நான் தேடி அமர்ந்த ஆப்புகள்

முன்னொரு காலத்தில் நிறைய பேனாக்களைச் சேகரித்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் எழுத்தாளன் இல்லை என்பது ஒரு முக்கியக் குறிப்பு. ஆனால் பேனாக்களைப் பிடிக்கும். இங்க் பேனா, பால் பாயிண்ட் பேனா, குண்டு பேனா, ஒல்லிப் பேனா, நீல இங்க் பேனா, சிவப்பு இங்க் பேனா, பட்டையாக எழுதும் பேனா, கூராக எழுதும் பேனா. திடீரென்று ஒரு நாள், அதற்கு முன் நான் கேள்விப்பட்டே இராத எர்னஸ்ட் ஹெமிங்வே என்ற அமெரிக்க எழுத்தாளரின் எழுது மேசைப் புகைப்படம் ஒன்றைக் குமுதத்தில் கண்டேன். அதில் கூராகச் சீவி வைக்கப்பட்டிருந்த பல பென்சில்கள் இருந்தன. உடனே பென்சில்களின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது நான் வசித்து வந்த கேளம்பாக்கம் கிராமத்தில், ஒரே ஒரு பெட்டிக்கடைதான் உண்டு. அந்தக் கடைக்குப் பெயர் கிடையாது. புதுக் கடை என்றே பல நூற்றாண்டுகளாக அழைக்கப்பட்டு வந்தது. அங்கே நட்ராஜ் பென்சில் மட்டுமே கிடைக்கும். அதிலும் கிரேடுகள் எல்லாம் கேட்க முடியாது. கடையில் என்ன உள்ளதோ அதுதான். இரண்டு மூன்று பென்சில்கள் வாங்கி வந்து, எர்னஸ்ட் ஹெமிங்வேயைப் போலக் கூர்மையாகச் சீவி மேசையின் மீது வைத்தேன். என்னிடம் அப்போது பென் ஸ்டாண்ட் என்ற ஒன்று இல்லாததால் காப்பி குடிக்கும் எவர்சில்வர் தம்ளர் ஒன்றில் பேனாக்களையும் பென்சில்களையும் போட்டு வைப்பேன். எதிரே அமர்ந்து அவற்றைப் பார்த்துக்கொண்டே, நான் ஒரு பெரிய எழுத்தாளன் ஆகிவிட்டதாகக் கற்பனை செய்துகொள்வது அவ்வயதில் எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு. பிறகு எழுத ஆரம்பித்து, எழுதுபவனாகி, எழுத்தாளனும் ஆனதும் மேலும் பல நூதன வினோத பேனாக்களை வாங்கிக் குவித்தேன். ஹீரோ, பார்க்கர், பைலட், வானிடி, ரெனால்ட்ஸ் என்று ஒரு சுற்று.

இரண்டாயிரமாவது வருடம் அசெம்பிள்டு கம்ப்யூட்டர் ஒன்று வாங்கினேன். அப்போது App என்கிற சொற்பிரயோகம் இருந்த நினைவில்லை. ஒரு கம்ப்யூட்டர் என்றால் அதில் விண்டோஸ் இருக்கும். எழுதுவதற்கு மூன்று உபகரணங்கள் அதில் இருக்கும். ஒன்று வேர்ட். இன்னொன்று, வேர்ட் பேட். மூன்றாவது நோட் பேட். எனக்குப் பல காலம் வரை வேர்ட் இருக்கும்போது வேர்ட் பேட் எதற்கு என்று புரிந்ததே இல்லை. எம்மெஸ் வேர்ட் என்பது தனியே விலை கொடுத்து வாங்க வேண்டிய செயலி (அப்போது மென்பொருள்.) என்பதெல்லாம் அப்போது தெரியாது. எனக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த பாரத தேசமே இலவசமாகத்தான் அதைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது. கடைக்காரர்களே கம்ப்யூட்டர் விற்றால் கல்யாண வீட்டில் வெற்றிலை பாக்கு கவர் கொடுப்பது போல ஒரு வேர்டு போட்டுத்தான் கொடுப்பார்கள். அதனால்தான் வேர்ட் பேடின் அவசியம் தெரியாதிருந்தது. அதை ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் என்றார்கள். அப்போது வேர்ட் என்ன? வெரி ரிச் டெக்ஸ்ட் எடிட்டரா? ரிச் பர்சன்ஸ் டெக்ஸ்ட் எடிட்டர் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நோட் பேட் என்பது புவர் டெக்ஸ்ட் எடிட்டர்தான். அதில் சந்தேகமில்லை.

எழுதத் தொடங்கிய நாள்களில் இருந்து, எழுத்து எனக்கு என்றுமே அலுத்ததில்லை. ஆனால் பேனாக்களில் ஆரம்பித்து வேர்ட் ப்ராசசர்கள் வரை எதுவுமே இன்று வரை முழுத் திருப்தி தந்ததில்லை. குறிப்பாக மைக்ரோசாஃப்ட் வேர்ட் என்னும் செயலி. இதைக் குறித்துப் பல்வேறு சமயங்களில் பலநூறு விதமாகக் குறை கீதம் பாடிவிட்டேன். இன்னொரு முறை பாடவும் எனக்குச் சலிக்காது. சிந்தனைத் தடையே இல்லாமல், நடுவில் கணப் பொழுதும் நிற்காமல் எழுதிக்கொண்டே போகிற ஒருவனுக்கு உகந்த வேர்ட் ப்ராசசர் என்பது எப்படி இருக்க வேண்டும்?

1. தொட்ட கணத்தில் அது டொபக்கென்று திறக்க வேண்டும். (வேர்ட் இதில் சைபர்.)

2. தேவையே இல்லாத ஆயிரத்தெட்டு செயல்பாட்டு பொத்தான்கள் இருக்கக் கூடாது. பிறருக்கு அவை தேவைப்படும் என்றால் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் ஒரு ஓரமாக மூட்டை கட்டி வைக்கப்பட்டிருக்க வேண்டும். டீக்கடை மேசை மேல் தாம்பாளம் தாம்பாளமாகக் குவித்து வைக்கப்படும் மசால் வடை, பஜ்ஜி, பட்டர் பிஸ்கட் வகையறாக்களைப் போலத் திறக்கும் போதே நெற்றியில் நூறு பொட்டு கட்டிக்கொண்டு நிற்கக் கூடாது. (வேர்ட் இதிலும் சைபர்.)

3. ASCIIயைப் போல UTF-எட்டு என்பது அவ்வளவு எளிய என்கோடிங் அல்ல. அதுவும் தமிழ் ஃபொனடிக் என்பது வலயப்பட்டி சுப்பிரமணியர்களால் வடிவமைக்கப்பட்டதொரு என்கோடிங். இவ்வளவு வருடங்கள் ஆன பின்பும் மைக்ரோசாஃப்ட் வேர்ட் யுனிகோடுக்குப் பழகாமல் சண்டித்தனம் செய்வது சகிக்க முடியாத பெருங்கொடுமை.

4. எல்லாம் இருக்கிறதே, எல்லோரும்தான் எழுதுகிறார்களே என்று தோன்றலாம். ஆப்பிளுக்கு முன்பே எம்மெஸ் வேர்ட் யுனிகோடை ஏற்றுக்கொண்டது என்கிற சரித்திரத்தை ஒப்புக்கொண்டாலும் என் அனுபவம், வேண்டாத மருமகளைக் கரித்துக்கொட்டிக்கொண்டே உடன் வாழும் சீரியல் மாமியார் மனப்பான்மைதான் அதற்கு.

எப்போதாவது எழுதுபவர்களுக்கும் எப்போதாவது மட்டுமே எழுதாமல் இருப்பவனுக்கும் எதிர்பார்ப்புகளில் நிறைய வித்தியாசம் உண்டு. ரிச் டெக்ஸ்ட் எடிட்டர்களின் அடிக்கோடிடும் கெட்டத்தனம் தொடங்கி, ஒரு முழுச் சொல்லை அடித்து முடித்த பிற்பாடு நிதானமாக அது அப்பியர் ஆகிற அபத்தம் வரை ஆயிரம் குறைகளை என்னால் சொல்ல முடியும். சமூகம் அவை எதையுமே ஒப்புக்கொள்ளாது என்பதையும் அறிவேன். என்ன செய்ய? என்னப்பன் இட்டமுடன் என்னைப் படைத்த விதம் அப்படி.

2006ம் ஆண்டுத் தொடக்கம் முதல் திறமூல (Open Source) மென்பொருள்களைப் பரிசோதிக்க ஆரம்பித்தேன். ஓப்பன் ஆபீஸ் ஓரளவு எனக்கு சகாயம் செய்தது. ஒப்பீட்டளவில் மைக்ரோசாஃப்ட் வேர்டைக் காட்டிலும் அது வேகமாகத் திறந்ததே பெரிய நிம்மதி அளித்தது. தவிர வேர்டில் ஒரு தமிழ்க் கட்டுரை எழுதி, சேவ் செய்தால் அதன் கோப்பு கனம் சில எம்பிக்களாக இருக்கும். இந்த அக்கிரமத்தின் ஆணிவேர் அப்போது வேர்டின் டீஃபால்ட் எழுத்துருவாக இருந்த ஏரியல் யுனிகோட் எம்மெஸ் என்னும் கனபாடிகளிடம் இருந்தது. சாதாரண இரண்டு பக்க, நான்கு பக்கக் கட்டுரைகளெல்லாம் பத்து எம்பி, இருபது எம்பி கனத்தில் வந்து உட்காரும். இப்பிரச்னை ஓப்பன் ஆபீஸில் கிடையாது. இடத்தை அடைக்காமல் கோப்புகளை எழுதிச் சேமிக்க முடிந்தது.

பிறகு ஓப்பன் ஆபீஸின் முன்னேறிய வடிவமான லிப்ரே ஆபீஸுக்கு மாறியபோது இன்னும் சில சொகுசுகள் சாத்தியமாயின. ஃபைல் ரெகவரி சிஸ்டம் இதில் நன்றாக வேலை செய்யும். நானெல்லாம் உலக சரித்திரம் காணாத ஒழுங்கீன சிகாமணி. உங்களால் கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு மோசமான செயல்பாடுகளின் விற்பன்னன். ஒரு கோப்பைத் திறந்து மூச்சு விடாமல் நாற்பது பக்கம் டைப் செய்த பின்பும் சேவ் செய்யாமலேயே இருப்பேன். அப்படியே விட்டுவிட்டு எழுந்து தூங்கச் சென்றுவிடுவேன். நடுவே மின்சாரம் போய் வந்திருக்கும். கோப்பு காணாமல் போயிருக்கும். வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு மீட்கப் போராடினால் எழுதியதில் பேர் பாதிக்கு மேல் இல்லாமல் போயிருக்கும். (வேர்டில் இது அடிக்கடி நிகழும்.) லிப்ரே ஆபீஸ் பயன்படுத்தத் தொடங்கிய பின்பு பேர்பாதி என்பது கடைசிப் பத்தி மட்டும் என்று ஆனது. இது அளித்த நிம்மதி கொஞ்ச நஞ்சமல்ல.

ஆனால் லிப்ரே ஆபீஸிலும் வேர்டைப் போலவே நெற்றியில் பொட்டு கட்டிக்கொண்ட பெட்டிகள் உண்டு. என்ன செய்ய முடியும்? முடிந்த வரை மறைத்து வைத்துவிட்டு வேலை செய்வேன். ஆனால் முழுதும் இல்லாத வெள்ளைத் திரைதான் வேண்டுமென்றால் நோட்பேட்தான் சரி. பிரச்னை என்னவென்றால் வேர்டாவது பவர் கட்டின்போது பாதியை விழுங்கி, பீதி அளித்த பின்பு மீதியைத் தரும். நோட் பேட் என்பது சேவ் செய்யாவிட்டால் முழுக் கட்டுரையையும் தின்று தீர்த்துவிடும்.

ஆப்பிளுக்கு மாறிய பின்பு இந்தப் பிரச்னை தீர்ந்தது. நூறு சதமானம் ஃபைல் ரெகவரி அதில் சாத்தியமானது. தவிர கரண்ட் போனாலும் கம்ப்யூட்டர் ஏழெட்டு மணி நேரத்துக்கு ஆஃப் ஆகாமல் என்னைப் போலவே கிண்ணென்று இருக்கும் என்பதால் எழுதியது காணாமல் போய்விடும் என்ற பயம் அடியோடு ஒழிந்தது.

மேக்கில் Notes என்றொரு உடன் பிறந்த செயலி உண்டு. விண்டோஸ்வாலாக்கள் ஒன் நோட்டை எதற்காக விரும்புவார்களோ அந்த சாத்தியத்தை இது ஆரம்பம் முதலே தன்னகத்தில் கொண்டது. Auto Save வசதி. தவிர, எழுதுகிற கணத்திலேயே இது ஐக்ளவுடில் சேகரமாகும் என்பதால் உடனுக்குடன் ஐபோன், ஐபேட், இன்னொரு மேக் என்று எதில் வேண்டுமானாலும் திறந்து வேலையைத் தொடரலாம். நான் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்களை இதில் எழுதி எடிட் செய்துதான் வெளியிடுகிறேன்.

ஃபைல் மெனுகூடத் தட்டுப்படாத சிம்பிள் டெக்ஸ்ட் செயலியில் எழுதியது

ஆனால் பெரிய கதை, கட்டுரைகளுக்கு இது சரிப்படாது. என்னால் இன்று வரை சரியாக அடையாளம் காண இயலாத ஒரு வேகக் குறைபாடு இந்தச் செயலியில் உண்டு. ஒப்பீட்டளவில் writeroom, simpletext போன்ற டெக்ஸ்ட் எடிட்டர் செயலிகளில் எழுதும்போது வேகம் நன்றாகக் கூடி வரும். என்ன பிரச்னை என்றால் writeroom காலாவதியான செயலி. அதற்கு அப்டேட் கிடையாது. அதை போனில் பயன்படுத்த முடியாது. இப்போதைக்கு simpletext சிக்கலில்லாமல் எழுத உதவுகிறது.

இன்னொன்றைச் சொல்ல வேண்டும். நான் மேக்கில் வேலை பார்க்கத் தொடங்கிய காலம் முதல் அனைவரும் பரிந்துரை செய்த எழுத்துச் செயலி ஒன்றுண்டு. Scrivener என்று பெயர். நவீன எழுத்தாளர்களுக்கு இது ஒரு கடவுள் கொடை என்றேகூடச் சொன்னவர்கள் உண்டு. கதை, கட்டுரை, நாவல், நாடகம், திரைக்கதை, வசனம், ரேடியோ நாடகம், டாக்குமெண்டரி, படக்கதை என்று எவ்விதமான எழுத்துக்கும் ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் வல்லமை கொண்ட செயலி என்று இது சொல்லப்பட்டது.

அது உண்மைதான். எல்லாம் செய்யும் குட்டிச்சாத்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வேர்டின் நெற்றியில் கட்டிய பொட்டுகளையே வெறுக்கிற ஒருவன் ஓராயிரம் பொத்தான்களைக் கொண்ட இந்தச் செயலியை எப்படி விரும்புவான்? Craft, Evernote, Bear, Pages, Document writer, Ulysses என்று தொடங்கி, அநேகமாக சந்தையில் உள்ள அனைத்து ரக எழுது செயலிகளையும் நோண்டிக் குடைந்து பார்த்த பின்பு எனக்கு இரண்டு விஷயங்கள் தோன்றின.

1. இந்த ஜென்மத்தில் எனக்குப் பிடித்தாற்போன்ற ஒரு ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் கிடைக்கப் போவதில்லை.

2. அடிப்படையில் மினிமலிச மனம் கொண்ட ஒருவனால் எவ்வளவு சிறந்த ரிச் டெக்ஸ்ட் எடிட்டரையும் விரும்ப இயலாது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, திரைக்கதை-வசனம் எழுதுவதற்காகத் தனியொரு செயலி வேட்டை நடத்தியதையும் சொல்லாமல் இது நிறைவடையாது. இதற்கு சந்தையில் Beat, Slugline, Moviewriter Pro, xScreenplay, Movie Magic என்று தொடங்கி சுமார் ஐம்பது செயலிகள் இருக்கின்றன. பல வருடங்களுக்கு முன்பு Celtx என்ற பரதேசச் செயலியைக் கோடம்பாக்க இலக்கணங்களுக்கு உட்பட்டு இயங்கும் விதமாகக் கட்டாய மதமாற்றம் செய்யும் முயற்சி ஒன்றை என் நண்பர் நாகராஜன் (என்னெச்செம் ரைட்டர்) மேற்கொண்டார். செல்டெக்ஸ் அப்போது திறமூல மென்பொருள் என்பதால் யார் வேண்டுமானாலும் சோர்ஸ் கோடை எடுத்துக் கைமா செய்யலாம். திரைக்கதை மென்பொருள்களில் தமிழே வராது என்றிருந்த காலம் அது. நாகராஜன் வெற்றிகரமாக அதை எப்படியோ லதா ஃபாண்ட்டுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட்டார். இப்போது உள்ளதைப் போல இஷ்டத்துக்கு ஃபாண்ட் மாற்றிக்கொள்ளும் சௌகரியமெல்லாம் அன்று கிடையாது. அதே போலத்தான், எழுத்துரு அளவைக் கூட்டிக் குறைக்கும் வசதியும் இல்லாதிருந்தது.

நாகராஜன் உருமாற்றிய செல்டெக்ஸ் அருமையாகத் தமிழ்த் திரைக்கதை வசனம் எழுதியது. ஆனால் என்ன பிரச்னை என்றால் ஏற்கெனவே குண்டு பூசனிக்காய் போல இருக்கும் லதா, அந்த மென்பொருளுக்குள் குறைந்தது 18 பாயிண்ட் அளவு கொண்டதாகவே இருக்கும். எனவே ப்ரிண்ட் கொடுத்தால் ஒவ்வொரு பக்கத்திலும் நாலு வரிகூட வராது. ஒரே மண்டை மண்டையாக இருக்கும். ஒரு முழு திரைக்கதையை அதில் எழுதி ப்ரிண்ட் எடுத்தால் ஆயிரம் பக்க ஹார்ட் பவுண்டாக இருக்கும்.

எனவே நடத்தி முடித்த பழைய கல்யாணத்தைச் செதுக்கி செல்டெக்ஸுக்கு இன்னொரு சீர்திருத்தக் கல்யாணம் செய்யும் முயற்சியில் சில காலம் போனது. ஒரு கட்டத்தில் நாகராஜன் அதைக் கைகழுவி விட்டு வேறு வேலை பார்க்கப் போய்விட்டார். இன்றைக்கு அது காசுக்கு விற்கப்படுகிற செயலி ஆகிவிட்டது. தமிழ் ஃபாண்ட் பிரச்னைகளெல்லாம் கிடையாது. எம்மொழியிலும் எழுதலாம். ஆனால் அந்த ஒரு பிரச்னைதான் கிடையாதே தவிர இதர அனைத்து ரக தொழில்நுட்பச் சிக்கல்களும் நிறைந்தது. ஆப்புக் கடைக்குச் சென்று celtx என்று அடித்து ரிவ்யூக்களைப் பார்த்தீர்களானால் நாநிலம் நாயே பேயே என்று திட்டி வைத்திருப்பதைக் கண்டு ரசிக்கலாம்.

ஆனால் சந்தையில் உள்ள இதர திரைக்கதைச் செயலிகளோடு ஒப்பிட, செல்டெக்ஸ்தான் (தமிழுக்கு) பரவாயில்லை ரகம் என்பதால் நான் இன்றும் அதைத்தான் வைத்திருக்கிறேன்.

அவ்வப்போது தோன்றும். எழுதும் மென்பொருள்களுக்காக, செயலிகளுக்காக இவ்வளவு நேரங்காலத்தை வீணடித்ததற்கு பதில் இன்னும் உருப்படியாகச் சில புத்தகங்களை எழுதியிருக்கலாம். அல்லது எழுதியவற்றை இன்னும் உருப்படி ஆக்கியிருக்கலாம். எண்ணம்தான். உண்மையில் இப்படியெல்லாம் அனைத்திலும் புகுந்து குடைந்து பாராவிட்டால் நான் பாராவாக இருந்திருக்க மாட்டேன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter