இலக்கியப்பீடம் இதழ் நடத்திய அமரர் திருமதி ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் 2003ம் ஆண்டுக்கான பரிசு பெற்ற சமூகப் புதினம். 2003 இல் அவர் வயது அநேகமாக 32. இந்த வயதில் இதை எழுதியிருக்கிறார் என்றால், அவருக்கு பேர்சொல்ல இந்த ஒரு புத்தகம் போதும்.
நீண்டு கொண்டே போனது என் review . எதை விடுவது என்றே தெரியவில்லை. அப்படியும் நிறைவில்லை.பொறுமை ஆர்வம் இருப்பவர்கள் தொடரலாம். மற்றவர்கள் மன்னிக்கவும்.
பா ரா எழுத்தில் படிக்கும் நான்காவது புத்தகம். பொதுவாக முன்னுரையில் சமர்ப்பண பக்கங்களை ஸ்கிப்பி விடுவது என் வழக்கம். இறுதியில் தான் படிப்பேன். இங்கே ஒரே வரி. சமர்ப்பணம் ‘வண்ணதாசனுக்கு’. கச்சிதம். அதற்கே நன்றி.
ஆன்மாவிற்கான உண்மையான பொருள் என்ன ? உண்மையில் அது இருக்கிறதா இல்லையா என்ற தேடலிலேயே கேள்விகளுடன் வாழ்வைக் கழித்து , இன்னமும் தேடியபடியே உத்தரகாசியை தன் கடைசி காலங்களுக்கான இடமாக தீர்மானிக்கும் 73 வயது நபர். (பா. ரா. கடைசி வரை நீங்க அவர் பேரை சொல்லவே இல்லை) அவரே narrate செய்யும் வகையிலான. அவரது கடந்தகால … இடைப்பட்ட .. பின் அவர் இறக்கும் கால எண்ணவோட்டங்கள் தான் இந்தபுத்தகம்.
உத்தரகாசியின் குளிரை அவர் விவரிக்கும் பத்திகளில் , இந்த கோடையிலும் குளிரெடுக்கிறது.
7 வயதில் வேத பாட சாலையில் சேர்க்கப்படும் சிறுவன். வாழ்வில் இனிமேல் இல்லை எனும் அளவிற்கு வறுமையும், 5 குழந்தைகளும் , கூடவே வேதம் படிக்கும் மணவர்களின் பராமரிப்பும் என் வாழ்க்கை புரட்டி புரட்டி துன்பப்படுத்கிறது. தான் பட்டினி கிடந்தாவது மாணவர்களுக்கு ஒருவேளை உணவு கொடுத்து அர்ப்பணிப்புடன் பயிற்றுவிக்கிறார். அவர் வீட்டிலிருக்கும் அழகான ஒரு சாய்வு நாற்காலி, அதில் ஒரு முறை கூட அக்கடா என்று அமர அவருக்கு காலம் நிம்மதியை ஒரு துளி கூட தரவில்லை. அதுபற்றி அவரது மாணவர்களுக்கும் வருத்தம் உண்டு. குருகுலக் கல்வியில் இவற்றையே பார்த்து வளரும் அவனுக்கு அந்த வயதிலேயே எழுகின்ற கேள்விகள் பொட்டில் அறைகின்றன.
ஓயாமல் ஆன்மாவைத் தேடி, அது உள்ளே இருக்கிறதா இல்லையா? இருந்தால் அதை அடைவது எப்படி? என்ற தளத்தின் மேல்தான் அநேகமாக எல்லா வேதங்களும் உபனிடதங்களும் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. அவை தான் மேலானவை என்றால் அதை கற்பிப்பதையே தன் தவமாக எண்ணி வாழும் குரு இத்தனை துன்பப்படுவது ஏன்.?
பின் அவற்றை மேலானது என்று எப்படி ஏற்க முடியும்.?
7 வருட கல்வி முடிந்திருக்கும் நிலையில் காலத்தின் கட்டாயமாக வேத பாடத்தை பாதியில் விட்டு வீட்டுக்கு திரும்பி பள்ளி கல்வியை தொடர்கிறான். படிப்பு வேலை என்று வாழ்க்கையின் நீரோட்டம் கொண்டு சென்றாலும் மனதில் ஆத்ம விசாரத்தின் தேடலே மையப்புள்ளியாக நிற்கிறது.
வேலை கிடைத்தவுடன் திருவையாறுக்கே மீண்டும் போய் வாத்தியாரை பற்றி விசாரித்து அவரை சந்திக்க சென்றால் அங்கே அவர் வயோதிகத்தில் கிழிந்த நாராக, கூடவே வறுமையும், மகள் பூரணியும். மெல்ல மெல்ல பூரணிக்கு முன்பே அறிமுகம் கொடுத்து எப்போது அவளைப்பற்றி சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலிடுகிறது. வாத்தியாரைப் பற்றி விசாரிக்கும்போது ஒருவர் அவர் எப்போதும் அந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பதாக ஒருவர் சொல்வார். ஆவல் மிகுதியில் பா ரா அந்த காட்சியை எழுதும் முன் அதைப் பார்க்க அந்த வீட்டிற்கு பாய்ந்து விட்டது மனம்.வறுமை தீராத நிலையில் அவர். தீர்க்கமான சிந்தனையுடன் ஈர்க்கும் பூரணி. காதலும் , குருவுக்கு உபகரமாகவும் பூரணியை மணக்க எண்ணும்போது , துன்பங்களே வாழ்வென பழகி பக்குவப்பட்டுவிட்ட பூரணிக்கு, திருமணத்தில் நாட்டமில்லை. அதை அவள் தெரிவிக்கும் பாங்குதான் என்ன அழகு!
அதை ஏற்றுக்கொண்டு விலகி, தன் வாழ்வின் பெருந்தேடலை தொடர்பவர் பலரிடம் விடை காண முயல்கிறார். குடும்பத்தை விட்டு விலகி பயணம் தொடர்கிறது. ஆன்மாவைப் பற்றி ,பௌத்தம் பற்றி புத்த பிக்கு சொல்லும் வார்த்தைகள் அசைத்து போடுகின்றன. யாராலும் அறிய படாத ஒன்று எப்படி எல்லவற்றிற்குமான உட்பொருளாக இருக்க முடியும் என்று தத்துவ கோட்பாடுகளை உடைக்கிறார்.
பௌத்தம் இறப்புக்கு பின் எதுவுமில்லை. அது பற்றிய கவலையில் உழலவும் வேண்டாம் என்கிறது. நிதர்சன வாழ்க்கைக்கு அர்த்தம் கூட்டலாம் என்கிறது. எங்கும் நிறைவான விடை கிடைக்காமல் உத்தரகாசியில் வாசம் தொடர, அங்கே கூட வசிக்கும் நாயர், கல்லிடைக்குறிச்சி மாமி, சூரிக்கிழவர், வெங்கட்ராமன் அருமையான பாத்திர படைப்புகள். முக்கிய பாத்திரமாக குருவின் மனைவி சமைக்கும் அரிசி உப்புமா. எனக்கும் பிடித்த உணவான அதைப்பற்றி வேறொரு தொடரிலும் அவர் பாட்டி செய்யும் பக்குவம் குறித்து கூறியிருப்பது நினைவுக்கு வந்தது.
இறுதியில் பூரணியும் காலத்தின் விளையாட்டாக அங்கேயே வந்துசேர,… நீங்கள் யூகிக்க முடியாத அருமையான முடிவு.
ஆத்ம விசாரத்தின் தேடலில் பா ரா விவரிக்கும் விஷயங்கள்…..எங்கோ கொண்டுபோகின்றன. இதுவரை புத்தகத்தில் அடிக்கோடிடும் வழக்கமே இல்லாத எனக்கு எவ்வளவு கட்டுப்படுத்தியும் பல இடங்கள் அடிக்கோடிட்டு விட்டேன்.கடைசி பக்கம் கடைசி வார்த்தை முடித்தவுடன் நான் செய்தது… மீண்டும் முதல் வரியிலிருந்து மீண்டும் தொடங்கியதுதான். இன்னும் கொஞ்ச நாட்கள் வேறொன்றும் படிக்க முடியாது என்றே தோன்றுகிறது.