பொலிக! பொலிக! ராமானுஜர்-1000

பொலிக! பொலிக! 65

உலகு ஒரு கணம் நின்று இயங்கிய தருணம்.

வரதன் தன் மனைவி சொன்னதை உள்வாங்கி ஜீரணித்துக் கண் திறந்து பார்த்தார். புன்னகை செய்தார்.

‘சுவாமி, நான் செய்தது தவறா?’

‘நிச்சயமாக இல்லை லஷ்மி. நீ செய்ததும் செய்யவிருப்பதும் மகத்தான திருப்பணி. திருமால் அடியார்களுக்கு உணவிடுவதற்காக எதையும் செய்யலாம். உயிரையே தரலாம் என்னும்போது நீ ஓரிரவு அந்த வணிகனின் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்துவிட்டு வரப் போவது ஒன்றுமே இல்லை. இதைக் குறித்து வருத்தமோ கவலையோ அடையாதே. நமது கடன், அடியார்களுக்குத் தொண்டு புரிவது. அதில் தவறாமல் இருந்தால் போதுமானது.’

‘நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனாலும் உங்களுக்கு இது சங்கடமாக இருக்குமே என்றுதான் சற்று சஞ்சலப்பட்டேன்.’

‘சஞ்சலமே வேண்டாம். எனக்கு உன்னைத் தெரியும். நமக்கு பாகவத கைங்கர்யத்தின் மகத்துவம் தெரியும். மற்ற விஷயங்கள் எதுவுமே ஒரு பொருட்டல்ல.’

அவர் பேசிக்கொண்டிருந்தபோது ராமானுஜரும் அவரது சீடர்களும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். திடுக்கிட்டுத் திரும்பிய வரதன், உடையவரைக் கண்டதும் பரவசமாகிப் போனார்.

‘சுவாமி தாங்களா! ஒரு திருக்கூட்டம் வந்திருப்பதைத்தான் என் மனைவி சொன்னாள். எம்பெருமானாரான தாங்களே வந்திருப்பீர்கள் என்று நான் நினைத்துப் பார்க்கக்கூட இல்லை. என்ன புண்ணியம் செய்தேன் நான்.. வாருங்கள், வாருங்கள்!’

பரவசமாகிப் போய் ராமானுஜரின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தார் வரதன்.

ராமானுஜர் அமைதியாக அவரது மனைவியைப் பார்த்தார்.

‘சுவாமி, உணவு தயாராக இருக்கிறது. இலை போட்டுவிடட்டுமா?’

‘தாராளமாக’ என்று சொல்லிவிட்டுத் தமது திருவாராதனப் பெருமாளை எடுத்து வைத்துக்கொண்டு பரபரவென பூஜை செய்து முடித்தார். பெருமானுக்கு அமுது செய்வித்த பிறகு உடையவர் கோஷ்டி உண்ண அமர்ந்தது.

ராமானுஜர் ஒன்றும் பேசவில்லை. அமைதியாகவே உண்டு முடித்து எழுந்தார்.

‘இது எங்கள் கொடுப்பினை சுவாமி. எங்கள் இல்லத்தில் நீங்கள் இன்று உண்டது எங்கள் பிறவிப் பயன்.’ என்று நெகிழ்ந்து நின்றார் வரதன்.

‘நல்லது ஐயா. உமது மனைவி இப்போது புறப்பட வேண்டுமே? அவளுக்கு நேரமாகிவிடக் கூடாதல்லவா?’

திடுக்கிட்டுப் போனார்கள் வரதனும் அவர் மனைவியும்.

‘சுவாமி..!’

‘இன்னொரு முறை பேச வேண்டாம் அம்மா. நீ உன் கணவரிடம் சொன்ன அனைத்தையும் கேட்டேன். திருமாலடியார்களை உபசரிக்க எதையும் இழக்கலாம் என்கிற உனது எண்ணம் ஒப்பற்றது. கருணாமூர்த்தியான எம்பெருமான் உலகத்தில் உள்ள அனைவருக்கும் வாரி வழங்கும் அனைத்துச் செல்வங்களைக் காட்டிலும் இதுவே உயர்ந்தது, இதுவே வற்றாததும்கூட.’

அந்தப் பெண் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

‘சரி, நீ கிளம்பு. ஆனால், இதோ இந்தத் தீர்த்தப் பிரசாதத்தை எடுத்துச் சென்று அந்த வணிகனுக்கு முதலில் கொடு.’ என்று சொல்லி பெருமாள் தீர்த்தத்தை அவளிடம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

‘சுவாமி, நானே சென்று லஷ்மியை அவ்விடம் விட்டு வருகிறேன். தாங்கள் அதுவரை ஓய்வு கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு வரதன் மனைவியோடு வெளியேறினார்.

இருட்டி நெடுநேரம் ஆகிவிட்டிருந்தது. வணிகன் தன் வீட்டு வாசலில் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தான். இன்னுமா விருந்து முடிந்திருக்காது? ஏன் இன்னும் அவளைக் காணவில்லை?

குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தவனை வரதனின் குரல் கலைத்தது. ‘ஐயா..’

திடுக்கிட்டுப் போனான். லஷ்மி தன் கணவனோடு வருவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. சட்டென்று அவனுக்குக் கோபம் வந்தது.

‘ஐயா, நீங்கள் செய்த உதவியால் இன்று உடையவருக்கும் அவரது சிஷ்யர்களுக்கும் எங்கள் வீட்டில் உணவளிக்க முடிந்தது. இந்தப் புண்ணியம் யாவும் உங்களையே சேரட்டும்.’

‘இதோ பார். எனக்குப் புண்ணியமெல்லாம் வேண்டாம்…’

‘தெரியும் ஐயா. நீங்கள் வேண்டுவது என் மனைவியை மட்டுமே. இருட்டில் அவள் தனியே வரவேண்டாம் என்றுதான் நான் அழைத்து வந்தேன். இதோ கிளம்பிவிடுகிறேன்.’

வணிகன் குழப்பமானான். இப்படி ஒரு கணவன் இருப்பானா? அப்படி என்ன திருமாலடியார் பக்தி? அப்படியாவது அவர்களுக்கு உணவளித்து என்ன அள்ளிக்கொண்டு போகப் போகிறார்கள் இவர்கள்?

‘அது ஒரு ஆத்ம திருப்தி. அவ்வளவே. இந்தாருங்கள். உடையவர் உங்களுக்கும் தீர்த்தப் பிரசாதம் கொடுத்தனுப்பினார்’ என்று சொல்லி தீர்த்தத்தை அவன் கையில் விட்டாள் லஷ்மி.

அருந்திய மறுகணம் அவன் தடாலென அவர்கள் காலில் விழுந்தான்.

‘தாயே என்னை மன்னித்துவிடு. நான் கேட்டது தவறு. என் விருப்பம் தவறு. பெரும் பாவம் செய்ய இருந்தேன். மயிரிழையில் தப்பித்திருக்கிறேன்’ என்று கதறத் தொடங்கினான்.

வரதனுக்கும் லஷ்மிக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘ஐயா, நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்? ஒரு புண்ணிய காரியத்துக்கு உதவிதான் செய்திருக்கிறீர்கள். எதற்கு இப்படிக் கலங்கிப் புலம்புகிறீர்கள்?’

உண்மையில் நடந்தது, விவரிப்புக்கு அப்பாற்பட்டது. தீர்த்தத்தை அருந்திய மறுகணம் வரதனும் லஷ்மியும் அவன் கண்களுக்குப் பாற்கடல்வாசிகளாகத் தெரிந்தார்கள். சங்கு சக்கரம் ஏந்திய பரமாத்மா. கையில் தாமரை மலருடன் உடனிருந்து அருள் புரியும் மகாலஷ்மி. எங்குமிருப்பவன் இங்குமிருக்கிறான். எதிலும் இருப்பவன் இதிலும் இருக்கிறான். எது உண்மையோ, எது சத்தியமோ, எது நிரந்தரமோ, எது காலம் கடந்ததோ, எது கற்பனைக்கு அப்பாற்பட்டதோ, அது வரதனாகவும் லஷ்மியாகவும் தோற்றம் கொண்டு நின்றதைக் கண்ட கணத்தில் அவன் வெலவெலத்துப் போனான்.

‘ஐயா இந்தப் பாவியை தயவுசெய்து மன்னியுங்கள். இப்போதே என்னை உங்கள் உடையவரிடம் அழைத்துச் செல்லுங்கள். நான் அவரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்.’

லஷ்மி பரவசமாகிப் போனாள். வீட்டில் நடந்ததை ஒரு கணம் நினைத்துப் பார்த்தவளுக்குக் கண்ணீர் சொரியத் தொடங்கியது. ‘இன்னொரு முறை பேசவேண்டாம் அம்மா!’ உடையவரின் குரல் அவள் காதுகளில் மீண்டும் ஒலித்தது. அவர் கொடுத்தனுப்பிய தீர்த்தப் பிரசாதத்தை எண்ணிப் பார்த்தாள். கங்கையல்ல, யமுனையல்ல, கண்ணுக்குத் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் சரஸ்வதியல்ல. எந்தப் புனித நதியும் ஏந்தாத பரிசுத்தமும் தெய்விகமும் பெரும் சக்தியும் அவர் கொடுத்தனுப்பிய அந்தக் கொஞ்சமே கொஞ்சம் தீர்த்தத்தில் இருந்து சாதித்ததை எண்ணி எண்ணி வியந்துகொண்டிருந்தாள்.

அந்த வணிகனையும் அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது உடையவர் காத்திருந்தார். ‘வாரும் வரதாழ்வாரே! போன சுருக்கில் வந்துவிட்டீரே!’

வணிகன் தடாலென அவர் காலில் விழுந்தான். கதறலில் அவன் பாவங்கள் கரையத் தொடங்கின.

(தொடரும்)

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி