அபத்தங்களின் அபிநயம் – சி. சரவணகார்த்திகேயன்

துறைசார் அனுபவங்களில் புனைவேற்றி நாவல் எழுதும் வழக்கம் உலக இலக்கியத்தில் ஏற்கெனவே உண்டுதான். தமிழிலும் விவசாயம் முதல் தகவல் தொழில்நுட்பம் வரை பல துறை சார்ந்து நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. ‘ஜந்து’ நாவல் அவ்வகைமையில் முக்கியமான உதாரணமாக நிற்கும். நானறிந்து பாராவுக்கு நான்கு துறைகளில் நிறைய அனுபவம் இருக்கிறது. ஒன்று பத்திரிகை, அடுத்து பதிப்பகம், அப்புறம் தொலைக்காட்சி நெடுந்தொடர், சமீப காலமாக ஆன்லைன் வகுப்புகள். (‘யதி’ நாவலை வாசிக்கையில் அவருக்கு சித்து வேலைகளிலும் அனுபவம் இருக்குமோ என ஒருவருக்குச் சந்தேகம் எழுவது இயல்பே.) சீரியல் உலகை வைத்து பூனைக்கதை என்ற நாவலை ஏற்கெனவே எழுதி இருக்கிறார். இக்கதை பத்திரிகைத் துறை பற்றியது.

’ஜந்து’ நாவலில் 2000ங்களின் தொடக்கத்தில் ஒரு தமிழ் அச்சுப் பத்திரிகை அலுவலகம் எப்படி இயங்குகிறது என்ற குறுக்குவெட்டுப் பார்வை கிடைக்கிறது. நமக்கு அச்சுப் பத்திரிகைகளின் பணிச் சூழல் குறித்து இருவேறு சித்திரங்கள் இருக்கின்றன. ஒன்று ‘ஊமை விழிகள்’ முதலிய 80-களின் திரைப்படங்கள் அளித்த புரட்சி முகம். அடுத்து ‘கோ’ திரைப்படம் அளித்த வண்ணமயமான‌ பிம்பம்.

ஜந்து இந்த இரண்டையும் உடைத்து மிக யதார்த்தமான grounded தோற்றத்தைத் தீட்டிக் காட்டுகிறது.

இந்நாவலில் ஒவ்வோர் அத்தியாயமும் ஒவ்வொரு விஷயத்தை அல்லது நபரைப் பற்றிப் பேசுகிறது என்றாலும், எல்லா அத்தியாயங்களின் முடிப்பிலும் ஒரு நிறைவு இருக்கிறது என்றாலும் இதைச் சிறுகதைகளின் தொகுதி என்று சொல்ல முடியாதபடி நாவலாகவே திரண்டு நிற்கிறது. இது வெறுமனே இதன் கதாபாத்திரங்கள் சகல அத்தியாயங்களுக்கு இடையேயும் பகிரப்பட்டிருப்பதால் எழும் தோற்ற மயக்க‌மல்ல. மாறாக, இது ஓர் இளம் பத்திரிகையாளனின் பயணம் என்ற விரிவான விஷயத்தைப் பேசுவதன் வாயிலாக நாவலாகிறது. அவன் ஒரு பத்திரிக்கையின் நேர்முகத்துக்குப் போவது தொடங்கி, அங்கு வேலை கிடைத்துக் காணுகிற‌ பலவித ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால், ஒரு கட்டத்தில் அங்கிருந்து வெளியேறுவது வரை முழுமையான ஒரு வாழ்க்கையைக் காட்டுகிறது. ஆனால் உண்மையில் அவனது வாழ்க்கையைப் பேசுவது என்பது ஒரு சாக்கு மட்டுமே. அந்தப் பத்திரிகையின் இயங்கியலை (Dynamics) அது நெருங்கி அணுகிப் பேசுகிறது.

அந்த இளம் பத்திரிகையாளன் பாராவாக இருக்கலாம். யாராகவும் இருக்கலாம். அதே போல்தான் இந்நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமும். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இரண்டாயிரங்களின் ஆரம்பத்தில் தமிழ் வெகுஜன சஞ்சிகைகளை விரும்பி வாசித்த எவருக்கும் பத்திரிகை உலகின் வெவ்வேறு பெயர்கள் மனத்தில் வந்து போகும். ஆனால் இது ஒன்றும் கிசுகிசு அல்ல. எனவே அந்த எண்ணங்களைப் புறமொதுக்கி வைத்து விட்டு இது முழுக்க ஒரு கற்பனைக் கதை என வாசிக்க எடுத்தாலும் குறை ஒன்றும் இல்லை.

*

‘ஜந்து’ என்ற இந்தத் தலைப்பு இது ஒரு விஞ்ஞானப் புதினம் அல்லது மிகு புனைவு என்ற எண்ணத்தைத்தான் எனக்கு அளித்தது. அறிவிற் குறைந்த மனிதர்களின் கதை இது. யோசித்துப் பார்த்தால் இந்த நாவலே அபத்தங்களின் அபிநயம் எனலாம். மனிதர்கள் தர்க்கத்துக்குப் புறம்பாகவும் நியாயத்துக்கு எதிராகவும் தொடர்ந்து மிக விரும்பிச் செயல்படுவது இக்கதையில் ரசிக்க ரசிக்கப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தனை மிகைச் சம்பவங்களை, மீஆசாமிகளை நம்பகமாகச் சொன்னதே ஒரு சாதனைதான்!

நாவலின் சில வரிகளை மிக ரசித்தேன்: “மரியாதையை மிகவும் மரியாதையாகக் கையாள வேண்டும்”, “காதல் வந்துவிட்டால் வீரமும் இலவச இணைப்பாக வரும்தான்”, “எல்லாம் தெரிந்தவர்களுக்கு, எது முக்கியமோ அது தெரியாமல் போய்விடுகிறது”, “புன்னகைக்கும் புன்சிரிப்புக்கும் இடைப்பட்ட வெளியை நிரப்புவதற்குப் பல் வரிசை சரியாக இருக்க வேண்டும்”, “எதை உண்டாலும் சுவைதான் நாக்கில் நிற்குமே தவிர ருசி கரைந்துவிடும்” (சுவையும் ருசியும் வெவ்வேறு என இதன்வழிதான் கண்டுகொண்டேன். இதுகாறும் இரண்டையும் பரஸ்பர மாற்றுப் பதமாகவே பயன்படுத்தி வந்தேன்.) “அதை மகிழ்ச்சி என்பதா, நிம்மதி என்று வகைப்படுத்துவதா என்று சிறிய குழப்பம் இருந்தது. நிம்மதி உணர்வினால் வந்த மகிழ்ச்சி என்று நினைத்துக்கொண்டான்.”, “கவலையில் இருப்பவர்களுக்கு அதற்கு வெளியே வேறெதையும் பேசப் பிடிக்காது. சிலருக்கு ஆறுதல் சொற்கள் தேவைப்படலாம். அதுவுமே ஒரு ஏமாற்றுதான். காப்பி சாப்பிட்டால் தலைவலி போய்விடும் என்பது போல.”, “குழந்தைத் தொழிலாளிகளை வேலைக்கு வெக்கறது எப்படித் தப்போ அப்படித்தான் ரிடையர் ஆனவங்கள திரும்பக் கூப்ட்டு வேல பாக்க சொல்றதும். கொஞ்சமாவது கருணை வேணும் சார்!”, “மானிட்டரின் முதுகுப் பக்கம் நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றினும் பெரிதாக இருந்தது”.

இப்படி நாவல் நெடுகிலும் பகடி வரிகள். கதாபாத்திரப் பெயர்களுமே குறுநகையை அளிக்கத் தவறவில்லை – கனவான், இரண்டாம் நிலைக் கனவான், புதிய கனவான், எட்டியப்பன், குல்சாரிலால், மார்க்கோ போலோ, டெவில் பிரசாத், வி. டபிள்யூ. சோலையப்பன்… அதில் எனக்கு மிகப் பிடித்திருந்தது திருக்காளத்தி நாதனின் வார்ப்பு!

நாயகனான ‘அவன்’ நமக்கு ஒரு கதைசொல்லியாக மட்டுமே இருக்கிறான். அதாவது நாவலின் பாத்திரங்களுக்கும் வாசகர்களாகிய நமக்கும் மத்தியில் ஒரு பாலமாகச் சில விஷயங்களைக் கடத்துகிறான். மற்றபடி, சாகசங்கள் ஏதும் செய்யாத சாதாரணப் பார்வையாளன் மட்டுமே ‘அவன்’. அதுவே அப்பாத்திரத்தை வசீகரமானதாக்குகிறது. இதில் வரும் ‘அவன்’ பாராதான் எனில் அவர் பெற்ற வெற்றிகளை, பாராட்டுகளைச் சுயப்பிரதாபம் (Blow one’s own trumpet) செய்து கொள்ள சகல வாய்ப்புகளும் இருந்தும் அதை மறுதலித்து எழுதியிருக்கும் நிதானம் வியப்பை உண்டாக்குகிறது. நான் அவரிடத்தில் இருந்தால் அப்படிச் செய்திருக்க முடியாது என்றே படுகிறது. தன்முனைப்பு இல்லாத‌ அந்தத் தன்மையும் இந்நாவலுக்குத் தனி இலக்கிய அந்தஸ்தை வழங்கி விடுகிறது.

இன்னொரு விஷயம் உண்மை சார்ந்த ஒரு புனைவில் கற்பனையைக் கலப்பது குறித்தது. உண்மை முக்கியமே இல்லை, நாவலுக்கே விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற புரிதல் எழுத்தாளனுக்கு அவசியம். நிஜத்தின் மீது விரிசல் விழுகிறதே என்ற கவலையைப் புறமொதுக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதில் அது சரியாக‌ நடந்திருக்கிறது. எங்கும் நாம் ஓர் உண்மைச் சம்பவத்தைப் படிக்கிறோம் என்ற ஆவணத்தன்மையின் நிழல் விழவே இல்லை. எழுதியது பாரா என்ற Metadata-வைக் கொண்டு இது அசல் நிகழ்வுகளின் தழுவல் என ஒருவர் ஊகிக்கிலாமே ஒழிய நாவலுக்குள் அதற்கான தடயம் இல்லை.

‘ஜந்து’ முழுக் கற்பனையான படைப்பு என்று சொன்னாலும் நம்புவதில் சிரமமில்லை.

ஜந்துவை அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலுடன் ஒப்பிடலாம். எப்படி அதில் சம்பவங்களின் ஊடாகப் புனைவெழுத்து பற்றியும் பொதுவாக மனிதர்கள் பற்றியும் புரிதல் கிடைக்கிறதோ அப்படி இதிலும் பத்திரிகை உலகம் பற்றியும் மனித இனம் பற்றியும் அறிதலை அடைய முடிகிறது. எல்லா அலுவலகங்களிலும் மனிதர்கள்தானே வேலை செய்கிறார்கள்! அங்கெல்லாம் அரசியல் இருக்கத்தானே செய்கிறது! எனவே பத்திரிகைக்காரர்கள் மட்டுமின்றி பணியிடத்தில் புழங்குவோர் எல்லோரும் இந்த‌ நாவலைத் தம் அனுபவங்களுடன் பொருத்திக் கொள்ள முடியும். என்னால் முடிந்தது!

இதில் ஒரு சொல் கூட கற்பனை இல்லை என்று சொன்னாலும் வியக்க மாட்டேன்.

*

நான் பதினெட்டு ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறேன். என்னால் என் துறை குறித்து இப்படி ஒரு நாவல் எழுதி விட முடியுமா எனக் கேட்டால் சந்தேகம்தான். இதை எழுத இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களைக் கவனித்து உள்வாங்கி வைத்திருத்தல். அடுத்து அவற்றை உறுத்தாமல் ஒரு புதினமாகத் தொகுக்கும் லாகவம். இந்த‌ இரண்டும் பாராவுக்குப் பிரமாதமாக வாய்த்திருக்கிறது! நாவலிலேயே ஒரு வரி உண்டு: “கருவிலிருக்கும் குழந்தையைப் போலத் தன் பணிக்குள் ஒடுங்கிக்கொண்டான்”.

அப்படி ஒடுங்கிக் கொண்டால்தான் வெளி வந்தபின் கருவறை பற்றி எழுத முடியுமோ என்னவோ!

நான் வாசித்த அளவில் பாராவின் ஆகச் சிறந்த நாவல் ஜந்துதான் எனப்படுகிறது. யதி போன்ற பிரம்மாண்டத்தை, இறவான் போன்ற உணர்ச்சிகரங்களை எல்லாம் தாண்டி இப்படிச் சொல்வது அதீதமாகத் தோன்றலாம். ஆனால் இக்கணம் என் மதிப்பீடு இதுவே!

சி.சரவணகார்த்திகேயன்
22 ஜூலை, 2024

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!