புத்தகம் படிப்பதில் உள்ள பெரிய சிக்கலே, எடுப்பதில் பாதி படிக்க முடியாதபடி இருப்பதுதான்.
1. போரடிக்கும் எழுத்து நடை
2. எழுதத் தெரியாமல் எழுதியிருப்பது
3. சப்ஜெக்டுக்கு வராமல் ஊர் உலகமெல்லாம் சுற்றி வளைப்பது
4. நிறுத்தற்குறி வைக்கும் வழக்கமே இல்லாமல், பத்து வரிக்கு ஒரு சொற்றொடரை அமைத்திருப்பது
5. விறுவிறுப்பே இல்லாமல் இருப்பது
6. சுவாரசியம் அற்று இருப்பது
7. பண்டித மொழியில் எழுதியிருப்பது
8. தொட்ட இடமெல்லாம் தகவல் பிழைகள்
9. வரிக்கு நூறு எழுத்துப் பிழைகள்
இன்னும் சொல்லலாம். ஒரு புத்தகம் படிக்கப் படாமல் இருக்கப் பல காரணங்கள் உண்டு. ஆனால் என்ன குறைபாடு இருந்தாலும் படித்தே தீர வேண்டிய புத்தகங்கள் எனச் சில உண்டு. பாடப் புத்தகங்கள் போல. சகித்துக்கொண்டாவது படித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் முடியவில்லை. இழுக்கிறது. என்ன செய்யலாம்? எப்படிப் படிக்கலாம்?
* ஒரு புத்தகத்தை முடித்துவிட்டுத்தான் அடுத்தது என்று இருக்காதீர்கள். ஒரே சமயத்தில் மூன்று அல்லது நான்கு புத்தகங்களைப் படிக்க எடுப்பது நல்லது. ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கலாம்.
* ஒரு புத்தகத்தில், ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் படிப்பது என்று வைத்துக்கொள்வது நல்லது. அதிக நேரம் எடுக்காது; அதிக வலியும் இராது.
* புரியாத பகுதிகள் வரும்போது, அதை உங்களுக்கு விளங்கும் விதத்தில், உங்கள் மொழியில் எழுதிப் பாருங்கள். புரிந்துவிடும்.
* திருக்குறள், கீதை, குர்ஆன் போன்றவற்றை வாங்கி வைத்திருப்போம். ஆனால் படிக்க மாட்டோம். என்ன செய்யலாம்? தினமும் இரவு படுக்கப் போகுமுன் ஒரு குறளை (அல்லது ஒரு சுலோகத்தை, ஒரு சூராவை) மட்டும் மூலமும் உரையுமாக ஒரு துண்டுத் தாளில் எழுதி வைத்துவிடவும். காலை பல் துலக்கும்போது அதைப் படித்தால் போதும். மனத்தில் பதிந்துவிடும்.
* என்ன முயற்சி செய்தாலும் முன்னேற முடியவில்லையா? குத்துமதிப்பாக புக் கிரிக்கெட் ஆடுவது போல இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பக்கங்களைத் திறந்து படிக்கவும். பத்து நாள் இப்படிப் பத்துப் பக்கங்கள் படித்தால் போதும். ஆர்வம் வந்துவிடும். வரிசையில் படிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அல்லது அப்படியே இங்கொன்றும் அங்கொன்றுமாகப் படித்தேகூட முடித்துவிடலாம்.
* போரடிக்கும் பக்கங்களை வாய்விட்டுப் படித்துப் பாருங்கள். சுலபமாகக் கடந்துவிடலாம்.
* காத்திரமான இலக்கியங்களை ஒரே மூச்சில் படிக்க நினைக்காதீர்கள். அது முடியாது; தவறு. நிறுத்தி நிதானமாகத்தான் நகர வேண்டும். அப்போதுதான் சொற்றொடர்களுக்கு இடையில் புதைந்திருக்கும் அற்புதங்களைக் கவனிக்க இயலும். அது வாசிப்பதல்ல. கற்பது. அதற்குரிய நேரத்தைத் தந்துதான் தீர வேண்டும்.
* ஒரு கன காத்திரமான புத்தகத்தைப் படிக்கும்போது கூடவே எளிய வாசிப்புக்கான புத்தகம் ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். மாற்றி மாற்றிப் படிப்பது பலன் தரும்.
* ஆங்கில நூல்களுக்கு டிக்ஷ்னரி வைத்துக்கொண்டு படிக்கச் சொல்லி முன்னோர் சொல்வர். ஆனால் அது வேலைக்கு ஆகாது. ஆங்கில நூல்களைக் கூடிய வரை கிண்டிலில் படிக்கவும். புரியாத சொற்களை அப்படியே ஹைலைட் செய்து அர்த்தம் பார்த்துக்கொள்ள அதுவே வசதி.
* மொழிபெயர்ப்பு நாவல்கள் விரைவில் அலுப்பூட்டும். ஒன்றும் செய்வதற்கில்லை. ஆரம்பிக்கும்போதே கதாபாத்திரங்களுள் ஒருவராக உங்களை நியமித்துக்கொண்டுவிடுங்கள். மொழிபெயர்ப்பால் வரும் அலுப்பைத் தவிர்க்க இதுவே வழி. உங்களுக்கு அடுத்து என்ன ஆகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு விரைந்து வாசிக்க வைக்கும்.
* என்ன செய்தாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் படிக்க விடமாட்டேனென்கிறது என்று சில புத்தகங்களைச் சொல்வீர்கள். ஆனால் அதை உலகப் பேரிலக்கியமாகச் சொல்லி வைத்திருப்பார்கள். சரக்கில்லாமல் பெயர் வாங்கியிருக்குமா? அதை வாசிக்க நாம் தயாராக வேண்டும். அவ்வளவுதான். ஒரு வேலைக்கும் அடுத்த வேலைக்கும் நடுவே ஐந்து நிமிட ஓய்வெடுத்துக்கொண்டு இதனைப் படியுங்கள். சரியாக ஐந்து நிமிடம் போதும். அப்படிப் படித்தே பல்லாயிரம் பக்கங்களை முடித்துவிட முடியும்.
(மெட்ராஸ் பேப்பரில் வெளியான கட்டுரை)