பொலிக! பொலிக! 71

பெரிய திருமலை நம்பிக்குப் புரிந்தது. தம்பி என்பதனால் அல்ல. வைணவம் பரப்பும் திருப்பணியில் வைராக்கியம் மிக்கவர்களின் பங்களிப்பு அவசியம். அது பெரிய காரியம். ஒரு கோவிந்தனல்ல; ஓராயிரம் கோவிந்தன்கள் இருந்தாலும் போதாத காரியம். எனவே அவர் சற்றும் யோசிக்காமல், ‘இதோ தந்தேன்!’ என்று சொல்லி, கோவிந்தனை அழைத்தார்.

‘கோவிந்தப் பெருமானே, இனி நீர் உடையவரின் சொத்து. அவரோடு கிளம்பிச் சென்று, அவர் சொல்வதைச் செய்துகொண்டிருப்பதே உமது பணி!’ என்று சொன்னார்.

நம்பி சொல்லி கோவிந்தன் எதையும் தட்டியதில்லை. எனவே இதையும் தட்டாமல் ஏற்றுக்கொண்டு ராமானுஜருடன் புறப்பட்டுவிட்டார். 

வழி முழுதும் இருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள். காளஹஸ்தியில் தாம் தங்கியிருந்த காலம் முதல் பெரிய திருமலை நம்பியிடம் சேர்ந்து பயின்ற தினங்கள் வரை ஒன்று விடாமல் கோவிந்தன் ராமானுஜருக்குச் சொல்லிக்கொண்டே வந்தார்.

‘சுவாமி, எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. தாங்கள் சன்னியாச ஆசிரமம் ஏற்று, திருவரங்கத்துக்குச் சென்றபிறகு எத்தனையோ பலர் தங்களை அண்டி சீடர்களாகித் தங்களுடனே சேர்ந்திருக்கிறார்கள். நீங்கள் ஒருவார்த்தை சொல்லியிருந்தால் நான் என்றோ திருவரங்கம் வந்திருப்பேனே? எதற்காக இத்தனை ஆண்டுக்காலம் என்னை இங்கே இருக்க விட்டீர்?’ என்றார் கோவிந்தன்.

ராமானுஜர் சில வினாடிகள் அமைதியாக இருந்தார். பிறகு, ‘கோவிந்தரே, சிறு வயதிலேயே நீர் என்னினும் பக்குவம் பெற்றிருந்தீர். நீர் பாடம் பயில நம்பியின் இடமே சரியான ஆசாரிய பீடம் என்று கருதினேன். தவிர, நான் உறவறுத்தவன். சன்னியாச ஆசிரமம் பூண்டவன். என் இடத்தில் உம்மை வரவழைத்துக்கொண்டால் அது உமது இல்லற தருமத்துக்கு இடையூறாக செய்யலாம். எதுவும் தானாக அமைய வேண்டுமல்லவா?’

கோவிந்தனுக்குப் புரிந்தது. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. இடைப்பட்ட காலத்தில் அவரது தனி வாழ்க்கை என்னவாக இருந்தது என்று அவர் உடையவரிடம் சொல்லியிருக்கவில்லை. கோவிந்தனுக்குத் திருமணம் ஆகியிருந்தது. ஆனால் மனைவி அவளது பெற்றோருடன்தான் இருந்தாள். வயது வரும் வரை அதுதான் முறை என்று கோவிந்தனின் தாயாரும் பொறுத்திருந்தார். ஆனால் அவள் குடும்ப வாழ்வுக்கு ஆயத்தமானபோதும் கோவிந்தனுக்கு அதில் பற்றற்று இருந்தது. எப்போதும் இறை சிந்தனை. எப்போதும் கைங்கர்யம். பெரிய திருமலை நம்பியைவிட்டு கணப் பொழுதும் அகலாதிருந்து, அவருக்குச் சேவையாற்றிக்கொண்டிருப்பது. இவற்றைத் தவிர கோவிந்தனுக்கு வேறெதிலுமே நாட்டமற்றிருந்தது. ‘அண்ணா, என் சுபாவத்துக்குப் பொருத்தமற்ற ஒரு ஆசிரமத்தை நான் எப்படி ஏற்பேன்?’ என்று கேட்டுவிடத்தான் துடித்தார். ஆனால் இப்போது உடையவர் அண்ணன் உறவில் இல்லை. அவர் ஆசாரிய ஸ்தானத்தில் இருக்கிறவர். தவிர அனைத்தையும் விண்டுரைத்துக்கொண்டு இருப்பதில் என்ன இருக்கிறது? காலமும் கடவுளும் கட்டளையிட்டு வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்குக் கட்டுப்பட்டுப் போய்க்கொண்டிருந்தால் போதுமானது என்று அவருக்குத் தோன்றியது.

திருவரங்கம் திரும்பும் வழியில் இருந்த அனைத்து திவ்ய தேசங்களையும் ராமானுஜர் சேவித்துக்கொண்டே வந்தார். சோளிங்கபுரம் வந்து சேர்ந்தபோது அவர் மனத்தில் என்னவோ ஒன்று நெருடியது. கோவிந்தனை உற்றுப் பார்த்தார். முகம் வாடியிருந்தது. எதையோ நினைத்து அவர் கவலைப்பட்டுக்கொண்டும் ஏங்கிக்கொண்டும் இருப்பதாகத் தோன்றியது.

‘கோவிந்தப் பெருமானே, என்ன யோசனை?’

‘ஒன்றுமில்லை சுவாமி. பெரியவரைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவரும் என்னைத்தான் நினைத்துக்கொண்டிருப்பார். இருந்த காலத்தில் ஒரு நாள்கூட அவரை விட்டு நான் பிரியவேயில்லை. தாய்மாமனாக இருந்து குருவானவர். வாழ்வில் நான் பெற்ற நல்லதற்கெல்லாம் காரணமாக இருந்தார். சட்டென்று விட்டுவிட்டுப் புறப்பட்டுவிட்டோமே என்று…’

‘சரி, ஒன்று செய்யும். நீர் சென்று பெரிய திருமலை நம்பியுடன் இன்னும் சில காலம் இருந்துவிட்டு வாரும்!’

திடுக்கிட்டுப் போனார் கோவிந்தன்.

‘இது நமது நியமனம். இன்றே கிளம்பிவிடுங்கள்’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் ராமானுஜர்.

இதுவும் எம்பெருமான் சித்தம் என்று கருதிய கோவிந்தன், உடையவர் அனுப்பிய இரண்டு பேர் துணையுடன் மீண்டும் திருமலைக்குப் போய்ச் சேர்ந்தார். ராமானுஜரும் அவரது சீடர்களும் காஞ்சிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே மீண்டும் திருக்கச்சி நம்பியைச் சந்தித்து அவரோடு சிறிது காலம் தங்கி, பேரருளாளனை சேவித்துக்கொண்டிருந்தார் ராமானுஜர்.

திருமலைக்குச் சென்ற கோவிந்தன், நம்பியின் வீட்டை அடைந்தபோது, ‘யாரது?’ என்றார் பெரியவர்.

‘குரல் தெரியவில்லையா? நமது கோவிந்தன் தான் வந்திருக்கிறான்!’ என்றார் அவரது மனைவி.

‘கோவிந்தனா? அவனை யார் இங்கு வரச் சொன்னது? அப்படியே கிளம்பச் சொல்லு.’

திடுக்கிட்டுப் போனார் அவர். வெளியே நின்றிருந்த கோவிந்தனுக்கும் இது கேட்டது.

‘என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? எத்தனையோ தொலைவு பயணம் செய்து வந்திருக்கிறான். ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பச் சொன்னால்கூட நியாயம். அதை விட்டுவிட்டு…’

‘விற்ற பசுவுக்குப் புல் இடுவார்களா? அவன் போய்ச் சேர்ந்த இடம்தான் இனி அவனுக்குக் கதி. இதைச் சொல்லி வாசலோடு அனுப்பிவிடு’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

கொடுத்ததைத் திரும்பப் பெறுவது வைணவ தருமமல்ல. பாடங்களின் இடையே எத்தனையோ முறை நம்பி இதனைச் சொல்லியிருக்கிறார். இதோ மீண்டுமொரு முறை அனுபவமாக மலர்கிற பாடம். கோவிந்தனுக்குப் புரிந்தது. அங்கிருந்தே கைகூப்பி வணங்கிவிட்டு மீண்டும் ராமானுஜரைத் தேடிக் கிளம்பிவிட்டார்.

வேகவேகமாகப் பயணம் செய்து அவர் காஞ்சிக்கு வந்து சேர்ந்தபோது ராமானுஜர் அங்கே கிளம்பத் தயாராக இருந்தார்.

‘என்ன ஆயிற்று கோவிந்தரே? ஏன் வந்துவிட்டீர்?’

கோவிந்தன் நடந்ததைச் சொன்னார். கண்மூடி யோசித்த ராமானுஜர், ‘அப்படியானால் சரி. திருவரங்கம் வந்துவிடுங்கள்’ என்று அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

‘பற்றும் பாசமும் என்றும் துக்கமே. அன்று கேட்டீர்களே, ஏன் உம்மை என் பக்கத்தில் வைத்துக்கொள்ளவில்லை என்று..’

‘புரிகிறது சுவாமி.’

‘உமக்குப் பெரிய திருமலை நம்பியின் மீதுள்ளது மரியாதை கலந்த பாசம். அவர் உம்மீது வைத்திருப்பதோ அன்பு கலந்த நேசம். அந்த நேசம்தான் வீட்டுக்குள்கூட விடாமல் விரட்டியடிக்கவும் செய்தது. இந்த அனைத்தையும் எம்பெருமானின் பாதாரவிந்தங்களில் கொண்டு சேர்ப்பதுதான் நாம் உய்ய ஒரே வழி.’

இந்தச் சொற்கள் கோவிந்தனின் வைராக்கியத்தை மேலும் பட்டை தீட்டியது. அவர் இன்னும் கூர்மையடைந்தார். கண்ணாடியைக் கழுவித் துடைத்து மாட்டுவது போல மனத்தை நிர்மலமாக்கி எம்பெருமான் திருவடிகளில் சமர்ப்பித்தார்.

சொல்லிவைத்த மாதிரி அவருக்கு வேறொரு சிக்கல் உடனே வந்து சேர்ந்தது.

(தொடரும்)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!