உண்மை. உண்மை. இந்த உண்மைக்குப் பல நேரங்களில் மதிப்பு இருப்பதில்லை. அதனால்தான் காரியவாதிகள் உண்மை மீது வர்ணத்தைப் பூசிப் பொய்யாக்குகின்றனர். அந்த வர்ணம் ஈர்க்கிறது. வர்ணத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் அதனைத் தன் மனத்திற்குள் செலுத்திக் கொள்கின்றனர்.
ஆனால், நம் சூனியனோ உண்மையையும் பொய்யையும் ஆராயத் தெரிந்தவன். அறிந்து கொள்ளக்கூடியவன். முதலில் அவன் கோவிந்தசாமியின் தலைக்குள்ளேதான் இறங்கினான். ஆகவே, அவன் பலவற்றை அறிந்து வைத்திருந்தான். பொய்யைப் பற்றி விவரித்த வார்த்தைகள் நூறு சதவீதம் உண்மை. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
நீரின்றி உலகம் இல்லை என்பது போல, பொய்யின்றி மனிதன் வாழ்வு இல்லை. ஒரு நாளைக்கு ஏறத்தாழ பல விழுக்காடு அளவுக்குப் பொய்யான கற்பனையை உருவாக்குகிறோம். பொய்மொழிகளைப் பிறரிடம் உரைக்கிறோம். நம்மையே நாம் கேட்டுக்கொண்டால், கணக்கில் அடங்காததாக இருக்கும். ‘பொய்’ நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. இதிலிருந்து விலகிச் செல்ல இயலாது.
சாகரிகாவைப் பற்றிச் சூனியன் சிந்திக்கும் பொழுது, ‘கோவிந்தசாமியைப் பற்றிய வசைச் சொற்களில் பாதியாவது உண்மை இருக்கும்’ என்று எண்ணிக் கொண்டான். ஆனால், கோவிந்தசாமியின் நிழலானது, ‘சாகரிகா சொல்வது துளியளவும் உண்மை இல்லை’ என வாதாடியது.
பிறரின் கதைகளைக் கேட்பது எவருக்கும் ஆனந்தமானதுதான். நமக்கும் அந்த ஆனந்தத்தை அளித்தது. ஏனெனில் சூனியன் தண்டனை பெற்றதற்கான காரணத்தை அறிய உள்ளோமே!.
நாம் அறிந்த புராணக்கதையைக் கூறிய பொழுது, ‘அட போப்பா!’ என்ற எண்ணிய வேளையில் நம் வாழ்வில் விளையாடிய விதி சூனியனின் வாழ்விலும் விதவிதமாக விளையாடியதை வாசித்த பொழுது மனம் நிம்மதியடைந்தது.
சூனியனுக்குக் கொடுத்த பணியை அவன் செம்மையுறச் செய்யாததற்கான காரணத்தை அறியும் முன் தொலைக்காட்சித் தொடரின் இறுதியில் எழுதப்படும் ‘தொடரும்’ என்ற சொல் போலவே இந்த அத்யாயத்தின் இறுதியிலும் பா. ராகவன் எழுதிவிட்டார்.