இதனைப் போட்டி என்று குறிப்பிடச் சிறிது தயக்கமாக உள்ளது. ஒரு சிறிய பரிசோதனை முயற்சி.
தினமணி இணையத் தளத்தில் நான் எழுதி வரும் ‘யதி’ நவம்பரில் நிறைவடைகிறது. ஜனவரி சென்னை புத்தகக் காட்சியில் அது புத்தகமாக வரும். அத்தியாயங்களை நீங்கள் மொத்தமாக தினமணி தளத்தில் வாசிக்கலாம். யதி, முழுவதும் இங்கே சேமிக்கப்படுகிறது: http://www.dinamani.com/junction/yathi
இது புத்தகமாக வரும்போது யாரையாவது முன்னுரை எழுதச் சொல்லலாம் என்று தோன்றியது. சந்திராசாமியோ ரஜனீஷோ எழுதினால் பொருத்தமாக இருக்கும். துரதிருஷ்டவசமாக இரண்டு பேரும் செத்துப் போய்விட்டார்கள். இப்போது உலவிக்கொண்டிருக்கும் கார்ப்பரேட் சன்னியாசிகள் யாரையும் எனக்குப் பிடிக்காதபடியால் வாசகர்களுக்கே அந்த வாய்ப்பைத் தரலாம் என்று நினைக்கிறேன்.
1. நாவலை முழுமையாகப் படித்துவிட்டு ஒரு முன்னுரை எழுத வேண்டும். திட்டி எழுதினாலும் பரவாயில்லை. எனக்குப் பிடிக்க வேண்டும். அது ஒன்றுதான் நிபந்தனை.
2. பக்க அளவெல்லாம் இல்லை.
3. நவம்பர் இறுதிக்குள் (30ம் தேதி) முன்னுரை வந்து சேர வேண்டும் [writerpara@gmail.com].
4. மிகச் சிறந்ததென நான் கருதும் ஒரு கட்டுரையை முன்னுரையாகப் புத்தகத்தில் இடம்பெறச் செய்வேன்.
5. ஒன்றுக்கு மேற்பட்டவை சிறந்ததெனத் தோன்றினாலும் இடம் பெறும்.
6. ஒன்றுமே தேறவில்லை என்றால் எதுவும் வராது. தேர்வுக் குழு என்பது நானும் தினமணி டாட்காம் ஆசிரியர் பார்த்தசாரதியும் என் அட்மினும். ஆனால் வீட்டோ என்னுடையது.
7. சிறந்த கட்டுரையை அளித்துத் தேர்வாகிறவருக்கு யதி வெளியானதும் முதல் பிரதி அனுப்பிவைக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோரின் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டால் அனைவருக்குமே பிரதிகள் அனுப்பப்படும். [புத்தகம் தோராயமாக 750 பக்கங்கள் வரலாம் என்று நினைக்கிறேன்.]
8. வெளிநாட்டு வாசகர் எனில் அவரது உள்ளூர் முகவரிக்கு மட்டுமே நூல் அனுப்பப்படும்.
9. எழுதும் கட்டுரையை என் மின்னஞ்சலுக்குத்தான் அனுப்பவேண்டும். ஃபேஸ்புக்கில் வெளியிடக் கூடாது. தேர்வான பின்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை என் பக்கத்தில் வெளியிடுவேன்.
10.மேற்கொண்டு ஏதாவது தோன்றினால் அவ்வப்போது அப்டேட் செய்கிறேன். இப்போதைக்கு இவ்வளவுதான்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.