தொழில்நுட்பம் வலையுலகம்

பரம ரகசியங்களைக் குறித்த வெள்ளை அறிக்கை

நவீன வாழ்க்கை விடுக்கும் சவால்களில் மிக மோசமானதென்று நான் கருதுவது பாஸ்வர்டுகளை நினைவில் வைத்துக்கொள்வதுதான். பாஸ்வர்ட் மேனேஜர்கள், அனைத்துக்கும் ஒரே பாஸ்வர்ட், ஒரே பாஸ்வர்டின் பல்வேறு வித வெளிப்பாடுகள், இயந்திர உற்பத்தி பாஸ்வர்டுகள், ஒவ்வொரு முறையும் forgot password போட்டுப் புதிய பாஸ்வர்ட் பெறுதல் உள்ளிட்ட அனைத்து சாத்தியங்களிலும் முயற்சி செய்து சலித்துப் போன அனுபவத்தில் இதனை எழுதுகிறேன். குறிப்பாக, அரசுத் துறை சார்ந்த எந்த ஓர் இணையத்தளத்திலும் இதுவரை முதல் முயற்சியில் நான் உள்ளே நுழைந்ததில்லை. அதிலும் குறிப்பாக ஆண்டுக்கொரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டி வரும் வண்டிகள் மற்றும் வாழ்க்கைக்கான காப்பீட்டுத் தளங்கள். இந்தத் தளங்களில் பாஸ்வர்ட் இல்லாமல் புதுப்பிக்க வழி இருக்கும். ஆனால் நமக்குக் கெட்ட நேரமாக இருந்து பணப்பரிமாற்றம் பிரச்னையாகிவிட்டால் ரசீதுகூட எடுக்க முடியாது.

தோராயமாக ஐம்பது பாஸ்வர்டுகள் நவீன வாழ்க்கைக்குத் தேவைப்படுகின்றன என்று நினைக்கிறேன். இந்த ஐம்பதும் ஒவ்வோர் ஆண்டிலும் குறைந்தது இரண்டு முறையாவது மாற்றம் கோருகின்றன. எல்லா இணையத் தளங்களும் மிகக் கடுமையான, அடுத்தவர் கண்டறிய முடியாதபடிக்குச் சிக்கல் மிகுந்த பாஸ்வர்டுகளையே விரும்புகின்றன. எல்லாமே நம் நல்லதுக்குத்தான். ஆனாலும் அவ்வளவு பாஸ்வர்டுகளையும் கடுமையாக்கி, அனைத்தையும் நினைவில் கொள்வது எப்படி?

மாற்றும் பாஸ்வர்டுகளை எழுதி வைப்பது என்பது ஓர் உத்தி. ஆனால் அது நல்லதல்ல. தவிர ஒவ்வொரு முறை மாற்றும்போதும் கவனமாக எழுதி வைக்கும் அளவுக்கு வாழ்க்கை யாரையும் வெட்டியாக விட்டுவைத்திருப்பதில்லை. மடிக்கணினியே நினைவில் கொள்ளும்தான். பிரவுசர்களும் பாஸ்வர்ட் சேகரிப்பானுடன்தான் வருகின்றன. ஆனால் இந்த clear cache திவச மந்திரத்தைக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பயன்படுத்தவேண்டி ஆகிவிடுகிறது. அப்போது சேகரமான அனைத்தும் போய்விடுகிறது. கவனமாக saved password ஆப்ஷனை அன்செக் செய்துவிட்டு மற்றவற்றை மட்டும் சுத்திகரித்து வாஸ்து ஹோமம் செய்வது எளிதில் கை வருவதில்லை.

ஆனால் பாஸ்வர்டுகள் முக்கியம். அவை சிக்கலாக இருப்பது மிகவும் முக்கியம். சிக்கல்களுடன் கூடிய பாஸ்வர்டுகள் நினைவில் இருப்பது அனைத்திலும் முக்கியம். எழுத்தாளன் அவனது வங்கிக் கணக்கு எண்ணைக் கூட நினைவில் வைத்திருப்பது சிரமம் என்று எஸ்ரா எழுதியிருந்தார். அது சத்தியமான சொல். நான் என் வங்கிக் கணக்கு எண்ணை எழுதி வைத்துத்தான் ஒவ்வொரு முறையும் எடுத்துப் பார்த்துக்கொள்கிறேன். நாலே எண்கள் கொண்ட ஏடிஎம் பின்கூட சமயத்தில் மறந்துவிடுகிறது.

உடனே உங்கள் பிறந்த நாள், உங்கள் மனைவி மகள் பிறந்தநாள் என்று ஆலோசனை தராதீர். அதெல்லாம் பாதுகாப்பற்ற செயல்பாடு.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. முன்பொரு காலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தின் பெயரை மட்டும் பாஸ்வர்டாக வைக்கும் வழக்கத்தை வைத்திருந்தேன். அந்தப் புத்தகம் முடிந்து அடுத்தது தொடங்கும்வரை எனது அனைத்து பாஸ்வர்டுகளும் அது ஒன்றாகவே இருக்கும். அடுத்தப் புத்தகத்தை ஆரம்பித்ததும் பாஸ்வர்டும் மாறிவிடும். உலகில் இப்படி ஒரு யோசனை யாருக்குமே வராது என்று என்னை நானே பாராட்டிக்கொண்டு ஒரு சில வருடங்கள் இப்பழக்கத்தைத் தொடர்ந்தேன்.

அப்போது தமிழ் இணையத்தை உருட்டி மிரட்டிக்கொண்டிருந்த ஒரு ஹைஜாக் பிரகஸ்பதி என் ஜிமெயில் பாஸ்வர்டைக் களவாடி உள்ளே இருந்த அஞ்சல்களையெல்லாம் நாட்டுடைமை ஆக்கப்பட்டுவிட்டது போலப் பிரசுரிக்க ஆரம்பித்துவிட்டார். அப்போதைய என் ஜிமெயில் பாஸ்வர்ட் ‘ஹிஸ்புல்லா’ என்பதைக்கூடப் பொதுவில் சொல்லி சந்தோஷப்பட்டார். அந்த அக்கவுண்ட்டை அன்று மீட்கப் பட்டபாடு நாய் படாது. (பத்ரிதான் உதவினார்.) அதன்பிறகு என் மொத்த க்ரியேட்டிவிடியையும் பாஸ்வர்ட் உருவாக்குதலுக்குச் செலவிட்டு, அதில் கீழே சிந்தி வீணாவதில் மட்டும்தான் கதைகளே எழுத ஆரம்பித்தேன். இப்படி, எக்கச்சக்கமான கலைத்தன்மையுடன் கூடிய பாஸ்வர்டுகளை உருவாக்கும்போது அதை நினைவில் வைத்துக்கொள்வது பெரும் சிக்கலாகிவிடுகிறது.

இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு எல்.ஐ.சி. ப்ரீமியம் கட்டுவதற்காக அந்தத் தளத்தில் சுமார் முக்கால் மணிநேரம் போராடினேன். வேறென்ன. தோற்றுவிட்டு இதனை எழுதுகிறேன். இயற்கையின் விதிப்படி ஏழாவது, எட்டாவது முயற்சியில் எப்படியும் வென்றுவிடுவேன் என்று தெரியும். இடைப்பட்ட நேரத்தில் இளைப்பாற இது.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி