அயோக்கிய சிகாமணி

பொதுவாக எனக்குக் கோபம் வராது. என்னை உசுப்பேற்றுவது மிகவும் கடினமான காரியம் என்று தெரிந்தவர்கள் சொல்லுவார்கள். என்னையறியாமல் இன்று மிகக் கடுமையான கோபத்துக்கு ஆட்பட நேர்ந்தது.

விஷயம் இது: தெரிந்தவர் ஒருவர் வீட்டில் பிரச்னை. சில காலமாகவே. அவருக்கு வியாபாரத்தில் மந்தநிலை. எனவே பொருளாதாரச் சிக்கல். அடிக்கடி கணவன் மனைவிக்குள் பிணக்கு வரும். கோபித்துக்கொண்டு இருவரில் யாரும் அம்மா வீட்டுக்குப் போக மாட்டார்கள். வீட்டுக்குள்ளேயே ஆளுக்கொரு மூலை. அதான் வழக்கம். ஏனெனில் அம்மா வீட்டோடு பிரச்னை என்று அக்கம்பக்கத்தில் சொன்னார்கள்.

இதெல்லாம் எங்கும் நடப்பதே அல்லவா? எனவே கண்டுகொண்டதில்லை. திடீரென்று இன்று என்னைக் காணவந்தவர், ‘நான் போயிட்டு வரேன்’ என்று சொன்னார். எங்கே என்று கேட்டேன். எங்கயாவது என்று பதில். எனவே ஓஹோ என்றேன்.

ஒத்துவரலை சார். சமரசம் பேசிப்பாத்தாங்க. ஆனாலும் சரிப்படலை. நான் நாளைக்குக் கிளம்பிடறேன். அதான் உங்ககிட்ட சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன் என்று சொன்னார்.

இங்கேதான் கோபம் வந்தது. என் கோபத்தை எத்தனை சுருக்கமாக வெளிப்படுத்தலாம் என்று யோசித்தேன். சட்டென்று சொல் கிடைத்தது. சரி சார் என்றேன். புறக்கணிப்பதை வெளிப்படுத்த இதைக்காட்டிலும் சிறந்த சொல் வேறு உண்டா என்ன?

அவருக்கு இரண்டு குழந்தைகள். பள்ளி செல்லும் பிள்ளைகள். வியாபாரம் மந்தமாகி, பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டபோது அவரது மனைவி ட்யூஷன் எடுத்துச் சம்பாதிக்க ஆரம்பித்தார். சில மாதங்களாக இது நடப்பது எனக்குத் தெரியும். நண்பருக்கு அதிலும் சிக்கல். தன்னால் முடியாத காரியத்தை மனைவி செய்து சமாளிப்பதை அவரது பரந்த உள்ளம் ஏற்க மறுத்தது. கூடுமானவரை அவரைப் படுத்தி எடுக்கத் தொடங்கினார். கணவரின் சகோதர சகோதரிகள், அம்மா அனைவரிடமும் அந்தப் பெண்மணிக்கு நல்ல பெயர் உண்டு. ஒரு வார்த்தை சொன்னால் உதவுவதற்கு உறவினர்களும் நண்பர்களும் நிச்சயமாக முன்வரவே செய்வார்கள். அந்தப் பெண்மணியின் குடும்பத்தாரும் இணக்கமானவர்களே. ஆனாலும் இந்த மனிதர் ஏனோ யாரையும் அண்டவிடுவதில்லை. தன் தாயார் உள்பட.

வியாபாரத்தில் தோல்வியோ, அதன் விளைவான குடும்பப் பிணக்குகளோ ஒரு பெரிய விஷயமா? தன் சுய இரக்கத்துக்குத் தன் குடும்பத்தை அவர் பலிகடாவாக்கிக்கொண்டிருந்தார். சில மாதங்களாகவே இந்த விவகாரம் எனக்கு அரசல் புரசலாக வந்துகொண்டு இருந்தது. ஓஹோ என்று வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தேன். இன்று அவர் நேரில் வந்து விடைபெறுகிறேன் என்றபோது சகிக்கமுடியாமல் ஆகிவிட்டது.

எங்க போறேன்னு கேக்க மாட்டிங்களா என்றார். சரி, எங்க போறிங்க என்றேன். சென்னை பெரிசு சார். எனக்குன்னு ஒரு இடம் இருக்கு என்று சொன்னார். சரி என்று பதில் சொன்னேன். எவ்ளவோ முயற்சி பண்ணிப் பாத்துட்டேன் சார். வீட்ல ஒத்துவரமாட்டேங்குறாங்க. போயிடறேன்னு சொன்னேன். அதுக்கும் பதில் சொல்லலை. இதுக்குமேல இருக்க முடியல. அதான் கிளம்பறேன் என்றார்.

இரண்டு குழந்தைகளை நினைவூட்டலாம் என்று ஒரு கணம் நினைத்தேன். உடனே வேண்டாம் என்று தோன்றிவிட்டது. அவர் தன் சுய புலம்பலை நிகழ்த்தவே வந்திருந்தார். நான் அதைத் தவிர்க்கவே விரும்பினேன். எனவே கூடியவரை வார்த்தைகளைத் தவிர்ப்பதே நல்லது என்று நினைத்தேன். அவருக்கும் அவர் மனைவிக்கும் நிச்சயமாக ஏதாவது பிரச்னை இருக்கும். ஊருக்கெல்லாம் நல்லவராகக் காட்சியளிக்கும் அந்தப் பெண்மணி, தனிமையில் தன் கணவரின் தோல்வியைக் குத்திக்காட்டி அவமதிப்பவராகக்கூட இருக்கலாம். ஆனாலும் ட்யூஷன் எடுத்தாவது குழந்தைகளையும் வீட்டையும் இந்த வருமானமில்லாத மாதங்களில் காப்பாற்றியது அவரே அல்லவா.

தவிரவும் குடும்பத்தைவிட்டுப் போகிறேன் என்கிற விஷயத்தை, வீடு காலி செய்வது போல வந்து சொல்லிவிட்டுப் போகக்கூடிய மனநிலை கொண்ட ஒரு மனிதரை நான் எதிர்கொள்வது இதுவே முதல்முறை. என்னிடம் சொன்னதுபோல் அவர் அக்கம்பக்கத்தில் வேறு சிலரிடமும் சொல்லியிருக்கக்கூடும். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசித்தேன். நாளை அந்தப் பெண்மணியை மற்றவர்கள் விசாரித்து விசாரித்தே இம்சிக்கத் தன்னாலான கைங்கர்யம் என்று எண்ணியிருப்பாரா?

அடுத்தமாதம் அவர் வீட்டு வாடகையை யார் கொடுப்பார்கள்? அந்தக் குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் உள்ளிட்ட கவலைகளை இன்றிரவுடன் அவர் விட்டுவிடுவாரா? ஊருக்கெல்லாம் மட்டுமல்ல; தன் வீட்டாரிடமும் நாளை அவர் போய்விடப் போவதைச் சொல்லியிருக்கிறார். இன்றிரவு அவர்கள் தூங்குவார்களா? அழுவார்களா? சமாதானம் செய்யப் பார்ப்பார்களா? ஒரு மனிதனால் இப்படியொரு கோழைத்தனத்துடன், சற்றும் ஆண்மையற்று, அருவருப்பூட்டக்கூடிய விதமாக, கீழ்த்தரமாக நடந்துகொள்ள இயலுமா? என்ன ஜென்மங்கள் இவை?

அவர் விதவிதமாக முயற்சி செய்து பார்த்தும் நான் ஒருவார்த்தைகூட அதன்பின் பேசவில்லை. இறுதியில் அவரே புரிந்துகொண்டு, ‘சரி சார், வரேன்’ என்றார். ‘ஓகே’ என்று பட்டென்று சொல்லிவிட்டு எழுந்தேன்.

பொறுப்புகளிலிருந்து தப்பிக்க நினைப்பது அயோக்கியத்தனம் அன்றி வேறில்லை. இதற்கு அனுதாப ஓட்டு தேடுவது அதைவிடப் பெரிய அயோக்கியத்தனம்.

என்னை ஏன் நண்பராக ஏற்றுப் பழக மறுக்கிறீர்கள் என்று அவர் சில சமயம் என்னிடம் முன்னர் கேட்டிருக்கிறார். என் உள்ளுணர்வு சரியாகத் தான் செயல்பட்டிருக்கிறது என்று இன்று தெரிந்தது.

Share

9 comments

  • நீங்கள் நினைத்ததை அவரிடம் பக்குவமாக வெளிப்படுத்தி இருக்கலாமே?எது உங்களை தடுத்தது?

  • there are all kinds of people in this world. I have come across a few worse than this. But in today’s world if we try to help or advice they may twist the thing into other meanings and ” Endaa udavinom enru agividum”

  • //சற்றும் ஆண்மையற்று//

    அது என்ன “ஆண்மையற்று”?
    பொறுப்பு, தைரியம் இதெல்லாம் ஆணுக்கு மட்டுமே உரியதா?

  • Dear sir

    Physical handicap is obvious, you feel pity on them. But mental handicap, no one notices and no one pity them or try to help them. Even the victim himself do not realise that, he has some problem. We have to blame this on Karma.

    Anbudan
    Packirisamy N

  • நீங்கள் த​லையிட்டு அவருக்​கோ அவர் குடும்பத்திற்​கோ புரிய ​வைக்க கி​டைத்த வாய்ப்​பை தவறவிட்டீர்கள். உங்களுக்கு ​தோன்றவில்​லை அவர் ​செய்யும் அ​தே காரியத்​தைதான் நாமும் ​செய்கி​றோம் என்று. என்ன வித்தியாசம் அவர் தன் வீட்டிற்கு ​செய்வ​தை நாம் அண்​டை வீட்டிற்கு ​செய்கி​றோம். நாம் ஒவ்​வொருவரு​மே பிரச்சி​னைகளிலிருந்து தப்பிக்க​வே முதலில் முயல்கி​றோம். முடியாத ​பொழுதுகளிலும், ​வேறு வழியில்லாத ​பொழுதுகளிலும்தான் அத​னை எதிர்​கொள்ள​வோ, கு​றைந்தபட்சம் குறுக்குவழிக​ளை ​தேட​வேனும் முயல்கி​றோம்.

  • Good thing you did not get involved in this mess. In fact, your friend might have expected you to mediate. Besides, I agree this is some kind of ego clash that he took it to those old days of emotional blackmailing. He failed with his wife because she knew this loser (though I don’t know him, but I will still call these people like this) may not go anywhere as he is penniless.

    Let him go through this pain for a week then he will be back in his family fold without making any squeal. Title is fitting.

  • பொதுவாக அலுவலக நேரங்களில் இப்படியெல்லாம் வந்து தம் அவலங்களை அடுத்தவர் மேல் திணிக்கின்ற அநாகரிகப் போக்கு கண்டிக்கத்தக்கது, ஆனால் நம் ஊரில் மிகச் சாதாரணமாக நிகழ்வது. எனக்கும் நிகழ்ந்திருக்கிறது.

    உங்கள் தார்மீகக் கோபம் எனக்கு நன்றாகவே புரிகிறது.

    நம் கஷ்டங்களைத் தீர்ப்பதில் அடுத்தவர்களுக்கு ஒரு கண்டிப்பான பொறுப்பு இருக்கிறது என்கிற மாதிரியான ஒரு மனப்போக்கை பலரிடம் கண்டு நான் பிரமித்திருக்கிறேன். “எனக்கு யாருமே உதவலை” என்கிற புலம்பலையும் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

    “இந்தா பிடி, இந்த ஒரு அஞ்சு லட்சத்தை வெச்சுக்கிட்டு முன்னுக்கு வா” என்று யாருமே எனக்குக் கொடுக்கவில்லை என்று ஒரு சென்னை ’நண்பன்’ சென்ற வருடம் புலம்பியபோது அவனை அங்கேயே ஒரு சாத்து சாத்தலாமா என்று நினைத்தேன். கிட்டத்தட்ட உங்களுடைய மனநிலையே எனக்கும் அப்போது இருந்தது.

    இத்தனைக்கும் அவனால் எனக்கு ஏற்பட்டிருந்த தனிப்பட்ட நஷ்டங்கள் பல லட்சங்களில்! எல்லாவற்றையும் மறந்து, மன்னித்து, நாம் பழையபடி பழகலாம் என்று நான் நினைத்தபோதுதான் அப்படி ஒரு குண்டை அவன் வீசினான்.

    மனிதர்கள் மாறுவதில்லை! அதிலும் இப்படிப்பட்ட சோமாறிகள் யாரையாவது எதற்காகவாவது குறை கூறிக்கொண்டு தத்தம் இயலாமையை மறைக்க எதையாவது காரணங்கள் கற்பித்துக்கொண்டு தமக்கும் தம்மைச் சார்த்தோருக்கும் மன ரணங்களை ஏற்படுத்திக்கொண்டே தான் இருந்து மடிவர்.

    பல இடங்களில் பாரதியின் தார்மீகக் கோபமும் இப்படிப்பட்ட வீணர்கள் பற்றியதே.

  • நல்ல காரியம் செய்தீர்கள். இம்மாதிரி நபர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள். நான் அவர்களை பற்றி சில பதிவுகள் போட்டுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி