மாவா

எங்கே தேடுவேன்?

இந்த உலகத்தில் எது இல்லாமலும் என்னால் வாழ்ந்துவிட முடியும். ஆனால் மணிக்கொரு தரம் ஒன்றரை டீ ஸ்பூன் அளவுக்கான மாவா இல்லாமல் எனக்கு வேலை ஓடாது. இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்பது பெருங்கதை. அதை இப்போது சொல்லப் போவதில்லை. இந்தப் புலம்பல் சாஹித்யத்தின் நோக்கம், இக்கொடூரமான கிருமி கண்ட காலத்தில் இக்கைச்சீவல் தூளினைப் பெற நான் எத்தனைப் பாடு படவேண்டியிருக்கிறது என்பதைப் புரிய வைப்பதுதான்.

புகையிலைப் பொருள்கள் ஆபத்தானவை என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. கர்மாவில் புற்று நோய்ப் பிராப்தம் இருந்தால் புகையிலை அதனைத் துரிதப்படுத்தத்தான் செய்யும். எனக்கென்ன கோபமென்றால், மதுக்கடைகளை ஒரு வளர்ப்புப் பிராணி போலத் தூக்கி வளர்க்கும் அரசாங்கம், குடிசைத் தொழிலாக ஏழை சேட்டுகள் தேய்த்து விற்றுக்கொண்டிருந்த மாவாவைத் தடை செய்துவிட்டதே என்பதுதான். கிராமப் பொருளாதார முடக்கம் என்பது இப்படியாகத்தான் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது.

முன்பெல்லாம் தெருவுக்கு ஒரு சேட்டு பளபளப்பான பித்தளை டப்பாக்களை அடுக்கி வைத்துக்கொண்டு, வண்ணக் குடை விரித்து பீடாக்கடை போட்டிருப்பார். நானாவித பீடாக்களுடன் ஒவ்வொரு சேட்டும் மாவாவும் தேய்த்துத் தருவார்.

இந்த மாவா என்பது ஒரு எளிய லாகிரி. கைச்சீவலுடன் புகையிலைத் தூளைக் கலந்து, சிறிது சுண்ணாம்பும் தண்ணீரும் தெளித்து, பிளாஸ்டிக் பேப்பருக்குள் சுருட்டி வைத்துத் தேய்க்க வேண்டியதுதான். சீவல் தூளாகி, ஜர்தா அதற்குள் அத்வைதமாகிற பதம்தான் கணக்கு. பரபரவென்று தேய்த்து, சுடச்சுட உள்ளங்கையில் சேட்டு அதனைக் கொட்டுவார். அப்படியே வாயில் போட்டு ஒரு ஓரமாகத் தள்ளிக்கொண்டு உட்கார்ந்தால் ஏக்தம்மில் என்னால் இருபது பக்கங்களுக்கு எழுதி முடித்துவிட முடியும். அப்படியெல்லாம் அவ்வப்போது அரைத்து வாங்கி மென்ற காலம் மலையேறிப் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மூலைக்கு மூலை அசைவ உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டதும் சேட்டுகளுக்கு விதவிதமாக பீடா சுருட்டும் வேலை முக்கியமாகிவிட்டது. எனவே அவர்கள் மாவா சேர்மானத்தை வீட்டிலேயே தயாரித்து சிறு சிறு பொட்டலங்களாக எடுத்து வந்து வைத்துக்கொண்டார்கள். ஐந்து ரூபாய்க்கு ஒரு பொட்டலம். சூடு இருக்காது. ஆனால் ருசி பங்கம் இராது.

சரி ஒழிகிறது என்று அப்போது அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஆண்டுதோறும் மத்திய, மாநில பட்ஜெட்டுகள் படிக்கப்படும்போது தவறாமல் சிகரெட் விலையை ஏற்றுவார்கள். புகையிலையின் அடிப்படை விலை ஏறும்போது சிகரெட் விலை ஏறத்தானே செய்யும்? அதன் பக்க விளைவாக மாவா விலையும் ஏறும். சேட்டுகள் புலம்புவது போல நடித்தாலும் நைசாக ஒவ்வொரு ரூபாயாக ஏற்றிக்கொண்டே வந்து நான்கைந்து ஆண்டுகளில் ஒரு மாவா பொட்டலத்தின் விலையைப் பத்து ரூபாய்க்குக் கொண்டுவந்துவிட்டார்கள். அளவில் மாறுதல் இல்லை. தரத்தில் மாறுதல் இல்லை. விலை மட்டும்தான் ஏறியது.

வேறு வழி? சிகரெட் பிடிப்பவர்கள் நூறு ரூபாயெல்லாம் கொடுத்து ஒரு பாக்கெட் வாங்குவதைப் பார்க்க, இது ஒன்றுமில்லைதான். இருந்தாலும் எளிய ஏழை எழுத்தாளர்களின் மலிவு விலை லாகிரிக்கும் இப்படி வேட்டு வைக்கிறார்களே என்று அவ்வப்போது லேசாக அறச் சீற்றம் பொங்கும். பொங்குவதை எல்லாமும் அதே மாவாவைப் போட்டுத்தான் தணித்தாக வேண்டும். அப்படித்தான் தணித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் சிகரெட் நீங்கலான புகையிலைப் பொருள்கள் அனைத்துக்கும் பூரணத் தடை என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள்.

இதெல்லாம் நியாயமா? உலகில் வேறு எந்த தேசமும் இப்படிப்பட்ட குரூரமான தடைகளைச் செய்ய மனம் ஒப்பாது. பொது இடங்களில் சிகரெட் குடிக்கக்கூடாது என்று மட்டும் சொல்லிவிட்டு அனைத்துப் பெட்டிக்கடைகளிலும் அதை விற்பதைத் தடுக்காமல் இருந்துவிட்ட அரசாங்கம், பாவப்பட்ட மாவா சேட்டுகளை மட்டும் மூட்டை கட்டிக்கொண்டு ராஜஸ்தானத்துக்கும் குஜராத்துக்கும் திரும்பிப் போகச் சொல்லிவிட்டது. சரி, வடவர் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்குத்தான் இந்த நடவடிக்கை என்றாவது எடுத்துக்கொள்ள முடிந்ததா? அதுவும் இல்லை. ஓட்டல்களிலும் சலூன் கடைகளிலும் கட்டுமானத் துறையிலும் இதர பல துறைகளிலும் லாரி லாரியாக இந்திக்காரர்களைத் தான் கொண்டு வந்து இறக்கினார்கள். வட்டிக்கடை என்றால் சேட்டு. நகைக்கடை என்றால் சேட்டு. தானிய மொத்த வியாபாரிகளெல்லாம் சேட்டு. அச்சுத்தாள் வியாபாரத்தில் சேட்டு. எத்தனையோ ஆயிரம் பணக்கார சேட்டுகளை வாழவைக்கும் இந்த மண், நோஞ்சானான எளிய பீடா சேட்டுகளை மட்டும் துரத்தித்தான் அடிக்கும் என்பது எப்படி நியாயமாகும்? ஆனால் இந்த அநியாயத்தை ஆத்ம சுத்தியுடன் சட்டமயமாக்கிவிட்டார்கள். ஒரு கண் துடைப்பு சமாதானம் போல பான்பராக், மானிக்சந்த் போன்ற ரசாயன லாகிரிகளையும் சேர்த்துத் தடை செய்திருந்தார்கள். மானிக்சந்த் தாருவாலாவெல்லாம் எப்பேர்ப்பட்ட பிரம்மாண்டத் தொழில் முனைவோர்! புனேவில் அவரது மதன மாளிகையை ஒரு சமயம் பார்த்திருக்கிறேன். கோட்டை கொத்தளம் ஆள் அம்பு படைகளுடன் ஒரு சமஸ்தான சக்கரவர்த்தி போலத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். இப்படியெல்லாம் சட்டத்தடை போட்டு சிங்கத்தை அடக்கிவிட முடியுமா? ஒப்புக்கு நாலைந்து நாள் அந்தச் சரக்கெல்லாம் இல்லை என்று கடைக்காரர்கள் சொன்னார்கள். பிறகு எல்லாம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. அநியாயமாகக் களப்பலி ஆனது மாவா சேட்டுகள் மட்டும்தான்.

நம்ப மாட்டீர்கள். நான் புழங்கும் குரோம்பேட்டையிலும் கோடம்பாக்கத்திலுமாகச் சேர்த்து முன்னொரு காலத்தில் அறுபது பீடா சேட்டுகள் சேவையாற்றிக்கொண்டிருந்தார்கள். இது போக புரசைவாக்கம் சேட்டு, அயனாவரம் சேட்டு, சூளைமேடு சேட்டு, தசரதபுரம் சேட்டு என்று தொடர்பில் இருந்தவர்கள் அநேகம் பேர். மேற்படி வியாபார வன்முறைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் அந்த அறுபது பேரில் ஐம்பது பேர் ஊரைப் பார்க்கப் போய்விட்டார்கள். அதுவும் எப்படி? அவர்கள் எங்கே இடத்தை மாற்றிக் கடை போட்டாலும் விடாமல் துரத்தித் துரத்தி அடித்தே அனுப்பி வைத்துவிட்டார்கள். மீதமிருந்த சிறுபான்மை சேட்டுகள் உள்ளூரிலேயே பங்கர் கட்டிக்கொண்டு, கன்னத்தில் மரு ஒட்டிக்கொண்டு தலைமறைவானார்கள்.

சட்டம் வந்த புதிதில் இந்த சேட்டுகளைத் தேடி நான் அலைந்த அலைச்சலை நாய்கூட அலைந்திருக்காது. நீங்கள் கேட்கலாம். உள்ளூர்த் தமிழர்கள் இத்தனை ஆண்டுக் காலத்தில் இந்தத் தொழிலைப் பழகிக்கொண்டிருக்க முடியாதா என்று. முடியாது என்பதுதான் உண்மை. சிலதெல்லாம் சிலருக்குத்தான் வரும். தமிழன் மாவா தேய்த்தால் அதன் ருசி சேட்டு பேசுகிற தமிழைப் போலத்தான் இருக்கும். அது ஒரு பக்குவம். ஒரு பதம். தலைமுறை தலைமுறையாகத் தேய்த்துப் பழகிய கைகளுக்கு மட்டுமே வசப்படும். மர வேலை செய்கிற ஆசாரி நகை வேலை செய்துவிட முடியுமா? அந்த மாதிரி.

எப்படியோ. அன்று தலைமறைவானவர்களுள் ஒன்றிரண்டு பேரை என் சிநேகிதர்கள் தேடிக் கண்டுபிடித்து தாஜா பண்ணி வைத்தார்கள். தினசரி முடியாது என்பதால் வாராந்தர மொத்தச் சரக்காக அவர்களே எனக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கவும் தொடங்கினார்கள். பத்து ரூபாய்ப் பொட்டலம் பதினைந்து ரூபாய் ஆனது. பதினைந்து ரூபாய் பிறகு இருபது ஆனது. ஒவ்வொரு விலையேற்றத்துக்கும் சொல்லப்பட்ட காரணம் ஒன்றுதான். ‘கெடுபிடி ஜாஸ்தி சாரே. இதுவே இப்பல்லாம் கட்டுப்படி ஆவுறதில்லே.’

என்ன செய்ய? இந்த உலகில் வருமானம் ஒன்றைத் தவிர மற்ற எல்லாமே ஏறுமுகம்தான். ஒழியட்டும் என்று ஒருவாறு வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த கொரோனா கொடுங்காலம் ஆரம்பித்தது. சென்னைக்கு ஒரு ராசி உண்டு. யார் வந்தாலும் அது வாழவைக்கும். அதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு கஷ்டம் வந்தால் வந்தவர்கள் நகரத்தை அம்போவென்று விட்டுவிட்டு ஊரைப் பார்க்க ஓடிவிடுவார்கள். அது புயலானாலும் சரி, மழையானாலும் சரி, வெறும் தீபாவளி பொங்கலானாலும் சரி. ஊருக்குப் போவதற்காகவே இங்கே வந்து பிழைப்பு நடத்தி சம்பாதிப்பவர்களே தேசத்தில் மிகுதி.

மேற்படி மாவா சேட்டுகளும் இந்தக் கொள்ளை நோய்க் காலத்தில் சொல்லாமல் கொள்ளாமல் ராஜஸ்தானத்துக்குப் போய்விட்டார்கள். அவர்களுக்கெல்லாம் எங்கிருந்து பஸ், ரயில் கிடைத்தது என்று கேட்காதீர்கள். சேட்டுகளின் உள்ளுணர்வு அபாரமாக வேலை செய்யும். நாளை போலிஸ் ரெய்டு வரும் என்று இன்று காலையே மறு நாளுக்கும் சேர்த்து வாங்கிக்கொள்ளச் சொல்லிவிட்டு மத்தியானமே கடையைக் கட்டிவிட்டுக் காணாமல் போய்விடுவார்கள். மார்ச் மாதம் இருபதாம் தேதி இரவு ஊரடங்கு விவகாரம் தெரிந்துவிட்டது அல்லவா? மேற்படி சேட்டுகள் அன்று காலையே கூட்ஸ் வண்டிகளில் ஏறிப் படுத்துக்கொண்டுவிட்டார்கள் போலிருக்கிறது.

அன்று தொடங்கி ஒரு பிடி மாவாவுக்கு நான் படுகிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சினேகிதக்கார உத்தமன் ஒருவன் முன்பின் தெரியாத ஒரு புதிய சேட்டை யார் யார் மூலமாகவோ கேள்விப்பட்டு, மிகுந்த பிரயாசையின்பேரில் நெருங்கி இக்கஷ்ட காலத்தில் எனக்கு உதவக் கேட்டுக்கொண்டதன் பேரில் பஞ்ச கால ரேஷன் அடிப்படையில் இப்போது எனக்குச் சரக்கு கிடைக்கிறது. ஒன்றரை ஸ்பூன் மாவாவெல்லாம் இப்போது மறந்துவிட்டது. மூக்குப் பொடி போடுகிறவர்கள் எடுக்கிற ஒரு சிட்டிகை அளவுதான் எடுக்க முடிகிறது. மானசீகத்தில் அதுவே முழு நிறைவைத் தந்துவிடுவதாக எண்ணிக்கொண்டு வாழப் பழகிக்கொண்டிருக்கிறேன்.

இன்று காலை என் நெடுங்கால நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். அவர் ஒரு பத்திரிகை ஆசிரியர். அத்தனை அதிகாலையில் எதற்குக் கூப்பிட்டிருப்பார் என்று யோசனையுடன் வணக்கம் சொன்னதும், ‘ஊரடங்கு இன்னும் பதினைந்து நாள்களுக்கு நீட்டிக்கப்படும் போலத் தெரிகிறது. கெடுபிடிகள் இன்னுமே அதிகமாகலாம். உடனே மாவாவுக்கு எதாவது ஏற்பாடு செய்துகொள்ள முடியுமா பாருங்கள்’ என்று சொன்னார்.

இத்தேசத்தில் அன்பு மிக்க நண்பர்களுக்குப் பஞ்சமேயில்லை. அக்கறையோடு சேவையாற்றிய சேட்டுகள்தான் இல்லாமல் போய்விட்டார்கள்.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி