் வெறுத்துப் போனார். உச்சமாக இன்னொரு சம்பவம் அடுத்தபடி நடந்தேறியது. அன்று முடிவு செய்ததுதான்.

சரி, துறந்துவிடலாம்.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி