யாருக்கும் இழப்பில்லை

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகத் தீவிரமாகத் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது தீவிரம்கூட அல்ல. அதைத் தாண்டியதொரு வெறி கொண்ட வேட்கை. இந்தியப் படங்கள், உலகப் படங்கள், ஹாலிவுட் படங்கள், கொரியன் படங்கள், சீனாவின் பிரசித்தி பெற்ற கராத்தே, குங்ஃபூ படங்கள், இந்த எந்த இனத்துடனும் சேராத மசாலா டப்பிங் படங்கள் இப்படி. எந்தத் திரைப்பட விழாவையும் தவறவிட்டதில்லை. அதேபோலத் தமிழ்ப் படங்கள் வெளியாகும்போதும் உடனுக்குடன் பார்த்துவிடுவேன். கல்கியில் இருந்தபோது எட்டாண்டுக் காலம் சினிமா விமரிசனம் எழுதும் பணி என்னிடம்தான் இருந்தது என்பதால் அநேகமாகத் தினமும் ஏதாவது ஒரு படத்துக்கு ப்ரீ வ்யூ காட்சி இருக்கும். ஒவ்வொரு நாளும் அலுவலக வேலைகளை முடித்துவிட்டுப் படம் பார்க்கப் போய்விடுவேன். இரவு வீடு திரும்ப தினமுமே பதினொரு மணி ஆகும். இப்படிப் பார்க்கும் படங்களில் என்னைக் கவர்வனவற்றை மட்டும் சிடியாக வாங்கிச் சேகரிக்கத் தொடங்கினேன். பிறகு அந்த சிடிக்களைப் பாதுகாக்க மூன்றடி நீளமும் ஒன்றரை அடி உயரமும் கொண்ட மூன்று பிளாஸ்டிக் பெட்டிகளை சரவணா ஸ்டோர்ஸில் வாங்கினேன். அதுவும் நிரம்பி, பிறகு ஹார்லிக்ஸ் அட்டைப் பெட்டிகளில்கூடப் போட்டு வைக்க வேண்டி வந்தது.

அந்தளவு பார்த்துத் தீர்த்ததாலோ என்னவோ, ஏதோ ஒரு கட்டத்தில் சினிமா பிடிக்காமல் போய்விட்டது. இப்படிக்கூட ஆகுமா? எனக்கே ஆச்சரியம்தான். என் பல்லாண்டுக் கால சிடி சேமிப்பை மொத்தமாக ஒரு நாள் தூக்கிப் போட்டேன். யார் யாரோ எடுத்துச் சென்றார்கள். இன்று என்னிடம் ஒரு திரைப்பட சிடிகூடக் கிடையாது. தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது மிக மிக அபூர்வமாகிவிட்டது. மகளுக்காக, மனைவிக்காக எப்போதாவது – அநேகமாக அது ஆண்டுக்கு ஒரு முறையாக அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையாக இருக்கக்கூடும் – தியேட்டருக்குப் போகிறேன். தொலைக்காட்சியிலும் படம் பார்க்கும் வழக்கம் இல்லாமலாகிவிட்டது. இணையத் திரையரங்குகள் பெருகி, நண்பர்கள் தினமும் எதையாவது பரிந்துரை செய்வதைப் பார்க்கிறேன். அமேசான் ப்ரைம், சன் நெக்ஸ்ட், ஹாட் ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் சந்தாக்கள் இருப்பினும் இவற்றில் மொத்தமாக இதுவரை பார்த்தது ஏழெட்டு படங்கள்தாம் இருக்கும்.

தொலைக்காட்சித் தொடர்களும் இப்படித்தான். ஓரிரு தினங்களுக்கு முன்பு இங்கே சௌம்யா ராகவன், ‘நாம் எழுதியதை எப்படிக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவேனும் சீரியல் பார்க்க வேண்டாமா?’ என்று கேட்டார். உண்மையிலேயே எனக்கு அந்த ஆர்வம் ஏற்படுவதில்லை. ரேட்டிங் யுத்தத்தில் இரண்டாவதாகக் களப்பலி ஆக்கப்படுபவர்கள் இயக்குநர்கள்தாம். (முதல் களப்பலி திரைக்கதை ஆசிரியர்கள்) எனவே மிகவும் கவனமுடனும் தேவைக்கேற்பவும் சுவாரசியக் குறைபாடில்லாமலும்தான் எடுப்பார்கள். நான் எழுதுவதற்கு அப்பால் காட்சியை மேலும் மெருகூட்டிவிடக் கூடிய இயக்குநர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே நான் எழுதும் சீரியல்கள் எப்படி வருகின்றன என்று பார்க்கிற ஆர்வமும் ஏற்படுவதில்லை. சில நாள் சாப்பிட உட்காரும்போது ஓரிரு காட்சிகள் பார்ப்பேன். அத்துடன் சரி.

என் மனைவி மிகவும் கறாராகத் தேர்ந்தெடுத்து சில சீரியல்களைப் பார்ப்பார். (திரைப்படத் தேர்விலும் அவர் கறாரானவர். பெரும்பாலும் மராத்திப் படங்களை மட்டும் பார்ப்பார். எப்போதாவது மலையாளப் படங்கள். தவறியும் தமிழ்ப் படம் பார்த்து நான் கண்டதில்லை.) அப்படிப் பார்க்கும் சீரியல்களில் ஏதாவது மிகச் சிறப்பாக இருந்துவிடுமானால் என்னிடம் சொல்வார். சமீபத்தில் கலர்ஸ் தொலைக்காட்சியில் வருகிற பொம்மி என்கிற டப்பிங் சீரியலை நான் பார்க்க வேண்டும் என்று சொன்னார். (இப்படித்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியன் ஸ்டோர்ஸைச் சொன்னார்.) ஓரிரு எபிசோட்களில் ஒன்றிரண்டு காட்சிகள் பார்த்ததில், மிகவும் பிடித்திருந்தது. தமிழ் வசனங்கள் அவ்வளவு அருமையாக இருக்கின்றன. ஒரு எட்டு வயதுக் குழந்தைதான் கதாநாயகி. எங்கிருந்து பிடித்தார்களோ தெரியவில்லை. அவ்வளவு நன்றாக நடிக்கிறது அந்தக் குழந்தை. இத்தனை இருந்தும் அந்த ஒன்றிரண்டு காட்சிகள்தாம். அதற்குமேல் என்னால் முடிவதில்லை.

ஏன் இப்படி ஆகிப் போனேன் என்று உண்மையிலேயே தெரியவில்லை. இரண்டாயிரம், மூவாயிரம் பக்கங்கள் வரும் பெரும் தொகுப்பு நூல்களைக் கூட (மகாத்மா காந்தி நூல் தொகுப்பு, ஶ்ரீபாஷ்யம் நூல் தொகுப்பு, அல் புஹாரி, ஜாமிவுத் திர்மிதீ போன்ற நபி மொழித் தொகுப்புகள், மகாபாரதம், அதர்வ வேதம் போன்றவை) சிறிது சிறிதாகப் படித்து எப்படியோ முடித்துவிட முடிகிறது. எம்.டி. ராமநாதன், மதுரை சோமு, பாலமுரளியில் தொடங்கி டி.எம். கிருஷ்ணா வரை சலிக்காமல் கேட்க முடிகிறது. இளையராஜா முதல் யானி, ரஹ்மான், இமான் யாருடைய பாடலையும் ரசிக்கிறேன். கவராவிட்டாலும் யுவன், அநிருத் போன்றோரையும் கேட்கிறேன். ஆனால் இரண்டு மணி நேரம் ஒரு திரைப்படத்திலோ, தினமும் அரை மணி நேரம் ஒரு நெடுந்தொடரிலோ உட்கார முடிவதில்லை. ஏழெட்டு நாள்களில் பார்த்துவிடலாம் என்று தோன்றும் வெப் சீரிஸ்களைக் கூடப் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பார்த்ததில்லை. ஒரே ஒரு வெப் சீரிஸ் – ஐஎன்ஏ பற்றியது – சென்ற வருடம் ஊரடங்கு தொடங்கியபோது பார்த்தேன். அது ஒன்றுதான் முழுக்கப் பார்த்தது. ரஜனீஷ் பற்றி நெட் ஃப்ளிக்ஸில் உள்ள ஒரு தொடரில் முக்கால்வாசி பார்த்தேன்.

ஆனால் ஓய்வெடுக்க நினைக்கும்போது நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கிறேன். கலகலப்பு 1, கலகலப்பு 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், பம்மல் கே சம்மந்தம், பஞ்சதந்திரம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களை இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சமாகவே நூறு முறை பார்த்திருப்பேன். சன் நெக்ஸ்டில் வடிவேல் காமெடி, கௌண்டமணி செந்தில் காமெடி என்று தனித்தனியே பிரித்து வைத்திருப்பார்கள். அதைப் பார்க்கிறேன். இவை அலுக்கவேயில்லை. மற்றபடி தீவிர கவனத்தைக் கோரும் உரிமையை ஏனோ திரைப்படங்கள் என்னிடம் இழந்துவிட்டன. அந்தத் துறையில்தான் இருக்கிறேன். அதற்குத்தான் எழுதுகிறேன். அதற்கான நேரத்தில் என் முழுக் கவனத்தையும் சிதறாமல் அளிக்கிறேன். எழுதுகிற ஒவ்வொரு காட்சியையும் மனத்தில் ஓடவிட்டுப் பார்த்த பின்பே எழுதத் தொடங்குகிறேன். அது வேறு விஷயம். ஆனால் நான் உட்கார்ந்து பார்க்க இன்னும் ஏதோ வேண்டியிருக்கிறது. ஒரு சிறிய, பிரத்தியேக அழகு. ஊர் ஒப்புக்கொள்ளும் அழகல்ல. என் மனம் ஒப்புக்கொள்ளும் அழகு. அது மொத்தப் படத்திலும் நிரவி வரவேண்டும். மோசமான படமாகவே இருந்தாலும் எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால் அது ஒரு தனித்துவம் மிக்க மோசமாக இருக்க வேண்டும்.

இதெல்லாம் என்ன அபத்தம் என்று எனக்கே சிரிப்புத்தான் வருகிறது. நான் ஒருவன் படம் பார்க்காவிட்டால் யாருக்கு நஷ்டம்? ஒன்றுமே இல்லை. ஆனால் என்னைப் போன்ற தீவிர ரசிகன் கோடியில் ஒருவன்தான் இருக்க முடியும். இதில் எனக்குச் சந்தேகமே இல்லை. அந்த ஒருவனை சினிமா இழந்துவிட்டது. இதிலும் சந்தேகமில்லை.

 

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter