சரியாக ஒரு மண்டலகாலத்துக்கு நீண்ட தினமலர் தேர்தல் களம் பத்தி இன்றோடு நிறைவு பெறுகிறது. தினமலர் ஆசிரியருக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் தினமலரில் இதனை நான் எழுதக் காரணமாக இருந்த நண்பர் சொக்கலிங்கத்துக்கும் என் நன்றி.
பத்திரிகைகளில் எழுதுவதை ஓராண்டுக்கு மேலாக நிறுத்தியிருந்தேன். நேரமின்மையே முக்கியமான காரணம். எனது ரெகுலர் சீரிய-ல் பணிகளுக்கிடையே பத்திரிகை எழுத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனாலேயே சென்ற வருடம் சில நல்ல வாய்ப்புகளை வேண்டாமென்று தவிர்த்தேன்.
ஆனால் இதனை எழுதியே தீரவேண்டும் என்று குச்சி வைத்துக் குத்தாத குறையாக எழுத வைத்தவர் என் மனைவி. எனது வழக்கமான அனைத்து ஒழுங்கீனங்களுடன் இந்தப் பத்திக்காகப் புதிதாகச் சேர்ந்தவற்றையும் சேர்த்து சமாளித்து இந்த நாற்பத்தைந்து தினங்களும் இந்தக் காரியம் ஒழுங்காக நடைபெறச் செய்தவர் அவரே. இதை முடித்த கையோடு அடுத்தது ஆரம்பிக்க வேண்டும் என்றும் உத்தரவாகியிருக்கிறது. பார்க்கலாம். எம்பெருமான் சித்தம்.
இந்தக் கட்டுரைகளின்மூலம் கிடைத்த பல புதிய வாசகர்களே என் முக்கியமான சந்தோஷம். வழக்கமான நாயே பேயே வகையறா வசவுக் கடிதங்கள் இருக்கவே இருக்கின்றன. ஆனால் தமிழக அரசியல் சூழலைப் பொருட்படுத்திக் கவனித்து, என் கட்டுரைகளோடு தங்கள் சிந்தனைப் போக்கை ஒப்பிட்டுப் பார்த்து, ஒட்டியும் வெட்டியும் தினமும் ஏராளமான மின்னஞ்சல்கள் வந்தன. முடிந்தவரை அனைத்து அஞ்சல்களுக்கும் பதில் எழுதினேன். விரிவாக இல்லாவிட்டாலும் ஓரிரு வரிகளிலாவது. ஒரு சில விடுபட்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் பத்தியில் பதில் சொல்லியிருக்கிறேன்.
அது ஒருபுறமிருக்க, மனுஷனை கிளுகிளுப்பூட்டும் விதமாக வந்த பாராட்டுக் கடிதங்களைப் பற்றியும் சொல்லவேண்டும். ஆனால் என்ன சொல்வது? நன்றி சொல்லலாம். வந்த மொத்தக் கடிதங்களில் ஆகச் சிறந்ததாக ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ‘நீங்கள் ஒரு கன்சர்வேடிவ் பார்ப்பன ஹிந்துத்துவ வலது சாரி திராவிட துவேஷி ஆணாதிக்கவாதி. உங்களைப் படிப்பது வேஸ்ட்.’ என்று அந்த அன்பர் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஒரு வரியில் இத்தனை பட்டங்கள் வேறு யாருக்குக் கிட்டும்? அவருக்கு என் சிறப்பு நன்றி.
பொன்னான வாக்கு விரைவில் நூலாக வெளிவருகிறது. விவரம் விரைவில்.