அனுபவம்

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 6)

திரைப்படங்களில் அடுத்து வரப்போகும் காட்சிகளுக்குக் கூடுதல் பலம் சேர்ப்பதற்காக பருந்துப் பார்வையில் அவ்விடத்தை, மக்களைக் காட்டுவது வழக்கம். அப்படியாக நீலநகரம், அந்நகரவாசிகள் பற்றிய முன்னோட்டமே “இடப்பெயர்ச்சி”!
கோவிந்தசாமியின் நிழலோடு சூனியன் நகருக்குள் நுழைகிறான். சுங்கச்சாவடி, காவலர்கள், கார்கள் என்ற கடந்த அத்தியாய நகர்வுகளை வைத்து நாம் நீலநகரம் பற்றிய முன்முடிபு ஏதும் வைத்திருந்தால் அதை தூக்கி எறிந்து விடலாம். நகர அமைப்பு மட்டுமல்ல அங்கிருக்கும் கட்டிடங்களும் கூட வித்தியாசமாகவே அமைந்திருக்கிறது. அது நமக்கு மட்டும் தான்! சூனியனுக்கோ, தன் நகர கட்டிடக் கலையோடு ஒப்பிடும் போது நீலநிற கட்டிடக்கலையின் அமைப்பு கேவலமாய் தெரிகிறது.
நகரம் மட்டுமல்ல அந்நகரவாசிகளும் வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கிறார்கள். அந்த விவரணைகளை கொஞ்சம் காட்சிப்படுத்திப் பார்த்தால் நம்மாலும் ஏலியன்கள் போல ஒரு உருவத்தை கிரகித்துக் கொள்ள முடியும். எல்லாம் மாறி விட்ட போது அவர்கள் பேசும் மொழி மட்டும் மாறாமலிருக்குமா என்ன? நகரவாசி ஒருவனிடம் சாகரிகா பற்றி விசாரிக்கிறார்கள். மொழி புரியாத போதும் இன்றைய நவீன டெக்னாலஜி(!) மூலம் அவள் இருக்கும் இடத்தின் முகவரியை அவன் கொடுத்துச் செல்கிறான்.
தன்னுடைய தனித்த உரையாடல் வழியே தன்னை மூடனாகவே நிரூபித்தபடியே கோவிந்தசாமி வருகிறான். அது ஒன்றே தன் இஷ்டத்துக்கு அவனை ஆட்டுவிக்க சூனியனுக்குப் போதுமானதாய் இருக்கிறது. சாகரிகாவையும் பார்த்து விடுகிறார்கள். அவளைக் கண்டு சூனியனே திகைத்து நிற்கிறான் என்றால் கோவிந்தசாமியைப் பற்றி கேட்கவே வேண்டாம்? சாகரிகாவுக்கு என்னவாயிற்று? என்ற அறிதலோடு திரை இறங்குகிறது.
சூனியன் தன்னுடைய ஆட்டத்தை ஆடுவதற்கான நேரம் நெருங்கி விட்டதாகத் தோன்றினாலும் இன்னும் சில அத்தியாயங்களுக்கு கோவிந்தசாமியின் சங்கித் தனம் தொடரும் என்றே நினைக்கிறேன்.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி