“சாமி” யை தன் பெயரிலிருந்து கூட விலக்க மனம் வராத கோவிந்தசாமி “சங்கி”என்ற வார்த்தையை ஏசும் வார்த்தையாக ஏற்க மறுத்தது வியப்பேதும் இல்லை.
லஷ்மணசாமியில் ஆரம்பித்த சாமி கோவிந்தசாமியுடன் முடிந்து விடுமா?
மூடன் என்றாலும் ஏன் சாகரிகா காதலித்து மணம் புரிந்தான்? பரிதாப உணர்வில் வந்த காதலா?
எதுவாகிலும் சாகரிகாவை விட கோவிந்தசாமியின் காதல் மேலோங்கி இருக்கிறது. தன் கோபத்தை கூட வெளிப்படுத்த முடியாமல் சுவற்றில் முட்டிக்கொண்டு இயலாமையை வெளிப்படுத்தியது பரிதாபத்தையே ஏற்படுத்துகிறது.
தாய், தகப்பன் அன்பை தொலைத்த கோவிந்தசாமி, தன் மனைவியிடம் அன்பை எதிர்பார்த்து அதிலும் ஏமாந்தான்.
சாகரிகா மைசூர் சென்றிருக்கக்கூடுமென அனுமானித்த பின் பலசட்டதிட்டங்களடங்கிய நீலநகருக்கு தேடி வந்தது எப்படி?
எப்படியோ இவனும் அந்நகருக்கு வந்து அனுமதிக்கப்பட்டான். அவன் மூளையின் தகவல் சேகரத்தை பிரதியெடுத்து அவன் முன்னால் மனிதனாக நின்ற சூனியன் கோவிந்தசாமிக்கு உதவ முற்படுகிறான்.
கோவிந்துவின் கேள்விக்கு சாமர்த்தியமான பதிலளித்து அவன் நிழலை பிரித்து சாகரிகாவை தேடிச்சென்றது சூனியனின் மாய ஆற்றலை உணர்த்துகிறது.
கதையின் வேகம் இனி கதை வேறோரு கோணத்தில் பாயுமோ என்ற சிந்தனையை உருவாக்குகிறது.
சூனியன் குறிப்பிட்ட இடத்திலேயே கோவிந்து நிற்பானா? நிழலுடன் சென்ற சூனியன் சாகரிகாவை பார்பானா? காதல் அறுந்த சாகரிகாவை மானிடன் கோவிந்தசாமி தேடிவந்தாலும் அதற்கு சூனியன் உதவுவது ஏன்? ஒரு வேளை சூனியன் சபதத்துக்கு கோவிந்தசாமி பகடைக்காயா?
ஏகப்பட்ட கேள்விகளுடன் தொடர்ந்து வாசிப்போம்.