கருத்துக்களம் திறக்கப்படுகிறது.

நண்பர்களுக்கு வணக்கம். இந்த வலைத்தளத்தின் வாசகர் கருத்துக் களம் [Comments Section] இன்றுமுதல் திறக்கப்படுகிறது.

இத்தளத்தில் நான் எழுதத் தொடங்கிய நாளாக இதில் வாசகர் கருத்துகளைப் பதிவு செய்வதற்கான இடம் ஏன் இல்லை என்பது ஒரு குற்றச்சாட்டாகவும் ஆதங்கமாகவும் கோரிக்கையாகவும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. நண்பர் வெங்கட் இதனை மிகத் தீவிரமாகக் கண்டித்துத் தம் பதிவு ஒன்றில் குறிப்பிட [என்ன அருமையான தலைப்பு! ], அதனைத் தொடர்ந்து வாதப்பிரதிவாதங்களும் நடந்தன. Comments பகுதிக்கு மாற்றாக மின்னஞ்சல் முகவரியை நான் அளித்தது பற்றியும் சில கண்டன அஞ்சல்கள் வந்தன.

நல்ல நண்பர்கள் பொதுவாகக் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். சிறந்த நண்பர்களுக்கு மட்டுமே கோபம் வரும். எனது சிறந்த நண்பர்களுக்கு இது நன்றி சொல்லும் தருணம். விளக்கம் சொல்லவேண்டிய தருணமும் கூட.

மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்வதிலோ, விவாதங்களுக்கு இடமளிப்பதிலோ, கண்டனங்களை எதிர்கொள்வதிலோ எனக்கு எப்போதும் பிரச்னை இருந்ததில்லை. எழுதுவதைப் பொருட்படுத்தி வாசிப்பவர்களை எப்படி என்னால் நிராகரிக்கவோ நகர்த்திவைக்கவோ இயலும்? வாசிப்பவர்கள் இல்லாமல் எழுதுபவன் இல்லை. கதவை மூடிக்கொண்டு சுயபுலம்பலில் ஈடுபடும் உத்தேசம் எனக்கு அறவே இல்லை. இப்போது என்றல்ல, எப்போதும் இருந்ததில்லை. நான் வார இதழ்களிலும் வாரமிருமுறை வருகிற இதழ்களிலும் தொடர்ந்து எழுதுபவன். வாசக உறவு என்பது என் வாழ்வின் தவிர்க்கமுடியாத ஒரு முக்கிய அம்சம்.

ஆனால் துரதிருஷ்டவசமாக இணையத்தில் ‘பின்னூட்டப்பெட்டி’ என்று அறியப்படும் இந்த வாசகர் கருத்துக் களம் என் சம்பந்தப்பட்ட அளவில் ஒரு பெரிய கார்ப்பரேஷன் குப்பை லாரியாகத்தான் இருந்துவந்திருக்கிறது. முன்னனுபவங்கள் அத்தனை சிலாகிக்கக்கூடியதாக இல்லாததே இதற்குக் காரணம். [பின்னூட்டம் என்னும் பிரயோகத்தை எனது மூளையின் சொல்வங்கி ஏற்க மறுக்கிறது. அதனால்தான் கருத்துக்களம் என்று குறிப்பிடுகிறேன்.] தொடக்கத்தில் நான் Rediff Blogsல் எழுதத் தொடங்கி பின்னர் Bloggerக்கு மாறி, பின்னும் தமிழோவியம் வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருந்த நாள் வரையிலும் இந்தப் ‘பின்னூட்டப் பெட்டிகள்’ என் பலநாள் உறக்கத்தைக் கெடுத்திருக்கின்றன. பதில் சொல்லி மாளாத சாதீயக் குற்றச்சாட்டுகள், பதிலே பேசமுடியாத செந்தமிழ் அர்ச்சனைகள், அர்த்தமற்ற உளறல்கள் என்று அந்த இடம் எப்போதும் துர்நாற்றம் வீசக்கூடியதாகவே இருந்துவந்திருக்கிறது. எனக்கு மட்டுமல்ல. என்னைப்போல் பலருக்கும்.

பெரும்பாலும் பெயரற்றவர்களாக வருவார்கள். அல்லது புனைபெயர்களில் வருவார்கள். ஒருவாளி மலம் அள்ளி வீசிவிட்டு ஓடியே போய்விடுவார்கள். இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு உட்கார்ந்து சுத்தம் செய்துகொண்டிருக்க வேண்டும்.

எனக்கு எழுதுவதைத் தவிர, எழுதியது குறித்துப் பேசுவது தவிர வேறு எதுவும் முக்கியமானதல்ல. எனவே முக்கியமில்லாத எதுவும் பொருட்படுத்தத் தகுந்ததுமல்ல. இதனால்தான் தேவையற்ற கூப்பாடுகளையும் அக்கப்போர்களையும் துர்நாற்றக் கிருமிகளையும் தவிர்ப்பதன் பொருட்டு எனது சொந்த இணையத்தளத்தை உருவாக்கியபோது கணேஷ் சந்திராவிடம் இதன் Comments Optionஐ எடுத்துவிடும்படிச் சொன்னேன்.

ஆனால், தமிழ் இணையத்தின் சில சமீபத்திய நிகழ்வுகள், அவை தருகிற நம்பிக்கை கலந்த நிம்மதி உணர்வு என்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யவைத்தன. வாசகர் கருத்துக்களம் இனி ஆரோக்கியமான விவாதங்களுக்கும் புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய சிந்தனைகளுக்கும் மட்டுமே உரியதாக இருக்கும் என்கிற நம்பிக்கை. கருத்துக்களங்களை ஒதுக்குப் புறங்களாக எண்ணி வந்து சிறுநீர் கழித்துவிட்டுச் செல்வோர் குறித்த அருவருப்புணர்வு இனி வேண்டாம் என்று நினைக்கிறேன். நாம் சுதந்தரமாக உரையாடலாம்.

ஒரு விஷயம். நான், என்னைப் போலவே என் வாசகர்களையும் மிகவும் மதிக்கிறேன். பரஸ்பர புரிந்துணர்வுடன் மேற்கொள்ளப்படும் பயணம் நிச்சயம் அர்த்தமுடையது என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடையாளமாக இந்தப் பதிவு தொடக்கம் இத்தளத்தின் வாசகர் கருத்துக்களம் திறக்கப்படுகிறது.

உங்கள் ஆரோக்கியமான விமரிசனங்களுக்காக எப்போதும் காத்திருக்கிறேன். அபத்தங்களும் அருவருப்பூட்டக்கூடிய அர்த்தமற்ற வெற்று வசைகளும் இல்லாதவரை இந்தக் களம் இனி எப்போதும் திறந்திருக்கும்.

Share

25 comments

  • நல்லது. ஆனால், மறுமொழிகளை அனுமதிக்காதது பற்றி அதிகமாக ‘ஃபீலிங்க்ஸ்’ கொள்ளத் தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

    wordpress என்பது ஒரு content manaement system. அதை வைத்துக் கொண்டு வலைப்பதிவு எழுதலாம். புத்தகக் கடை நடத்தலாம். தமிழ் டிவிட்டர் செய்யலாம். சினிமா நடிகை காலரி சைட் போடலாம்.அந்த காலத்து ஜியோசிடிஸ் இல் போல வெப்சைட்டுகள் நடத்தலாம். நீங்கள் செய்தது ஒரு வகை. இதுவும், அந்த தொழில்நுட்பம் கொடுக்கும் வசதியே.

    மறுமொழிப் பெட்டியைத் திறந்ததும் நல்லதுதான். நாலைந்து முறை எழுதவேண்டும் என்று நினைத்து, மின்னஞ்சலைத் திறந்து எழுதச் சோம்பல் பட்டு விட்டுவிட்டேன். பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பது இன்னும் எளிதாக உங்களுக்குக் கிடைக்கும்.

  • நல்ல முடிவு. உங்கள் நியாத்தினைப் புரிந்துகொள்கிறேன். வாசகர்களை மதிக்கும் உங்கள் பண்பை மதிக்கிறேன். காரணத்தினை முன்பே சொல்லியிருந்தால் இதனைப் பற்றிய சர்ச்சைகளையும் அவாய்ட் செய்திருக்கலாமே?

  • உங்களுக்கே தெரியாமல் யதேச்சையாக நேற்று உங்கள் கருத்துக்களம் திறக்கப்பட்டிருந்தது கண்டு மகிழ்ச்சியடைந்து கருத்து தெரிவித்தேன். இன்றைக்கு உண்மையாகவே திறக்கப்பட்டிருப்பது உண்மையான மகிழ்ச்சியை தருகிறது.

    கருத்து மட்டுறுத்தலால் வேலை அதிகமாக பாதிக்கப்படும் என்பது இந்த இரண்டாண்டு வலை அனுபவத்தில் நான் கண்ட உண்மை 🙂

  • மறுமொழிப் பெட்டியைத் திறந்ததிற்க்கு நன்றி.

    “வாசகர் கருத்துக்களம் இனி ஆரோக்கியமான விவாதங்களுக்கும் புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய சிந்தனைகளுக்கும் மட்டுமே உரியதாக இருக்கும் என்கிற நம்பிக்கை.”

    அதே நம்பிக்கையுடன், உங்கள் வாசகன்.

  • பிரகாஷ் சொல்வதுடன் ஒத்துப்போகிறேன்!
    கருத்துக்களம் திறக்கப்படாதது பெரிய நஷ்டம் கிடையாதுதான்.
    ஆனால் ஒரு சிறு விளக்கம்! பொதுவாக நீங்கள்(னு இல்லை பெரும்பாலான தமிழ் வலைப்பதிவர்கள்) எழுதுவது பொழுதுபோக்கு, சுவாரசியம், நெகிழ்ச்சி என தனிமனித உணர்ச்சிகள்தான் அதிகம்! இதில் கொதிப்படைவதற்கும், வசைமாரி பொழிவதற்கும், பூமாரி பொழிவதற்கும் ஏகப்பட்ட நுழைவாயில்கள் இருக்கு! எனவே நீங்கள் வருந்தத் தேவயில்லை! அதே போல் இப்பொழுது தாங்கள் கொண்டு வந்தது – உங்களுக்கு நேரம் ஓரளவு சேமிப்பில் இருக்கு (உங்க மொழியிலேயே சொன்னால் “நேரப் பிசாசு கைக்கெட்டும் தூரத்திலதான் ஓடிகிட்டிருக்கு, இல்ல உங்களுக்கு பின்னாடி ஓடி வருது!) எனும்போது Go ahead!

    நன்றி
    வெங்கட்ரமணன்!

  • & மட்டுறுத்தல் கூட கிடையாதா!
    கலக்குங்க பாரா! உங்க நம்பிக்கை வீண் போகாம இருக்க தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனிடம் (பேரு சரியா லக்கி!) பிரார்திக்கிறேன்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்!

  • Good.
    We will appreciate /Encourage your writing as long as your writing do not have any ‘Bramanical’ Hidden agendas.

    Hope you have understood and publish your thoughts honestly.

    Sathappan

  • ஒரே ஒரு மாற்று கருத்து. பின்னூட்டப் பெட்டியை கருத்துக் களமாக எல்லாம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. வெங்கட் எழுதிய போதே தோன்றியதுதான். Forums-க்கும் Blogs-க்கும் 6 வித்தியாசங்களுக்கும் மேலேயே இருக்கின்றன. ஒரு முழுமையான பதிவுக்கு பக்கத்தில் ஒரு கருத்துப் பெட்டி வைப்பதில் சில அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பதிவு எழுத நீங்கள் எடுக்கும் சிரத்தையில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லாமல் போகிற போக்கில் நாங்கள் கமெண்ட் போட்டுவிட்டுப் போகலாம் :-). சில மறுமொழிகள் உற்சாகத்தையும் சில மறுமொழிகள் மனச்சோர்வையும் தர வல்லவை. நீங்கள் தைரியமாக தேர்வு செய்துவிட்டீர்கள். 🙂 வாழ்த்துகள்.

  • எப்படித்தான் இவ்வளவு எழுதிக் குமிக்கிறீரோ? The busy man always finds time!

    அன்புடன்
    ரூமி

  • dashboard-settings-discussion போய் before a comment appears, comment author mus have a previously approved comment
    என்பதைத் தெரிவு செய்தால் உங்கள் நம்பகத்துரியவர்கள் மட்டுறுத்தல் இல்லாமல் எழுதலாம்.

    ஒரு முறை யாரும் தொந்தரவு செய்தால் அவர்களை spam என்று
    குறித்தால் திரும்பப் பார்க்க வேண்டாம். தொல்லை தரும் சொற்களை
    discussion settings பகுதியில் உள்ள comments blacklistல் போடலாம்.

    மற்ற மென்பொருள்களை விட wordpressல் மட்டுறுத்தல் இலகு.
    எனவே, மறுமொழிப் பெட்டியைத் திறந்து வைக்கலாம் 🙂

    பல முறை உங்களுக்கு மடல் எழுத நினைத்து சோம்பி விட்டிருக்கிறேன்.
    மறுமொழிப் பெட்டி திறந்ததற்கு நன்றி.

  • வசவுகளுக்கெல்லாம் பயந்தால் காரியம் ஆகாது. உங்கள் முன்னுரிமைகளை முன்வைத்து செல்லுங்கள். அப்படித்தான் நான் செல்கிறேன். அதனால் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லையே.

    மட்டுறுத்தல் அவசியம் வைக்கவும்.

