இரண்டு அத்தியாயங்களை விட மூன்றாம் அத்தியாயம் விறுவிறுப்பாக இருந்தது.
சூனியர்களின் கப்பலை நோக்கி வரும் நீல நகரத்தினை தாக்கி அழிக்கவும் அதே நேரம் தான் விடுபட்டு கொள்ளவும் சூனியனுக்கு கணநேரத்தில் யோசனை வருகிறது. இங்கு யோசனை என்பது சிந்தனையை தான் குறிக்கும். ஆனால் பண்டைய கால அளவீடுகளின் படி யோசனை என்பது தூரத்தினை அளவிடும் ஒரு சொல் என்பதை கூகிளிடம் கேட்டுத்தான் தெரிந்துக்கொண்டேன். ஆசிரியர் ஒவ்வொரு வார்த்தைகளையும் கைங்கர்யத்தோடு பிரயோகித்திருக்கிறார்.
நீலநகரத்தினை தகர்த்து தங்களை தற்காத்துக் கொள்ள சூனியனை பலிகடாவாக்கி பூகம்பச் சங்குடன் எரிய நடக்கும் ஏற்பாடுகள் சுவாரசியமாக இருந்தது.
சூனியனை உப்புத் தடவப்பட்ட பிசாசுகளின் தோலில் போர்த்தி மின்னல் இரண்டை பிடித்து வந்து (ஏதோ குச்சியை எடுத்து வருவதுப்போல் கூறுகிறாரே) இறுக்கமாக கட்டி பின் பூகம்பச் சங்கை மாலையாக்கி அணிவிக்கின்றனர்.யப்பா எத்தனை வேலைகள்?தாங்கள் உயிர் பிழைக்க வேண்டுமென்றால் எவனை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பலியாக்க துணிந்துவிடுகிறார்கள்.இது மனிதர்களுக்கும் சாலப்பொறுந்தும்.
நீலநகரத்தினை நோக்கி எரியப்படும் கணநேரத்தில் சூனியனுக்கு வரும் யுக்திகள் முழுவதும் அவன் உயிர்த்திருத்தலையும் எதிரிகளை அழித்து தான் சூனியர்களை ஆழ்வது குறித்துமே இருக்கிறது. நிச்சயம் இந்த இடத்தில் திருப்புமுனையை எதிர்ப்பார்க்கலாம். சூனியம் சாகப்போவதில்லை. அவன் சாவை தோற்கடித்துவிட்டான். சுதந்திரம் பெற்று தான் நினைத்ததை செய்யும் நிலைக்கு வந்துவிட்டான். அவன் மிகப்பெரிய ஆயுதமான பூகம்பச்சங்கையே வேரறுத்து வெற்றிக்கொண்டு வேற்று கிரகத்தில் பல்லாயிரம் கணங்களை தாண்டி பயணம் செய்து வந்திருக்கிறான்.இனி அடுத்த அத்தியாயம் கொண்டாட்டம் தான்.