  • கையொப்பமிடும் முன்னால் தவறுதலாக கருத்தை சமர்ப்பிக்கும் பித்தானை க்ளிக்கிட்டு விட்டேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  • உங்கள் பதிவுகள் ரசிக்கும்படி உள்ளது. பின்னூட்டத்தை அனுமதித்ததற்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்களம் திறக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி. தனிப்பட்டு மின்னஞ்சல் செய்வதை விட பொது விஷயங்கள் மீதான கருத்துக்களை பொதுவெளியில் வைப்பதுதான் ஆரோக்கியமான/சுவாரஸ்யமான விவாதங்களுக்கு வழிவகுக்கும்.
    இணையத்தில் சமீபத்தில் ஏதோ நல்லது நடந்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறீர்கள். ‘அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள்…’ நம்பிக்கை போலல்லாமல் இது நிலைக்க வாழ்த்துக்கள் 🙂

  • கருத்துக்களம் திறந்ததற்கு மிக்க மகிழ்ச்சி பாரா. உங்களது கட்டுரைகளை வாசித்த பிறகு உடனடியாக கருத்துச் சொல்ல நினைப்பேன். பின்னர் பேசாமல் இருந்து விடுவேன். தற்போது அதற்கு நல்ல வாய்ப்பு. ‘காதுகள்’ கட்டுரை பற்றி சிலவற்றைப் பேச வேண்டும். பின்னால் என் கருத்துக்களை எழுதுகிறேன். உங்களது இசை, கிரிக்கெட் கட்டுரைகள் இரண்டும் மிக நன்றாக இருந்தது. எழுத்தில் தொனிக்கும் இயல்பான நகைச்சுவை என்னை மிகவும் கவர்ந்தது. எனக்கென்னவோ சீரியஸான அரசியல் கட்டுரைகளை விட இதில் தான் உண்மையான பாரா தெரிகிறார். தொடர்க.

    அன்புடன்
    பா.சுவாமிநாதன்

    அன்புடன்

  • நான் கிருஷ்ணபரமாத்மாவாக இருந்திருந்தால் உங்களுக்கெல்லாம் குசேலன் டிக்கெட் கொடுத்திருப்பேன். குசேலனாக இருப்பதால் நன்றி மட்டும்.

  • Excellent. Continue your good postings.

    What is your weight now ? may be a weight-o-meter can appear on side bar indicating the changes in your weight 🙂

    How to subscribe comments feed via Google Reader ?
    what is the feed URL to be used for that ?

    Thanks
    Mahesh

  • //How to subscribe comments feed via Google Reader ?
    what is the feed URL to be used for that ?//

    மன்னிக்கவும். எனக்கு இதெல்லாம் புரியாது. கணேஷ் சந்திராவுக்கு இதனை அனுப்புகிறேன். பதில் அங்கிருந்து வரும். நீங்களேவும் தொடர்புகொண்டு கேட்கலாம் [gchandra@gmail.com]

  • சைதாப்பேட்டை டேஷன்
    ஆக்-11-08

    விடுநர்
    சு. க்ருபா ஷங்கர்
    ‘சாத்தான்’குளம்
    நண்டூர்

    பெறுநர்
    பா. ராகவன்
    வலையல்லவேலைப்புரம்
    கருத்துக்காரன்பட்டி – 0

    பொருள்: நன்றியுரை/பாராட்டுரை

    அன்புள்ள பாரா,

    தங்களின் வளர்ச்சியைக் குறித்து பல இயக்கங்களின் வழியாகவும், உளவுத்துறை நிறுவனங்களிடமிருந்தும் செய்திகள் வந்தவண்ணமிருந்தன. தாங்கள் இன்னும் மேலே மேலே போகப்போவதாகப் பலரும் பேசிக்கொண்டிருந்தார்கள் (3வது மாடிக்கு அல்ல!!!).

    நல்லவேளை, அப்படி எதுவும் இனிமேல் நடக்க முடியாது என்பதை உறுதிசெய்துவிட்டது நீங்களே வெளியிட்டுள்ள இந்த அறிக்கை. ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் உங்களின் போதுமென்ற மனத்தைக் கண்டு பாராட்டவும் தோன்றுகிறது.

    மேலும் பலரின் கருத்துக்களை அறிந்துகொள்ளும் வசதிக்கு மட்டுமல்லாது, பிரசுரிக்கவும் இந்த கருத்துப்பெட்டியைத் திறந்தே வைக்கவும்.

    இங்ஙனம்,
    சு. க்ருபா ஷங்கர்

    பி.கு.: இத்துடன் இப்பதிவு தொடர்பான எனது கருத்தையும் இணைத்துள்ளேன்

  • பெரிய ரைட்டர் என்றால் பின்னுட்ட பொட்டி இருக்கக்கூடாது என்ற தமிழ் இணைய சட்டம். அம்மரபை உடைத்தற்கு நன்னி பாரா சார் 🙂

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!